மீவியற்பியல்

(பௌதீக அதீதவியல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

மீவியற்பியல் அல்லது பெளதீக அதீதவியல் (Metaphysics) என்பது மெய்யியலின் ஒரு கிளை ஆகும். அது "இருப்பு" (being) என்றால் என்ன, "உலகு" என்பதன் பொருள் யாது போன்ற வேரோட்டமான கேள்விகளை எழுப்பி, அவற்றிற்கு விடைதேடுகின்ற அறிவியல் துறையைச் சார்ந்தது.[1][2] வழக்கமாக, "மீவியற்பியல்" இரு அடிப்படையான கேள்விகளுக்கு மிக விரிவான பின்னணியில் விடை தேடுகிறது. அக்கேள்விகள்:

  1. "இருப்பது" என்ன?
  2. அது இருக்கும் "விதம்" என்ன? [3]

மீவியற்பியலின் ஆய்வு விரிவு

தொகு

மீவியற்பியலைப் பயிலுபவர் "மீவியற்பியலார்" என்று அழைக்கப்படுகிறார்[4][5] உலகு பற்றிய அடிப்படை உண்மைகளை மக்கள் எவ்வாறு விளங்கிக்கொள்கின்றார்கள் என்பதைத் தெளிவுபடுத்துவது மீவியற்பியலின் நோக்கம். எனவே, "இருப்பு" பற்றியும், பொருள்கள், அவற்றின் பண்புகள், இடம், காலம், காரண காரியம், நிகழலாம் தன்மை போன்றவை பற்றியும் மீவியற்பியல் ஆய்கிறது. இந்த ஆய்வுத் துறையின் ஒரு மையக் கிளை "இருப்பாய்வியல்" (ontology) ஆகும். இது "இருப்பு" என்றால் என்ன என்பதையும், இருப்புப் பற்றிய கருத்துக் கோப்புகள் தமக்குள் எவ்வாறு உறவுகொண்டுள்ளன என்பதையும் ஆய்கிறது. மீவியற்பியலின் மற்றொரு கிளை "அண்டவியல்" (cosmology) என்று அழைக்கப்படுகிறது. இது பாருலகில் நிலவும் தோற்றக் கூறுகள் அனைத்தையும் ஒட்டுமொத்தமாக ஆய்கின்ற துறை ஆகும்.

இயற்கை மெய்யியலும் நவீன அறிவியலும்

தொகு

நவீன காலத்தில் அறிவியல் வரலாறு தோன்றுவதற்கு முன்னால், அறிவியல் சார்ந்த கேள்விகளை ஆய்வுக்கு உட்படுத்திய படிப்புத் துறை "இயற்கை மெய்யியல்" (natural philosophy) என்று அழைக்கப்பட்டது. அதுவும் மீவியற்பியலின் ஒரு பிரிவே.

இன்று அறிவியல் என அழைக்கப்படுவது "அறிவு" பெறுதல் என்பதிலிருந்து வருவதே. "அறிதல்" என்றால் என்ன என்பதை அதன் அடிப்படைகளை ஆய்தல் வழியாக எடுத்துரைக்கும் படிப்புத் துறை "அறிதலியல்" அல்லது அறிவாய்வியல் (epistemology) ஆகும்.

ஆனால் அறிதல் என்பதை "அறிவியல் முறை"ப்படி (scientific method) அறிய முற்பட்டபோது, இயற்கை மெய்யியல் என்ற துறை ஏனைய மெய்யியல் துறைகளிலிருந்து வேறுபடத் தொடங்கியது. ஐம்புலன்களின் மெய்ப்பித்தலுக்கும் சோதனைவழி மெய்ப்பித்தலுக்கும் உட்படக் கூடியதையே "அறிவியல்" ஏற்றது. ஆக, 18ஆம் நூற்றாண்டின் இறுதியில் இருந்து இந்த அறிவுத் துறை அறிவியல் (science) என்னும் பெயர் பெறலாயிற்று. மெய்யியலிலிருந்து அது வேறுபட்டது என்பதும் தெரிந்தது. அதிலிருந்து, மீவியற்பியல் என்றால் இருப்பு எத்தகையது என்று அறிந்திட புலன்வழி மெய்ப்பித்தல் சாரா முறையில் ஆய்வு நிகழும் துறையைக் குறிக்கலாயிற்று.[6]

