மர்ரே ராஜம்

மர்ரே ராஜம் (Murray S. Rajam, நவம்பர் 22, 1904 - மார்ச் 13. 1986) என்பவர் தமிழகத்தின் ஒரு தொழிலதிபர், பதிப்பாளர், கொடையாளர் ஆவார்.[1]

வாழ்க்கைக் குறிப்பு தொகு

மர்ரே சாக்கை ராஜம் 1904, நவம்பர், 22 அன்று திருத்துறைப்பூண்டியிலிருந்து ஆறு கல் தொலைவிலுள்ள துளசாபுரம் என வழங்கும் சாக்கை என்னும் ஊரில் கோபாலையங்கார், கோமளத்தம்மாள் ஆகியோருக்கு பிறந்தவர். கணக்குத் தணிக்கைக்கை படிப்பை முடித்த ராஜம், சென்னையில் ஆங்கிலேயர்களால் நடத்தப்பட்ட ஏல நிறுவனமான மர்ரே நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்தார்.[2] இந்திய விடுதலைக்குப்பிறகு ஆங்கிலேயர்கள் இந்தியாவை விட்டு வெளியேறியபோது இவர் தம் தமையனாருடன் சேர்ந்து இந்த நிறுவனத்தை ஏற்று நடத்தினார். பின்னாளில் மர்ரே ராஜம் என்று அவர் ஏற்று நடத்திய நிறுவனத்தின் பெயராலேயே அடையாளப்படுத்தப்பட்டார்.

அறக்கட்டளை துவக்கம் தொகு

ராஜம் தன் முதுமைக் காலத்தில் மர்ரே நிறுவனத்தைத் தம் உறவினரிடம் ஒப்படைத்து, அவரிடமிருந்து பெற்றுவந்த பணத்தில் சில அறக்கட்டளைகள் நிறுவி, அறச்செயல்கள் செய்துவந்தார். கோயில்களுக்கும் நன்கொடைகள் பல வழங்கி வந்துள்ளார். இவ்வாறு அறச்செயல்கள் செய்து வந்த ராஜத்திற்கு 1940களில் பெ. நா. அப்புசாமி மூலமாகப் எஸ். வையாபுரிப்பிள்ளையின் தொடர்பு கிடைத்தது. வையாபுரிப்பிளையின் ஆலோசனையினால் தமிழிலக்கியங்களை மலிவுப்பதிப்பில் வெளியிடும் நோக்கத்துடன் ராஜம் வையாபுரிப்பிள்ளையை பதிப்பாசிரியராகக் கொண்டு பதிப்புப் பணிகளை தொடங்கினார். முதல் நூலாக, திவ்யபிரபந்தத்தின் முதலாயிரம் சந்தி பிரிக்கப்பட்டு 1955 இல் வெளியானது. எஸ். ராஜம், நெ 5, தம்புச்செட்டித் தெரு, சென்னை-01 என்ற முகவரியில் இருந்து பதிப்பகம் செயல்படத்தொடங்கியது. வையாபுரிப்பிள்ளை, பெ. நா. அப்புசாமி, மு. சண்முகம் பிள்ளை, வி. மு. சுப்பிரமணிய ஐயர், பி. ஸ்ரீ ஆச்சார்யா, கி. வா. ஜகந்நாதன், தெ. பொ. மீனாட்சிசுந்தரம், ரா.பி. சேதுப்பிள்ளை முதலான தமிழறிஞர்களை உள்ளடக்கிய ஆசிரியர் குழுவைக் கொண்டு சாந்தி சாதனாவால் பழந்தமிழ் இலக்கியங்கள், இலக்கணங்கள் என்று 40 க்கும் மேற்பட்ட புத்தகங்களைத் தரமான அச்சில் மலிவு விலையில் வெளியிடப்பட்டன. குறிப்பாக இவர்கள் வெளியிட்ட பேரகராதிகளான வரலாற்று முறைத் தமிழ் இலக்கியப் பேரகராதி , தமிழ் கல்வெட்டுச் சொல்லகராதி ஆகியன குறிப்பிடத்தக்கன.

1960 இல் இலக்கிய வெளியீட்டிற்காக சாந்தி சாதனா என்ற அறக்கட்டளை, ஏழை மக்கள் இறுதிக்கடனுக்கு உதவ வகைசெய்யும் வகையில் கிரியா சாதனா அறக்கட்டளை, குழந்தைகள் படிப்பு, மேம்பாட்டிற்காக சேவா சாதனா என அறக்கட்டளைகளை ராஜம் ஏற்படுத்தினார்.[3]

மறைவு தொகு

அறச்செயல்களை செய்வதையே பெரும் தொண்டாகக் கருதி வாழ்ந்து வந்த சாக்கை ராஜம் 13.03.1986 இல் காலமானார்.

மேற்கோள்கள் தொகு

  1. "Lesser known side of an auctioneer". தி இந்து. 26 மார்ச் 2012. பார்க்கப்பட்ட நாள் 16 அக்டோபர் 2016. {{cite web}}: Check date values in: |date= (help)
  2. இரா. வெங்கடேசன் (22 ஏப்ரல் 2011). "எளிய அமைப்பு, மலிவு விலை: சாக்கை ராஷம் பதிப்புகள்". கட்டுரை. http://bookday.co. Archived from the original on 2016-09-08. பார்க்கப்பட்ட நாள் 16 அக்டோபர் 2016. {{cite web}}: Check date values in: |date= (help); External link in |publisher= (help)
  3. "மர்ரே ராஜமும் பொக்கிஷப் பதிப்புகளும்!". கட்டுரை. தி இந்து. 15 அக்டோபர் 2016. பார்க்கப்பட்ட நாள் 16 அக்டோபர் 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மர்ரே_ராஜம்&oldid=3577987" இலிருந்து மீள்விக்கப்பட்டது