பொது விநியோக முறை
பொது விநியோக முறை (Public Distribution System) என்பது நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம் (இந்தியா) மூலம் நிர்வகிக்கப்படும் ஒரு இந்திய உணவுப் பொருள் பாதுகாப்பு முறையாகும். மத்திய மற்றும் மாநில அரசின் மானியங்களால் நியாய விலைக் கடைகளின் மூலமாக நாடு முழுவதும் மக்களின் அத்தியாவசியத் தேவையான அரிசி, சர்க்கரை, மண்ணெண்ணெய், கோதுமை, பருப்பு, சமையல் எண்ணெய் மற்றும் பலசரக்குப் பொருள் குறைந்த விலையில் வழங்கப்படுகிறது. இந்திய உணவுக் கழகம், ஒரு மத்திய அரசு நிறுவனத்தின் மூலமாக உணவுப்பொருட்கள் வாங்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டு, மாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது. மாநில அரசின் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் நியாய விலைக் கடைகளின் மூலம் நுகர்வோரான மக்களுக்கு வழங்கப்படுகிறது.
இதன் திட்டப்படி, மாதம் ஒன்றிற்கு, ஒவ்வொரு வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள குடும்பங்களுக்கு 35கிலோ அரிசி அல்லது கோதுமையும், வறுமைக் கோட்டிற்கு மேலுள்ள குடும்பங்களுக்கு 15கிலோ அரிசி அல்லது கோதுமை வழங்கப்படும்.[1]