மீவியற்பியல் என்னும் சொற்பிறப்பு

தொகு

மீவியற்பியல் என்று தமிழில் கூறப்படுகின்ற மெய்யியல் துறை ஆங்கிலத்தில் metaphysics என அழைக்கப்படுகிறது. அச்சொல் கிரேக்க மொழியிலிருந்து பிறக்கிறது. கிரேக்கத்தில் metá (μετά) என்றால் "அப்பால்", "மேல்", "பின்" எனப் பொருள்படும். கிரேக்கத்தில் physiká (φυσικά) (= physics) என்பது இயற்கை என்னும் பொருளின் அடிப்படையில் தமிழில் வழங்குகின்ற இயற்பியல் என்னும் சொற்பொருளைத் தரும்.

"மீவியற்பியல்" என்பது மீ+இயற்பியல் என்று பிரிந்து, "இயற்பியலுக்கு அப்பால்" ("மேல்", "பின்") வருகின்ற படிப்புத் துறை என்னும் பொருளைத் தரும்.[7]

மீவியற்பியல் என்னும் இணைச்சொல்லைக் கிரேக்கத்தில் அரிஸ்டாட்டில் என்னும் மெய்யியலாரின் நூல்களைப் பதிப்பித்தோர் பயன்படுத்தினர். அவர்கள் அரிஸ்டாட்டிலின் இயற்பியல் பற்றிய நூல்களைத் தொகுத்தபின்,"இயற்பியலுக்குப் பின்னர்" வரும் நூல்கள் என்னும் பொருளில் சில நூல்களைத் தொகுத்தனர். அரிஸ்டாட்டில் அந்நூல்களை "மீவியற்பியல்" நூல்கள் என்னும் பெயரால் அழைக்கவில்லை. மாறாக, அவர் கொடுத்த பெயர் "முதல் மெய்யியல்" (first philosophy) என்பதாகும்.

அரிஸ்டாட்டிலின் நூல்களைப் பதிப்பித்த ரோட் நகர் அண்ட்ரோனிக்கசு (Andronicus of Rhodes) என்பவர் அரிஸ்டாட்டலின் "முதல் மெய்யியல்" நூல்களை "இயற்பியல்" நூலுக்குப் "பின்" அமைத்து, "இயற்பியல் நூல்களுக்குப் பின் வரும் நூல்கள்" (ta meta ta physika biblia) (τὰ μετὰ τὰ φυσικὰ βιβλία) (= "the books that come after the [books on] physics") என்று பெயர் கொடுத்தார். இதை இலத்தீன் அறிஞர்கள் தவறுதலாக, "இயற்கையைக் கடந்தது பற்றிய படிப்புத் துறை" ("the science of what is beyond the physical") என்று பொருள்கொண்டுவிட்டார்கள்.

இப்பின்னணியிலேயே இன்று "மீவியற்பியல்" என்னும் தமிழ்ச் சொல்லும் வழங்குகிறது.

மீவியற்பியலின் உள்ளடக்கம்

தொகு

பெயர் கொடுக்கப்பட்ட பிறகு, அறிஞர்கள் அப்பெயர் எதைக் குறிக்கிறது, குறிக்கலாம் என்னும் ஆய்வில் ஈடுபட்டார்கள். கிரேக்கத்தில் phusis என்னும் சொல் "இயற்கை" என்னும் பொருள் கொண்டுள்ளதால், "இயற்கையைக் கடந்த உலகு பற்றிய படிப்புத் துறை" ("the science of the world beyond nature") என்று சிலர் "மீவியற்பியலை" விளக்கினார்கள். அவர்கள் பார்வையில் இப்படிப்புத் துறை "பொருண்மை சாரா உண்மைகள்" பற்றியது.

வேறு சிலர் "மீவியற்பியல்" என்றால், முதலில் இயற்பியலை அதாவது பொருண்மைசார் உலகு பற்றிப் பயின்றுவிட்டு, அதன் "பின்" பயிலப்படுகின்ற படிப்புத் துறை என்று பொருள் கொண்டார்கள். இதுவே நடுக்கால மெய்யியலாராகிய அக்வீனா தோமா என்பவரின் பார்வை ஆகும்.[8].

