பூலாங்குறிச்சிக் கல்வெட்டுக்கள்

பூலாங்குறிச்சிக் கல்வெட்டுக்கள், இந்தியாவின் தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் வட்டம், திருப்பத்தூர் பேரூராட்சிக்கு அண்மையில் உள்ள பூலாங்குறிச்சி ஊராட்சியில் உள்ள பூலாங்குறிச்சி குன்றின் சரிவுப் பகுதியில் அமைந்துள்ளன. இக்கல்வெட்டுக்களை 1979-ஆம் ஆண்டில் மேலப்பனையூர் கிராம ஆசிரியரும், கல்வெட்டு ஆய்வாளருமான கரு.ராஜேந்திரன் கண்டறிந்தார். கி.பி. 5-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த களப்பிரர் காலத்திய மூன்று கல்வெட்டுகள் தமிழ்ப் பிராமி மற்றும் வட்டெழுத்துக்களால் எழுதப்பட்டுள்ளது. [1][2] இக்கல்வெட்டுக்கள் மூலம் களப்பிரர்கள் சமண, பௌத்த சமயங்களை மட்டுமே ஆதரித்தாலும், அந்தணர்களுக்கு அக்ரகாரம் போன்ற பிரம்மதாயம், மங்கலம் போன்ற நிலங்களை வழங்கியும், இந்துக் கோயில்களுக்கு அறப்பணியும் செய்துள்ளனர். அந்தணர், அரசர், வணிகர், உழவர் என்ற நால் வருண முறையை குறிக்கும் மிகப் பழைய தமிழ்க் கல்வெட்டு இதுவே ஆகும்.[சான்று தேவை] இக்கல்வெட்டுக்கள் மூலம் அக்கால சமய, சமூக, அரசியல் நிலையை ஓரளவு அறிந்து கொள்ள முடிகின்றது.

பூலாங்குறிச்சி கல்வெட்டுகளை பாதுகாக்கப்பட்ட சின்னமாக அறிவிக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.[3]

கல்வெட்டுகளின் விளக்கம்

தொகு

பூலாங்குறிச்சியின் மூன்று கல்வெட்டுக்களில் வலப்புற கல்வெட்டு பெரும்பாலும் சிதையாமல் முழுமையான செய்திகளுடன் 13 வரிகளைக் கொண்டுள்ளது. இடப்புறக் கல்வெட்டு 22 வரிகளுடன், தொடக்கத்திலும், இறுதிப் பகுதியிலும் சிதைந்துள்ளதால் அதன் செய்தியை தெளிவாக முழுமையாக அறியமுடிவில்லை. ஆனால் நடுப்பகுதியில் மட்டும் சில செய்தி சிதையாமல் உள்ளன. நடுவில் உள்ள கல்வெட்டு முழுவதும் தேய்ந்துவிட்டபடியால் அதன் செய்தியை அறிய முடியவில்லை.

வலப்புறக் கல்வெட்டில் குறிக்கப்படும் பச்செறிச்சில் மலை தான் இன்று பூலாங்குறிச்சி எனப்படுகின்றது. இக்கல்வெட்டுகள் தமிழியிலிருந்து வட்டெழுத்து தோன்றிய தொடக்க நிலை எழுத்தில் பொறிக்கப்பட்டுள்ளன. மெய்யெழுத்திற்கும், எ, ஒ என்னும் உயிரெழுத்திற்கும் புள்ளி வைக்கப்பட்டுள்ளன. மிகப் பழங்காலக் தமிழ்க் கல்வெட்டில் இவையே பழமையானது என அறியப்படுகிறது. எழுத்தமைதியை கொண்டு இவற்றின் காலம் தொல்லியல் அறிஞர்களால் கிபி. 5-ம் நூற்றாண்டு என முடிவு செய்யப்பட்டுள்ளது.

