பு. இரா. புருடோத்தமர்

புவனகிரி இராசகோபால் புருடோத்தமர் (1901 நவம்பர் 15 - 1976 சூன் 28) என்னும் பு. ரா. புருஷோத்தம நாயுடு வைணவக் குடும்பத்தில் பிறந்து, ஒருங்கே தமிழ்த் தொண்டும் வைணவத் தொண்டும் செய்தவர். வீர வைணவப் பரம்பரையைச் சேர்ந்தவர். இவர் முன்னோர்களுக்கும் பாம்பன் குமரகுருதாச சுவாமிகளுக்கும் நடந்த சித்தாந்தப் போர் அந்த நாள் தத்துவ உலகில் புகழ்பெற்ற நிகழ்வு ஆகும்.

பிறப்புதொகு

புருடோத்தமர் புவனகிரியில் வாழ்ந்த இராசகோபால் – ஆண்டாளம்மாள் இணையருக்கு 1901 - நவம்பர் - 15ஆம் நாள் மூன்றாவது மகனாகவும் நான்காவது மகவாகவும் பிறந்தார். இவருக்கு அண்ணன்கள் இருவர், அக்காள் ஒருவர், தம்பியர் இருவர், தங்கையர் இருவர் என ஏழு உடன்பிறந்தோர்கள் இருந்தனர்.

கல்விதொகு

திருவரங்கத்தில் இருந்து சிதம்பரத்திற்கு மாற்றப்பட்ட ஸ்ரீ இராமானுஜ தர்சன வித்தியாசாலையின் கிளை அமைப்பான வரவர முனி பாடசாலையிலும் மற்றொரு பாடசாலையிலும் புருடோத்தமர் பள்ளிக் கல்வி பெற்றார். மதுரை செந்தமிழ்க் கல்லூரியில் அ. நாராயண ஐயங்கார், சேற்றூர் கவிராயர் ஆகியோரைப் போன்ற பெரும்புலவர்களிடம் தமிழ் கற்று வித்துவான் பட்டம் பெற்றார்.

புருடோத்தமர் தன் பெரிய தந்தையும் வைணவ அறிஞரும் அழகிய மணவாள இராமானுஜ ஏகாங்கி ஸ்வாமிகளிடம் வைணவத்தின் அடிப்படை நூல்களை எல்லாம் கற்றுத் தேர்ந்தார்.

அலுவல்தொகு

வித்துவான் பு. இரா. புருடோத்தமர் பல்வேறு உயர்நிலைப் பள்ளிகளில் தமிழாசிரியராகப் பணியாற்றினார். சிதம்பரத்தில் அமைந்த பள்ளி ஒன்றில் இவர் தமிழாசிரியராகப் பணியாற்றிய பொழுது சிதம்பரத்தை அடுத்த அண்ணாமலை நகரில் அமைந்திருந்த மீனாட்சி தமிழ்க் கல்லூரியில் உ. வே. சாமிநாதையர் முதல்வராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார். அவரின் அழைப்பை ஏற்று புருடோத்தமர் அக்கல்லூரியில் தமிழாசிரியராகப் பணியை ஏற்றார்.

1935 ஆம் ஆண்டில் திருவையாறு அரசர் கல்லூரியில் தமிழாசிரியராகப் பணியை ஏற்றார்.

1948 ஆம் ஆண்டில் சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழாராய்ச்சித் துறையில் விரிவுரையாளராகப் பணியேற்றார். 1961ஆம் ஆண்டில் அப்பணியிலிருந்து ஓய்வுபெற்றார். பின்னர் பல்கலைக்கழக நல்கைக் குழுவின் மானியம் பெற்று நான்காண்டுகள் ஆய்வுப்பணியில் ஈடுபட்டார்.

தமிழ்ப் பணிதொகு

புருடோத்தமர், மணிப்பிரளவ நடையில் இருந்த வைணவ விளக்கங்களை (வியாக்யானங்கள்) தமிழ்படுத்தி வெளியிட்டார். அவை வருமாறு:

  1. நம்பிள்ளையின் ஈடு வியாக்யானம் – (பத்துத் தொகுதிகள்)
  2. பகவத் விஷயம் (நம்மாழ்வாரின் திருவாய்மொழிக்கான ஈடு வியாக்யானம்) [1]
  3. ஆசார்ய ஹிருதயம்: மணவாள் மாமுனிகள் வியாக்யானம் – (நான்கு பகுதிகள்) [2]
  4. ஸ்ரீவசன பூஷணம் : மணவாள மாமுனிகள் வியாக்கியானம்

மறைவுதொகு

புருடோத்தமர் பணியிலிருத்து ஓய்வுபெற்ற பின்னர், தன் மனைவி, மகள்கள் மூவர், மகன்கள் இருவர் ஆகியோருடன், கடலூரில் வாழ்ந்தார். தனது 75ஆவது அகவையில் 1976 சூன் 28 ஆம் நாள் காலமானார்.

வாழ்க்கை வரலாறுதொகு

பு. இரா. புருடோத்தமரின் வாழ்க்கை வரலாற்றை அவர் மாணவர் ஆர். ஆள்வந்தார் என்பவர் புருஷோத்தம நாயுடுவின் தமிழ் - வைணவத் தொண்டு என்னும் நூலில் பதிவுசெய்திருக்கிறார்.[3]

சான்றடைவுதொகு

  1. http://www.tamilvu.org/library/l4210/html/l4210tin.htm
  2. http://www.tamilvu.org/courses/degree/p202/p2022/html/p202224.htm
  3. தேசிகன், வைணவக் கடல் பு.ரா.புருஷோத்தம நாயுடு, தினமணி – தமிழ்மணி
"https://ta.wikipedia.org/w/index.php?title=பு._இரா._புருடோத்தமர்&oldid=1461315" இருந்து மீள்விக்கப்பட்டது