பேபெரெஜ் முட்டை
ஃபேபெரெஜ் முட்டைகள் ( Fabergé egg (Russian: உருசியம்: яйца Фаберже́, yaytsa Faberzhe) என்பவை உருசியப் பேரரசில், சென் பீட்டர்ஸ்பேர்கில் பீட்டர் கார்ல் ஃபேபெரெஜ் என்னும் கலைஞரின் தலைமையிலான பொற்கொல்லர்களால் தங்கத்தால் நுணுக்கமான வேலைப்பாட்டுடன் உருவாக்கப்பட்ட ஈஸ்டர் முட்டைகள் ஆகும். இவற்றின் எண்ணிக்கை 69 ஆக இருக்கலாம் என கருதப்படுகிறது, என்றாலும் தற்போது இதில் 57 முட்டைகளே உள்ளன. இந்த முட்டைகள் கி.பி. 1885 முதல் கி.பி 1917 ஆண்டுகளுக்கு இடைப்பட்டக் காலத்தில் பீட்டர் கார்ல் ஃபேபெரெஜின் மேற்பார்வையில் உருவாக்கப்பட்டன. இதில் மிகவும் பிரபலமானவை உருசியப் பேரரசர்களான மூன்றாம் அலெக்சாந்தர் மற்றும் இரண்டாம் நிக்கலாசு ஆகியோர் தங்கள் மனைவி, தாயார் ஆகியோருக்கு ஈஸ்டர் பண்டிகைப் பரிசாக அளிக்கத் தயாரிக்கப்பட்ட 50 முட்டைகளாகும். இதில் 43 முட்டைகள் தற்போதுவரை உள்ளன.
வரலாறு
தொகு1885இல் உருசிய ஜார் மன்னரான மூன்றாம் அலெக்சாந்தர், தன் மனைவியும் பேரரசியுமான மரியாவுக்கு ஈஸ்டர் முட்டை ஒன்றைப் பரிசளிக்க முடிவு செய்தார். அதற்காகத்தான் முதல் ஃபேபெரெஜ் முட்டை உருவாக்கப்பட்டது. அந்த ஆண்டு அவர்களின் மண உறுதியின் (நிச்சையதார்த்தம்) 20வது ஆண்டாக இருக்கலாம் எனப்படுகிறது. இந்த முதல் முட்டையானது கோழி முட்டை என அழைக்கப்பட்டது. முழுவதும் தங்கத்தாலானது இந்த முட்டை, கோழியின் முட்டை போன்று தெரிவதற்காக அதன் வெளிப்புறத்தில் வெள்ளை நிறத்தில் எனாமல் பூசப்பட்டிருந்தது. முட்டையை இரண்டாகத் திறந்தால் அதனுள் தங்கத்தாலான மஞ்சள் கரு உருண்டையாக இருந்தது. அதையும் திறந்து பார்த்தால், தங்கத்தாலான கோழியின் உருவம் வைக்கப்பட்டிருந்தது. கோழியின் கண்களில் மாணிக்கக் கற்கள் பதிக்கப்பட்டிருந்தன. அந்தக் கோழியைத் திறந்தால் உள்ளே தங்கத்தில் வைரம் பதிக்கப்பட்ட ராஜ கிரீடத்தின் சிறிய மாதிரி வடிவம் ஒன்று இருந்தது. சங்கிலியில் கோத்துக்கொள்ளும்விதமாக மாணிக்கத்தாலான பதக்கம் ஒன்றும் இருந்தது, ஆனால் இந்த கடைசி இரு பகுதிகள் காணாமல் போயின.[1]
