தியாகராசா பிறேமராசன்

தீட்சண்யன் (பிறேமராஜன் ஜனவரி 30, 1958 - மே 13, 2000, ஆத்தியடி, புலோலி மேற்கு, பருத்தித்துறை, யாழ்ப்பாணம், இலங்கை). ஈழத்துக் கவிஞர். இவர் தனது பன்னிரண்டாவது வயதிலேயே கவிதை எழுதி ஹாட்லிக்கல்லூரி ஆசிரியர்களின் பாராட்டுக்களைப் பெற்று ஒரு கவிஞனாக இனம் காணப்பட்டவர். தனது எண்ணங்களையும், உணர்வுகளையும் மரபுக்கவிதையாகவோ, புதுக்கவிதையாகவோ நினைத்தவுடன் வடித்து விடும் ஆற்றல் மிக்கவர். தமிழீழ விடுதலைப் போராட்ட காலத்தில் புலிகளின் குரல் வானொலியில் கவிமழை பொழிந்தவர். தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மும்மொழிகளிலும் புலமை கொண்டவர். இலங்கை இராணுவத்தின் எறிகணை வீச்சில் ஒரு காலையும், ஒரு கையின் செயற்பாட்டையும் இழந்தவர். 1990 இலிருந்து, தீட்சண்யன் என்ற புனைபெயருடன், உலகெலாம் பரந்திருந்த போராட்டம் சம்பந்தமான ஆங்கில நூல்களை தமிழில் மொழி பெயர்த்து தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்குப் பங்காற்றியவர்.

தீட்சண்யன் (S. T. பிறேமராஜன்)
பிறப்பு(1958-01-30)சனவரி 30, 1958
ஆத்தியடி, புலோலி மேற்கு, பருத்தித்துறை, யாழ்ப்பாணம்
இறப்புமே 13, 2000(2000-05-13) (அகவை 42)
வற்றாப்பளை, முள்ளியவளை, இலங்கை
மற்ற பெயர்கள்பிறேம்
கல்விஆசிரியர் (பேராதனை, இலங்கை)

ஹாட்லிக் கல்லூரி

வடமராட்சி இந்து மகளிர் கல்லூரி
பணியகம்அரசுப்பணி
அறியப்படுவதுகவிஞர், எழுத்தாளர், பேச்சாளர், மொழிபெயர்ப்பாளர்
சமயம்இந்து
பெற்றோர்மு. ச. தியாகராஜா
சிவகாமசுந்தரி
வாழ்க்கைத்
துணை
மஞ்சுளா
பிள்ளைகள்ஜனகன், கௌசிகன், தக்ஷாயணி, பரதன்
வலைத்தளம்
http://theedchanyam.blogspot.com/

குடும்பப் பின்னணி

தொகு

தீட்சண்யன் பருத்தித்துறை, ஆத்தியடி, புலோலி மேற்கைப் பிறப்பிடமாகக் கொண்டவர். புகையிரதநிலைய அதிபர் சபாபதிப்பிள்ளை தியாகராஜா, சிவகாமசுந்தரி தம்பதிகளின் மூத்த புதல்வர். இவரது தம்பி மொறிஸ், 1984 இல் விடுதலைப் போராட்டத்தில் தன்னை இணைத்து, விடுதலைப் புலிகளின் பருத்தித்துறைப் பிரதேசப் பொறுப்பாளராகப் பணியாற்றி, மே 1, 1989 இல் இந்திய இராணுவத்துடனான நேரடி மோதலில் மண்ணுக்கு வித்தானவர். இவரது இன்னொரு தம்பி மயூரன், விடுதலைப் போராட்டத்தில் தன்னை இணைத்து, காட்டில் விடுதலைப்புலிகளின் தலைவர் அருகில் நின்று பின்னர் பூநகரிச் சமரில், தவளைப் பாய்ச்சல் நடவடிக்கையில் நவம்பர் 11, 1993 இல் மண்ணுக்கு வித்தானவர். மகன் மயூரன் பெப் 6, 2009 இல் இலங்கை இராணுவத்துடனான மோதலில் வீரமரணமடைந்தவர்.

