மாமல்லபுரம் வராக மண்டபம்

மாமல்லபுரம் வராக மண்டபம் என்பது, சென்னைக்குத் தெற்கே கிழக்குக் கடற்கரையோரமாக உள்ள பழங்காலத் துறைமுக நகரமான மாமல்லபுரத்தில் அமைந்துள்ள பல குடைவரைகளுள் ஒன்று. பாறை ஒன்றின் மேற்குப் புறத்தில் குடையப்பட்டு உள்ள இக்குடைவரை சிறியது எனினும் நேர்த்தியான வேலைப்பாடுகளுடன் கூடியது.

யுனெசுக்கோ உலகப் பாரம்பரியக் களம்
வராக குகைக் கோயில்
வராக மண்டபம்
அடிவார குகைக் கோயில்
உலக பாரம்பரிய பட்டியலில் உள்ள பெயர்
வகைபண்பாடு
ஒப்பளவுi, ii, iii, iv
உசாத்துணை249
UNESCO regionAsia-Pacific
பொறிப்பு வரலாறு
பொறிப்பு1984 (8th தொடர்)
குகையில் உள்ள வராகர் சிற்பம்

அமைப்பு தொகு

இக்குடைவரையின் முகப்புப் பகுதி, தாங்குதளம், கைபிடிச் சுவர்களுடன் கூடிய படிகள், கபோதம் போன்ற உறுப்புக்களுடன் காணப்படுகின்றது. இக்குடைவரையின் மண்டபத்தில் ஒரு தூண் வரிசை மட்டுமே உள்ளது. முகப்பை அண்டி அமைந்த இவ்வரிசையில் இரண்டு முழுத்தூண்கள் உள்ளன. பக்கச் சுவர்களோடு ஒட்டியபடி இரண்டு அரைத்தூண்கள் அமைந்துள்ளன. தூண்களின் கீழ்ப்பகுதி இருக்கும் யாளியின் வடிவில் உள்ளது. முழுத்தூண்களில் யாளிகள் முன்புறம் நோக்கியவாறும், அரைத்தூண்களில் சுவருக்கு எதிர்ப்புறம் நோக்கியவாறும் அமைந்துள்ளன. தூண்களின் மேற்பகுதி எட்டுப்பட்டை கொண்டதாகவும், பல்வேறு தூண் உறுப்புக்களுடன் கூடியதாகவும் உள்ளது. மேலே போதிகைகள் உள்ளன.[1]

மண்டபத்தின் பின்புறச் சுவரில் ஒரேயொரு கருவறை உள்ளது. இது மண்டபத்துக்குள் துருத்திக்கொண்டு இருக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. கருவறைக்குச் செல்வதற்குப் படிகள் அமைக்கப்பட்டுள்ளன.

சிற்பங்கள் தொகு

கருவறையின் இரண்டு பக்கங்களிலும் வாயிற் காவலர் சிற்பங்கள் உள்ளன. மண்டபச் சுவர்களிலும் புடைப்புச் சிற்பங்கள் உள்ளன. பூமாதேவியைத் தாங்கி நிற்கும் வராகமூர்த்தி சிற்பம் வடக்குச் சுவரில் செதுக்கப்பட்டுள்ளது. தெற்குச் சுவரில் திருவிக்கிரமன், மூவுலகு அளந்த பெருமான் சிற்பத் தொகுதி உள்ளது. இவற்றைவிட, பின்புறச் சுவரில் திருமகளின் சிற்பமும், கொற்றவையின் சிற்பமும் உள்ளன.[2]

இந்தக் குடைவரையில் வராகமூர்த்தியின் சிற்பம் இருப்பதால் இது வராக மண்டபம் என அழைக்கப்படுகிறது.[3] எனினும், இக்கோயில் திருமாலின் இன்னொரு அவதாரமான நரசிம்மருக்காகவே அமைக்கப்பட்டது என்றக் கருத்தும் உள்ளது.[4]

மேற்கோள்கள் தொகு

  1. இராசவேல், சு., சேஷாத்திரி, அ. கி., தமிழ்நாட்டுக் குடைவரைக் கோயில்கள், பண்பாட்டு வெளியீட்டகம், சென்னை, 2000. பக். 74
  2. இராசவேல், சு., சேஷாத்திரி, அ. கி., 2000. பக். 75, 76
  3. காசிநாதன், நடன., மாமல்லபுரம், மணிவாசகர் பதிப்பகம், சென்னை, 2000. பக். 89
  4. இராசவேல், சு., சேஷாத்திரி, அ. கி., 2000. பக். 76