பேச்சு:வாரணாசி

Latest comment: 1 ஆண்டிற்கு முன் by செல்வா in topic பெயர்
வாரணாசி என்னும் கட்டுரை இந்தியா தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்தியா என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


பெயர் தொகு

Please change the title of article from வாரணாசி to வாரணசி. The latter is the correct transliteration of the Sankrit/Hindi word.

America தமிழில் அமெரிக்கா என்று தான் பன்னெடுங்காலமாகப் புழக்கத்தில் உள்ளது. ஆங்கிலத்தில் ஒலிப்பது போல நாம் அமேரிக்கா என எழுத முடியாது. அது போன்றே வாரணாசி என்பது தமிழில் புழக்கத்தில் உள்ள சொல்.--Kanags \உரையாடுக 06:55, 18 சூலை 2016 (UTC)Reply
அமேரிக்கா என்று சில இடங்களில் ஒலிக்கலாம். தமிழகத்தில் ஒரு தொலைக்காட்சியில் அமாரிக்கா என்று உச்சரிக்கிறார்கள். ஆங்கில அகராதியில் கொடுக்கப்பட்டுள்ள ஒலிப்பையே பின்பற்றவேண்டும். அதில் அமெரிக்கா என்றே ஒலிப்பு கொடுத்திருக்கிறார்கள். Varanasi என்பது வாராணசி என்றே உச்சரிக்கப்பட வேண்டும் எனத் தமிழ் மொழி கல்வெட்டு ஆய்வாளர் ஐராவதம் மகாதேவன் தினமணி நாளேட்டில் தமிழ் மணி என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். தமிழ் நாட்டின் மிகச் சிறந்த நாளேடான தினமணி வாராணசி என்றே எழுதுகிறது. (https://www.dinamani.com/india/2022/may/14/videography-resumes-at-varanasis-gyanvapi-mosque-3844362.html). இந்தியிலும் உருதுவிலும் வாராணசி என்றே எழுதப்படுகிறது. விக்கி ஆங்கிலக் கட்டுரையில் Varanasi (Vārāṇasī; [ʋaːˈraːɳəsi]) என்றே கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு கலைக்களஞ்சியம் புழக்கத்தில் இருக்கிறது என்று சொல்லி தவறாக எழுதலாமா? ஆத்திரேலியா என எழுதுகிறீர்கள், அது எங்கே புழக்கத்தில் உள்ளது?--UKSharma3 உரையாடல் 14:17, 17 மே 2022 (UTC)Reply
தமிழில் வாரணாசி என்பது வழக்கம். இது புறப்பெயர் மரபு (exonym) என்னும் நோக்கில் புரிந்துகொள்ளவேண்டும். இலக்கிய ஆட்சியும் பெற்றுள்ளது. பார்க்கவும் (தமிழ்ப்பேரகராதி என்னும் Tamil Lexiconஇல்)
வாரணாசி vāraṇāci , n. < Vāraṇasī. Benares, situate between the rivers Varaṇā and Asī; காசி. வாரணாசியோர் மறையோம்பாளன் (மணி. 13, 3). 
ஆத்திரேலியா என்பது தமிழில் எழுதும் முறை. இது "சாத்திரம்" என்று எழுதும் முறையைப் போன்றது. ஆசுத்திரேலியா என்றும் எழுத இடமுள்ளது.
--செல்வா (பேச்சு) 15:30, 17 மே 2022 (UTC)Reply
விளக்கத்திற்கு நன்றி. முன்பு தமிழில் டில்லி என்றும் தில்லி என்றும் எழுதிவந்தார்கள். இப்போது டெல்லி என எழுதுகிறார்கள். சாஸ்திரம் என்பது ஒரு குறிப்பிட்ட இடத்தையோ மனிதரையோ விலங்கையோ குறிப்பிடுவதல்ல. ஆகவே அதனைத் தமிழில் சாத்திரம் என்று எழுதுவதால் ஊறு எதுவும் நேர்ந்துவிடாது. ஆனால் ஆஸ்திரேலியா என்பது குறிப்பிட்ட ஒரு நாட்டின் பெயர். அதை ஆத்திரேலியா என எழுதும்போது ஒலிப்பு முற்றிலும் மாறிவிடுகிறது. எனது வாதம் என்னவென்றால் தமிழ் விக்கியில் ஸ் எழுத்து தடை செய்யப்படவில்லை. அப்படியிருக்க, ஆஸ்திரேலியா என்று ஒலிப்பு மாறாமல் எழுதினால் என்ன என்பது தான். ஒரு நிலையான கொள்கை இருக்க வேண்டும். ஒன்றில் ஸ் எழுத்து பயன்படுத்தக் கூடாது என்று விதி ஏற்படுத்தவேண்டும் அல்லது ஆஸ்திரேலியாவை ஆஸ்திரேலியா என்றே எழுத வேண்டும். ஸ்டாலின் என்ற பெயரில் தொடங்கும் பல கட்டுரைகள் உள்ளன. ஆஸ்திரேலியாவை மாற்றி எழுதுபவர்கள், இந்தக் கட்டுரைகளின் தலைப்பை மாற்றி எழுதுவதில்லை. ஆட்களின் பெயர் போலவே நாட்டின் பெயரும் மாற்ற முடியாதது. ஒரு உறுதியான நிலைப்பாட்டை தமிழ் விக்கிப்பீடியா எடுக்கவேண்டும் என்பதே என் கோரிக்கை. UKSharma3 உரையாடல் 16:46, 17 மே 2022 (UTC)Reply