வலப்புற கல்வெட்டு

தொகு
  1. கோச் சேந்தன் கூற்றற்கு யாண்டு நூற்றுத்தொண்ணூற்றி ரண்டு நாண் முப்பத்தாறு பக்கந் தைப்பிறை நாள் ப(ன்னிரண்டு) வேள் மருகண் மகன் கடலகப்
  2. பெரும்படைத் தலைவன் எங்குமான் னொல்லையூருக் கூற்றத்து வேள்கூருப் பச்செறிச்சின் மலை மேற் செஇவித்த தேவகுலமும் முத்தூற்றுக் கூற்றத்து விளமரு(ச்) # செஇவித்த தேவகுலமும் மதிரை உலவியத்தான் குளத்தின் வடபக்கத்துச் செஇவி
  3. த்த தாபதப்பள்ளியுள் (வா)சி தேவனாரு கோட்டமும் மவை அத்திக்கோயத்தாரு முள்மனையாருந் நாற்பாற்றிணைகளுந் தமக்கு காவலாக
  4. அவற்றுக்குற்றது செ(யக்) கொண்டமையால் லவற்றை வ(ழிபடுவது)ம் மவற்றுக்குப் பெயப்பட்ட அறப்புறந் நடையாட்டுவதூஞ் செயும்
  5. பாண்டங்கருஞ் சேவுக்கரும் (வி)ரும்மாச்சாரிகள்ளுந் தருமிகளுமூ(ர்) காவல் கொண்டா(ரு ஆ) ராஇந்து வைஇக்கப்பட்டாரு அல்லது வழிபடப்
  6. பெறாமையும் மவற்றுட் பச்செறிச்சி(ல்) மலைமேற் செஇவி(த்த தேவகு)லத்துக்குக் குடும்பியராவாரு குழ
  7. (லூ)ருத் துஞ்சிய உடையாரால் வேள்கூருப் பெயப்பட்ட குடும்பி(யர் வழியல்லது வேறொரு) குடும்பாடப் பெறாமையும்
  8. மத் தேவகுலத்துக் குற்றது செய்து வல்லக்குற்றந் தொழில் செய_ _க(ளு)_ _(டஞ்) செயவும் மெழுதி வைக்கென் றருள்ளித்தாரு
  9. கேட்டாருலவியப் பெருந்திணை நல்லங்கிழானெ இனங்குமானும் முலவியப் பெருந்திணை ப_ _ஆறு கிழான் கீரங்காரி
  10. யு முலவியப் பெருந்திணை அம்பருகிழான் குமாரம் போந்தையுங் கேட்டு வந்து கூறின (னோ)லை எழுதுவான் (றம)ன் காரி
  11. கண்ணன். இது கடைப்(பி) ஓலை காற் கண்டெழுதிக் கொடுத்தேன் (வே)ண்ணாட்டான் (ந_ _ரி) நாரியங்காரி

விளக்கம்

தொகு

வேந்தன், சேந்தன், கூற்றனுக்கு மகுடம் ஏறிய பின் 192ம் ஆண்டு, நாள் 36, பட்சம் தேய்பிறை 12 நாளிலில் இக்கல்வெட்டு பொறிக்கப்பட்டது. சேந்தன் கூற்றனுக்கு அடங்கிய வேள்ஆன மருகண் என்பானுக்கு கீழ்படிந்த போர்வீரனான கடல்புறத்து மீனவப் பெரும் படைக்குத் தலைவனாகிய எங்குமான் என்பவன் ஒல்லையூர்க் கூற்றத்தில் வேள்கூரின் பச்செறிச்சின் மலை மேல் எடுப்பித்த தேவகுலமான கோவிலும் முத்தூற்றுக் கூற்றத்தின் விளமரில் செய்வித்த கோவிலும் மதிரையில் உலவியத்தான் குளத்தின் வடபக்கத்தில் உள்ள தாபதப்பள்ளியில் எடுப்பித்த வாசி தேவனார் கோட்டமும் ஆகிய இம்மூன்றுக்கும் அத்திகோயத்தார், ஊருள் வாழ்வோர், நாற்பிரிவு குலம் ஆகியோரை தமக்கு காவலாக, துணையாகக் கொண்டு அவற்றுக்கு தேவையானவற்றை செய்தமையால் அவற்றில் வழிபடவும் அவற்றுக்குப் ஏற்படுத்தப்பட்ட நியதிப்படியான பூசனையை வழக்கமாக செய்யும் பண்டாரம் காப்பாளரும், அர்ப்பணிப்பு பணியாளரும், விரும்மாச்சாரிகளும், துறவியரும், ஊர் காவல் கொண்டாரும் தகுதி ஆராய்ந்து வைக்கப்பட்டவரை தவிர பிறர் வழிபாடு ஆற்றாதவாறு செய்ய வேண்டும். அதிலும் குறிப்பாக பச்செறிச்சில் மலைமேல் எடுப்பித்த கோவிலுக்கு பூசகராகின்றவர் குழலூரில் இறந்த வேந்தரால் வேள்கூருக்கு அழைத்து வந்து அமர்த்தப்பட்ட பூசகர் குடும்ப வழியினரைச் சாராத வேறொரு குடும்பத்து பூசகர் பூசனை ஆற்றக்கூடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மேலும் அக்கோவிலுக்கு தேவையானதை செய்தும் தீங்கான செயல்களுக்கு தண்டம் விதித்தும் செயற்பட வேண்டும் என்று எழுதிவைக்கச் சொல்லி ஆணையிட்டார். இதை படைத் தலைவன் எங்குமான் சொல்லிடக் கேட்டவரான உலவியப் பெருந்திணை நல்லன்கிழான் எயினங்குமான், உலவியப் பெருந்திணை ப_ _ஆறு கிழான் கீரங்காரி, உலவியப் பெருந்திணை அம்பருகிழான் குமாரம் போந்தை ஆகிய மூவரும் இதற்கு ஒப்பி கையெழுதிட்டு ஆணைப்படுத்தினர். இதை கேட்டு வந்து கேட்டபடி கூறினவன் ஓலை எழுதுவான் தமன் காரி கண்ணன் ஆவான். இதையே வழிகாட்டு நெறியாக ஓலைச்சுவடி கண்டு (கல்லில்) எழுதிக் கொடுத்தேன் வேண்ணாட்டான் ந_ _ரி நாரியங்காரி.

