மில்த்தியாதேஸ் (திருத்தந்தை)

திருத்தந்தை

புனித மில்த்தியாதேஸ், (Pope Saint Miltiades) உரோமை ஆயராகவும் திருத்தந்தையாகவும் 311 சூலை 2ஆம் நாளிலிருந்து 314 சனவரி 10ஆம் நாள் வரை ஆட்சி செய்தார். அவர் "மெல்க்கியாதேஸ்" (Melchiades) என்னும் பெயராலும் அறியப்பட்டார்.[1] இவருக்கு முன் திருத்தந்தையாக இருந்தவர் யூசேபியஸ் என்பவர்.[2] திருத்தந்தை மில்த்தியாதேஸ் கத்தோலிக்க திருச்சபையின் 32ஆம் திருத்தந்தை ஆவார்.[3]

  • ஆப்பிரிக்கரான மில்த்தியாதேஸ் (அ) மெல்க்கியாதேஸ் (பண்டைக் கிரேக்கம்Μελχιάδης ὁ Ἀφρικανός; இலத்தீன்: Melchiades Africanus) என ஒலிக்கும் பெயர் கிரேக்கமாக இருப்பினும், மில்த்தியாதேஸ் வடக்கு ஆப்பிரிக்காவைச் சார்ந்தவர் என்று தெரிகிறது (காண்க: "திருத்தந்தையர் நூல்" - Liber Pontificalis).
புனித மில்த்தியாதேஸ்
(Saint Miltiades)
32ஆம் திருத்தந்தை
ஆட்சி துவக்கம்சூலை 2, 311
ஆட்சி முடிவுசனவரி 10, 314
முன்னிருந்தவர்யூசேபியஸ்
பின்வந்தவர்முதலாம் சில்வெஸ்தர்
பிற தகவல்கள்
இயற்பெயர்மில்த்தியாதேஸ்(அல்லது மெல்க்கியாதேஸ்)
பிறப்பு(உறுதியாகத் தெரியவில்லை)
வடக்கு ஆப்பிரிக்கா
இறப்புசனவரி 10, 314
உரோமை, மேற்கு உரோமைப் பேரரசு

சில வரலாற்று ஆசிரியர்கள் கூற்றுப்படி, மில்த்தியாதேஸ் உரோமையைச் சார்ந்தவர்.[4]

திருத்தந்தை பதவியிடம் வெறுமையாதல்

தொகு

மில்த்தியாதேஸ் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன் ஓராண்டுக்கு மேலாக அப்பதவியிடம் வெறுமையாய் இருந்தது. மில்த்தியாதேசுக்கு முன் பதவியிலிருந்த யூசேபியஸ் மாக்சேன்சியுசு என்னும் உரோமை மன்னனால் சிசிலித் தீவுக்கு நாடுகடத்தப்பட்டு ஆகத்து 17, 310இல் (அல்லது 309இல்) இறந்தார். அதன்பின் மில்த்தியாதேஸ் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சூலை 2, 311 வரை திருத்தந்தை பதவியிடம் வெறுமையாகவே இருந்தது.

பணிக்காலத்தின்போது நடந்த நிகழ்ச்சிகள்

தொகு

மில்த்தியாதேஸ் திருத்தந்தையாக இருந்த காலத்தில், 312 அக்டோபர் மாதத்தில் காண்ஸ்டண்டைன் பேரரசன் மாக்சேன்சியுசைப் போரில் முறியடித்து, உரோமையைத் தம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தார். காண்ஸ்டண்டைன் மன்னன் மில்த்தியாதேசுக்கு இலாத்தரன் அரண்மனையை நன்கொடையாகக் கொடுத்தார். அந்த அரண்மனை திருத்தந்தையின் உறைவிடமாகவும், ஆட்சிப் பீடமாகவும் காலப்போக்கில் மாறியது.

மேலும், மில்த்தியாதேசின் ஆட்சிக்காலத்தில், 313ஆம் ஆண்டு தொடக்கத்தில், காண்ஸ்டண்டைன் மன்னன் தம்மோடு இணையாக ஆட்சிசெய்த லிச்சீனியுஸ் மன்னனோடு சேர்ந்து மிலான் சாசனம்[5] என்று அழைக்கப்படுகின்ற ஓர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். அதன்படி மக்கள் கிறித்தவ சமயத்தைத் தழுவவும் கடைப்பிடிக்கவும் உரிமை பெற்றார்கள். உரோமையரின் மரபு சமயங்களுக்கும் சுதந்திரம் வழங்கப்பட்டது. முன்னர் திருச்சபையிடமிருந்து பறிக்கப்பட்ட கோவில்கள், மற்றும் சொத்துக்கள் திருப்பிக் கொடுக்கப்பட்டன.