இந்த அருமையான தங்க கோழி முட்டையைக் கண்டு மரியா வியந்தார். இதைக்கண்டு மன்னருக்கும் மகிழ்ச்சி. இதன்பிறகு இந்த முட்டையை உருவாக்கியவரான பீட்டர் கார்ல் ஃபேபெரெஜை அரச குடும்பத்தின் ஆஸ்தான நகை வடிவமைப்பாளர் என்ற பதவி கொடுத்து மன்னர் அலெக்சாந்தர் கௌரவித்தார். மேலும் அடுத்த ஆண்டுக்கான முட்டையை வடிவமைக்கும் பணியையும் கொடுத்தார். அதன் பிறகு ஒவ்வோர் ஈஸ்டருக்கும் பேரரசரை மகிழ்விக்கும்விதமாகப் பேரழகு முட்டையை வடிவமைக்கத் தொடங்கினார் ஃபேபெரெஜ். இதில் பேரரசரின் தலையீடு எதுவும் இருக்கவில்லை. செலவு பற்றியும் கவலையும் இல்லை. ஒவ்வொரு முறையும் தனித்துவமான அழகுடன், வடிவமைப்புடன், ஆச்சரியங்களுடன் ஈஸ்டர் முட்டைகளை வடிவமைத்து அரச குடும்பத்தை மகிழ்வித்தார் ஃபேபெரெஜ். முட்டையின் அடிப்படை வடிவமைப்பை ஃபேபெரெஜ் முடிவு செய்வார். அதன்பிறகு அதற்கென அவர் வைத்துள்ள தனி குழுவினர் பணிகளை முடிப்பர். இக்குழுவில் மைக்கேல் பெர்கின், ஹென்றிக் விக்ஸ்ட்ரோம், எரிக் ஆகஸ்டு கொல்லின் ஆகிய பொற் கொல்லர்கள் இருந்தனர்.
1894 நவம்பர முதல் நாளன்று பேரரசர் அலெக்சாண்டர் இறந்து போனார். அடுத்து பேரரசராகப் பொறுப்பேற்ற அவரது மகன் இரண்டாம் நிகோலஸும், தொடர்ந்து ஈஸ்டர் முட்டைகளை வடிவமைக்கும்படி ஃபேபெரெஜைக் கேட்டுக்கொண்டார். இ்வ்வாறு வடிவமைத்த ஃபேபெர்கே முட்டைகளை அவரது மனைவி அலெக்ஸாண்ட்ரா ஃபெடோரோவ்னா மற்றும் அவருடைய தாயார் பேரரசி மரியா ஃபெடோரோவ்னா ஆகியோருக்கு வழங்கினார். அரச குடும்பத்தினருக்காக 50 ஈஸ்டர் முட்டைகள் வடிவமைக்கப்பட்டன. இதில் 20 முட்டைகள் துவக்கக் காலத்திலும் 30 முட்டைகள் பிற்காலத்திலும் உருவாக்கப்பட்தாக ஆவணங்கள் கூறுகின்றன.முட்டைகள் உருசிய-சப்பானியப் போர் நடந்த 1904 மற்றும் 1905 ஆண்டுகள் தவிர, ஒவ்வோராண்டும் தயாரிக்கப்பட்டன. [2]
அரச குடும்பத்தினருக்காக உருவாக்கப்பட்ட முட்டைகள் பெரும் புகழடைந்த பிறகு, மால்பாரோவின் டச்சஸ், ரோத்ஸ்சைல்ட் குடும்பம் யூசுபவ்ஸ் போன்ற சில செல்வந்தர்களும், வேறு அரசர்களும் ஃபேபெரெஜிடம் ஈஸ்டர் முட்டைகளை வடிவமைக்கச் சொல்லி வாங்கிக் கொண்டனர். தொழிலதிபர் அலெக்ஸாண்டர் கெல்ச் பன்னிரெண்டு முட்டைகளை தயாரிப்பதற்கான பணிக்காக ஃபபேர்கே நியமித்தார், ஆனால் அதில் ஏழு முட்டைகளின் தயாரிப்பு வேலைகள் மட்டுமே முடிக்கப்பட்டன.[சான்று தேவை]
