பெய்ட்டி புயல்
பெய்ட்டி புயல் (PHETHAI Cyclonic Storm) (pronounced as Pay-ti) என்பது 2018 ஆம் ஆண்டின் வடகிழக்குப் பருவக்காற்றுக் காலத்தில் ஏற்பட்ட இரண்டாவது புயலாகும். தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், வடக்கு மற்றும் வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து, 15 திசம்பர் 2018 அன்று மாலை 5.30 மணியளவில், சென்னைக்கு தென்கிழக்கில் 590 கிலோமீட்டர் தொலைவிலும், ஆந்திரப்பிரதேசத்தின் மசூலிப்பட்டணத்திற்கு தெற்கு மற்றும் தென்கிழக்குத் திசையில் 770 கிலோமீட்டர் தொலைவிலும் மையம் கொண்டிருந்தது.[1][2]
பெயர்
தொகுஇந்த புயலுக்கான பெயரானது தாய்லாந்து நாடு முன்மொழிந்தவாறு சூட்டப்பட்டுள்ளது. அதன்படி இப்புயலுக்கு தாய்லாந்து மொழியில் பெய்ட்டி (PAYTI) என பெயரிடப்பட்டது. அதை ஆங்கிலத்தில் எழுதும்போது பெதாய் (PHETHAI) என எழுதப்படுகிறது. என்றாலும் அதை பெய்ட்டி என்று உச்சரிப்பதே சரியானது என்று சென்னை வானிலை ஆய்வு மைய துணை இயக்குநர் எஸ்.பாலசந்திரன் விளக்கமளித்தார்.[3]
ஆந்திர பாதிப்புகள்
தொகுதிசம்பர் 17 அன்று பிற்பகல் 12.30 மணியளவில் கிழக்கு கோதாவரி மாட்டத்தில், காக்கி நாடா அருகில் உள்ள தெற்கு ஏனாம் பகுதியில் இப்புயல் கரையை அடைந்தது. புயல் கரையைக் கடந்த நேரத்தில் மணிக்கு 80 கி.மீ முதல் 100 கி.மீ வேகத்தில் காற்று வீசியது. பின்னர் காக்கிநாடா - ஏனாம் இடையே மதியம் 3.50 மணிக்கு கரையை கடந்து, ஒடிசாவை நோக்கிச் சென்றது. இந்தப் புயலால் கிழக்கு கோதாவரி, குண்டூர், கிருஷ்ணா, விஜயநகரம், விசாகப்பட்டினம் மற்றும் விஜயவாடாவில் கனமழை மற்றும் புயல் வீசியதால், இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. இப்புயல் காரணமாக ஆந்திராவில் 22 தொடர்வண்டிகள் இரத்து செய்யப்பட்டன.[4][5]
புயல் சின்னம் காரணமாக ஆந்திராவின் கடலோர மாவட்டங்களில் இரண்டு நாட்கள் கனமழை பெய்தது. இதனால் விசாகப்பட்டினம், சிறீகாகுளம், விஜயநகரம், குண்டூர், கிருஷ்ணா, கிழக்கு, மேற்கு கோதாவரி மாவட்டங்களில் விவசாயப் பயிர்கள் நாசம் அடைந்தன. புயலால் ஆயிரக் கணக்கான மரங்கள் வேருடன் சாய்ந்தன. ஏராளமான மின் கம்பங்களும் சரிந்து விழுந்தன. 297 செல்பேசி கோபுரங்கள் நாசமடைந்தன. இதனால் கிருஷ்ணா மாவட்டத்தில் மட்டும் 12 ஆயிரம் ஹெக்டேர் பயிர்கள் நாசமடைந்ததாக கூறப்படுகிறது.[6] கடலோர ஆந்திர மாவட்டங்களில் ரூ. 450 கோடிக்கு பயிர்கள் நாசமடைந்துள்ளதாக முதற்கட்ட ஆய்வறிக்கை மூலம் தெரியவந்துள்ளது. மேலும் விசாகப்பட்டினம், ஸ்ரீகாகுளம், கிழக்கு, மேற்கு கோதாவரி மாவட்டங்களில் சுவர் இடிந்து விழுந்த மற்றும் மரங்கள் சாய்ந்த நிகழ்வுகளால் 23 பேர் பலியானதாக தெரியவந்துள்ளது. காக்கிநடாவிலிருந்து விசாகப்பட்டினம் கடற்பகுதிக்கு மீன் பிடிக்கச் சென்ற 28 மீனவர்களை காணவில்லை எனப்படுகிறது.[7]
மேற்கோள்கள்
தொகு- ↑ "தீவிர புயலாக மாறும் பெய்ட்டி". தினமலர். 16 டிசம்பர் 2018. http://www.dinamalar.com/news_detail.asp?id=2169606. பார்த்த நாள்: 16 டிசம்பர் 2018.
- ↑ "PRESS RELEASE, Dated: 15-12-2018". India Meteorological Department. 15 டிசம்பர் 2018. http://www.imd.gov.in/pages/press_release_view.php?ff=20181215_pr_380. பார்த்த நாள்: 16 டிசம்பர் 2018.
- ↑ "மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றுடன் ஆந்திராவில் இன்று கரையை கடக்கிறது பெய்ட்டி புயல்: கடல் கொந்தளிப்பால் மீனவர்களுக்கு எச்சரிக்கை". செய்தி. இந்து தமிழ். 17 திசம்பர் 2018. பார்க்கப்பட்ட நாள் 17 திசம்பர் 2018.
- ↑ "ஆந்திராவை புரட்டி போட்ட பெய்ட்டி புயல்". செய்தி. தினமலர். 17 திசம்பர் 2018. பார்க்கப்பட்ட நாள் 18 திசம்பர் 2018.
- ↑ "ஆந்திராவில் 'பெய்ட்டி' புயல் கரையை கடந்தது - ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிர்கள் மூழ்கின". தினத்தந்தி. பார்க்கப்பட்ட நாள் 18 திசம்பர் 2018.
- ↑ என்.மகேஷ்குமார் (18 திசம்பர் 2018). "ஆந்திர மாநிலத்தில் கரையை கடந்தது 'பெய்ட்டி' புயல்; 7 பேர் பலி, 6 மீனவர்கள் மாயம், ஆயிரக்கணக்கான ஹெக்டேர் பயிர்கள் நாசம்". செய்தி. இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 18 திசம்பர் 2018.
- ↑ "'பெய்ட்டி' புயல் பாதித்த பகுதிகளை ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட்டார் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு". செய்தி. இந்து தமிழ். 19 திசம்பர் 2018. பார்க்கப்பட்ட நாள் 19 திசம்பர் 2018.