டொனாட்டியக் கொள்கை கண்டிக்கப்படல்

தொகு

313ஆம் ஆண்டின் இறுதிக்கட்டத்தில் மில்த்தியாதேஸ் உரோமையில் இலாத்தரன் அரண்மனையில் நடந்த சங்கத்தில் கலந்துகொண்டார். அச்சங்கம் பெரிய டொனாட்டஸ் (Donatus Magnus) என்பவர் போதித்த கொள்கை தவறு என்று கண்டனம் செய்தது. டொனாட்டசின் கொள்கை "டொனாட்டியம்" (Donatism) என்று அழைக்கப்பட்டது.[6] கிறித்தவர்களுக்கு எதிராக உரோமை மன்னர்கள் கிறித்தவர்களைத் துன்புறுத்திய காலத்தில் சில கிறித்தவர்கள் உயிருக்கு அஞ்சி கிறித்தவ சமயத்தைக் கைவிட்டார்கள். அவர்கள் மீண்டும் சபையில் சேர விரும்பியபோது, அவர்களுக்கு இன்னொரு முறை திருமுழுக்கு கொடுக்கப்பட வேண்டும் என்று டொனாட்டியக் கொள்கை கூறியது.

நோன்பு பற்றிய சீர்திருத்தம்

தொகு

உரோமை மரபு சமயத்தவர்கள் வியாழன், ஞாயிறு ஆகிய நாள்களில் நோன்பு இருந்ததால் அந்நாள்களில் கிறித்தவர்கள் நோன்பிருத்தல் ஆகாது என்றொரு சீர்திருத்தத்தை மில்த்தியாதேஸ் கொணர்ந்ததாக "திருத்தந்தையர் நூல்" (Liber Pontificalis) கூறுகிறது. அச்சீர்திருத்தம் பிற்காலத்தது என்று முதலில் கருதப்பட்டது. ஆனால் அண்மைய ஆய்வுப்படி, அப்பழக்கம் திருத்தந்தை மில்த்தியாதேஸ் காலத்துக்கு முற்பட்டதாக இருக்கலாம் என்று தெரிகிறது.

இறப்பும் திருவிழாவும்

தொகு

மில்த்தியாதேஸ் பிரான்சு நாட்டு ஆர்ல் (Arles) நகரில் 314இல் நடைபெறுவதாக இருந்த சங்கத்தில் கலந்துகொள்வதாக இருந்தது. ஆனால் அதற்கு முன்னர் 314 சனவரி 10ஆம் நாள் அவர் உயிர்துறந்தார். அவர் இரத்தம் சிந்தி இறக்காவிட்டாலும், திருச்சபைக்காகப் பல துன்பங்கள் அனுபவித்த காரணத்தால் "மறைச்சாட்சி" என்று அழைக்கப்பட்டார். மில்த்தியாதேசின் உடல் உரோமையில் கலிஸ்டஸ் கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

அவரது திருவிழா டிசம்பர் 10ஆம் நாள் கொண்டாடப்பட்டு வந்தது. 1969ஆம் ஆண்டு வெளியான சீர்திருத்தப்பட்ட புனிதர் நாள்காட்டியில் அவர்தம் திருவிழா அவர் இறந்த நாளாகிய சனவரி 10ஆம் நாள் கடைப்பிடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.[7]

குறிப்புகள்

தொகு
  1. திருத்தந்தை மில்த்தியாதேஸ்
  2. Catholic Encyclopedia, Volume V. New York 1909, Robert Appleton Company.
  3. Annuario Pontificio 2012 (Libreria Editrice Vaticana பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-88-209-8722-0), p. 8*
  4. Richard P. McBrien, Lives of the Popes, (HarperCollins, 2000), 56.
  5. மிலான் சாசனம்
  6. டொனாட்டியக் கொள்கை
  7. Calendarium Romanum (Libreria Editrice Vaticana 1969), p. 148

வெளி இணைப்புகள்

தொகு
கத்தோலிக்க திருச்சபை பட்டங்கள்
முன்னர் உரோமை ஆயர்
திருத்தந்தை

311–314
பின்னர்