உருசியப் புரட்சி நிகழ்ந்து, ஜார் ஆட்சி ஒழிக்கப்பட்டபிறகு ஃபேபெரெஜின் பட்டறையை போல்செவிக்குகள் 1918 இல் நாட்டுடமையாக்கினர். ஃபேபெரெஜ் தனது குடும்பத்துடன் உருசியாவிலிருந்து தப்பிச் சென்றார். அதன்பிறகு ஃபேபெர்கேயின் வணிகச்சின்னம் பல முறை விற்பனை செய்யப்பட்டு பல நிறுவனங்கள் ஃபெபர்கே பெயரைப் பயன்படுத்தி முட்டை தொடர்பான பொருட்களைத் தயாரித்து விற்பனை செய்துள்ளன. 1998 முதல் 2009 வரையான காலகட்டத்தில் யூனிலீவர் உரிமத்தின்படி அங்கீகரிக்கப்பட்ட விக்டர் மேயர் நகை நிறுவனம் குறைந்த அளவு எண்ணிக்கையில் ஃபேபெர்கே முட்டைகளைத் தயாரித்தது. இந்த வணிக முத்திரையானது இப்போது ஃபேபெர்கே லிமிட்டெட் நிறுவனத்திடம் உள்ளது, இது முட்டை சார்ந்த நகைகளை உருவாக்கிவருகிறது.[3]
1917 இல் முதல் உலகப் போர் நடந்துகொண்டிருந்த காலத்தில் செர்மானியப் படைகள் உருசியாவின் செயின்ட் பீட்டர்ஸ்பக் நகரத்துக்குள் புகுந்துவிடும் ஆபத்தில் இருந்தது. இதனால், சோவியத் ஒன்றியத்தின் முதல் அதிபரான லெனின், ஃபேபெரெஜ் முட்டைகள் உள்ளிட்ட அரச குடும்பத்தின் செல்வங்களை கிரெம்ளின் நகரக் கோட்டையில் பத்திரமாகப் பதுக்கி வைக்க உத்தரவிட்டார். ஆனால், அப்போதே சில முட்டைகள் காணாமல் போனதாகத் தகவல்.
லெனினுக்குப் பிறகு பதவிக்கு வந்த ஸ்டாலின் ஆட்சிக் காலத்தில், ஃபேபெரெஜ் ஈஸ்டர் முட்டைகள் உள்ளிட்ட செல்வங்கள் பலவும் தேச வளர்ச்சித் திட்டங்களுக்காகவும், பிற செலவினங்களுக்காகவும் விற்கப்பட்டன. இதனால் இந்த முட்டைகள் பலவும், உருசியாவைத் தாண்டி பிற நாடுகளுக்குச் சென்றன.
பிறகு, ஜார் குடும்பத்தின் வசமிருந்த ஃபேபெரெஜ் முட்டைகள் எங்கே, யார் கைகளில் இருக்கின்றன என்ற விவரங்கள் சேகரிப்பட்டன. இதில் 50 ஈஸ்டர் முட்டைகளில் 43 முட்டைகள் எங்கிருக்கின்றன என்ற விவரம் தெரிந்தது. 10 முட்டைகள் கிரெம்ளின் அரண்மனையில் இன்றும் உள்ளன.[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Article on the first Hen egg". wintraecken.nl. 13 November 2008. பார்க்கப்பட்ட நாள் 26 March 2012.
- ↑ "Current whereabouts of the fifty Fabergé Imperial eggs". pbs.org. 1999. பார்க்கப்பட்ட நாள் 20 January 2016.
- ↑ Corder, Rob (18 November 2011). "Faberge: A Regal Renaissance". ProfessionalJeweller.com. Archived from the original on 15 ஜூன் 2012. பார்க்கப்பட்ட நாள் 26 March 2012.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ முகில் (24 அக்டோபர் 2018). "ஃபேபெரெஜ் முட்டைகள்!". கட்டுரை. இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 31 அக்டோபர் 2018.