192–ம் ஆண்டு எந்த தொடக்க ஆண்டை குறிக்கின்றது என்று தெரியவில்லை. நாற்பாற்றிணை என்பது அந்தணர், அரசர், வணிகர், உழவர் என்ற நால்வருண முறை ஆகும். நால் வருண முறையை குறிக்கும் மிகப் பழைய தமிழ்க் கல்வெட்டு இதுவே எனலாம். தாபதப்பள்ளி என்பது சமண பள்ளி ஆகும். தேவகுலம் என்பது சமணம் சாராத கோவில் ஆகும்.

இடப்புற கல்வெட்டு

தொகு
  1. _ _ _ ந்தற்கு யாண்டு நூற்றுத் _ _ _ _ _
  2. நா(ற்) _ _ _ ர.ப_ ] _ _
  3. (னு)_ _ _ ளள் (ளை) _ _ _ _
  4. _ _ _ _ (ள்) மருகண் மகன் (க)டலகப் பெ
  5. _ _ _ _ ன் ஒல்லையூருக்கூற்(ற)
  6. _ _ _ _ _ _ _ _
  7. _ _ செ _ _ _ வகள _ _ வய _ _ _ _
  8. _ _ _ _ _ _ _ _ _
  9. (பெ)_ _ரு நிலனும் புன்செ வெள்ளேற்றான் மங்கலமென்
  10. ._ _ (ழவரும்)_ ரு…ங் கூடலூரு நாட்டுப் பிரம்மதாயஞ் சிற்றையூருப் பிரம்மதாயங்கி
  11. _ _ _ ழமையும் (மீயா)ட்சியுங் கொண்டாளும் மவூருப்படுங்கடைய வயலென்னும்
  12. _ _ _ புலத்தவன் விற்றுக்கொண்டு கொடுத்த புன்செ நிலனு
  13. _ _ _ துப் பிரம்மதாயத்துட் பிரம்மதாயக் கிழவரா(ன)
  14. _ _ _ றாராலும் பிரம்_ _யுங் காரண்மையுமாகக் கொண்டாளுந் நீர் நிலனும் புன்
  15. _ _ லனும் பிறவுஞ்_ _ _ பாண்டி நாட்டுங் கொங்கு நாட்டும் மவரு காராண்கிழமையுங் கல
  16. க் கிழமையும் மேல்(லாண்மை) கொண்ட(ன)வும் மவருடைய காலாசமுந் தோட்டங்களும் மவரு தமரையும் ம
  17. வரு குடிகளையும் _ _ _ டையாரும் பிரம்ம தாயமுடையாருந் நாடுகாப்பாரும் புறங்காப்
  18. பாரும் முப்பு (ரு காப்பாரு) _ _ _ தாயந் நெறி அ_ _ செஇதாரு தத்தமானும் வேறு வேறு ஆஇரத்தாறுநூ
  19. று காணந் _ _ று __ டு வே_ _ ன்ற_ _ ரு கேட்டாருல வியப் பெருந்திணை நல்லகிழா னெ இனங்கு
  20. மானும் முலவி _ _ _ ம _ _ _ ங்கிழான் ளங் கூற்றனும் முலவியப் பெருந்திணை ஆலத்தூர் கி
  21. _ _ _ _ லை _ _ துவான் (றமன்வ)டுகங் குமான்_ _டைப்பி (ஒ)
  22. _ _ _(தளருக்கு)_ _ _

