மலை இருவாட்சி

மலை இருவாட்சி, இருவாட்சிப் பறவைகளில் மிகப் பெரியவையாகும்
(மலைமொங்கான் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
மலை இருவாட்சி
ஆண்
பெண்
இரண்டும் மகாராட்டிராத்தின் ராய்காட்டில்
CITES Appendix I (CITES)[1]
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
B. bicornis
இருசொற் பெயரீடு
Buceros bicornis
இலின்னேயசு, 1758
வேறு பெயர்கள்

Buceros homrai[2]
Dichoceros bicornis
Buceros cavatus
Homraius bicornis
Dichoceros cavatus
Buceros cristatus

மலை இருவாச்சி ("Great Hornbill") என்பது இருவாச்சி குடும்பத்தைச் சேர்ந்த பறவை. இருவாச்சி குடும்பத்தில் இதுவே மிகப்பெரிய பறவையாகும். இப்பறவை நீண்ட காலம் வாழக்கூடியது. இது பிடிக்கப்பட்டு வளர்க்கும்போது இதன் வாழ்நாள் ஏறக்குறைய 50 ஆண்டுகள் என அறியப்படுகிறது. உருவ அமைப்பில் பெரிதாக உள்ள இப்பறவைகள், நீளமான வளைந்த அலகை கொண்டுள்ளன. அலகுக்கு மேல் கொம்பு போன்ற அமைப்பும் உள்ளது. இந்தப் பறவை ஒரு பேரலகின் மேல் மற்றொரு பேரலகைத் தலைகீழாகக் கவிழ்த்து ஒட்டினாற் போல் இருப்பதால்தான் தமிழில் இருவாய்க் குருவி என்ற விந்தைப் பெயரால் அழைக்கப்படுகிறது. மரங்களில் வசிக்கும் இந்தப் பறவைகள் பழங்கள், பூச்சிகள், சிறு பிராணிகள் போன்றவை உணவாகக் கொள்கின்றன. இது 2018 முதல் செம்பட்டியலில் அழிவாய்ப்பு இனமாக பட்டியலிடப்பட்டுள்ளது.

விளக்கம்

தொகு

மலை இருவாச்சி ஒரு பெரிய பறவையாகும். 95-130 செ.மீ (ஏறத்தாழ 4 அடி) நீளமும் இறக்கை விரிந்த நிலையில் 152 செ.மீ (ஏறத்தாழ 5 அடி) அகலமும், இரண்டு முதல் நான்கு கிலோ வரை எடையும் கொண்டது. ஆண் பறவைகளின் சராசரி ஏழு கிலோ (6.6 பவுண்டு) அதே சமயம் பெண் பறவைகளின் சாராசரி எடை 2.59 கிலோ (5.7 பவுண்டு) ஆகும்.[3] ஆசிய இருவாச்சிகளிலேயே எடை மிகுந்த பறவை இது என்றாலும் நீளமானது அல்ல.[3][4] பெண் பறவைகள் ஆண்பறவைகளை விட அளவில் சிறியன. ஆண் பறவைகளின் விழிப்படலம் இரத்திச் சிவப்பாக இருக்கும் ஆனால் பெண் பறவைகளின் விழிப்படலம் நீல-வெள்ளையாக இருக்கும்.

இவற்றின் பெரிய அலகானது மஞ்சளும் கறுப்புமாக இருக்கும். மேலே தொப்பி பெரிதாகக் குதிரை இலாட வடிவில் மஞ்சள் நிறத்தில் இருக்கும். இதன் கால்கள் பசுமை கலந்த ஈய நிறதில் இருக்கும். இதன் முகம், முதுகு, உடலின் கீழ்ப்பகுதி, இறக்கைகள் ஆகியன கறுப்பு நிறமாக இருக்கும். இறக்கைகளில் இரண்டு வெள்ளைப் பட்டைகள் காணப்படும். கழுத்து, கீழ் வயிறு, வாலின் மேல் கீழ்ப்போர்வை இறகுகள் வால் ஆகியன வெண்மையாக இருக்கும். வாலின் ஒரு பெரிய கறுப்புப் பட்டை காணப்படும். முதிர்ச்சியடையாத பறவைகளின் அலகின் மேல் தொப்பி இருக்காது.

காணப்படும் இடங்கள்

தொகு

இப்பறவைகள் இந்திய துணைக்கண்டம் மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் காணப்படுகிறது. இவை இந்தியாவில் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதி, அருணாசலப் பிரதேசத்தில் உள்ள கீழ் இமயமலைப் பகுதிகள், வடகிழக்குப் பகுதிகளில் காணப்படுகின்றன [5]. இப்பறவை கேரள மாநிலம் மற்றும் அருணாசலப் பிரதேச மாநிலத்தின் மாநிலப்பறவையும் ஆகும்.

