புரட்டாதிச் சனி
புரட்டாதிச் சனி என்று சுருக்கமாக அழைக்கப்படும் புரட்டாதிச் சனிக்கிழமை விரதம் புரட்டாதி மாதத்தில் உள்ள சனிக்கிழமைகளில் சனிபகவானை நோக்கிக் கடைப்பிடிக்கப்படும் விரதம் ஆகும். சனிக்கிழமை அதிகாலையில் துயில் நீத்து,தூய நீராடி ஆசாரமாக சனிபகவானுக்கு எண்ணெய்சுட்டி, நீலமலர்மாலை என்பன சார்த்தி வழிபடுவர்.
புராணக்கதை
தொகுசனிக்கிரகம் நவக்கோள்களில் ஒன்று. அவர் சூரியனுக்கு வெகு தூரத்தில் உள்ளார். சனீஸ்வரன், சூரியனுக்கும் சாயாதேவிக்கும் மகனாகப் பிறந்தார். அவர் பிறந்த செய்தியை அறிந்த சூரியபகவான் சனீஸ்வரனைப் பார்க்கச் சென்றார். சனீஸ்வரனைக் கண்டவுடன் சூரியனார் குஷ்டரோகியானார். இதனால் வெகுண்ட சூரியன், சனீஸ்வரனைத் தூக்கித் தூர வீசினார். சனிபகவான் வெகுதூரத்தில் விழுந்து முடவரானார் என்று புராணங்கள் கூறும்.
இயம தர்மராஜனின் அவதாரமே சனிபகவான் என்றும் கூறுவர். புரட்டாசி மாதத்தில் சூரியன், கன்னி இராசியில் சஞ்சரிப்பார். கன்னிராசி புதனின் ஆட்சி உச்ச வீடாகும். மகா விஷ்ணுவே புதனாக அவதாரம் செய்தார் என்பர். எனவேதான் சனீஸ்வர விரதம் கடைப்பிடிப்போர் சிவ விஷ்ணு ஆலயங்களில் உள்ள சனீஸ்வர பகவானிற்கு எள்நெய் எரித்து வழிபடுவதோடு, சிவ விஷ்ணுக்களையும் வழிபடுவது கட்டாயமாகின்றது. சனீஸ்வரன் சிறந்த சிவபக்கதன். இந்தியாவில் திருநள்ளாற்றில் உள்ள சனீஸ்வரனார் கோவில் மிகவும் பிரசித்தமானது. இங்கே நள மகாராஜன் சிவபெருமானை வழிபட்டு சனீஸ்வரனால் பீடித்த துன்பத்தில் இருந்து விடுபட்டான் என்றும் கூறுவர்.
அரிச்சந்திர மகாராஜன் அரசிழந்து சுடலையில் காவல்காரன் ஆனதும், பாண்டவர்கள் 12 ஆண்டுகள் வனவாசம் செய்ததும், இராமபிரான் வனவாசம் செய்ததும், சீதை இராவணனால் கவரப்பட்டு சிறையிலிருந்ததும் சனீஸ்வரனின் தோஷத்தாலே என்று நூல்கள் கூறுகின்றன.
இராவணனின் மகன் இந்திரசித்து பிறப்பதற்கு முன், இராவணன் சோதிடர்களை அழைத்து, நல்ல முகூர்த்தவேளை குறிக்கும்படி கட்டளை இட்டான். அவன் கட்டளைக்கமைய சனீஸ்வரனை பதினோராம் வீட்டில் இருக்க முகூர்த்தம் எடுக்கப்பட்டது. ஆனால் இந்திரசித்து பிறக்கும் பொழுது சனி தனது ஒரு காலைப் பன்னிரண்டாம் வீட்டில் நுழைத்துவிட்டார். இதனால் சீற்றமடைந்த இராவணன் அவரின் ஒரு பாதத்தை துண்டித்தான் என்றும் கூறுவர்.
விரதமுறை
தொகுசனீஸ்வரன் தானியம் எள், வர்ணம் கறுப்பு, வாகனம் காகம். எனவேதான் சனீஸ்வர தோஷத்தால் பீடிக்கப்பட்டவர்கள் ஏழு சனிக்கிழமை காலை தொடர்ந்து எள்நெய் தேய்து, நீராடி, சிவாலயம் அல்லது விஷ்ணு ஆலயம் சென்று சனீஸ்வரனிற்கு எள்ளு, கறுத்தப்பட்டு தானமாகக் கொடுத்து எள்ளுப் பொட்டலம் கறுத்தத் துணியில் கட்டி அதனை ஒரு மண் சட்டியில் இட்டு, நிறைய எள்நெய் விட்டு தீபமாக சனீஸ்வரனுக்கு முன் வைத்து வழிபடவேண்டும். துளசி, கருங்காக்கணவன் மலரால் அர்சித்து பின் சிவன் அல்லது விஷ்ணு சந்தினாதமடைந்து, சனிதோஷம் நீங்கப் பிராத்திக்க வேண்டும். அதன் பின் ஆலயத்திலே எள், அன்னம் காகங்களுக்கு வைத்து வீடு சென்று ஏழைகள் மூவரிற்கு போசனம் அளித்துத் தானும் உணவு உட்கொண்டு விரத்தை முடிக்கலாம். இப்படிச் செய்வதால் தோஷம் நீங்கி நல்வாழ்வு பெறும்.
சனீஸ்வரன் ஒருவருடைய ஜாதகத்தில் சந்திரன் நிற்கும் இடம் இராசிக்கு 5இல் சஞ்சரிக்கும் பொழுது பஞ்சம சனியென்றும், 8இல் சஞ்சரிக்கும் காலம் அட்டமத்துச் சனியென்றும், 12இல், 1இல், 2இல் சஞ்சரிக்கும் காலம் ஏழரைச் சனியென்றும் கூறுவர். இக்காலங்களில் புத்திர சுகம் குறைவு, மரண பயம், பிரயாணம், அதிக செலவு, தேக மெலிவு என்பன உண்டாம். இதைச் சனிதோஷம் என்பர். இவர்களே மேற்கூறிய தோஷ நிவர்த்தியை தவறாது செய்தல் வேண்டும்.
ஏனையோர் புரட்டாசி மாசத்து சனிக்கிழமைகளில் மட்டும் காலையில் எண்ணெய் ஸ்நானம் செய்து ஆலயம் சென்று எள்விளக்கேற்றிச் சனீஸ்வரனை வழிபட்டுப் பின் சிவ விஷ்ணுக்களை வழிபட்டுப் பிராத்தித்து கோளறு பதிகம், சனீஸ்வர தோத்திரம், தேவாரம் ஓதி அல்லது விஷ்ணு தோத்திரம் பாடி துதிக்கவேண்டும். வீடு சென்று உணவருந்தி விரதம் முடிக்கவேண்டும்.
உசாத்துணைகள்
தொகு- விரத விதிகள் - திருக்கேதீச்சரத் திருக்கோயில் மகாசிவராத்திரி மட பரிபாலன சபை, மன்னார். இலங்கை