திருமணம்

தொகு

1983 இல் வற்றாப்பளை, முள்ளியவளையைப் பிறப்பிடமாகக் கொண்ட மஞ்சுளா ஜூஜினா என்ற இந்து/கிறிஸ்தவப் பெண்ணை காதல் திருமணம் செய்து வற்றாப்பளையை தனது வாழ்விடமாக்கிக் கொண்டவர்.

கல்வி/தொழில்

தொகு

இவர் தனது ஆரம்பக்கல்வியை வடமராட்சி இந்து மகளிர் கல்லூரியிலும், உயர் கல்வியை பருத்தித்துறை, ஹாட்லிக் கல்லூரியிலும், தொழிற்கல்வியை மதவாச்சி தொழில்நுட்பக் கல்லூரியிலும், பட்டப்படிப்பை கண்டி, பேராதனையிலும் கற்று ஆங்கில ஆசிரியாராகக் கடமையாற்றியவர். மொழி ஆர்வம் கொண்ட இவர் தனது பத்தாவது வயதிலிருந்தே தமிழோடு சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகளையும் கற்று தேர்ச்சியும் பெற்றிருந்தவர். தான் கற்பித்த வற்றாப்பளை மகாவித்தியாலயத்தின் ஆங்கிலதினப் போட்டிகளிலும், தமிழ்தினப் போட்டிகளிலும் இயல் இசை நாடக வடிவில் நிகழ்ச்சிகளை உருவாக்கி பாடசாலை மாணவர்கள் எல்லோரையும முதலிடம் பெறவைத்து மாவட்ட மட்டத்தில் பாடசாலைக்கு ஒரு தனி இடம் பெற்றுக் கொடுத்து பெருமை சேர்த்தவர். எந்த விழாக்கள் விளையாட்டுப் போட்டிகள் என்றாலும் ஆங்கிலத்தில் அறிவிப்பாளராய் முழங்கி குரல்வளத்தால் எல்லோரையும் கவர்ந்து கொண்டவர்.

விடுதலைப்போரில் பங்களிப்பு

தொகு

போராட்டம் சம்பந்தமான, ஆங்கில மொழியில் அமைந்த நூல்களை தமிழில் மொழி பெயர்ப்பதே இவரது முக்கிய பணியாக இருந்தது. இதனோடு விடுதலைப்போரில் பங்கு கொண்ட சிலரின் குழந்தைகளுக்கு ஆங்கிலம் கற்றுக் கொடுக்கும் பணியையும் மேற்கொண்டிருந்தார். இயல்பிலேயே கவிதை வடிக்கும் ஆற்றல் படைத்த இவர் விடுதலைப்புலிகளின், புலிகளின் குரல் வானொலிக்கும், விடுதலைப் போராட்டம் சம்பந்தமான நிகழ்ச்சிகளுக்கும் கவிதைகள் எழுதிக் கொடுத்தும், கவியரங்குகளிலும், அந்தாதிக் கவியரங்குகளிலும் தானே கவியைமைத்து, தனது குரலிலேயே முழங்கியும் பங்காற்றினார்.

விபத்து

தொகு

டிசம்பர் 31, 1990 இல் இலங்கை இராணுவத்தின் எறிகணை வீச்சுக்குப் பலியாகி தனது ஒரு காலையும், மறு காலின் பெரு விரலையும், ஒரு கையின் செயற்பாட்டையும் இழந்தவர். இழப்பின் அந்தக் கணம் பற்றி அவர் எழுதிய கடிதத்தின் ஒரு பகுதி.