நண்பர் UKSharma3 கூறியதோடு நான் உடன்படுகிறேன். தமிழ் சொற்கள் என்பது தமிழ் எழுத்துக்களைக் கொண்டு உருவாக்கப்படுபவை என்பதால் அங்கு தொல்காப்பிய விதிகள் இயக்கம் பெருவதில் தவறேதுமில்லை. அதுவே தமிழுக்கு அதன் அழகையும் தனித்துவத்தையும் தரவல்லது (இவ்விதி அனைத்து மொழிகளுக்கும் பொருந்தும்). ஆனால் பிற மொழியிலிருந்து வரும் சொற்களைத் தமிழாக்கம் செய்ய முற்படுகையில் ஓரளவுக்கு மட்டுமே (அதாவது அதன் ஓசை நயம் குன்றாமல்) அதைச் செய்ய வேண்டும் என்று கருதுகிறேன். பிற மொழிகளின் ஒலிகளையும் முடிந்தவரை பாதுகாப்பது அம்மொழிக்கு நாமளிக்கும் மரியாதையாகும். குறிப்பாக, பெயர்ச்சொற்களையும் பிற மொழிச் சொற்களையும் தமிழாக்கம் செய்யும் முனைப்பில் அவற்றை முற்றிலுமாக சிதைப்பது அச்செயலுக்கு நியாயம் வழங்கியதாகாது என்றே தோன்றுகிறது. எடுத்துக்காட்டாக, "இண்டியா" என்பதை "இந்தியா" என்றும் "ஹிந்தி" என்பதை "இந்தி" என்றும் எழுதுவது தமிழ் மொழியின் மணத்தை வெளிப்படுத்துகிறது. (மக்களிடம் இவை வழக்காக ஆனதற்கும் அதுவே காரணம் என்று கருதுகிறேன்.) ஆனால் "இந்து குஷ் மலை" என்பதை "இந்து குசு மலை" என்றும், "ஸ்டாலின்" என்பதை "சுடாலின்" என்றும் எழுதுவது அச்சொற்களுக்கு அழகு சேர்ப்பது போல் எனக்குப் படவில்லை. ஏதோ திட்டமிட்டுக் குதறிவைத்துக் கிண்டலடித்தது போல்தான் அவை ஒலிக்கும். உதாரணமாக "வாட்ஸ்அப்" என்பதை "வாத்துசுஅப்பு" என்று எழுதுவதென்பது தமிழ் மொழியின் வனப்பையோ தொல்காப்பிய இலக்கணத்தின் அழகையோ உலகிற்கு வெளிப்படுத்துவதாகத் தோன்றவில்லை. மாறாக அது அச்சொற்களை அடையாளமின்றிச் சிதைத்தாற்போல் தான் அச்சொற்களோடு தொடர்புடையோருக்கு எண்ணத் தோன்றும். உலகமயமாக்கலுக்குப் (globalization) பின் பிற மொழிகளின் பரவலான ஒலிகளுக்கு இடம் தர முயலும் மொழியே தொடர்ந்து செழிக்கும் என்பதில் ஐயமில்லை. சுறுக்கமாகச் சொன்னால், தமிழ் ஒலிகளை தமிழ்ச் சொற்களுக்காகப் பயன்படுத்தவே தமிழிலக்கண விதிகள் தேவைப்படுகின்றன. தொலைதூர மொழிகளுக்கெல்லாம் தொல்காப்பிய விதிகளை பயன்படுத்தி அதன் மூலம் அவ்விரு மொழிகளின் அழகையும் தொலைத்துக் கட்ட வேண்டிய அவசியமில்லை என்றே தோன்றுகிறது. "இசுக்காண்டியம்" எனாது "ஸ்காண்டியம்" என்றும், "அசுட்டட்டைன்" எனாது "அஸ்டாடின்" என்றும், "ஆத்திரேலியா" எனாது "ஆஸ்திரேலியா" என்பதுமே அச்சொற்களின் அழகையும் பொருளையும் திகைக்கவைக்காமல் வெளிப்படுத்தும் என்பது எனது கருத்து. Rasnaboy (பேச்சு) 18:58, 17 மே 2022 (UTC)Reply
@Rasnaboy:. \\எடுத்துக்காட்டாக, "இண்டியா" என்பதை "இந்தியா" என்றும் "ஹிந்தி" என்பதை "இந்தி" என்றும் எழுதுவது தமிழ் மொழியின் மணத்தை வெளிப்படுத்துகிறது. (மக்களிடம் இவை வழக்காக ஆனதற்கும் அதுவே காரணம் என்று கருதுகிறேன்.)// இதேபோலத்தான் எம். ஜி. இராமச்சந்திரன் என்ற பெயரை ம. கோ. இராமச்சந்திரன் என்று எழுதும்போதும் ஏற்றுக் கொள்ள வேண்டும். இந்த பெயரிடலையும் எதிர்க்கிறீர்களா?. -- சா. அருணாசலம் (பேச்சு) 22:04, 17 மே 2022 (UTC)Reply
நன்றி சா. அருணாசலம். செல்வா (பேச்சு) 00:29, 18 மே 2022 (UTC)Reply
எம். ஜி. இராமச்சந்திரன் என்று எழுதுவதில் தவறில்லை. ஆனால் அந்தப் பெயருக்குரியவர் எப்போதும் தான் பெயரை எம். ஜி. ராமச்சந்திரன் என்றே எழுதிவந்துள்ளார். அவரது கையொப்பம் கூட எம். ஜி. ராமச்சந்திரன் என்றே இருக்கும். ஒரு குறிப்பிட்ட நபர் தனது பெயரை எப்படி வேண்டுமானாலும் எழுதலாம். மற்றவர்கள் அதனை மதித்து அவர் எழுதுவது போலவே எழுத வேண்டும். சுமார் 60 ஆண்டுகளுக்கு முன் இலங்கையில் வாலுப்பிள்ளை என்று ஒரு பிரபல வைத்தியர் இருந்தார். அவரது பெயர் வேலுப்பிள்ளை. (இலங்கையில் பிள்ளை என்பது சாதிப்பெயர் அல்ல, எல்லா சாதியிலும் பிள்ளை என்ற பெயர் கொண்டவர்கள் இருந்தார்கள்). அவர் பிறந்தபோது பதிவாளராக இருந்தவர் தமிழர் அல்லர். அதனால் அவர் Valuppillai என்று எழுதிவிட்டார். பின்னர் அதையே தமிழ்ப்படுத்தி வாலுப்பிள்ளை என்றாக்கி விட்டார்கள். அதனால் அவர் வாலுப்பிள்ளை என்றே அழைக்கப்பட்டார். இங்கே தமிழ் நாட்டில் இப்போதும் கூட ஜெ என்பதை ஆங்கிலத்தில் Ja (Jayalalitha) என்று எழுதுகிறார்கள். எந்த மொழியிலும் பெயர்ச் சொற்களுக்கு (proper nouns) இலக்கணம் கிடையாது.
