புலவர் ஆற்றுப்படை

புலவர் ஆற்றுப்படை என்னும் துறைப் பாடல்கள் புறநானூற்றுத் தொகுப்பில் மூன்று உள்ளன. [1] இந்தத் துறை பாடாண் திணையைச் சேர்ந்தது.

புலவனை முதுவாய் இரவலன் என்பது சங்க கால வழக்கு. புலமை நிறைந்த பாடல்களைப் பாடுவதால் அவன் வாய் முதுவாய். வள்ளல்களிடம் இரந்து வாழும் வாழ்க்கையைக் கடைப்பிடித்துவந்தமையால் அவன் இரவலன். எனவே முதிவாய் இரவலன். புலவரை வள்ளல்களிடம் ஆற்றுப்படுத்தும் பாடல்களில் இந்தச் சொற்குறிப்போ அதன் தொடர்போ இருக்கும்.

  • பொய்கையார் என்னும் புலவர் தன் கண்ணில் பட்ட முதுவாய் இரவலனைத் தொண்டி அரசன் சேரமான் கோக்கோதை மார்பனிடம் ஆற்றுப்படுத்தும் பாடல்கள் இரண்டுக்கு இத் துறையின் பெயர் தரப்பட்டுள்ளது. [2]
  • பரணர் புலவன் ஒருவனை இரவல ஏன விளித்து அரசன் பேகனிடல் ஆற்றுப்படுத்துகிறார். போர்த்திக்கொள்ளாது, உடுத்திக்கொள்ளாது என்பது தெரிந்திருந்தும் பேகன் மயிலுக்குப் போர்வையை அளித்தவன். எனவே அவனிடம் செல் என்று சொல்லிப் புலவரை அவர் ஆற்றுப்படுத்துகிறார். [3]

கூத்தர், பாணர், பொருநர், விறலி அற்றுப்படை பற்றி மட்டும் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது. [4]

கடவுளைத் தொழும்படி புலவனை ஆற்றுப்படுத்துவது புலவராற்றுப்படை என்று புறப்பொருள் வெண்பாமாலை குறிப்பிடுகிறது. [5] இதற்கு மேற்கோள் பாடல் பாடி உரை எழுதும் ஆசிரியர் புலவரை வேங்கடவனைத் தொழுது வினை தீர்த்துக்கொள்ளும்படி அறிவுறுத்துவதாக அமைந்துள்ளது.[6]

திருமுருகாற்றுப்படை நூலில் முதுவாய் இரவலன் [7] முருகப்பெருமானிடம் ஆற்றுப்படுத்தப்படுகிறான். இதனால் இந்த நூலைப் புலவராற்றுப்படை எனவும் வழங்குகின்றனர்.

அடிக்குறிப்பு

தொகு
  1. புறநானூறு 48, 49, 141
  2. புறநானூறு 48, 49
  3. புறநானூறு 141
  4. தொல்காப்பியம் புறத்திணையிரல் 30
  5. இருங்கண் வானத்து இமையோர் உழைப்
    பெரும் புலவனை ஆற்றுப் படுத்தன்று (புறப்பொருள் வெண்பாமாலை 230)
  6. வெறிகொ ளறையருவி வேங்கடத்துச் செல்லின்
    நெறிகொள் படிவத்தோய் நீயும்-பொறிகட்
    கிருளீயு ஞாலத் திடரெல்லா நீங்க
    அருளீயு மாழி யவன்.
  7. திருமுருகாற்றுப்படை 284
"https://ta.wikipedia.org/w/index.php?title=புலவர்_ஆற்றுப்படை&oldid=1267566" இலிருந்து மீள்விக்கப்பட்டது