சிலர் "மீவியற்பியல்" என்பதை "ஆன்மிகம் சார்ந்த" என்று விளக்குவார்கள். எடுத்துக்காட்டாக, "மீவியற்கை நலமளிப்பு" (metaphysical healing) என்னும் சொல்லால் அவர்கள் பொருண்மைசார் உலகுக் காரணிகளுக்கு அப்பாற்பட்ட விதத்தில் நிகழ்கின்ற குணமளிப்புகளைக் குறிக்கிறார்கள்.[9]

மீவியற்பியலின் தொடக்கமும் இயல்பும்

தொகு

"மீவியற்பியல்" என்னும் சொற்பயன்பாடு அரிஸ்டாட்டல் என்னும் மெய்யியலாரால் தொடங்கப்பட்டது என்றாலும், தமக்கு முன் வாழ்ந்த மெய்யியலார் மீவியற்பியல் சார்ந்த பொருள்கள் குறித்து சிந்தித்திருந்தனர் என்று அரிஸ்டாட்டலே கூறியுள்ளார். அரிஸ்டாட்டல் கூற்றுப்படி, வரலாற்றிலேயே முதன்முதலாக, அனைத்துப் பொருள்களும் ஒரே மூலப்பொருளையே தம் தொடக்க காரணமாகக் (கிரேக்கம்: Arche) கொண்டுள்ளன என்னும் மெய்யியல் கருத்தை மைலீட்டசு நகர் தாலெசு (Thales of Miletus) எடுத்துரைத்தார்.

ஐயுறுவாதம்

தொகு

அறிவியல் சார்ந்த கேள்விகளைப் பண்டைய கிரேக்க நாட்டில் மெய்யியலாரே ஆய்ந்தனர். ஆனால் கிபி 18ஆம் நூற்றாண்டு விடிந்ததும், அறிவுபெறல் பற்றி ஐயம் கொண்டோர் "உமக்கு/நமக்கு எப்படித் தெரியும்?" என்ற கேள்வியைக் கேட்டு, "அறிதலியல்" அல்லது அறிவாய்வியல் என்னும் மெய்யியல் துறை தோன்றிட வழிவகுத்தார்கள். அத்துறை "உமக்கு/நமக்கு எப்படித் தெரியும்?" என்னும் கேள்வியைத் தன் ஆய்வுப்பொருளாகக் கொண்டது. "யாது" தெரியும் என்னும் மீவியற்பியல் கேள்வி இப்போது "எப்படித்" தெரியும் என்னும் கேள்வியாக மாறியதால் அது நவீன அறிவியலுக்கும் அறிவியல் முறைக்கும் இட்டுச்சென்றது.

எனவே, ஐயுறுவாதம் (Skepticism) மீவியற்பியலிலிருந்து அறிதலியல் தோன்றிட வழியாயிற்று எனலாம். அதிலிருந்து, மீவியற்பியல் என்றால் "இருப்பின்" தன்மையை மெய்யியல் அடியிலான புலன்சாரா முறையில் ஆய்தலைக் குறிக்கலாயிற்று.[6]

மீவியற்பியல் "அறிவியல் துறைகளின் அரசி"

தொகு

மீவியற்பியலை அரிஸ்டாட்டில் அறிவியல் துறைகளின் அரசி என்று அழைத்தார். மேற்படிப்பு நிறுவனங்களில் ஆய்வுத்துறை சார்ந்த கல்விமுறையில் மீவியற்பியல் ஒரு துறையாக அரிஸ்டாட்டில் காலத்துக்கு முன்னேயே விளங்கியது. இயற்பியல், மருத்துவம், கணிதம், பாவியல், இசையியல் போன்ற துறைகளைப் போன்றே மீவியற்பியலும் முதன்மையானதாக விளங்கியது.

பல துறைகளாகப் பிரிதல்

தொகு

பொ.ஊ. 17ஆம் நூற்றாண்டில் நவீன கால மெய்யியல் எழுந்தது. அதிலிருந்து, முற்காலத்தில் மீவியற்பியலின் உள்ளடக்கமாக இல்லாதிருந்த வேறு பல பொருள்களும் அத்துறையின் உள்ளடக்கமாக மாறின. நேர்மாறாக, முற்காலத்தில் மீவியற்பியலின் உள்ளடக்கமாகக் கருதப்பட்ட வேறு பல பொருள்கள் நவீன காலத்திலிருந்து மெய்யியலின் வேறு பல துறைசார்ந்தனவாக மாறிவிட்டன. எடுத்துக்காட்டாக, சமய மெய்யியல் (Philosophy of religion), உள மெய்யியல் (philosophy of mind), உணர் மெய்யியல் (philosophy of perception), மொழி மெய்யியல் (philosophy of language), அறிவியல் மெய்யியல் (philosophy of science) போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