விளக்கம்

தொகு

வேள் ஆன மருகண் என்பானுக்கு கீழ்படிந்த போர்வீரனான கடல்புறத்து மீனவப் பெரும் படைக்குத் தலைவனாகிய எங்குமான் ஒல்லையூர் கூற்றத்தில் செய்த செயலைக் குறிக்கின்றது. 12-ம் வரி வயலுக்கு உரிமையாளன் விற்றுக்கொடுத்த புன்செய் நிலம் பிரம்மதாயமாக ஆக்கப்பட்டதை தெரிவிக்கின்றது. அந்த பிரம்மதாயத்துள் ஒரு உரிமையாளரின் பயிர் செய்யும் உரிமை நீர், நிலம் என்பது பற்றியும் பாண்டி நாட்டிலும் கொங்கு நாட்டிலும் அவருக்கு உள்ள பயிர் செய்யும் உரிமை பற்றியும், அவருடைய கால்நடை, தோட்டம், குடிகள் பற்றியும் சொல்கின்றது.

பிரம்ம தாயமுடையவரும், நாடுகாப்பாரும், புறங்காப்பாரும் முப்புரு காப்பாரும் தாயநெறியை காக்க வேண்டும் என்றும் இதற்கு அல்லவை செய்தாரிடம் ஆயிரத்தறுநூறு காணம் தண்டம் திரட்டவேண்டும் என்கின்றது. இதை ஆணைப்படுத்திய கிழார்கள் பெயரை குறிப்பதோடு கல்வெட்டு சிதைந்துள்ளது.

இக்கல்வெட்டுக்களின் முக்கியத்துவம்

தொகு

இக்கல்வெட்டில் சேந்தன் கூற்றன் என்ற அரசர்களது பெயர்கள் கிடைத்துள்ளன. இக்கல்வெட்டில் மேலும் பிரம்மதாயம், மங்கலம் போன்ற குறிப்புகளுடன், தேவகுலம், கோட்டம் என்ற குறிப்புகளும் உள்ளதால் களப்பிரர்கள் பிராமணர்களையும் ஆதரித்துள்ளனர் என்பதும், களப்பிரர்கள் சமண, புத்த சமயத்தை மட்டுமே ஆதரித்துள்ளார். எனக் கருத்து மாற்றம் செய்ய வேண்டியுள்ளது. அவர்கள் சைவ, வைணவ கோயிலுக்கும் அறப்பணிகள் செய்துள்ளனர் என்பதையும் அறிய முடிகிறது. அவர்கள் கல்வெட்டுகளில் கலி அரசர் என்று அழைக்கப் பெற்றுள்ளனர்

தேவகுலம், தாபதப்பள்ளி, வாசிதேவனார் கோட்டம், விரும்மச்சாரிகள், தருமிகள் முதலிய சொற்களும் சமய உலகில் வடக்கிலிருந்து வந்த தாக்கத்தை வெளிப்படுத்துகின்றன. பிரம்மதாயங்கள் (பிரமதேயங்கள்) பல்கத் தொடங்கிய காலம் இது என்பதை வெள்ளேற்றான் மங்கலம், சிற்றையூர் பிரம்மதாயம் முதலியன உணர்த்தும். இவற்றின் விளைவாக நில உரிமைகளில் வேறுபாடுகள் தோன்றத் தொடங்கிவிட்டன. நிலக்கிழார், உழுவோர் என்ற வேறுபாடுகளும் நிலக்கிழமை (மீயாட்சி) வேறு, உழும் உரிமை வேறு என்றும் சமுதாயத்தில் ஏற்றத்தாழ்வுகள் தெளிவாகத் தொடங்கி விடுகின்றன. இங்கும் காவியகாலச் சமுதாயத்தை ஒப்பிட்டுப் பார்ப்பது சங்க மருவிய கால வரலாற்றுக்குப் புதிய விளக்கத்தைப் பெற உதவுகிறது. இக்கல்வெட்டுக்கள் பொ.ஆ. 5 ஆம் நூற்றாண்டு வட்டெழுத்தில் இடம்பெற்றுள்ளன. மெய் எழுத்துக்கள் அனைத்திற்கும் புள்ளியிடப் பெற்றுள்ளது.

தமிழில் அமைந்த பதினெட்டு மெய்யெழுத்துக்களின் வரிவடிவங்களையும் பூலாங்குறிச்சிக் கல்வெட்டுக்களில் காணமுடிகிறது. இவற்றில் ழகர மெய் (புள்ளியோடு கூடிய மெய்) மட்டும் இக்கல்வெட்டுக்களில் வரவில்லை. மற்ற மெய்யெழுத்துக்கள் அனைத்தும் புள்ளியிட்டு எழுதப் பெற்றுள்ளன.

மேற்கோள்கள்

தொகு