பெருநிலவு
பெருநிலவு (Supermoon) என்பது ஒரு முழுநிலவு அல்லது புதுநிலவு நாளில் நிலவு புவிக்கு மிக அருகில் வரும்போது ஏற்படும் நிகழ்வாகும். இதன் அறிவியல் பெயர் புவி-நிலவு-கதிரவன் அமைப்பின் புவியண்மை இணைவு என்பதாகும்.
நிலவு புவியை ஒரு நீள்வட்டப்பாதையில் சுற்றிவருகிறது. எனவே அது ஒரு சில நேரங்களில் புவிக்கு அருகிலும் சில நேரங்களில் புவியை விட சற்று தொலைவிலும் இருக்கும், அப்படி அண்மைநிலையில் நிலவு இருக்கும் பொழுது முழுநிலவாக இருந்தால் அன்றைக்கு நிலவு வழக்கத்தை விட 14 மடங்கு பெரிதாகவும், 30 மடங்கு ஒளிர்வுடனும் அதுவே பெருமுழுநிலவு என்று அழைக்கப்படுகிறது. ஒரு வருடத்தில் நான்கு முதல் ஆறு பெருநிலவுகள் தோன்றும்..[1][2]
புதுநிலவு நாட்களில் ஏற்படும் பெருநிலவு பெருப்புதுநிலவு என்று அழைக்கப்படுகிறது. இதை முழுமையான கதிரவ மறைப்பின் உச்ச நிலையின் போது காண இயலும். மார்ச் 20, 2015, முழுமையான கதிரவ மறைப்பு ஒரு பெருப்புதுநிலவு நாளில் நிகழ்ந்தது.[3]
புவிக்கு மிக தொலைவில் நிலவு வரும்போது குறுநிலவு (micromoon) என்று அழைக்கப்படுகிறது. இதன் அறிவியல் பெயர் புவிச்சேய்மை இணைவு என்பதாகும்.
வரையறைகள்
தொகுசூப்பர்மூன் என்ற பெயரை உருவாக்கியவர் ரிச்சர்ட் நோலே என்ற சோதிடர் ஆவார்.[4] இவரின் வரையறைபடி பெருநிலவு என்பது ஒரு புதுநிலவு அல்லது முழுநிலவு நாளின் போது நிலவு புவிக்கு 90% அதிகமான அல்லது சற்று குறைவான நெருக்கத்தில் வரும் போது ஏற்படுகிறது. எனினும் அறிவியல்படி இந்நிகழ்வின் பெயர் புவியண்மை இணைவு அல்லது புவியண்மை முழு/புது நிலவு என்பதாகும்.[5] புவியண்மை என்பது நிலவு புவிக்கு அண்மைநிலையில் இருப்பதையும் இணைவு என்பது புவி-நிலவு-கதிரவன் ஆகிய மூன்றும் நேர்க்கோட்டில் இணைவதையும் குறிக்கிறது.
விண்ணில் கோள்கள் கதிரவனையும், கதிரவன் பால்வழிப் பாதையில் ஒரு மையத்தையும் நீள்வட்டப் பாதையில் சுற்றிவருகின்றன. அதே போல நிலாவும் புவியைச் சுற்றிவருகிறது. நிலவு புவியைச் சுற்றி வர 29.32 நாட்கள் ஆகும். புவி கதிரவனை சுற்றி வர சராசரியாக 365.25 நாட்கள் ஆகும்.[6] இந்தக் கணக்கீட்டு முறையில் புவியின் ஒருபக்கம் கதிரவனும் மறுபக்கம் நிலவும் ஒரே நேர்கோட்டில் வரும்போது ‘பெருநிலவு’ தோற்றம் நிகழும்.
அருகில் உள்ள பொருள் பெரிதாகவும் தெளிவாகவும் கண்ணுக்குத் தெரியும். தொலைவில் உள்ள பொருள் அருகில் உள்ளதை ஒப்புநோக்கும்போது சற்றே சிறிதாகவும், மங்கலாகவும் புலப்படும். இந்த வகையில் கதிரவன், புவி, நிலவு ஆகிய மூன்றும் குறைந்த தொலைவில் இருக்கும்போது ஒளியும் அளவும் பெருகும். இப்படிப் பெருகித் தோன்றுவதே இந்தப் பெருநிலவு ஆகும். இம்மூன்றும் அதிக தொலைவில் இருக்கும் போது ஒளியும் அளவும் குறையும். இதுவே குறுநிலவு ஆகும்.
