பெ. தெ. லீ. செங்கல்வராய நாயக்கர்

தமிழக வள்ளல்

பெ. தெ. லீ. செங்கல்வராய நாயக்கர் (இவர் பெ. தெ. லீ. செங்கவராய நாயகர் என்றும் அழைக்கபடுகிறார், P. T. Lee Chengalvaraya Naicker, 1829-1874[1]) என்பவர் ஒரு வள்ளலாவார். இவர் காஞ்சிபுரத்தை அடுத்த ஊவேரி என்னும் சிற்றூரில் வளர்ந்தவர். இவர் சென்னை இராணுவத்தில் துபாசியாகப் (மொழிபெயர்ப்பாளர்) பணிபுரிந்தார். இவர் தன் சொந்த சம்பாத்தியத்தில் சேர்த்த சொத்துகள் மூலம் ஏழைகள், அனாதைக் குழந்தைகள் பயன் பெறும் வகையில் பல சமுதாய சேவைகளைச் செய்தவராவார்.

அறப்பணிகள்

தொகு

1857 இல் சென்னையில் கொடும் பஞ்சம் ஏற்பட்டது. அப்போது சூளை கர்னல் காலிஸ் சாலையில் தான் வசித்துவந்த வீட்டிற்கு அருகில் கொட்டகை அமைத்து அதில் கஞ்சித் தொட்டியைத் திறந்து மக்களுக்கு இலவசமாக உணவு வழங்கினார். 1866 இல் பஞ்சத்தினால் பாதிக்கப்பட்ட ஒரிசா மக்களுக்கு பல இலட்சம் மதிப்புள்ள உணவு, உடை உள்ளிட்ட உதவிப்பொருட்களை கப்பலில் ஏற்றி அனுப்பினார். சுமார் ஒரு இலட்ச ரூபாய் செலவில் வேதாந்த வித்யா விலாச சபா என்ற பெயரிலான அச்சுக் கூடத்தை தன் வீட்டுக்கு அருகில் துவக்கினார். அந்த அச்சுக்கூடத்தில் ஆழ்வார்களின் பக்திப் பாடல்கள் போன்றவற்றை தெலுங்கு மொழியில் மொழிபெயர்த்து வெளியிட்டார்.

காஞ்சிபுரத்தை அடுத்து, அரக்கோணம் சாலையில் கோவிந்தவாடி அகரம் என்ற ஊரின் வடக்கே விருது நதி சீறாறு என்னும் ஆறு பாய்கிறது. அந்த ஆற்றிலிருந்து கம்மவார்பாளையம் வழியாக தனது பூர்வீக கிராமமான புத்தேரிக்கு ஏறக்குறைய நான்கு கி.மீ தொலைவுக்கு ஒரு கால்வாயை வெட்டினார். அக்கால்வாயை அப்பகுதி மக்கள் செங்கல்வராயன் கால்வாய் என்று அழைக்கின்றனர். காஞ்சிபுரத்திலிருந்து அரக்கோணம் வழியாக திருப்பதிக்கு பாதயாத்திரையாக செல்லும் பக்தர்களுக்காக ஊவேரியில் ஒரு சத்திரத்தை அமைத்தார். அந்தச் சத்திரத்தில் தங்கிச் செல்லும் பக்தர்களுக்கு சாதி வேறுபாடு இன்றி உணவு அளிக்கவும் ஏற்பாடு செய்தார். தனக்கு கீழே, ஷாட் அன்கோ நிறுவனத்தில் பணியாற்றியவர்கள், தனக்கு கல்வி புகட்டிய ஆசிரியர்கள், தன்னுடைய தோட்டத்தில் பணியாற்றிய பணியாளர்கள், தனது குடும்ப உறுப்பினர்கள் போன்றோருக்கு தன் காலத்திற்குப் பிறகு ஓய்வூதியம் வழங்க தன் உயிலின் வழியாக ஏற்பாடு செய்தார்.

செங்கல்வ நாயக்கர் நாட்டிற்கு தொழிற் கல்வி மிகவும் அவசியம் என்று கருதினார். எனவே தொழிற் கல்வி பள்ளி ஒன்றைத் தொடங்கி, அப்பள்ளியில் தாய் தந்தையரற்ற, பொருளாதாரத்தில் நலிவுற்ற பிள்ளைகளுக்கு இலவசமாக உணவு, உறைவிடத்துடன் கல்வியளிக்க ஏதுவாக தனது சொத்துக்கள் அனைத்தையும் உயில் மூலம் எழுதி அறக்கட்டளை ஒன்றை ஏற்படுத்தினார். [2] இதன்படி 1880இல் ஆதரவற்றோர் தொடக்கப்பள்ளி ஒன்று தொடங்கப்பட்டது. 1886 இல் அது வணிக பயிற்சிப் பள்ளியாகவும், தொழிற் பயிற்சிப் பள்ளியாகவும் மாற்றப்பட்டது. இந்தியாவில் தொழிற் கல்விக்காக தொடங்கப்பட்ட முதற்பள்ளி என்ற பெயரைப் பெற்றது.[3] இது தற்போது பலதொழில்நுட்பக் கல்லூரியாகச் செயல்பட்டுவருகிறது. வள்ளல் பி. டி. லீ. செங்கல்வராய நாயக்கர் அறக்கட்டளை, வேப்பேரி, சென்னை-7 என்ற முகவரியில் கடந்த 145 ஆண்டுகளாக அறக்கட்டளை செயல்பட்டு வருகிறது. இவ்வறக்கட்டளை மூலம் பல்வேறு கல்வி நிறுவனங்களான, மருத்துவம், தொழிற்கல்வி, பொறியியற்கல்வி போன்ற கல்வி நிறுவனங்கள் உருவாக்கப்பட்டு அதில் ஏழை, எளிய மக்கள் பயன் பெறும்வகையில் செயல்பட்டு வருகின்றன.[4]

மேற்கோள்கள்

தொகு
  1. V. Tiruvenkataswami, ed. (1942). Centenary Commemoration Book, 1842-1942. Pachaiyappa's College, Madras. p. 62. P. T. Lee Chengalvaraya Naicker ( 1829-74 ) was the son of Peroomall Naicker , who was employed in the Madras Army
  2. "செங்கல்வராய அறக்கட்டளைத் தலைவராக நீதிபதி ஏ.கே.ராஜன் நியமனம்". Dinamani. பார்க்கப்பட்ட நாள் 25 செப்டம்பர் 2015. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "பெ.தெ.லீ.செங்கல்வராயர் 150: தொழிற்கல்வி தந்த வள்ளல்!". Hindu Tamil Thisai. 2024-10-27. பார்க்கப்பட்ட நாள் 2024-10-28.
  4. சிந்தனையாளன் (இதழ்) பக் 49,சூலை 2015