மேலும், ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் என்னும் அறிவியல் மேதை உருவாக்கிய சார்புக் கோட்பாடு (theory of relativity) போன்றவை இயற்கையின் பொருண்மை சார்ந்தவற்றை ஆய்வதால் அறிவியல் சார்ந்தனவாகவும், அதே நேரத்தில் மீவியற்பியல் சார்ந்தனவாகவும் முகிழ்த்துள்ளன.

அரிஸ்டாட்டில் உருவாக்கிய மீவியற்பியல் பகுப்பு

தொகு

அரிஸ்டாட்டில் ஆக்கிய மெய்யியல் கிளையாகிய மீவியற்பியல் மூன்று கிளைகளாகப் பிரிக்கப்பட்டு, இன்றைய மேற்கத்திய மெய்யியலில் வழக்கத்தில் உள்ளது. அக்கிளைகள் இவை:

இருப்பியல் (ontology)
இத்துறை "இருப்பு" (being), "இருத்தல்" (existence) என்றால் என்னவென்பதை ஆய்கிறது. இயற்கையில் மற்றும் மனத்தில் உள்ள பொருள்களை வரையறுப்பதும், வகைப்படுத்துவதும், அவற்றின் உடைமைகளின் இயல்பை எடுத்துரைப்பதும், மாற்றத்தின் இயல்பை விளக்குவதும் இருப்பியலின் பணிகள் ஆகும்.
இயற்கை இறையியல் (Natural Theology)
இத்துறை கடவுள் (கடவுளர்) பற்றி மனித பகுத்தறிவு அறியக்கூடுவதை எடுத்துரைக்கிறது. இத்துறை ஆயும் சில பொருள்கள்: சமயம்/மதம் என்றால் என்ன? உலகு என்றால் என்ன? பரம்பொருள் உளதா? படைப்பு என்றால் என்ன? மனித குலத்தில் சமயம் சார்ந்த எப்பொருள்கள் தாக்கம் கொணர்கின்றன? ஏன்? இவ்வுலகில் துன்பம் ஏன் உளது?
பொது அறிவியல் (Universal science)
இத்துறை, ஆய்வுகளுக்கு அடிப்படையான தத்துவங்களை ஆய்கின்றது. எ.டு.: ஒரு பொருள் ஒரு நேரத்தில் ஒரு பார்வையில் ஒன்றாக இருக்கும்போது, வேறொன்றாக அதே நேரத்தில் அதே பார்வையில் இருத்தல் இயலாது. இதை அரிஸ்டாட்டில் "முரண்பாடின்மைத் தத்துவம்" (law of noncontradiction) என்று அழைத்தார். இத்தத்துவம் மெய்யியல் ஆய்வுகள் அனைத்திற்கும் அடிப்படை போன்றது என்று அவர் கூறினார்.

அரிஸ்டாட்டில் "முதல் மெய்யியல்" (first philosophy) என்று அழைத்த இந்தப் பொது அறிவியல் "இருப்பு, இருப்பு எனும் பார்வையில் யாது" (being qua being) எனும் பொருளை ஆய்கிறது. அதாவது, எல்லா அறிவுத் துறைகளுக்கும் அடிப்படையான கேள்விகள் அங்கு எழுப்பப்படுகின்றன. காரிய காரணம் (causality), இருத்தமை (substance), வகைகள், கூறுகள், முடிவுறுகை (finitude) போன்றவையும் இத்துறையின் ஆய்வுப் பொருள்கள் ஆகும்.

மீவியற்பியலின் மைய ஆய்வுப் பொருள்கள்

தொகு

மீவியற்பியலின் மையப் பொருள்கள் இவை இவை என்று எல்லா மெய்யியலாரும் ஒருமனதாக ஏற்காவிடினும், பெரும்பான்மையோர் ஏற்கும் பொருள்கள் அவண் பட்டியலிடப்படுகின்றன.

