புலிகளின் குரல் (வானொலி)
புலிகளின் குரல் வானொலி ஒடுக்கப்பட்ட தமிழீழ மக்களின் உரிமைக் குரலாகவும், எதிரியின் பொய்மைகளுக்கு எதிரான உண்மைக் குரலாகவும் ஓங்கி ஒலிக்க வேண்டும் என்ற முனைப்போடும், விருப்போடும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனால் நவம்பர் 21, 1990 இல் மாவீரர் வாரம் தொடங்கும் நாளன்று தொடக்கி வைக்கப்பட்டது.[1][2] ஆரம்ப காலம் தொடக்கம் இச்சேவைக்கு புலிகளின் மூத்த உறுப்பினர்களில் ஒருவரான நா. தமிழன்பன் (ஜவான்) பொறுப்பாக இருந்தார்.
முதல் ஒலிபரப்பு | நவம்பர் 21, 1990 |
---|---|
மொழி | தமிழ் |
இணையதளம் | புலிகளின் குரல் |
சேவைகள்
தொகு- ஆரம்பத்தில் இதன் சேவை இரவு எட்டு மணி தொடக்கம் இரவு ஒன்பது மணிவரையே இடம் பெற்றது. பின் படிப்படியாக நேரம் அதிகரிக்கப் பெற்றதுடன் காலைச் சேவையும் இடம் பெறத் தொடங்கியது.
- பல அருமையான நிகழ்ச்சிகளை ஒலி பரப்பியதுடன் பல படைப்பாளிகளை உருவாக்கி வளர்த்தது.
- தமது கட்டுப்பாட்டுப் பகுதி மக்களுக்கு மட்டுமன்றி எதிரியின் கட்டுப்பாட்டுப் பகுதி மக்களுக்கான சேவையையும் செய்தது.
- இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதி மக்களுக்கான அறிவித்தல்கள் இவ்வானொலிச் சேவை மூலமே விடுதலைப்புலிகளால் வழங்கப் பெற்றது.
- இதன் முழுப்பயன்பாடு ஓயாத அலைகள்-3 தொடங்கிய போது உச்ச அளவை அடைந்தது. இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதி மக்களை பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்தி, சமர் செய்து நிலங்களை மீட்க உதவியது. எந்தெந்தப் பகுதி மக்கள் எங்கெங்கு செல்ல வேண்டுமென்ற அறிவுறுத்தல்கள் இவ் வானொலி மூலமே மக்களுக்கு வழங்கப்பட்டது. இதன் சேவையால் மக்கள் பாதுகாப்பாக விலகிக் கொண்டனர். புலிகள் மிகவிரைவாக நிலங்களை மீட்டனர்.
- இலங்கை இராணுவப் படையினருக்காகவும், சிங்கள மக்களுக்காகவும் புலிகளின் குரலின் சிங்கள சேவையும் “தேதுன்ன” என்ற பெயரில் பின்னர் தொடங்கப் பெற்றது.[3]
- தற்போது புலிகளின் குரல் வளர்ந்து புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்களுக்காக இணையத்தளத்தினூடாக இயங்கி வருகிறது.
இடர்கள்
தொகு- புலிகளின் குரல் வானொலியின் சேவை கடந்து வந்த பாதை கடுமையானது. அடிக்கடி விமானத் தாக்குதலுக்கும், எறிகணை வீச்சுக்கும் உள்ளாகும் ஒலிபரப்புக் கோபுரத்திலிருந்து தவறாது ஒலிபரப்புச் செய்ய வேண்டும். ஒலிப்பதிவுகள் செய்வது ஓரிடம், ஒலிபரப்புச் செய்வது இன்னோர் இடம் என்ற நிலையில்தான் இச்சேவை நடாத்தப் பெற்றது.
- யாழ்ப்பாண இடப்பெயர்வின்போது மக்களோடு மக்களாக நகர்ந்து கொண்டிருக்கையில், அவ்வப்போது கிடைத்த நேரங்களில் தென்மராட்சியின் வீதிக்கரைகளில் அவசரமாக ஒலிபரப்புச் செய்ய வேண்டிய கட்டாய நிலைகளும் இருந்தன. வன்னியைச் சென்றடையும் வரை அங்குமிங்கும் நடமாடித்தான் ஒலிபரப்பு நடைபெற்றது.
- வன்னியில் ஒருமுறை இரவுச் செய்திக்குரிய ஒலித்தட்டை ஒலிபரப்புக் கோபுரத்துக்கு எடுத்துச் சென்று கொண்டிருந்தவர் யானை மீது மோதி துரத்தப்பட்ட நிகழ்வும் நடந்தது.
- பலமுறை வான்தாக்குதலுக்கு உள்ளான போதும் தப்பிப் பிழைத்து தொடர்ந்து ஒலிபரப்பு நடைபெற்று வந்தது.
- பல தடவைகள் வானொலிச் சேவைக்கான தளத்தை மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
- புலிகளின் குரல் வானொலி ஒலிக்கும் அதே அலைவரிசையில் இலங்கை அரசு கேட்கமுடியாதபடி பேரிரைச்சலை ஒலிக்கச்செய்து இடையூறு செய்ததினால், ஒலிபரப்பு நடக்கும் நேரத்தில் சற்று நகர்த்தி அலைவரிசை செய்ய வேண்டி வரும். தமிழகத்திலும் புலிகளின் குரல் வானொலியை கேட்க முடிந்தது.
- யுத்தநிறுத்த ஒப்பந்தம் வந்த பின் புலிகளின் குரல் வானொலியின் தளம் கிளிநொச்சிக்கு இடம்பெயர்ந்திருந்தது. 2006 இல் இலங்கை இராணுவத்தின் வான்படையால் அது முற்றாக அழிக்கப்பட்டது.[4]
பணியாற்றிய கலைஞர்கள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ புலிகளின் குரல் வானொலி
- ↑ புலிகளின் குரல்
- ↑ "தமிழீழ தேசிய தொலைக்காட்சி". Archived from the original on 2020-10-25. பார்க்கப்பட்ட நாள் 2020-10-27.
- ↑ புலிகளின் குரல் வானொலி ஒலிபரப்பு நிலையம்", இலங்கை அரசின் வான்குண்டுத் தாக்குதலில் முழுமையான சேதமடைந்த பெரும் இழப்பு ஏற்பட்ட நாள்
- ↑ "புலிகளின் குரல் ஊடகப்பணயாளர் திரு. வீரன் சக்திவேல் காலமானார்". Archived from the original on 2021-05-14. பார்க்கப்பட்ட நாள் 2020-10-27.