இந்தியா என்பதற்கான ஆங்கிலச் சொல் India என்பதில் வரும் di डि என்ற உச்சரிப்பில் ஒலிக்கப்பட வேண்டும். தமிழில் डि க்குச் சமமான எழுத்து இல்லை என்பதால் இந்தியா என்று எழுதப்படுகிறது. ஆனால் அச்சொல்லை ஒருவர் படிக்கும்போது இந்डिயா என்றே சொல்வார். ஆங்கிலத்தில் di என்பது डि எழுத்தைக் குறிக்கிறது என்பது பெரும்பாலான தமிழர்களுக்குத் தெரிவதில்லை. அதனால் di என்பதை டி என்று உச்சரிக்கிறார்கள். (அதனால் தான் மோதி என்பதை மோடி என்று சொல்கிறார்கள்.) இது @செல்வா: அவர்களுக்குத் தெரியும்.
எம். ஜி. ராமச்சந்திரன் என்பதை ம. கோ. இராமச்சந்திரன் என மாற்றும்போது ஸ்டாலின் என்ற பெயரில் தொடங்கும் கட்டுரைகள் ஏன் மாற்றப்படாமல் உள்ளன என்பதற்கும் பதில் சொல்வீர்கள் என எதிர்பார்க்கிறேன்.
நீங்கள் விவாதத்தின் போக்கை மாற்ற முனைவதாக எனக்குத் தோன்றுகிறது. இங்கே விவாதம் ஸ், ஷ் போன்ற எழுத்துக்கள் தமிழ் விக்கிப்பீடியாவில் புழக்கத்தில் இருக்கும்போது, ஆஸ்திரேலியா போன்ற பெயர்ச் சொற்களை ஏன் சிதைத்து எழுதவேண்டும் என்பது தான். அதற்கான பதிலை உங்களிடமிருந்தோ @செல்வா: அவர்களிடமிருந்தோ எதிர்பார்க்கிறேன். UKSharma3 உரையாடல் 02:05, 18 மே 2022 (UTC)Reply
புறப்பெயர் (exonym) என்னும் கருத்தொன்றுண்டு. இடப்பெயர், மொழிப்பெயர் முதல் பிறமொழியில் வழங்கும் எந்தப் பெயரையும் இன்னொரு மொழியானது தன் மொழியில் வழங்கும் மரபு. உள்வாங்கும் மொழியின் தன்மைக்குன் ஏற்ப வேற்றுமொழிப்பெயர்கள் திரிபுறும், அல்லது முற்றாக மாற்றியும் எழுதப்படும், வழங்கப்பெறும். London என்னும் நகரத்தின் பெயரை, ஆங்கிலம் போலவே உரோமன்/இலத்தீன எழுத்துகளில் எழுதும் ஐரோப்பிய மொழிகளிலேயே எப்படி எழுதுகின்றார்கள் என்று பாருங்கள்: Londres in Catalan, Filipino, French, Galician, Portuguese, and Spanish;
Londino (Λονδίνο) in Greek;
Londen in Dutch;
Londra in Italian, Maltese, Romanian, Sardinian and Turkish;
Londër in Albanian;
Londýn in Czech and Slovak;
Londyn in Polish;
Rānana in Māori;
Lundúnir in Icelandic;
Germany என்னும் நாட்டின் பெயரை ஐரோப்பாவிலேயே எபப்டி வழங்குகின்றார்கள் என்று பாருங்கள்.
Deutschland - German.
Tyskland - Danish, Swedish, Norwegian.
Duitsland - Dutch and Afrikaans.
Däitschland - Luxembourgish.
ドイツ(独逸) (Doitsu) - Japanese.
ஏன் அப்படி? இப்பெயர்கள் அவ்வம்மொழிகளில் வழங்கும் பெயர்கள்.இதுபற்றிப் பல இடங்களில் இங்கே விக்கிப்பீடியாவில் பேசியிருக்கின்றோம்.
