மகாலட்சுமி கோவில், ஓக்கசின் , டெலாவெர்
மகாலட்சுமி கோவில், ஓக்கசின் , டெலவெயர் என்பது அமெரிக்க நாட்டில், டெலவெயர் மாநிலத்தின், நியூ கேசில் கவுண்டி (New castle County), ஓக்கசின் (Hockessin) நகரின், யார்க்லின் சாலையில் (Yorklin Road), அமைந்துள்ள ஓர் இந்துக் கோவிலாகும் [1]. இது டெலவெயர் மாநிலத்தில் கட்டப்பட்ட முதல் இந்துக் கோவிலாகும்.[2] டெலவெயர் மற்றும் அண்டை மாநிலங்களானன பென்சில்வேனியா மற்றும் நியூ ஜெர்சியில் வசிக்கும் இந்திய சமூகத்தின் மையமாக மகாலட்சுமி இந்துக் கோவில் திகழ்கிறது.[3] இக்கோவிலை நிர்வகிக்கும் ஓக்கசின் இந்து கோவில் சங்கம் (The Hindu temple Association of Hockessin), ஒரு இலாப நோக்கற்ற சங்கமாகும் [4]. இந்த அமைப்பு மூன்று மாநிலப் பகுதிகளில் பெருகி வரும் இந்தியக் குடும்பங்களின் (6000+) மதம், கலாச்சாரம் மற்றும் கல்வித் தேவைகளை நிறைவு செய்கிறது.[3]
டெலவெயர் இந்து கோவில் | |
---|---|
அடிப்படைத் தகவல்கள் | |
அமைவிடம் | 760 யார்க்லின் சாலை, ஓக்கசின், டெலாவேர் 19707 |
புவியியல் ஆள்கூறுகள் | 39°47′27″N 75°41′16″W / 39.79074°N 75.68768°W |
சமயம் | இந்து சமயம் |
செயற்பாட்டு நிலை | செயல்பாட்டில் உள்ளது |
இணையத் தளம் | hindutemplede |
ஓக்கசின் நகரம்
தொகுஓக்கசின் நகரம், வடக்கு நியூ கேஸில் கவுண்டியில் ஒரு சிறிய, வேகமாக வளர்ந்து வரும் ஒரு வரலாற்று நகரம் ஆகும். இவ்வூரில் கோடை வெப்பமாகவும், ஈரப்பதமாகவும், ஈரமாகவும் இருக்கும்; குளிர்காலம் மிகவும் குளிராகவும் பனியாகவும் இருக்கும். 2010 ஆம் ஆண்டில் மேற்கொண்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இவ்வூரில் சுமார் 13,527 மக்கள் வசிக்கிறார்கள். இவ்வூரின் ZIP குறியீடு DE 19707 ஆகும்.[1]
கோவில் அமைப்பு
தொகுஐந்து ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள அழகான கோவில் வளாகம் இதுவாகும். கார் நிறுத்துவதற்கு போதிய வசதி உள்ளது. கோவிலின் முகப்பில் அழகிய கலசங்கள் கொண்ட ஐந்து நிலை ராஜகோபுரம் அமைந்துள்ளது. இக்கோபுரம் சிறந்த சுதை வேலைப்பாடுகள் கொண்டுள்ளது. இராஜகோபுரத்தைக் கடந்து உள்ளே சென்றால், முன் மண்டபத்தில் தாமிர கவசமிட்ட கொடிமரம் மற்றும் பலிபீடம் ஆகியவற்றை தரிசிக்கலாம். இங்கிருந்து படியேறிச் சென்றால் பெரிய மண்டபத்தைக் காணலாம். இம்மண்டபத்தின் நடுநாயகமாக மூலவர் சன்னதி அமைந்துள்ளது. மூலவர் சன்னதியின் இரு புறங்களிலும் துணைக்கடவுளர்களின் சன்னதிகள் அமைந்துள்ளன.
இந்துக்கள் மகாலட்சுமியை செல்வம் மற்றும் செழிப்புக்கான தெய்வமாக கருதுகின்றனர். எனவே மகாலட்சுமி இக்கோவிலின் மூலவராக திகழ்கிறார்.. டெலவெயர் இந்து கோவிலில் வெங்கடேஸ்வரர் (பாலாஜி), கணபதி, ராதா கிருட்டிணர், ஸ்ரீ ராமன் நாராயணன், இராமர், சீதை, இலட்சுமணன் மற்றும் அனுமன் குடும்பம், ஐயப்பன் வள்ளி தெய்வானையுடன் முருகன், நவக்கிரகம், சாய்பாபா ஆகிய தெய்வங்களுக்கு தனி சன்னதிகள் உள்ளன.[5][6]
கோவில் முகவரி, திறந்திருக்கும் நேரம்
தொகு- முகவரி: டெலவெயர் இந்து கோவில் சங்கம், 760 யோர்க்லின் சாலை, ஓக்கசின், டிஇ 19707.
