மல்லாரி என்பது தமிழிசையில் இசைக்கப்படும் ஓர் இசை உருப்படியாகும். மங்கல இசைக் குழுவிற்குரிய நாதசுர இசை உருப்படியாக மல்லாரி அமைந்துள்ளது. இசைப் பரிமாணத்திற்குரிய உருப்படியாக இது அமையும். இதனால் இலயக் கருவியான தவிலின் பங்கு இதில் மிகுதியாக இருக்கும். இறைவன் வீதி உலா எழுந்தருளும் பொழுது மல்லாரியை இசைப்பர்.[1] இது போல ஆலயச் செயற்பாட்டின் ஒவ்வொரு நிலையிலும் அச்செயலுக்கேற்ற மல்லாரி இசைக்கப்படுவதுண்டு.[2] மல்லாரி பெரும்பாலும் கம்பீரநாட்டை இராகத்தில் இசைக்கப்படும். மேலும் கான பஞ்ச இராகங்களான நாட்டை, கௌளை, ஆரபி, வாராளி, ஸ்ரீஇராகம் ஆகியவற்றிலும் அமையும். தோடியிலும் சில வேளைகளில் இசைக்கப்படுவதுண்டு[3]

பெயர்க்காரணம்

தொகு

மயில்+ ஆரி மயிலாரி என்பது மரூவி மல்லாரி என ஆனது. ஆரி என்பது பாடுதல், ஒலியெழுப்புதல் என்ற பொருள்படும்.மயில் நீட்டிக் கூவுதல்தான் அகவுதல் என்பது. இந்த மயில் அகவுதலும் ஆரியும் சேர்ந்து - மயில் ஆரி - மல்லாரி ஆனது.[4]

இசைக்குமிடங்கள்

தொகு
  • இறைவனின் நீராடலுக்கு திருமஞ்சன நீர் கொண்டு வரும் பொழுது திருமஞ்சன மல்லாரி இசைக்கப்படும்.
  • இறைவனின் தளிகை உணவு தயாரிக்கும் இடமான மடைப்பள்ளியிலிருந்து தளிகை கொண்டு வரும் பொழுது தளிகை மல்லாரி இசைக்கப்படும்.
  • ஆலயத் திருவிழாக் காலங்களில் இறைவனைத் தேரில் எழுந்தருளச் செய்தல் உண்டு. இது பெரும்பாலும் ஆலயப் பெருந்திருவிழாவான ஒன்பதாம் நாள் நடைபெறும். தொண்டர்கள் தேரின் வடம் பிடித்துத் தேரை இழுப்பர். இவர்களை உற்சாகப்படுத்தும் நிலையில் தேர் மல்லாரி இடம் பெறும்.
  • ஆலயங்களில் இறைவன் வீதியுலா எழுந்தருளும் போது சின்ன மல்லாரி இசைக்கப்படும்.
  • சிவாலயங்களில் இறைவன் காளை (இடப) வாகனத்தில் - பஞ்ச மூர்த்திகளும் - எழுந்தருளும் பொழுது பெரிய மல்லாரி இசைக்கப்படும்.

மல்லாரி இசை அமைதிகளைக் கொண்டு ஆலயத்தில் நடைபெறும் செயற்பாடுகளை அறியலாம்.[2] ஆலயப் பெருந்திருவிழாவின் இறுதி நாளன்று பெரும்பாலும் மல்லாரி இசைப்பதில்லை. மற்ற நாட்களில் இறைவன் வீதியுலா முடிந்ததும் அலங்காரம் களைந்து பள்ளியறைக்குச் செல்லும்பொழுது ஊஞ்சல் பாட்டு இசைப்பர். இது முடிந்ததும் கதவு தாளிடுவர். தாளிட்டதும் மல்லாரியைக் கொஞ்ச நேரம் இசைக்க வேண்டும். இம்மரபு முறைகள் முறையான கல்வி மற்றும் பயிற்சியின் மூலம் இசை மாணவர்களுக்கு ஆசிரியரால் அளிக்கப்படுகிறது.[2]

மேற்கோள்களும் குறிப்புகளும்

தொகு
  1. Ram (February 10, 2010). [amsrabode.wordpress.com/2010/02/10/lec-dem-mallari-and-its-special-features/ "Lec Dem – Mallari and its Special Features"]. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 11, 2012. {{cite web}}: Check |url= value (help)
  2. 2.0 2.1 2.2 முனைவர் சண்முக செல்வகணபதி. "இசைக்கலை". முனைவர் சண்முக செல்வகணபதி. தமிழ் இணையப் பல்கலைக்கழகம். பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 10, 2012.
  3. P.N. SETHURAMAN. "Sangeetanubhava- NADASWARAM - THE MANGALA VADYAM". பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 11, 2012.
  4. சோழ.நாகராஜன் (டிசம்பர் 2008). "வேண்டும் மதம் கடந்த இசை-தமிழிசை ஆய்வறிஞர் நா.மம்மது". கீற்று இணையதளம். பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 10, 2012. {{cite web}}: Check date values in: |date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=மல்லாரி&oldid=2834485" இலிருந்து மீள்விக்கப்பட்டது