பொருண்மொழிக் காஞ்சி

பொருண்மொழிக்காஞ்சி என்னும் துறைப் பாடல் புறநானூற்றுத் தொகுப்பில் 17 உள்ளன. [1] இது பாடாண் திணையின் துறை.

இலக்கண நூல்கள்

தொகு
தொல்காப்பியம் இதனை வாகைத்திணையின் துறையாகவும், [2] புறப்பொருள் வெண்பாமாலை இதனைப் பொதுவியல் படலத்தின் கூறாக வரும் காஞ்சித்திணைப் பகுதியில் ஒன்றாகவும் காட்டுகின்றன.[3]

புறநானூறு

தொகு

மக்களுக்கு

தொகு
  • நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும் அல்லது செய்தலைத் தவிர்த்துவிடுங்கள். [4]
  • யாதும் ஊரே, யாவரும் கேளிர், தீமையும் நன்மையும் பிறரால் வருவதில்லை, அவரவர் நினைவுதான். எனவே இது இன்பம், இது துன்பம் என எண்ணக்கூடாது. ஆற்று நீரோட்டத்தில் கல்லில் மோதி, விலகிக் கட்டுமரம் செல்வது போல உயிர்வாழ்க்கை சென்றுகொண்டே இருக்கும். இந்த வாழ்க்கையில் பெரியோர் என்று வியத்தற்கோ, சிறியோர் என்று இகழ்தற்கோ இடமில்லை. [5]
  • எங்கே நல்லவர்கள் வாழ்கிறார்களோ அந்த நாடுதான் சிறந்தது. [6]
  • ஒருவன் துரத்தும் மான் அவனால் ஓடமுடியாத களர் நிலத்தில் ஓடித் தப்பிக்கவும் முடியும். மானுக்கு அதன் சுற்றம் உதவவில்லை. அதுபோன்றதுதான் மக்கள் சுற்றமும். [7]
  • யானை வேட்டையில் வெற்றி பெறுதலும், குறும்பூழ் என்னும் சிறிய காடைப் பறவை வேட்டையில் தோல்வி அடைதலும் நிகழக்கூடியதுதான். எனவே உயர்ந்த்தை எண்ணி ஊக்கம் பெறுங்கள். [8]
  • தமக்கு என முயலாமல், பிறர்க்கு என முயல்பவர் இருப்பதால்தான் உலகம் உய்கிறது. [9]
  • எலி போல் சுரண்டிப் பிழைப்போர் நட்பு வேண்டாம். புலி போல் உழைத்துப் பிழைப்போர் நட்பு வேண்டும். [10]
  • உண்பது ஒரு நாளைக்கு ஒரு நாழி(படி. லிட்டர்) அரிசி. உடுப்பது மேலாடை, கீழாடை என இரண்டு. எனவே மிகுதியாக இருக்கும் செல்வத்தைப் பிறருக்கு ஈதலே செல்வத்துப் பயன். [11]
  • குழந்தை இல்லாத வாழ்க்கை குறையான வாழ்க்கை. [12]
  • மனைவி, மக்கள், அண்ணன் தம்பியர், அரசன் ஆகியோர் நல்லவராய் இருந்து, ஊர்மக்கள் சான்றோர்களாக விளங்கினால் முதுமை தெரியாது. [13]
  • அரசு மூத்தவனை விட அறிவுடையவனையே மதிக்கும். தாயும் சிறப்புப் பெற்றவனையே விரும்புவாள். எனவே கல்வி பயில்க. [14]

மன்னனுக்கு

தொகு
  • மக்களுக்கு நெல்லோ, நீரோ உயிர் அன்று. மன்னன்தான் உயிர். [15]
  • அரசு வண்டியைப் பாதுகாப்பாக ஓட்டவேண்டும். [16]
  • அருளும் அன்பும நீக்கி நிரயம் கொள்பவரோடு சேராமல் தாய் குழந்தையைக் காப்பது போல் நாட்டைக் காத்தல் வேண்டும். [17]
  • பரிசிலர்க்கு வரிசை அறிந்து வழங்குக. [18]
  • வாளோர் வாழ்த்தவும், இரவலர் ஈகையைப் புகழவும், மகளிர் தேறல் ஊட்டவும் இனிது வாழ்க. [19]
  • விழுமியோனாக இருந்தால் அரசு பாரம் நீரில் மிதக்கும் வெண்கிடை போல் சுமையற்றது ஆகிவிடும். [20]

அடிக்குறிப்பு

தொகு
  1. புறநானூறு 5, 24, 75, 121, 182, 183, 185, 186, 187, 188, 189, 190, 191, 192, 193, 195, 214
  2. பொருளொடு புணர்ந்த பக்கம் (தொல்காப்பியம், புறத்திணையியல், வாகைத்திணையின் துறை, 17
  3. எரிந்து இலங்கு சடைமுடி முனிவர்
    புரிந்து கண்ட பொருள் மொழிந்தன்று. புறப்பொருள் வெண்பாமாலை, பொதுவியல் படலம் 271
  4. நரிவெரூஉத்தலையார் பாடியது புறநானூறு 195,
  5. கணியன் பூங்குன்றனார் பாடியது புறநானூறு 192,
  6. ஔவையார் பாடியது புறநானூறு 187,
  7. ஓரேர் உழவர் பாடியது புறநானூறு 193,
  8. கோப்பெருஞ்சோழன் பாட்டு புறநானூறு 214
  9. கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி பாடியது புறநானூறு 182,
  10. சோழன் நல்லுருத்திரன் பாடியது புறநானூறு 190,
  11. நக்கீரர் பாடியது புறநானூறு 189,
  12. அறிவுடை நம்பி பாடியது புறநானூறு 188,
  13. பிசிராந்தையார் பாடியது புறநானூறு 191,
  14. பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் பாடியது புறநானூறு 183,
  15. மோசிகீரனார் பாடியது புறநானூறு 186,
  16. தொண்டைமான் இளந்திரையன் பாடியது புறநானூறு 185,
  17. நரிவெரூஉத்தலையார் பாடியது புறநானூறு 5,
  18. வரிசை = சீர்வரிசை, சிறப்பு கபிலர் பாடியது புறநானூறு 121,
  19. மாங்குடி கிழார் பாடியது புறநானூறு 24,
  20. வெண்கிடை = உலர்ந்த சோளத்தட்டையின் உள்ளே இருக்கும் வெண்டு. சோழன் நலங்கிள்ளி பாடியது புறநானூறு 75,
"https://ta.wikipedia.org/w/index.php?title=பொருண்மொழிக்_காஞ்சி&oldid=3317161" இலிருந்து மீள்விக்கப்பட்டது