பேகம் பத்ருன்னெசா அகமது

பேகம் பத்ருன்னெசா அகமது (Begum Badrunnessa Ahmed) வங்காளதேசம் நாட்டைச் சேர்ந்த ஒரு சமூக ஆர்வலர் மற்றும் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதை ஆதரிக்கும் ஆர்வலராவார்.[1][2]

பேகம் பத்ருன்னெசா அகமது
Begum Badrunnessa Ahmed
தாய்மொழியில் பெயர்বেগম বদরুন্নেসা আহমেদ
பிறப்பு1903
சிங்கெயர், மணிகஞ்ச் மாவட்டம், வங்காள மாகாணம், பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும்
இறப்பு20 ஏப்ரல் 1980(1980-04-20) (அகவை 76–77)
டாக்கா, வங்காளதேசம்
தேசியம்பங்களாதேசி
பணிசமூகப்பணி
வாழ்க்கைத்
துணை
மோசுலிவுத்தின் அகமது
உறவினர்கள்அசுரபி கானம் (மருமகள்)

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி தொகு

பத்ருன்னெசா பிரித்தானிய இந்தியாவின் மணிக்கஞ்சு மாவட்டத்தின் சிங்கெயர் துணை மாவட்டத்தில் 1903 ஆம் ஆண்டு ஒரு நிலக்கிழார் குடும்பத்தில் பிறந்தார். இவருடைய தந்தையின் பெயர் முவாசம் உசேன் கான் என்பதாகும். பத்ருன்னெசா குழந்தை பருவத்தில் தனது பெற்றோரை இழந்தார். இதனால் அவரது தாய்வழி தாத்தா நூருல் இசுலாம் கான் என்பவரால் வளர்க்கப்பட்டார். கொல்கத்தாவைச் சேர்ந்த தொழிலதிபர் மொசுலேவுதீன் அகமதுவை இவர் மணந்தார். திருமணத்திற்கு பிறகு கொல்கத்தா சென்றார். அங்கு பெண் கல்வியை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டார்.[2] பெண் கல்வி மற்றும் முசுலீம் சமுதாய நலனுக்காக சில அமைப்புகளுடன் பத்ருன்னெசா தன்னை இணைத்துக் கொண்டார்.

சம்சுன்னகர் மகமூத், அன்வரா பகார் சவுத்ரி, அசீனா மோர்செட்டு, பேகம் சுஃபியா கமல், பேகம் சயெசுதா இக்ராமுல்லா போன்ற முக்கியப்புள்ளிகளுடன் இவர் நெருங்கிய தொடர்பில் இருந்தார்.

தொழில் தொகு

1930 ஆம் ஆண்டு இவர் அப்துல்லா சுக்ராவர்த்தி பெண்கள் பள்ளியின் நிர்வாகக் குழுவில் சேர்ந்தார். கொல்கத்தாவில் 1946 ஆம் ஆண்டு நடந்த கலவரத்தின் போது மிர்சாபூர் தெருவில் நிகழ்ந்த மதக் கலவரங்களைத் தடுக்க இவர் நேரடியாகக் களத்தில் இறங்கி செயல்பட்டார். மிர்சாபூர் தெருவில் வாழும் இசுலாமியர்களைத் தாக்க இந்துக்கள் சுரதானந்தா பூங்காவில் கூடினார்கள் என்ற உளவுத்துறை தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து இவர் தனது சில பெண் தோழர்களுடன் மிர்சாபூர் தெரு மற்றும் ஆரிசன் சாலையைக் கடந்து கருப்பு முக்காடு மற்றும் கையில் வெள்ளை கொடியுடன் நின்றார்.அசம்பாவிதம் எதுவும் நடப்பதற்குள் அரசியல் தலைவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். ஓர் அமைதிக்குழு உருவாக்கப்பட்டது.

இந்தியப் பிரிவினைக்குப் பிறகு 1951 ஆம் ஆண்டு கிழக்கு பாக்கித்தானின் டாக்கா மாவட்டத்திலுள்ள கெந்தாரியா காவல் கட்டுப்பாட்டுப் பகுதிக்குச் சென்று குடியேறினார். அங்கு அப்பகுதியின் பெண் உறுப்பினர்களுடன் இணைந்து கெந்தாரியா மகளிர் சமிதியைத் தொடங்கினார். இதைத்தவிர கேந்தாரியா தொடக்கப்பள்ளியையும் சமூக நல மையத்தையும் அங்கு நிறுவினார். கலை மற்றும் கலாச்சாரத்தின் புரவலரான பத்ருன்னெசா தனது குடியிருப்பை கலாச்சார நடவடிக்கைகளின் மையமாகவும் கலைஞர்களின் சந்திப்பிடமாகவும் மாற்றினார்.

புல்புல் நுண்கலை நிறுவனத்தில் ஓர் உறுப்பினராக இருந்தார். இதைத் தவிர அனைத்துப் பாக்கித்தான் பெண்கள் சங்கத்தின் உறுப்பினராகவும் இருந்தார். 1960 ஆம் ஆண்டில் முசுலிம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தனது ஆசிரியப் பணியைத் தொடங்கினார்.[2] மிர்சாபூர் மகிளா சமிதியின் தீவிர உறுப்பினரான இவர் கலாச்சார நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வதில் மிகுந்த ஆர்வம் காட்டினார்.

மரணம் மற்றும் விருது தொகு

பத்ருன்னெசா அகமது 1980 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 20 ஆம் தேதி அன்று டாக்கா நகரத்தில் இறந்தார். அசிம்பூர் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டார்.[2] கிழக்கு பாக்கித்தானின் 1969 எழுச்சியின் போது இவருக்கு கிடைக்காமல் போன பாக்கித்தான் நாட்டின் மிக உயர்ந்த குடிமக்கள் விருதான நிசான்-இ-பாக்கித்தான் விருது இவருக்கு வழங்கப்பட்டது.[2] பத்ருன்னெசாவின் மருமகள், அசுரபி கானம், வங்காளத்தில் பதிவு செய்யப்பட்ட முதல் பெண் முசுலீம் இசைக்கலைஞர் ஆவார்.[3]

மேற்கோள்கள் தொகு

  1. (in en) Bangladesh. Embassy of Bangladesh.. 1974. பக். 3. https://books.google.com/books?id=OHAwAQAAIAAJ&q=%22Begum+Badrunnessa+Ahmed%22&dq=%22Begum+Badrunnessa+Ahmed%22&hl=en&sa=X&ved=0ahUKEwjah5jC5Z3XAhUCkZAKHVDOAP4Q6AEILzAC. பார்த்த நாள்: 1 November 2017. 
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 Banglapedia: National Encyclopedia of Bangladesh. Asiatic Society of Bangladesh. 
  3. Islam, Sirajul (2012). "Khanam, Ashrafi". in Sirajul Islam; Khan, Muazzam. Banglapedia: National Encyclopedia of Bangladesh (Second ). Asiatic Society of Bangladesh. http://en.banglapedia.org/index.php?title=Khanam,_Ashrafi. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேகம்_பத்ருன்னெசா_அகமது&oldid=3867225" இலிருந்து மீள்விக்கப்பட்டது