இருப்பு, இருத்தல், எதார்த்தம்

தொகு

"இருப்பு" (being) என்றால் என்னவென்பது மீவியற்பியல் கேட்கின்ற அடிப்படையான கேள்வி ஆகும். மீவியற்பியல் தோன்றிய பண்டைக் காலத்திலிருந்தே இக்கேள்வியை மெய்யியலார் கேட்டுவந்துள்ளனர். எடுத்துக்காட்டாக பார்மேனிடசு (Parmenides) என்னும் பண்டைய கிரேக்க மெய்யியலாரைக் கூறலாம். அவர், "இருப்பு" ஒன்றே எனவும், அது மாற்றமுறாதது எனவும் கற்பித்தார். ஆனால், இருபதாம் நூற்றாண்டைச் சேர்ந்த புகழ்மிக்க மெய்யியலாராகிய ஹைடகர் (Heidegger) என்பவர், முன்னாளைய மெய்யியலார்கள் "இருப்பு, இருப்பு எனும் பார்வையில் யாது" என்னும் கேள்வியை மறந்துவிட்டு, இருப்புகள் (beings [existing things]) பற்றியே கவனம் செலுத்திவிட்டனர் என்று கூறி, மீண்டும் பண்டைய மெய்யியலாராகிய பார்மேனிடசின் அணுகுமுறைக்குத் திரும்பிச் செல்லவேண்டும் என்றுரைத்தார்.

எதார்த்தத்தின் அடிப்படையான அமைவுக் கூறுகளை வரிசைப்படுத்தும் பட்டியல் "இருப்பியல் பட்டியல்" (ontological catalogue) ஆகும். "இருத்தல்" (existence) என்பதை பயனிலையாக (predicate) கூறலாமா என்னும் கேள்வி தொடக்க நவீன காலத்திலிருந்து (Early Modern period) ஆய்வுக்கு உட்படலாயிற்று. குறிப்பாக, கடவுள் இருக்கிறார் என்று நிலைநாட்டும் முயற்சியில் இப்பார்வை தொடர்புடையது (ontological argument).

ஒரு பொருள் "உளது" (existence) என்னும் கூற்று, அப்பொருள் "யாது" (essence) என்னும் கூற்றிலிருந்து வேறுபடுத்தப்படுகிறது. இந்த இரு கூற்றுகளும் தமக்குள் கொண்டுள்ள ஒற்றுமை, உறவு, வேற்றுமைகள் பற்றிய ஆய்வினை அரிஸ்டாட்டில் தமது மீவியற்பியலில் மேற்கொண்டார். அது பற்றிய விரிவான ஆய்வை மேற்கொண்ட மற்றொருவர் 11ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புகழ்பெற்ற பாரசீக மெய்யியலாரான இபின் சீனா (Avicenna [Ibn Sina]) ஆவார்.[10]

"யாது" என்பது இன்றி "உளது" என்பது வெறுமையாகத் தோன்றுவதால், ஹேகெல் போன்ற மெய்யியலார்கள் அதை ஒன்றுமில்லாமையாகக் கருதுகிறார்கள்.

புலனுறு, மற்றும் கருத்துறு பொருள்கள்

தொகு

பொருள்களும் அவற்றின் உடைமைகளும்

தொகு

உலகில் தனித்தனிப் பொருள்கள் பல உளவாக நமக்குத் தெரிகிறது. அப்பொருள்கள் பருண்மை சார்ந்தவையாக, அல்லது கருத்து சார்ந்தவையாக (எ.டு.: அன்பு, மூன்று எனும் எண்) உள்ளன. பொருண்மை சார்ந்த பொருள்கள் "தனிமங்கள்" (particulars) ஆகும். அவற்றிற்கு குணங்கள் உண்டு. அவை எந்த அளவு, வடிவம், நிறம், இருப்பிடம் கொண்டுள்ளன என்று நாம் காணலாம். ஒன்றுக்கு மேற்பட்ட தனிமங்களுக்குப் பொதுவான குணங்களும் இருக்கலாம். இத்தகைய பண்புகள் "பொதுமங்கள்" (Universals) அல்லது "குணங்கள்" (properties) என்று அழைக்கப்படுகின்றன. இவற்றின் இயல்பு என்ன? இவை உண்மையாகவே உளவா? அவ்வாறாயின் அவற்றின் "உளமை" எத்தகையது? - இது நீண்டகாலமாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

இது பற்றி இரு எதிர்மாறான கொள்கைகள் உள்ளன. ஒன்று "பொதுமங்கள்" எதார்த்தமாகவே உள்ளன (realism) என்று கூறுகிறது. அதை மறுத்து, "பொதுமங்கள்" "பெயர்" அளவில் மட்டுமே உள்ளன (nominalism) என்று மற்ற கொள்கை கூறுகிறது.