ம.கோ.இராமச்சந்திரன் அவர்கள் எப்படி தன் கையெழுத்தை இடுகின்றார் என்பது அவரது முற்றுரிமை, அதில் யாரும் தலையிட முடியாது. அது அவருடைய அடையாளம். ஆனால் எந்த மொழியில் அவருடைய பெயரை எழுதுகின்றாரோ அந்த மொழியின் முறைமகளுக்குள் அது வருதல் வேண்டும். ஆங்கிலத்தில் எழுதினால் முதலெழுத்துகளும் அவருடைய பெயரின் முதல் எழுத்தும் பெரிய எழுத்தாக வருதல் வேண்டும் என்பதெல்லாம் ஆங்கில இலக்கணம். m. g. rAmacHanDRan என்றெழுத முடியாது. செருமன் மொழியில் M.G. Ramachandran என்றால் அவருடைய முன்னெழுத்துகள் em gay என்றுதான் ஒலிக்கும். அதற்காக அவர்கள் மொழியை மாற்றச்சொல்ல முடியாது. தமிழில் முன்னெழுத்துகளுக்கான பெயர்களின் முதலெழுத்தை இட்டு எழுதுதல் முறை. (இப்பொழுது தமிழ்நாட்டு அரசின் அறிவிப்பும் கூட) மருதூர் கோபாலன் என்பது ம.கோ என்றாகும். செல்வா (பேச்சு) 03:42, 18 மே 2022 (UTC)Reply
தமிழில் வழங்கும் எச்சொல்லுக்கும் தமிழ்விதி உண்டு. ஏன் இராமன், விபீடணன், தயரதன், தாவீது, இருடீ கேசவன் என்றெல்லாம் வழங்கினர். இசுக்காண்டியம் முதலானவற்றைக் காட்டினீர்கள். எசுப்பானியம் போன்ற மொழிகளிலும் அப்படித்தான் அழைக்கின்றனர். Scandium என்பது எசுப்பானியத்தில் escandio. தமிழில் காண்டியம் என்று எளிமையாகவும் கூடச் சொல்லலாம். வேதிப்பொருள்களின் பெயர்களை, அவரவர் மொழியில் அவரவர் இயல்புக்கும் இலக்கணத்துக்கும் ஏற்பவே வழங்குகின்றனர். ஆங்கிலத்தை மட்டும் அறிந்தவர்கள் ஏதோ எல்லோரும் அப்படியோ சொல்கின்றார்கள் என்று பிழையாகக் கருதுகின்றனர். ஐதரசன் என்பதை இடாய்ச்சு மொழியர் (செருமானியர்) Wasserstoff என்கின்றனர். இதுபோல நூற்றுக்கணக்கில் காட்டலாம். தமிழில் ஒழுக்கமான முறையைப் பின்பற்றுதல் நல்லது என்று கருதுகின்றேன். செல்வா (பேச்சு) 02:02, 18 மே 2022 (UTC)Reply
தமிழைத் தமிழெழுத்துகளில் எழுதுதல் பிழையல்லவே. திரிபுகள் ஏற்படுவது எல்லா மொழிகளிலும் நிகழ்வதுதானே. ஆங்கிலத்தில் Tamil என்று சொல்வதில் திர்பு இல்லையா? மதுரையை மடு*ரா என்பதில் திரிபில்லையா? ஆங்கிலத்தில் த ஒலியோ 'ந்த' என்னும் மெலிந்த தகர ஒலியோ கிடையாது. ழகரம் கிடையாது. எனவே தmiழ் என்று ஆங்கிலத்தில் எழுதமுடியுமா? 247 தமிழெழுத்துகளில் மட்டுமே எழுதுவது இயல்பான ஒன்று (எல்லா மொழிகளும் அவரவர்கள் எழுத்துகளில்தான் எழுதுகின்றனர்). ஆனால் தமிழில் K.C. ஶ்ரீநிவாஸன் என்று எல்லா எழுத்துகளையும் கலந்து ஒழுக்கமில்லாமல் எழுதுகின்றார்கள். தமிழிலக்கணப்படியும், முறையாகவும் தமிழில் எழுதுதல் குறிக்கோள். நீங்கள் சொல்வதுபோல ஓர் "உறுதியான நிலைப்பாட்டை தமிழ் விக்கிப்பீடியா எடுக்கவேண்டும் என்பதே என் கோரிக்கை" என்பதனை நானும் வரவேற்கிறேன். அதுவே சரியானது. ஆனால் சில இடங்களில் உறழ்ச்சியுடன் (வேறுபாடுடன், இசைவுத்தன்மையுடன்) இயங்குகின்றோம். நீங்கள் கூறும் கருத்தாகிய "ஆட்களின் பெயர் போலவே நாட்டின் பெயரும் மாற்ற முடியாதது." என்பது உண்மையல்ல. உலகெங்கும் இது நடக்கின்றது. காந்தியை கே'ந்டி* (candy என்பது போல ஆனால் G ஒலியோடுதான் ஒலிக்கின்றனர், பூ'டா* என்று புத்தரை அழைக்கின்றனர். இங்கே ஆங்கிலத்தை மட்டுமே காட்டியுள்ளேன். எல்லா மொழிகளிலும் இது நடக்கின்றது. எனவே நீங்கள் சொல்வது ஒரு விதியாக இருக்க முடியாது. செல்வா (பேச்சு) 01:53, 18 மே 2022 (UTC)Reply
ஸ்ரீநிவாசன் என்பது தமிழ்ச் சொல் அல்ல. ஸ்ரீ என்பது எழுத்து மட்டுமல்ல, அது ஓரெழுத்துச் சொல்லும் ஆகும். ஸ்ரீ என்பதற்குப் பல பொருட்கள் உண்டு. ஸ்ரீநிவாசன் என்றால் செல்வத்துக்கு இருப்பிடமானவன் என்று பொருள் கொள்ளப்படும். அதை சீனிவாசன் என்று எழுதினால் பொருள் மாறிவிடும்.
மதுரை Madurai என்றே எழுதப்படுகிறது. மடு*ரா மதுரா (Madura) என்பது உத்தரப்பிரதேசத்திலுள்ள நகரம்.
