மறவன்புலவு க. சச்சிதானந்தன்

மறவன்புலவு கணபதிப்பிள்ளை சச்சிதானந்தன் (பிறப்பு: டிசம்பர் 5, 1941) ஈழத்து எழுத்தாளரும், பதிப்பாளரும், இலங்கை சிவசேனையின் தலைவரும்[2] ஆவார். ஐக்கிய நாடுகள் உணவு - வேளாண் கழகத்தில் ஆலோசகராகப் பணியாற்றியவர்.[3] சென்னை காந்தளகம் பதிப்பகத் தலைவர். ‘பதிப்புத் தொழில் உலகம்’ என்ற மாத இதழை ஐந்தாண்டுகள் தொடர்ச்சியாக நடத்தி வந்தார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுக் குழு மற்றும் நடுக் குழு உறுப்பினராக 1977 முதல் 1979 வரையும், பின்னர் 2014 ஆம் ஆண்டு முதலும் இருந்து வருகிறார்.

மறவன்புலவு க. சச்சிதானந்தன்
பிறப்புக. சச்சிதானந்தன்
திசம்பர் 5, 1941 (1941-12-05) (அகவை 83)
மறவன்புலவு, யாழ்ப்பாண மாவட்டம்
தேசியம்இலங்கைத் தமிழர்
கல்விநன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் 1973,

சென்னைப் பல்கலைக்கழகம் (முதுகலை 1966),
சென்னைப் பல்கலைக்கழகம் (இளங்கலை, 1963),

யாழ் இந்துக் கல்லூரி
பணிபதிப்பாளர், முன்னாள் ஐநா உலக வேளாண் ஆலோசகர்[1]
அறியப்படுவதுதிருமுறைகளை இணையத்தில் பரவச் செய்தவர்
பெற்றோர்மு. கணபதிப்பிள்ளை,
தங்கம்மா

வாழ்க்கைக் குறிப்பு

தொகு

யாழ்ப்பாண மாவட்டம் மறவன்புலவு என்ற ஊரில் மு. கணபதிப்பிள்ளை, தங்கம்மா ஆகியோருக்குப் பிறந்தவர் சச்சிதானந்தன். இவர் மறவன்புலவு சகலகலாவல்லி வித்தியாசாலை, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி ஆகியவற்றில் பள்ளிப் படிப்பை முடித்தார். 1963 ஆம் ஆண்டில் சென்னைப் பல்கலைக்கழகத்தில் விலங்கியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார். இந்திய அரசின் புலமைப் பரிசில் பெற்று சென்னைப் பல்கலைக்கழகத்தில் கடல்சார் உயிரியலில் முதுகலைப் பட்டம் (1966) பெற்றார். பட்டப்படிப்பை முடித்த பின்னர் கொழும்பில் இலங்கைக் கடற்றொழில் திணைக்களத்தில் அறிவியலாய்வாளராகப் பணியாற்றி கடல்-சார் அறிவியல் ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டார். 1969 இல் டோக்கியோ சென்று கடல்சார் உயிரிவேதியியலில் பயிற்சி பெற்றார். 1973 இல் சிங்கப்பூர் நன்யாங்கு பல்கலைக்கழகத்தில் கடல்சார் நுண்ணுயிரியல் பயிற்சி பெற்றார்.

1977 ஆம் ஆண்டில் இலங்கையில் இடம்பெற்ற இனக்கலவரத்தில் பாதிக்கப்பட்ட இவர் இலங்கைக் கடற்றொழில் திணைக்களத்தில் அறிவியலாய்வாளர் சேவையில் இருந்து தானாக விலகி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இரண்டாண்டுகள் விலங்கியல் விரிவுரையாளராகப் பணியாற்றினார். பின்னர் ஐக்கிய நாடுகள் ஆலோசகராக ஆசியா, ஆப்பிரிக்கா, பசிபிக் நாடுகளில் பணியாற்றினார். பல ஆய்வுக் கட்டுரைகளையும் இவர் எழுதியுள்ளார். 1992 ஆம் ஆண்டில் சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழியில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

காந்தளகம் என்ற பெயரில் 1980 ஆம் ஆண்டில் சென்னையில் அச்சு நிலையம் ஒன்றை ஆரம்பித்து நடத்தி வருகிறார்.