பொதுமங்கள் மற்றும் தனிமங்கள் பற்றி ஆய்கின்ற மீவியற்பியலார், பொருள்களின் இயல்பையும் அவற்றின் குணங்க்ளையும் ஆய்வதிலும் கருத்தைச் செலுத்தி, அவை இரண்டிற்கும் இடையே நிலவும் உறவையும் ஆய்கிறார்கள்.

பிளேட்டோ போன்ற மெய்யியலார் "குணங்கள்" கருத்துறு பொருள்கள் என்றும், கால இட எல்லை தாண்டி அவை இருக்கின்றன என்றும், அவற்றோடு "தனிமங்கள்" சிறப்பு உறவு கொண்டுள்ளன என்றும் கூறுவர். டேவிட் ஆம்ஸ்ட்ராங் என்பவர், "பொதுமங்கள்" கால இட எல்லைக்குள் உள்ளன என்று ஏற்றாலும், அதே சமயத்தில் அவை ஒரு பொருள் அல்லது பல பொருள்களில் இடம்கொண்டிருப்பதால் மட்டுமே "உள்ளன" என்பார். அவற்றைக் கண்டுபிடிப்பது அறிவியலின் பணி என்றும் அவர் கூறுவார்.

வேறு சிலர், "தனிமங்கள்" என்பவை அவை கொண்டிருக்கின்ற குணங்களின் தொகுப்பே என்பர்.

கருத்துறு பொருள்களும் கணிதமும்

தொகு

"பொதுமங்கள்" மற்றும் எண்கள் போன்ற கருத்துறு பொருள்கள் உள்ளன என்று சில மெய்யியலார் கூறுவர். சிவப்பு என்னும் நிறம், சதுரம் என்னும் வடிவம் போன்றவை தனிப்பொருள்களில் இடம்கொள்ள இயலும். எனவே அவை "பொதுமங்கள்" ஆகும்.

கருத்துறு பொருள்கள் என்பவை பொதுவாக கால இட எல்லையைத் தாண்டி உள்ளன; அவை காரணமாக செயல்படுவதில்லை. கணிதப் பொருள்கள், கற்பனைப் பொருள்கள் மற்றும் கற்பனை உலகுகள் போன்றவை கருத்துறு பொருள்களுக்கு எடுத்துக்காட்டுகள். கருத்துறு பொருள்கள் வெறும் பெயர்களே என்பது "பெயர்க் கொள்கை" (nominalism) ஆகும். கருத்துறு பொருள்களும் "உள்ளன" என்பது பிளேட்டோ கொள்கை. இவ்விரு கொள்கைகளுக்கும் இடைப்பட்ட கொள்கை "மித எதார்த்தக் கொள்கை" (moderate realism) ஆகும். அதை அரிஸ்டாட்டில் எடுத்துரைத்தார். இன்னுமொரு கொள்கை "கருத்துக் கொள்கை" (conceptualism) ஆகும்.

கணித மெய்யியல் துறை (philosophy of mathematics), மீவியற்பியலின் நிலைப்பாடுகள் சிலவற்றைத் தனதாக்குவதும் உண்டு. ஏனென்றால், கடவுநிலையிலோ (transcendentally) பொருண்மையாகவோ மனத்தளவிலோ பொருள்கள் உண்மையாகவே உள்ளன என்னும் நிலைப்பாடு கணிதத்துக்கும் மீவியற்பியலுக்கும் பொதுவாகக் கூடும். பிளேட்டோவின் எதார்த்தவாதத்தின்படி (Platonic realism), கணித எதார்த்தங்கள் பொருண்மையற்ற கடவுநிலை உலகு சார்ந்தவை. கணித புலனுறுவாதம் (mathematical empiricism), கணித எதார்த்தங்கள் (எ.டு.: சதுரம்) சாதாரண புலனுறு பொருள்கள் போன்றே உள்ளன என்கிறது.