கணினியில் தமிழ் ஒருங்கோடு சேர்க்கப்பட்டபோது ஸ், ஷ் போன்ற எழுத்துக்களைச் சேர்க்க தமிழக அரசு ஒப்புதல் அளித்தது. இலங்கை அரசும் அதனை ஏற்றுக்கொண்டுள்ளது. ஆகவே அவை தமிழ் எழுத்துக்கள் என்பது அதிகாரபூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. தமிழ் விக்கிப்பீடியா ஒரு தனிப்பட்ட அமைப்பு என்பதால் வேண்டுமானால் அந்த எழுத்துக்களைத் தடை செய்யலாம். ஆனால் தடை செய்யாமல், அந்த எழுத்துக்களை யாராவது பயன்படுத்தும்போது அதை மற்றவர்கள் மாற்றுவது முறையல்ல என்பதே என் கருத்து. UKSharma3 உரையாடல் 02:26, 18 மே 2022 (UTC)Reply
கிரந்த எழுத்துகள் தமிழெழுத்துகள் அல்ல. இதில் எந்த ஐயமும் இல்லை. தமிழில் சிரீதரா என்று ஆழ்வார்களே பயன்படுத்தியுள்ளனர். நீங்கள் சொல்லும் பொருல் எல்லாம் தமிழில் இல்லை. ஒலிப்பைத்தான் தமிழில் தோராயமாக (துல்லியமாக எல்லா இடங்களிலும் முடியாது)க் காட்ட முடியும். அண்மையில் தமிழ்த்தாய் படம் வெளியிட்ட பொழுது அதில் "ஸ" என்னும் எழுத்து இருந்தது பெரும் கருத்துப்போரை உருவாக்கியது. கிரந்த எழுத்துகள் தமிழெழுத்துகள் அல்ல. யூனிக்கோட்டில் உள்ளல் எழுத்துகள் பல்வேறு காரணங்களுக்காகச் சேர்க்கப்பட்டுள்ளன. வரலாற்று நோக்கில் குறிப்பிட. ஏன் தmiழ் என்று எழுத முடிந்ததால், த, ழ் ஆகியவை ஆங்கிலம் ஆகா. Madurai என்றெழுதினால் அது மதுரை அன்று!! Gandhi என்றெழுதினால் அது கா'ந்தி அன்று. அவர்களிடம் அந்த ஒலிகளுக்கான எழுத்தே இல்லை!! தமிழில் "ஸ்", "ஶ்ரீ" ஆகிய எழுத்துகள் இல்லை. இவை கிரந்த எழுத்துகள். இவற்றுக்கு மாறாக S, sri என்றெழுதினாலும் ஒன்றுதான். ஆSதிரேலியா, Sriதரன் என்றெழுதினாலும் அதுபோலத்தான். தமிழில் ஆத்திரேலியா, சிரீதரன் (இது ஆழ்வார்கள் ஆண்ட சொல்!!). இங்கே நான் எழுதியவை எல்லாம் யூனிக்கோடு எழுத்துகளால் ஆனவையே. எழுத முடியும் என்பதால், அது தமிழாகாது. அல்லது ஆங்கிலமாகாது. அல்லவா? தமிழ் விக்கிப்பீடியாவில் 'தடை' செய்யவில்லை, ஆனால் நல்ல தமிழில் தமிழ்லக்கனத்துடன், தமிழ்ப்புணர்ச்சி விதிகளுடன் எழுத முயல்கின்றோம். இராமச்சந்திரன் என்று இகரம் சேர்த்தும், இலட்சுமி, சரசுவதி, மகாராட்டிரம் என்று கிரந்தம் விலக்கியும் தமிழ் முறைப்படி எழுதுகின்றோம். தமிழில் "ஶ்ரீ", "க்"ஷ போன்ற கூட்டெழுத்துகள் எல்லாம் கிடையா. தமிழில் மொழி முதல், மொழி இறுதி எழுத்துகள், மெய்ம்மயக்கம் என்பன உண்டு. தமிழில் தமிழ் முறைப்படி எழுதுதல் வேண்டும். "அந்த எழுத்துக்களை யாராவது பயன்படுத்தும்போது அதை மற்றவர்கள் மாற்றுவது முறையல்ல என்பதே என் கருத்து." என்கின்றீர்கள், ஆனால் தமிழ் மொழியை சிதைப்பதும் மாற்றுவதும் முறையல்ல என்பதையும் கருத்தில் கொள்ளவேண்டும் அல்லவா? தமிழில் எழுதும்பொழுது தமிழிலக்கணப்படி எழுதுதல் வேண்டுமல்லவா? செல்வா (பேச்சு) 03:12, 18 மே 2022 (UTC)Reply
//"கே'ந்டி* (candy என்பது போல ஆனால் G ஒலியோடுதான் ஒலிக்கின்றனர், பூ'டா* என்று புத்தரை அழைக்கின்றனர்."// உச்சரிப்பது வேறு, எழுதுவது வேறு. காந்தி என்பதை Gandhi என்றும் புத்தா வை Buddha என்றும் தான் எழுதுகின்றனர். உச்சரிப்பு நாட்டுக்கு நாடு வேறுபடும். தமிழிலேயே தமிழகத்தில் ஒருமாதிரியாகவும், யாழ்ப்பாணத்தில் இன்னொரு மாதிரியாகவும் உச்சரிக்கும் சொற்கள் உண்டு. ஆனால் எழுத்தில் மாற்றமிருக்காது.
(நான் 1950 களில் யாழ்ப்பாணத்தில் தான் தமிழ் மொழி இலக்கணம், இலக்கியம் இரண்டும் கற்றேன். மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் தமிழ்ப் பண்டிதர் ஒருவரே என் தமிழாசிரியர். பள்ளிப் படிப்பை அக்காலத்தில் இலங்கையில் படித்ததால், ஏனைய பாடங்களை ஆங்கில மொழி மூலம் பயின்றாலும் தமிழ் மொழி, சைவ சமயம் ஆகிய பாடங்களைப் பயில எனக்கு ஒரு வாய்ப்புக் கிடைத்தது.)
