மகாதேவர் கோயில், களஞ்சூர்
மகாதேவர் கோயில், களஞ்சூர் இந்தியாவின் கேரளா, பத்தனம்திட்டா மாவட்டத்தில் புனலூர் - மூவாட்டுப்புழா நெடுஞ்சாலையில் சபரிமலை கோயிலுக்கு தென்மேற்கே 80 கிலோமீட்டர் தொலைவில் உள்ள புகழ்பெற்ற ஓர் இந்துக் கோயிலாகும். இக்கோயில் திருக்களஞ்சூர் மகாதேவர் கோயில் என்றும் அழைக்கப்படுகறது.[1]
பழங்கால கலைஞர்கள், கைவினைஞர்களின் திறமையை வெளிப்படுத்துகின்ற கலைநயமிக்க சுவரோவியங்களைக் கொண்ட மண்டபம் ஆலமரத்தைச் சுற்றி உள்ளது. மண்டபத்தின் உள்ளே கிழக்கு நோக்கிய சிவபெருமானின் நடன வடிவத்தை வெளிப்படுத்துகின்ற நடராஜர் சிலை உள்ளது. இங்கிருந்து மேற்கு நோக்கிய நிலையில் உள்ள 60 அடி உயர கோபுரத்தை கிழக்குப் பகுதியிலிருந்து காணமுடியும். கோபுரத்திலிருந்து செல்கின்ற 18 படிகள் இண்டிலியப்பன் எனப்படுகின்ற சாஸ்தா, மூலவரான மகாதேவர் ஆகியோரின் சன்னதிக்கு இட்டுச்செல்கின்றன. மகாதேவரும், சாஸ்தாவும் இருப்பதால் இரு கொடிமரங்கள் உள்ன. அவை செப்புத்தகட்டால் வேயப்பட்டுள்ளன. இருவர் சிலைகளும் ஒன்றையொன்று நோக்கிய நிலையில் உள்ளன. இக்கோயிலின் உண்மையான பெயர் சங்கரபுரத்து முக்கால்வட்டம் தேவஸ்தம் எனப்படும். ஆனால் இக்கோயில் திருக்களஞ்சூர் மகாதேவர் கோயில் என்றே அறியப்படுகிறது.
திருவிழாக்கள்
தொகுகோயிலின் வருடாந்திரத் திருவிழா மலையாள மாதமான மீனத்தில் (மார்ச்/ஏப்ரல்) தொடங்கி திருவாதிரை ஆராட்டுடன் முடிவடைகிறது. எட்டு நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் ஆறாம் நாள் இண்டிலயப்பன் விழா கொண்டாடப்படுகிறது. தென்னிந்தியாவைச் சேர்ந்த புகழ்பெற்ற கலைஞர்கள் இந்த விழாவில் பங்கேற்கின்றனர். இது கர்நாடக இசைக்குப் புகழ்பெற்றது. செம்பை, செம்மங்குடி, பாலமுரளி கிருஷ்ணா, யேசுதாஸ், சேஷகோபால் போன்ற கர்நாடக இசை வல்லுநர்கள் இங்கு பாடியுள்ளனர். கதகளியும், பிற பாரம்பரியக் கலைகளும் விழாவில் முக்கிய இடத்தைப் பெறுகின்றன.
இண்டிலியப்பனுக்கு (சாஸ்தா) காலமெழுத்தும் பாட்டு, மண்டலபூஜையின் போது 41 நாட்கள் பஜனை (டிசம்பர்/ஜனவரி), சிவராத்திரி, அஷ்டமிரோகிணி, மலையாள மாதமான தனுவில் (ஜனவரி/பிப்ரவரி) பாகவத சப்தாஹம் , ராமாயண மாசம், விநாயக சதுர்த்தி போன்றவை ஆண்டு முழுவதும் நிகழ்கின்ற குறிப்பிடத்தக்க பண்டிகைகளாகும்.