சங்கப்பாடல்
தொகுநெடுவெண் நிலவினார் என்னும் சங்ககாலப் புலவர் இதனை நெடுவெண் நிலவு எனக் குறிப்பிடுகிறார்.[7]
வானியல் நிகழ்வு
தொகுபெருநிலவு என்பது ஒரு வானியல் நிகழ்வு மட்டுமே; இதனால் புவியில் நிலநடுக்கங்களோ, ஆழிப்பேரலைகளோ தூண்டப்படுவது கிடையாது என்று அறிவியலாளர்கள் கூறுகின்றனர் [8]. நிலவு புவிக்கு அண்மைநிலையில் இருத்தலும் கூடுதலாக முழுநிலவுப் பிறையில் நிலவு இருத்தலும் புவியின் அக ஆற்றலில் எவ்வித பெருமாற்றத்தையும் ஏற்படுத்துவதில்லை. பெருநிலவன்று ஏற்படக்கூடிய மதிப்பெருக்கும் (lunar tide) கூட வழமையாக ஒவ்வொரு முழுநிலவின் (பெளர்ணமி) பொழுதும் ஏற்படுவதை விட சற்றே அதிகமாக இருக்கும். நிலவின் (மற்றும் கதிரவனின்) பரலை விசைகள் (tidal forces) எப்போதுமே புவிமேலோட்டுப் பேரியக்க விசைகளை (tectonic forces) விட மிகமிகக் குறைவாகவே உள்ளதால், நிலநடுக்கங்களோ அதனால் விளையக்கூடிய ஆழிப்பேரலைகளோ சாத்தியமில்லை.
அளவில் காணப்படும் மாற்றங்கள்
தொகுஅண்மைநிலையில் இருக்கும் முழுநிலவு சேய்மைநிலையில் இருப்பதை விட சராசரியாக 14% பெரியதாகவும் 30% ஒளிர்வுடனும் இருக்கும்.
நிகழ்வுகள்
தொகுஒரு ஆண்டில் மொத்தம் 12 அல்லது 13 முழுநிலவுகள் வரும். அவற்றில் 3 அல்லது 4 பெருமுழுநிலவாக இருக்கும்.
டிசம்பர் 6, 2052 அன்று வரும் முழுநிலவு நாளன்று நிலவு புவிக்கு 356254 கிலோமீட்டர்கள் தொலைவில் இருக்கும்வரும்ு 21ம் நூற்றாண்டின் மிகப்பெரிய பெரு முழுநிலவக இருக்கும்.
நிலவு மறைப்புகள்
தொகுபெருநிலவு மற்றும் குறுநிலவு ஆகிய நாட்களில் நிலவு மறைப்பு ஏற்படுவது மிகவும் அரிய நிகழ்வாகும். 21ஆம் நூற்றாண்டில் நிகழும் 87 முழுமையான நிலவு மறைப்புகளில் 28 மறைப்புகள் பெருநிலவு நாட்களிலும் 6 மறைப்புகள் குறுநிலவு நாட்களிலும் வருகின்றன. பெரும்பாலும் முழுமையான குறுநிலவு மறைப்புகள் நிலவு சாரோசு சுழற்சி 128 வரிசையில் நிகழும்.[9]
குறுநிலவு நாளன்று நிலவு புவிக்கு மிக தொலைவில் இருப்பதால் அன்று ஏற்படும் நிலவு மறைப்பு நீண்ட நேரம் நீடிக்கும். சான்றாக 21ம் நூற்றாண்டின் மிக நீண்ட மறைப்பான சூலை 27, 2018, நிலவு மறைப்பு ஒரு குறுநிலவு மறைப்பாகும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ https://www.vikatan.com/news/miscellaneous/114925-super-blue-blood-moon-after-152-years.html
- ↑ NASA
- ↑ https://www.timeanddate.com/eclipse/10-facts-solar-eclipse-march-2015.html
- ↑ astrologer Richard Nolle in 1979
- ↑ Phillips, Tony (May 2, 2012). "Perigee "Super Moon" On May 5–6". NASA Science News. நாசா. பார்க்கப்பட்ட நாள் 19 Nov 2018.
- ↑ mean solar days
- ↑
கருங் கால் வேங்கை வீ உகு துறுகல்
இரும் புலிக் குருளையின் தோன்றும் காட்டிடை
எல்லி வருநர் களவிற்கு
நல்லை அல்லை நெடு வெண்ணிலவே! - ↑ நாசா [1] காண்க. இரண்டாவது கேள்வியின் பதில்
- ↑ http://astropixels.com/ephemeris/moon/fullperigee2001.html