தமிழ் விக்கிப்பீடியாவில் ஒரு உறுதியான நிலைப்பாடு எடுக்கப்படுமானால் இந்த வாதங்கள் எல்லாம் தேவை இல்லாமல் போய்விடும். UKSharma3 உரையாடல் 02:40, 18 மே 2022 (UTC)Reply
//தமிழ் விக்கிப்பீடியாவில் ஒரு உறுதியான நிலைப்பாடு எடுக்கப்படுமானால் இந்த வாதங்கள் எல்லாம் தேவை இல்லாமல் போய்விடும்.// உண்மை. ஆனால் சற்று நெகிழ்ச்சியுடன் இயங்குகின்றோம். மிகுந்த இறுக்கம் வேண்டாம் என்பது பலருடைய கருத்தாக இருக்கின்றது. ஆனாலும் இயன்றவாறு இலக்கணத்தையும் முறைமையைப் பேணுவோஈம் என்னும் போக்கில் செல்கின்றோம். செல்வா (பேச்சு) 03:15, 18 மே 2022 (UTC)Reply
எந்த மொழியானாலும் எழுத்தில் வரும்போது இலக்கண சுத்தத்துடன் இருப்பது நல்லது; இருக்க வேண்டும். ஆனால் நான் கவனித்தவரை தமிழ் விக்கிப்பீடியாவில் இலக்கணத்தை யாராவது கவனிக்கிறார்களா என்பது தெரியவில்லை. கிரந்த எழுத்துக்கள் என்று நீங்கள் குறிப்பிடும் எழுத்துக்களை மட்டுமே திருத்துகிறார்கள். மிக அடிப்படை இலக்கணமான ஒருமை-பன்மை கூட சரியாக எழுதப்படுவதில்லை. 90% கட்டுரைகள் ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்த்தவையாகவே உள்ளன. அவை பெரும்பாலும் தமிழ் உரைநடையில் இல்லாமல் ஆங்கில உரைநடையிலேயே இருக்கின்றன. சுமார் 7, 8 ஆண்டுகளுக்கு முன் தமிழ் விக்கிப்பீடியாவில் நான் மதிப்புக் கொண்டிருந்தேன். அப்போது கட்டுரைகளில் உள்ள இலக்கணப் பிழைகளைத் திருத்த முற்பட்டேன். ஆனால் அதனை முழுமையாகச் செய்வதானால் Augean Stables ஐ சுத்தப்படுத்திய Hercules தான் வரவேண்டும் என்பதை உணர்ந்து இடையில் கைவிட்டு விட்டேன். அந்த அளவுக்கு இலக்கணப் பிழைகள் மலிந்து கிடக்கின்றன.
தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரை அதிகமாக தொடங்குபவர்களுக்கே பாராட்டு வழங்கப்படுகிறது. இதனால் பலரும் அரைகுறையாக கட்டுரைகளை எழுதித் தொடக்கி விடுகின்றனர். நடிகர் நாகேசுவரராவ் இறந்தபோது காலையில் செய்தி கேட்டதும் தமிழில் கட்டுரை இருக்கிறதா என்று பார்த்தேன். இல்லை. எனவே கட்டுரை எழுதுவதற்காக பல இடங்களிலிருந்து தகவல் சேகரித்துக் கட்டுரை தயாரித்தேன். அதை வெளியிட முயன்றபோது அந்தப் பெயரில் ஏற்கெனவே கட்டுரை இருப்பதாக அறிவித்தல் வந்தது. பார்த்தால் வேறொருவர் 3 வரிகள் எழுதி கட்டுரை வெளியிட்டு விட்டார். நான் அவ்வளவு சிரமப்பட்டுத் தகவல் சேகரித்தும், பதக்கம் வேறொருவருக்கு. இது தான் தமிழ் விக்கிப்பீடியாவில் எனக்கு ஏற்பட்ட முதல் மனத்தாங்கல். இங்கே, ஆராய்ந்து தங்கள் சொந்த உரைநடையில் கட்டுரை எழுதுபவர்களுக்கு இடமில்லை. இது ஒரு கலைக்களஞ்சியம் என்பதால் தேடுவோருக்கு தகவல்கள் கிடைக்கட்டுமே என்றுதான் நான் கட்டுரைகள் எழுத வந்தேன். கடந்த 50 ஆண்டுகளுக்குள் இலங்கை, தமிழ்நாடு மட்டுமன்றி உலகளாவிய ரீதியில் ஆங்கில வானொலிகளில் கூட என் ஆக்கங்கள் இடம்பெற்று எனக்குத் தேவையான popularity பெற்றுவிட்டேன். 1980 களில் வெரித்தாஸ் தமிழ்ப்பணி ஒலிபரப்பி‌ல் என் ஆக்கங்கள் ஒலிபரப்பாகி தமிழகம், இலங்கை மட்டுமன்றி மலேசியா, புரூணை, இந்தோனேசிய போன்ற நாடுகளில் கூட எனக்கு நேயர்கள் இருந்தார்கள். நெதர்லாந்து வானொலியின் ஆங்கில சேவை உலகளாவிய நடத்திய கட்டுரைப் போட்டியில் 1990 ஆம் ஆண்டு முதல் பரிசு வாங்கி அச்சு ஊடகங்களில் படத்துடன் பாராட்டுப் பெற்றேன். தமிழ் விக்கிப்பீடியாவில் இப்போது அதிகாரம் உள்ளவர்கள் அக்காலத்தில் பள்ளிப்படிப்பைக் கூட முடித்திருந்திருப்பார்களா தெரியவில்லை.
1970/80 காலப்பகுதியில் நான் அச்சு ஊடகங்களில் எழுதியபோது ஆசிரியர்கள் ஒரு சொல்லைக்கூட அடிக்கவோ மாற்றவோ மாட்டார்கள். நான் எழுதியது அப்படியே அச்சாகி வெளியாகும். அப்படி இருந்த எனக்கு, தமிழ் விக்கிப்பீடியாவில் என் எழுத்துக்கள் சிதைபடுவதைப் பார்க்க இந்த வயதில் மனம் சங்கடப்படுகிறது.