20.12.90 அன்று எனது பாடசாலை ஆசிரியர்களுக்குரிய சம்பளப் பணத்தை எடுப்பதற்காக கொழும்பு சென்றேன். வவுனியாவில் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்ததால் கொழும்பில் 29ந் திகதி வரை நின்றேன். 29.12.90 அன்று வவுனியா வந்தும், சீனி, சவர்க்காரம் போன்றவற்றிற்கு ஊரில் தட்டுப்பாடு என்பதால், 30.12.90 வரை தங்கி நின்று அப்பொருட்களை வாங்கினேன். காலையில் ஒரு சூட்கேசுடனும், மூன்று பைகளுடனும் சைக்கிளில் கடைசித் தடையையும் தாண்டினேன். மிதிவெடி நிறைந்த வயல்களினூடு, தொடை வரை சேறு புரள சைக்கிளை முக்கி முக்கித் தள்ளினேன். இனியென்ன..! என்ற பூரிப்பில் முந்தி முந்தி வந்தேன். பூந்தோட்ட கிரவல் பாதையில் ஏறும் போது 100 யாருக்கப்பால், எனது வலது புறமாக ஒரு பவல் Armoured car ம் இரண்டு Trucks ம் வருவதைக் கண்டேன். சனங்கள் இடது புறமாக ஓடினர். நானும் சைக்கிளில் ஏறி ஓடினேன்.Firing தொடங்கி விட்டது. பல சைக்கிள்கள் விழுந்தன. பெரிய காயங்களில்லை. நானும் சைக்கிளை ஒரு மரத்துடன் சாத்தி விட்டு, பெரிய மரமொன்றின் பின்னால் படுத்தேன். தொடர்ந்து Firing. எனக்குப் பக்கத்தால் எல் 222....222 என்று குண்டுகள் பாய்ந்தன. ஓய்ந்தன. பின் பாய்ந்தன. பின்னர் Armoured car இலிருந்து Canonshell முழங்கியது. பாரிய பயங்கரச் சத்தம். என்னருகில் ஒருவன் நின்றான். Canon தொடங்க, பாய்ந்து கிடங்கில் வீழ்ந்து ஓடி விட்டான். என்னால் அசைய முடியவில்லை. பயம். எதுவும் நடக்காதென்ற நம்பிக்கை. படுத்திருந்தேன். மிகப் பாரிய ஓசையில் Canon குண்டுகள் பட்டுக் கொப்புகள் முறிந்தன. திடீரென மின்வெட்டும் அதிர்ச்சி. தலை நிமிர்த்தி என் உடலைப் பார்த்தேன்.(மல்லாக்காகப் படுத்திருந்தேன்.) என் முழங்கால் இருந்த இடத்தில் கொழுப்பும், இரத்தமும், சதையுமாக ஒரு பள்ளம். வெள்ளையாக எலும்புகள். காலை அசைத்தேன். இரண்டு எலும்புகள் உரசி "ஐயோ... அம்மா..!" என்று என்னால் முடிந்தளவு பலமாகக் கத்தினேன். கண்ணீர் வந்தது. பதிலாக படபடவென குண்டுச் சத்தம் வந்தது. எனது மற்றைய கால் பெருவிரல் போனதோ, கை முறிந்ததோ அந்தக் கணத்தில் எனக்குத் தெரியாது. நான் இப்படியே இருந்தால் செத்து விடுவேன் எனத் தெரிந்தேன். குருதி அருவியாகப் புல்லில் ஓடிக் கொண்டிருந்தது. நான் மயக்கமாவதை உணர்ந்தேன். 29.6.1991.

இவரது நூல்கள்

தொகு
  • தீட்சண்யம் (கவிதை) மனஓசை வெளியீடு, முதற் பதிப்பு - மே 2009, சுவடி, இந்தியா
"https://ta.wikipedia.org/w/index.php?title=தியாகராசா_பிறேமராசன்&oldid=4169934" இலிருந்து மீள்விக்கப்பட்டது