ஆனால் பிளேட்டோ இக்கருத்தை ஏற்கவில்லை. அவர் கூற்றுப்படி, எந்தவொரு புலனுறு பொருளும் ஒரு கணித எதார்த்தத்தை முழுமையாக, நிறைவாக வெளிக்காட்ட இயலாது. எடுத்துக்காட்டாக, சதுரம் என்னும் கணித எதார்த்தம் புலனுறு வகையில் சதுரமாக அமைந்துள்ள எந்தவொரு சதுர வடிவப் பொருளிலும் தன் முழுநிறைவோடு வெளிப்பட இயலாது.

பிளேட்டோவின கருத்தை நவீன கணிதவியல் உறுதிப்படுத்துகிறது. அதாவது நவீன கணிதவியலார் பல சிக்கல் மிகு கணித அமைப்புகளை உருவாக்கியுள்ளனர். அவற்றை அப்படியே புலனுறு விதத்தில் வெளிக்காட்டும் பொருள்கள் கிடையாது.

மூன்றாவது எதார்த்தவாதத்தின்படி, கணித எதார்த்தங்கள் மனத்தளவில் உள்ளன. ஆனால், மனம் என்பது பொருண்மைப் பண்புடையது என்னும் பார்வையில் கணிதத்தின் எண்ணிறந்த எதார்த்தங்களை அப்படியே தன்னகத்தே அடக்கிக் கொள்ள மனம் வலுவற்றது.

இம்மானுவேல் காண்ட் என்னும் நவீன கால மெய்யியலார் "அனுபவத்துக்கு உட்படாத எந்த கணித எதார்த்தமும் இருக்க இயலாது" என்னும் கருத்துடைய "உள்ளுணர்வுக் கொள்கையை" (Intuitionism) ஆதரிக்கிறார். மனத்தால் உள்வாங்க முடியாத, உருவாக்க இயலாத எதுவும் உள்ளுணர்வுக்கு எட்டாதது. எனவே, இரு முரண்களில் ஒன்றே மெய் என்னும் கொள்கை (law of the excluded middle) என்பதையும், முடிவறாநிலை (infinity) மற்றும் முடிவுகடவு எண்களையும் (transfinite numbers) இக்கொள்கை ஏற்பதில்லை.

எதார்த்த-எதிர் வாதம் (anti-realism) கணிதப் பொருள்களுக்கு எந்தவொரு எதார்த்த நிலையையும் வழங்குவதில்லை.

பாருலகவிலும் (Cosmology) பாருலுகுத் தோற்றவியலும் (Cosmogony)

தொகு

மீவியற்பியலின் ஒரு பகுதியான பாருலகவியல் (Cosmology) கால இட அமைவில் அண்டத்தின் முழுமை பற்றி ஆய்கின்றது. வரலாற்றில், இப்படிப்புத் துறை மிக விரிந்த ஆய்வுத் தளம் கொண்டிருந்தது. பலகாறும் மதக் கொள்கைகளோடு உறவுகொண்டும் இருந்தது. பண்டைய கிரேக்கர்களும் இந்த அணுகுமுறையைக் கொண்டிருந்தனர். ஆனால், நவீன காலத்தில் பாருலகவியல் இயற்பியலின் வீச்சுக்குள் வராத கேள்விகளையும் ஆய்வுக்கு எடுத்துக்கொள்கிறது. நவீன பாருலகவியல் மதம்சார் பாருலகவியலிலிருந்து (religious cosmology) தன்னை வேறுபடுத்திக் காண்கிறது. ஏனென்றால், அது பாருலகு சார்ந்த கேள்விகளை மெய்யியல் அடிப்படையில் எழுப்பி ஆய்கிறது.

பாருலகுத் தோற்றவியல் (Cosmogony) என்னும் ஆய்வுத் துறை பாருலகு எவ்வாறு தோன்றியது என்பதை ஆய்வுக்கு எடுத்துக்கொள்கிறது.