என் கருத்துகளுக்கும் இப்போது தமிழ் விக்கிப்பீடியாவின் கருத்துகளுக்கும் ஒத்து வராது. ஆகவே தான் கட்டுரைகள் எழுதுவதிலிருந்து விலகி இருந்தேன். ஆனாலும் சிறு சிறு தொகுப்புகள் செய்து கொண்டிருந்தேன். அப்போது குழித்தலை பிச்சையப்பா பற்றி ஏதோ குறிப்பு வந்தபோது அவரைப்பற்றிய கட்டுரை எழுதுகிறீர்களா என்று சிறீதரன் என்னைக் கேட்டார். எழுதினேன். நான் நாதஸ்வரம் என்று எழுதியதை அவர் நாதசுவரம் என மாற்றிவிட்டார். எனக்குத் தெரிந்து நாதஸ்வரக் கலைஞர்கள் எல்லோரும் நாதஸ்வரம் என்றுதான் சொல்கிறார்கள், எழுதுகிறார்கள். அந்தச் சொல் தான் புழக்கத்தில் இருக்கிறது. 150 க்கு மேற்பட்ட நாதஸ்வரக் கலைஞர்கள் பற்றிப் புத்தகம் வெளியிட்ட பி. எம். சுந்தரம் அவர்களே அந்த நூலில் நாதஸ்வரம்/தவில் என்ற சொற்களையே பயன்படுத்தியுள்ளார். நூல் எழுதியது மட்டுமல்ல அவர் ஒரு கலைஞரும் கூட. தமிழ் விக்கிப்பீடியா தனக்கென ஒரு வழியை வைத்துக்கொண்டு செயற்பட விரும்பினால் செய்யலாம். ஆனால் சாதாரண மக்களிடமிருந்து விலகிப் போகும். ஒரு சிலர் மட்டும் தங்கள் எழுத்துக் களமாக அதைப் பயன்படுத்துவார்கள். wikipedia என்ற url இருப்பதால் கூகிள் தேடுதலில் தமிழ் விக்கிப்பீடியா கட்டுரைகளை முதலில் காட்டும். அதனால் அதிக பார்வையாளர்கள் வருவார்கள். ஆனால் அவர்கள் எல்லோரும் படித்துப் பயன் பெறுகிறார்களா என்பது கேள்விக் குறியே.
உங்களுடன் உரையாடியதில் மகிழ்ச்சி. ஒரே ஒரு குறை. ஸ்டாலின் பெயர் பற்றி நீங்கள் எதுவுமே எழுதவில்லை. தமிழக முதலமைச்சரின் பெயரைத் தமிழில் எப்படி எழுதவேண்டும் என்று ஒரு அரசியல் கட்சித் தலைவர் அரசைக் கேட்டிருக்கிறார். பதில் வந்தால் அதைத் தமிழ் விக்கிப்பீடியா ஏற்குமா தெரியவில்லை.
அதிகம் எழுதி உங்கள் நேரத்தை எடுத்துவிட்டேன். வயதானால் இப்படித்தான். போதிய நேரம் கிடைப்பதால் எழுதிப் பழகிய கைகள் எழுதிக்கொண்டே இருக்கின்றன. நன்றி. வணக்கம். UKSharma3 உரையாடல் 11:49, 18 மே 2022 (UTC)Reply
சற்றே பின்னர் வந்து கருத்திடுகின்றேன். உங்களின் நெடிய பட்டறிவும் பங்களிப்பும் மிகச்சிறப்பானவை. நீங்கள் விக்கிப்பீடியாவில் அளித்த பங்களிப்புகளுக்கு உடன்பங்களிப்பாளன் என்னும் நோக்கில் நன்றியும் பாராட்டும். தங்களின் மனவருத்தத்தைக் குறித்தும் அதுதொடர்பான சில கருத்துகள் பற்றியும், சற்றே பின்னர் வந்து கருத்துரைக்கின்றேன். தமிழில் நாகசுரம் என்பதுதான் சரியான சொல் ஐயா. இதற்கான சான்றுகளையும் காரனத்தையும் சொல்லுகின்றேன். அண்மையில் தினமணியில் வந்த ஒரு செய்திக்கட்டுரையையும் நீங்கள் பார்க்கலாம். [1]. இன்னும் வலுவான சான்றுகள் தருகின்றேன். நீங்கள் சொன்ன டில்லி, தில்லி, டெல்லி பற்றியும் சொல்லவேண்டியுள்ளது. தமிழில் இலக்கணத்தைப் பின்பற்றுவதுமுதல், பொதுவாக எழுத்தில் ஒழுக்கம், சீர்மை காண்பது அரிதாக உள்ளது. சிரிய பணியாகிய கலைக்களஞ்சியத்தில் இவை தேவை என்று நெடுங்காலம் உழைத்து வந்துள்லோம். எனினும் இன்னும் போதிய சீர்மை, ஒழுக்கம் எய்தவில்லை. இது தொடர்ந்து செம்மைப்படும் படைப்பு என்னிஉம் நோக்கில், இன்னும் கூடுதலாக உழைத்து செம்மையாக்க வேண்டும் என்பதென் கருத்து. செல்வா (பேச்சு) 15:22, 18 மே 2022 (UTC)Reply