விமர்சனம்

தொகு

இலங்கை சிவசேனையில் தலைவராக விளங்கும் இவர் தெரிவித்த கருத்துக்கள் சில விமர்சனத்திற்கு உள்ளானது. குறிப்பாக, "இலங்கை இந்து பௌத்த பூமி, வேறு யாருக்கும் சொந்தமில்லை" போன்ற கருத்துக்களால் விமர்சனத்திற்கு உள்ளாகினார்.[4][5] இவர் சமயங்கள் மத்தியில் தகாத சிந்தனைகளை உருவாக்கி இலங்கையில் மதக் கலவரத்தினை ஏற்படுத்துவதற்கு முயற்சிப்பதற்கு துணைபோகிறார் என்ற குற்றச்சாட்டுக்கும் உள்ளாகியுள்ளார்.[6]

மின்நூல் துறையில்

தொகு

தமிழ்நூல்.காம் என்ற இணையதளத்தில் 35 ஆயிரத்திற்கும் மேலான நூல்களைப் பட்டியல் இட்டு, மின் வணிகத்தை நடத்தி வருகிறார். பன்னிரு திருமுறைகளை தேவாரம்.ஆர்க் இணையதளங்களின் நிறுவனர் என்ற இணையதளத்தில் பதிந்து வைத்துள்ளார். அத்துடன் திருமுறைகளை தருமபுரம் ஆதீனத்தாருடன் இணைந்து ஆங்கிலம், தெலுங்கு, சமக்கிருதம், இந்தி, சிங்களம், பர்மியம் உட்படப் பல மொழிகளில் மொழிபெயர்த்து இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்.

எழுதிய நூல்கள்

தொகு
  • எனது யாழ்ப்பாணமே (1980)
  • பறவைகளே (1980)
  • கப்பலோட்டுவோம் கால்வாயில் (2011)
  • சிங்கள கடற்படையின் அட்டூழியம் (2011)
  • சேது கால்வாய் (2011)
  • ஈழத்தமிழர் இறைமை (மொழிபெயர்ப்பு, மணிமேகலை பிரசுரம், 2000)[7]

விருதுகளும் பட்டங்களும்

தொகு
  • 2010 மே மாதம் தில்லி தமிழ்ச் சங்கத்தின் ஊடாக அப்துல் கலாம் அவர்களால் விருது வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.
  • 2012 ஆம் ஆண்டில் தமிழ்நாடு கோயம்புத்தூர் ஈச்சநாரி, கற்பகம் பல்கலைக்கழகம் இவருக்கு கௌரவ முனைவர் பட்டம் வழங்கிக் கௌரவித்தது.[8]

மேற்கோள்கள்

தொகு
  1. அரவிந்த் சுவாமிநாதன் (மே 2012). "மறவன்புலவு க. சச்சிதானந்தன்". தென்றல். பார்க்கப்பட்ட நாள் 16 சூலை 2016.
  2. "இலங்கையில் சிவசேனை இயக்கம் அவசியமா? - மறவன்புலவு சச்சிதானந்தன் பேட்டி".
  3. "Total rejection of SL Constitution should be the demand – Sachithananthan". தமிழ்நெட். 3 டிசம்பர் 2009. பார்க்கப்பட்ட நாள் 27 மார்ச் 2015. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  4. "சச்சிதானந்தம் என்ற தமிழினததின் துரோகி".
  5. "எங்கள் நாட்டில் மாடுகளை வெட்டுவதனை அனுமதிக்க முடியாது -- சிவசேனை மறவன்புலவு சச்சிதானந்தம் தெரிவிப்பு". Archived from the original on 2021-05-27. பார்க்கப்பட்ட நாள் 2018-05-28.
  6. "இலங்கை இந்து பௌத்த பூமி! வேறு யாருக்கும் சொந்தமில்லை!". Archived from the original on 2020-09-20. பார்க்கப்பட்ட நாள் 2018-05-28.
  7. "சச்சிதானந்தன், க மறவன்புலவு புத்தகங்கள்". விருபா தமிழ்ப் புத்தகத் திரட்டு. பார்க்கப்பட்ட நாள் 15 சூலை 2016.
  8. "மறவன்புலவு க.சச்சிதானந்தன் அவர்களின் பட்டமளிப்பு விழாப் படங்கள்". மறவன்புலோ இணையம். Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 15 சூலை 2016.

வெளி இணைப்புகள்

தொகு
தளத்தில்
மறவன்புலவு க. சச்சிதானந்தன் எழுதிய
நூல்கள் உள்ளன.