நவீன மீவியற்பியல் பாருலகவியலும் பாருலகுத் தோற்றவியலும் கீழ்வரும் கேள்விகளுக்குப் பதில் வழங்க முயல்கின்றன:

  • பாருலகு எங்கிருந்து தோன்றியது? அதன் முதல் காரணம் யாது? அது உளவாதல் கட்டாயத் தேவையா? (இக்கேள்விகளுக்கு "ஒருமைக் கொள்கை" (Monism), "அனைத்திறைக் கொள்கை" (Pantheism), "விரிந்தொழுகுக் கொள்கை" (Emanationism), "படைப்புக் கொள்கை" (Creationism) போன்ற பல்வேறு மெய்யியல் கொள்கைகள் வெவ்வேறு பதில்களைத் தருகின்றன.
  • பாருலகு அமைய இறுதி மூலப்பொருள்களாக உள்ளவை யாவை? (இக்கேள்விக்கு "எந்திரமெய்யியல்" (philosophical mechanism), "சக்திமெய்யியல்" (metaphysical dynamism), "பொருண்மைவடிவியல் கொள்கை" (hylomorphism), "அணுவியல் கொள்கை" (atomism) ஆகியவை வேறுபட்ட பதில்களைத் தருகின்றன.
  • பாருலகு இருப்பதன் இறுதி நோக்கம் என்ன? பாருலகு ஒரு குறிக்கோள் உடையதா? (இக்கேள்விக்கு "இலக்கியல்" அல்லது "குறிக்கோளியல்" (teleology) என்னும் படிப்புத் துறை பதிலளிக்க முயல்கிறது).

விதிக்கொள்கையும் (Determinism) சுதந்திர உளமும் (Free Will)

தொகு

குறிப்புகளும் ஆதாரங்களும்

தொகு
  1. Geisler, Norman L. "Baker Encyclopedia of Christian Apologetics" page 446. Baker Books, 1999
  2. Metaphysics (Stanford Encyclopedia of Philosophy)
  3. This is a close paraphrase of a passage discussed in the article David Lewis's Metaphysics (Stanford Encyclopedia of Philosophy)
  4. Random House Dictionary Online – metaphysicist
  5. Random House Dictionary Online – metaphysician
  6. 6.0 6.1 Peter Gay, The Enlightenment, vol. 1 (The Rise of Modern Paganism), Chapter 3, Section II, pp. 132-141.
  7. ஆங்கிலத்தில், metaphysics என்னும் சொல் நடுக்கால இலத்தீன் சொல்லாகிய metaphysica (அஃறிணைப் பன்மை) என்பதிலிருந்து வடிவம் பெற்றது.[1] பல அகராதிகள் இச்சொல் வடிவம் 16ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் தோன்றியதாகவும், சில அகராதிகள் 1387இலிருந்து தோன்றியதாகவும் கூறுகின்றன.[2]
  8. St. Thomas Aquinas, "In Lib, Boeth. de Trin.", V, 1
  9.    "Metaphysics". கத்தோலிக்க கலைக்களஞ்சியம் (ஆங்கிலம்). (1913). நியூயார்க்: இராபர்ட் ஆபில்டன் நிறுவனம். 
  10. காண்க: Nader El-Bizri, ‘Avicenna and Essentialism’, Review of Metaphysics 54 (2001), pp. 753-778

மேல் ஆய்வுக்கு

தொகு

நூல் பட்டியல்

தொகு
  • Butchvarov, Panayot (1979). Being Qua Being: A Theory of Identity, Existence and Predication. Bloomington and London: Indiana University Press.
  • Harris, E. E. (1965). The Foundations of Metaphysics in Science. London: George Allen and Unwin.
  • Harris, E. E. (2000). The Restitution of Metaphysics. New York: Humanity Books.
  • Kant, I (1781). Critique of Pure Reason.
  • Gale, Richard M. (2002). The Blackwell Guide to Metaphysics. Oxford: Blackwell.
  • Gay, Peter. (1966). The Enlightenment: An Interpretation (2 vols.). New York: W. W. Norton & Company.
  • Lowe, E. J. (2002). A Survey of Metaphysics. Oxford: Oxford University Press.
  • Loux, M. J. (2006). Metaphysics: A Contemporary Introduction (3rd ed.). London: Routledge.
  • Kim, J. and Ernest Sosa Ed. (1999). Metaphysics: An Anthology. Blackwell Philosophy Anthologies.
  • Kim, J. and Ernest Sosa, Ed. (2000). A Companion to Metaphysics. Malden Massachusetts, Blackwell, Publishers.
  • Le Poidevin R. & al. Ed. (2009). The Routledge Companion to Metaphysics. New York, Routledge.
  • Werner Heisenberg (1958), Atomic Physics and Causal Law, from The Physicist’s Conception of Nature

வெளி இணைப்புகள்

தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=மீவியற்பியல்&oldid=3679467" இலிருந்து மீள்விக்கப்பட்டது