ஐயா, எனக்குத் தமிழ் விக்கிப்பீடியாவில் படைப்பாளி என்பதைத் தவிர வேறு எவ்வித அங்கீகாரமும் கிடையாது. நானும் வாரணாசி என்று தான் எழுதிக்கொண்டிருந்தேன். ஐராவதம் மகாதேவன் அது வாராணசி என்று எழுதியதைக் கண்டு தேடிப்பார்த்ததில் இந்தியில் வாராணசி என்றே எழுதப்பட்டிருந்ததைக் கண்டேன். இது அங்கே உள்ள நகரம் என்பதால் அவர்கள் எப்படி எழுதுகிறார்களோ அப்படியே நாமும் எழுதவேண்டும் என்று நினைத்தேன். விக்கி கட்டுரை பேச்சுப் பக்கத்தில் ஒருவர் அதை எழுதியிருந்ததைக் கண்டேன். அதற்குப் பதிலாக "வாரணாசி புழக்கத்தில் உள்ளது" என்று எழுதப்பட்டிருந்தது. அதனால் எனக்குத் தெரிந்த சான்றுகளை எழுதினேன். ஆனால் இது தொடர் விவாதமாகி விட்டது. எனக்கு இதைத் தொடர விருப்பமில்லை. அவரவர் கொள்கை அவரவர்களோடு. 78 வயதுக்குப் பின் என்னை நான் மாற்றிக்கொள்ள முடியாது. நான் 1950/60 களில் கற்ற தமிழ் வேறு, இப்போதுள்ள தமிழ் வேறு. ஆகவே எனக்குப் பிடித்த தளங்களில் தொடர்ந்து எழுதுவேன். என்னை ஆதரிப்பவர்களும் இருக்கிறார்கள். நீங்கள் சிரமப்பட்டு மேலும் விளக்கங்கள் (எனக்காக) எழுத வேண்டாம். நான் இத்துடன் நிறுத்திக் கொள்ளுகிறேன். இனி இந்தப் பக்கத்துக்கு வரமாட்டேன். நன்றி. வணக்கம். UKSharma3 உரையாடல் 01:26, 19 மே 2022 (UTC)Reply
உங்கள் விருப்பம் ஐயா. நான் எழுத நினைத்தவை உங்களுக்காக எனினும், பிறருக்கும் பயன்படும், வாரணாசி தவிர பிற பல செய்திகளும் பேச நேர்ந்ததால், விரிவாகிவிட்டது. முனைவர் வீ. ப. கா. சுந்தரம் அவர்கள் தமிழிசைக் கலைக்களஞ்சியம் என்னும் நான்கு தொகுதிகள் கொண்ட பெருநூலில் மூன்றாவது தொகுதியில் நாகசுரம் பற்றிய தலைச்சொல்லில் அந்த இசைக்கருவையைப் பற்றி எழுதியுள்ளார். இசையறிஞர் நா. மம்மது அவர்கள் தமிழிசை வரலாறு என்னும் நூலில் பக்கம் 74 இல் நாகசுரம் என ஒரு படலம் எழுதியுள்ளார். வட இந்திய இந்துத்தானி இசைக்கலைஞர்களும் "சுர்" என்றே சுரத்தைக் குறிப்பார்கள். "ஸ்வர" என்று சொல்வதில்லை பெரும்பாலும். சுரம் என்பது தமிழில், தமிழ்ச் சொற்பிறப்பியலில் இருந்து, பெறப்படும் சொல். நாகசுரம் என்பது நீண்ட குழாய் வடிவில் இருக்கும் இசைக்கருவி. உங்களுக்காக இல்லாவிட்டாலும் ஒரு நாட்டின் தலைநகரைக் கூட தமிழ் ஊடகங்களும் எழுத்துகளும் ஒரே சீராக எழுதுவதில்லை என்பதைக் கருத்தில் கொள்ளவேண்டும். மகாத்துமா காந்தி அவர்களின் பெயரில் கடைசி எழுத்து தீ என்று மூல மொழியில் நெடிலாக இருக்கும். தலைமை அமைச்சர் நரேந்திர மோதி அவர்களின் பெயரிலும் மோதீ என்று நெடிலாக இருக்கும். ஆனால் தமிழின் இலக்கண விதிப்படி அவை காந்தி, மோதி என்று குறிலில் முடிகின்றன. இதனைப் பலரும் அறிவதில்லை. அதாவது தமிழில் எழுதும்பொழுது தமிழின் இலக்கணத்தைப் பின்பற்றுதல் வேண்டும். வேற்றுமொழிப்பெயராக இருந்தாலும். அழகப்பன், வள்ளி, ஞானசம்பந்தன், தூத்துக்குடி என்பனவற்றைப் பிறமொழிகளில் சொல்லுபொழுது சற்றோ அல்லது பெரிதுமோ வேறாக ஒலிக்கும். அது இயல்பு. இது தமிழுக்கு மட்டுமல்ல. புறப்பெயர் (exonym) என்பதையும் கருத்தில் கொள்ளவேண்டும். செல்வா (பேச்சு) 02:12, 19 மே 2022 (UTC)Reply
விளக்கங்களுக்கு நன்றி. எனினும் UKSharma3 எழுப்பிய கேள்வி இன்னும் பதிலளிக்கப்படாமல் இருக்கிறதே? "ஸ்டாலின்" என்ற சொல் எங்ஙனம் தமிழில் எழுதப்பட வேண்டும்? அதன் விக்கிப் பக்கத்தையும் அதற்கேற்ப மாற்ற வேண்டுமா? வேண்டாமெனில் காரணம் யாது? Rasnaboy (பேச்சு) 06:18, 19 மே 2022 (UTC)Reply
தாலின் என்றோ சுடாலின் என்றோ இசுட்டாலின் என்றோ எழுதலாம். கிரேக்க மொழியில் O stalin என்றெழுதுகின்றார்கள் என்று நினைக்கின்றேன். தமிழில் கிரந்தம் விலக்கி தமிழ்முறைப்படி எழுதவேண்டுமானால் மேலே சொல்லியவாறு எழுதலாம். "ஸ்தலம்" என்பது தமிழில் தலம் என்றும், "ஸ்ரேணி" என்பது ஏணி என்றும், "ஸ்கந்தன்" என்பது கந்தன் என்றும் இன்னும் இதுபோல பலவும் எழுதுதல் நெடுமரபே. எனவே தாலின் என்பதைப் பரிந்துரைப்பேன். சுடாலின், இசுட்டாலின் என்பனவற்றையும் சிலர் பயன்படுத்துகின்றார்கள். --செல்வா (பேச்சு) 21:51, 19 மே 2022 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:வாரணாசி&oldid=3780785" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "வாரணாசி" page.