- இந்து கோவில் திறந்திருக்கும் நேரம்: வார நாட்களில் காலை 8 மணி முதல் நண்பகல் 12:30 மணி வரை மற்றும் மாலை 5 மணி முதல் இரவு 8:30 மணி வரை,
- வார இறுதி நாட்கள் மற்றும் விடுமுறை நாட்கள் காலை 8 மணி முதல் இரவு 8:30 மணி வரை,[5]
கோவில் அர்ச்சகர்கள்
தொகுகோவில் அர்ச்சகர்கள், பெயர்சூட்டுதல், பிறந்த நாள், புதுமனை புகுவிழா, திருமணம், புதிய மகிழுந்து பூசை, சத்தியநாராயண பூசை, போன்ற அனைத்து இந்து சமய விழாக்களை சிறப்பாக நடத்தித் தருகிறார்கள்.[7]
கோவில் நிர்வாகம்: அறங்காவலர் குழு
தொகுஇக்கோவிலை நிர்வகிக்கும் ஓக்கசின் இந்து கோவில் சங்கம் (The Hindu temple Association of Hockessin), ஒரு இலாப நோக்கற்ற சங்கமாகும். இந்த அமைப்பு மூன்று மாநிலப் பகுதிகளில் பெருகி வரும் இந்தியக் குடும்பங்களின் (6000+) மதம், கலாச்சாரம் மற்றும் கல்வித் தேவைகளைப் நிறைவு செய்கிறது. இந்த சங்கத்தின் அறங்காவலர் குழுவில், பல்வேறு துறைகள் மற்றும் தொழில்களைச் சேர்ந்தவர்கள் இடம்பெற்றுள்ளனர். அறங்காவலர் குழு, அர்ப்பணிப்புள்ள தொண்டர்கள், ஆலய ஊழியர்கள், அர்ச்சகர்கள் ஆகியோர் இக்கோவிலைத் திறம்பட நிர்வகித்து வருகிறார்கள்.[5]
வரலாறு
தொகுஇருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில், டெலவெயரில் உள்ள, இந்திய குடியேறிய குடும்பங்கள் (Indian Immigrant Families) உள்ளூர் தேவாலயங்களிலும், பள்ளிகளிலும், கூடி இறைவழிபாடு நடத்தவும், இந்து பண்டிகைகளை கொண்டாடவும் தொடங்கினர். டெலவெயரில் இந்திய அமெரிக்க மக்கள்தொகை (Indian American population) பெருகியதால், இந்தக் குடும்பங்கள் ஒன்றிணைந்து ஒக்கசின் இந்து கோவில் சங்கத்தை உருவாக்கினர். கோவில் கட்டுவதற்கான நிலம் வாங்குவதற்காக தேவைப்படும் பணத்திற்காக இச்சங்கம் நிதி திரட்டியது. போதிய நிதி திரட்டிய பிறகு, சங்கம் ஐந்து ஏக்கர் நிலத்தை வாங்கியது. 1996 ஆம் ஆண்டில், கோவில் தளத்தில் கட்டுமானம் தொடங்கியது. 2002ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட குடமுழுக்கு விழாவுடன் மக்கள் வழிபாட்டிற்காக கோவில் திறக்கப்பட்டது.[2]
அமெரிக்காவின் உயரமான அனுமன் சிலை
தொகு2020 ஆம் ஆண்டில், வல்லமை மற்றும் ஞானத்தின் கடவுளான அனுமனின் 25 அடி உயர கற்சிலை மகாலட்சுமி கோவில் நுழைவாயிலின் எதிரே நிறுவப்பட்டது. இது அமெரிக்காவின் மிக உயரமான அனுமன் சிலை என்று கருதப்படுகிறது. இந்தச் சிலை 60,000 பவுண்டுகள் எடை கொண்டது.[8][9]
- ↑ 1.0 1.1 Hockessin, Delaware City Data.com
- ↑ 2.0 2.1 About Us: History Hindu Temple: Mahalakshmi Devasthanam
- ↑ 3.0 3.1 "Balance: Indian music, films have gained popularity in America". The News Journal from Wilmington, Delaware. February 28, 2004. https://www.newspapers.com/newspage/165025469/.
- ↑ Doantion Hindu Temple: Mahalakshmi Devasthanam
- ↑ 5.0 5.1 5.2 Home Hindu Temple: Mahalakshmi Devasthanam
- ↑ Deities Hindu Temple: Mahalakshmi Devasthanam
- ↑ Services Hindu Temple: Mahalakshmi Devasthanam
- ↑ "Hindu Temple in Hockessin welcomes 25-foot, 60,000-pound statue of Hindu god".
- ↑ "Largest statue of Lord Hanuman in United States arrives at Hindu temple in Delaware". 9 February 2020.