நடத்தையும் சூழியலும்

தொகு

இவை பெரும்பாலும் இணையாகவோ அல்லது மூன்று முதல் ஐந்து வரையிலான சிறு கூட்டமாகவோ காணப்படும். ஆல், அத்தி மரங்கள் பழுக்கும்போது 20 முதல் 30 வரையிலான கூட்டமாக காணலாம். பக்கவாட்டில் கிளைக்கு கிளை தாவிப் பழங்களை உண்ணும். இது ஒரே நாளில் பல பழமரங்களுக்கு குறிப்பிட்ட நேரம் தவறாது இரை தேடச் செல்லும் பழக்கம் கொண்டது. இரண்டு மூன்று முறை இறக்கையை அடித்தபின் இறக்கை விரித்து மிதந்து பறக்கும். பறக்கும்போது இறக்கை அடிக்கும் ஓசை நீண்ட தொலைவுக்கு கேட்கும். அந்தி சாயும்போது ஒவ்வொன்றாகத் தங்கும் மரங்களை நாடி நாடி அடையும். பெரிய மரங்களின் உயர்ந்த கிளைகளில் மரத்துக்கு நான்கைந்து பறவைகளாக கழுத்தைத் தோள்களுக்குள் இழுத்து வைத்து அலகு வானோக்கி இருக்க அமர்ந்து தூங்கும். இவற்றின் உணவில் முதன்மையாக பழங்களே உள்ளன என்றாலும், ஒணால் சிறு பாம்புகள், சிறு பறவைகள் போன்றவற்றையும் உண்ணும்.

குரைப்பதும் உறுமுவதும் போன்ற பெருங் குரலில் கத்தும்.

இனப்பெருக்கம்

தொகு
 
கூட்டில் பெண்ணுக்கு உணவளிக்கும் ஆண் பறவை

ஆண், பெண் சேர்ந்து வாழும், பெரும்பாலும் அந்த இணை சாகும் வரை பிரிவது கிடையாது. இவை சனவரி முதல் ஏப்ரல் வரை இனப்பெருகம் செய்கின்றன. பெண் பறவை முட்டையிடும் பருவத்தில் ஆண் பறவையுடன் சேர்ந்து பெரிய பொந்தைக் கொண்ட உயர்ந்த மரத்தை தேர்வு செய்து அங்கே தங்கும்; அந்தப் பொந்தினுள் பெண் பறவை தங்கியிருக்கும்; ஆண் பறவை அதன் வாயிலை இலை, தழைகளை கொண்டு மூடிவிடும்; பெண் பறவைக்கு உணவு கொடுக்க மேற்புறம் ஒரு துளையையும், உள்ளிருக்கும் பறவை தன் கழிவுகளை வெளியேற்ற கீழ்ப்புறம் ஒரு துளையையும், ஆண் பறவை அமைக்கும். குஞ்சுகள் பிறந்து அவை பறக்கும் வரை பெண் பறவை இரை தேடச் செல்வதில்லை. ஆண் பறவை பெண் பறவைக்கும், குஞ்சுகளுக்கும் உணவைப் கொண்டு வந்து தரும்.

விருத்தி வரலாறு

தொகு

இருவாச்சி 150 கிராம் எடை கொண்ட மூன்று முதல் ஐந்து முட்டைகளை இட்டு அடைகாக்கும்; குஞ்சுகள் வளர்ந்து தாமாகப் பறக்க மூன்று மாத காலமாகும்; குஞ்சுகள் தாமாகவே பறக்கும் ஆற்றலைப் பெற்றவுடன் இந்தக் கூட்டை உடைத்துக் கொண்டு உள்ளிருந்த இருவாச்சி பறவைகளும் ஆண் இணையும் பறக்கத் துவங்கி விடுகின்றன.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 BirdLife International (2020). "Buceros bicornis". IUCN Red List of Threatened Species 2020: e.T22682453A184603863. doi:10.2305/IUCN.UK.2020-3.RLTS.T22682453A184603863.en. https://www.iucnredlist.org/species/22682453/184603863. பார்த்த நாள்: 18 January 2022. 
  2. Hodgson, B. H. (1833). "Description of the Buceros Homrai of the Himalaya". Asiatic Researches 18 (2): 169–188. 
  3. 3.0 3.1 Dunning, J. B. Jr., ed. (2008). CRC Handbook of Avian Body Masses (Second ed.). CRC Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4200-6444-5.
  4. Holmes, D. A. & Nash, S. (1990). The birds of Sumatra and Kalimantan. Oxford, USA: Oxford University Press.
  5. அழிவுக்கு இலக்காகி இருக்கும் இந்திய விலங்குகளும் அவற்றைக் காக்கும் முறைகளும், எஸ். எம். நாயர் பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-237-1239-1

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Buceros bicornis
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மலை_இருவாட்சி&oldid=4072009" இலிருந்து மீள்விக்கப்பட்டது