முதலாம் கோப்பெருஞ்சிங்கன்

(முதலாம் கோப்பெருஞ்சிம்மன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

முதலாம் கோப்பெருஞ்சிங்கன் என்பவன் ஒரு சிற்றரசன் ஆவான். இவனுக்கு வாணிலை கண்ட பெருமாள், மணவாளப் பெருமாள் போன்ற சிறப்புப் பெயர்கள் இருந்தன. [1] மூன்றாம் இராஜராஜனின் 14-ம் ஆட்சி ஆண்டில் (கி.பி 1230) விருத்தாசலத்தில் பொறிக்கப்பட்ட கல்வெட்டிலிருந்து காடவச் சிற்றரசர்கள் இன்னும் சோழரின் மேலாதிக்கத்தை ஏற்று வந்தனர் என்றும் இவர்களுள் கோப்பெருஞ்சிங்கன், தக்க வயது அடைந்ததோடு, முக்கியமானவனாக விளங்கினான் என்றும் தெரிவிக்கிறது. கோப்பெருஞ்சிங்கன் சோழ சக்கரவர்த்தியை சேந்தமங்கலத்தில் சிறைப்படுத்தியதோடு விஷ்ணு கோயில்கள் உட்பட எல்லாக் கோயில்களையும் கொள்ளையடிக்கும் படியும் ஏற்பாடு செய்தான். ஹொய்சாளர்கள் வைணவத்தில் அழுத்தமான தீவிரமான பற்றுடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் மன்னன் நரசிம்மன் தன் தலைநகரான துவார சமுத்திரத்திலிருந்து புறப்பட்டதாயும் சோழர்களை மீண்டும் நிலைநாட்டியவன் என்று பெயர் தனக்கு ஏற்படும் வரை போர் முழக்கம் செய்ததாயும் ஒரு கல்வெட்டு குறிப்பிடுகிறது. இவனுடன் ஏற்பட்ட போரினால் கோப்பெருஞ்சிங்கன் சோழ சக்கரவர்த்தியை விடுதலை செய்து அவனுடைய சிம்மாதனத்தில் அமரச் செய்வதாக நரசிம்மனின் தளபதிகளுக்கு அறிவித்தான்.

தஞ்சை மாவட்டம் நீடுரைச் சுற்றிய பகுதி கோப்பெருஞ்சிங்கன் என்ற அழகிய சீயனால் ஆளப்பெற்றதாய் குறிப்பிடுகிறது. கோப்பெருஞ்சிங்கனின் வீரம் வெவ்வேறுவகையான ஜந்து செய்யுட்களில் பாராட்டப்படுகிறது. கோப்பெருஞ்சிங்கனுக்கு அவனி நாராயண நிருபதுங்கன், தொண்டைக்கும் மல்லைக்கும் மன்னன் என்றெல்லாம் பட்டங்கள் இருந்திருக்கிறது. கோப்பெருஞ்சிங்கனும் ஹொய்சாளர்களும் தொடர்ந்து போரிட்டுக்கொண்டிருந்தனர் என்பது கி.பி. 1236ல் துன்முகி ஆண்டில் காடவனுக்கு விரோதமான ஒரு படையெடுப்பில் வீர சோமேசுவரன் மங்கலத்தில் தங்கினான் என்று அறியப்படும் ஒரு குறிப்பால் தெளிவாகத் தெரிகிறது.

பாட்டுடைத் தலைவன்தொகு

கோப்பெருஞ்சிங்கன் 13ஆம் நூற்றாண்டில் பாடல் பெற்ற தலைவர்களில் ஒருவன்.
1243ல் சேந்தமங்கலத்தைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட சிற்றரசன்
இவன். பல்லவர் படைத்தலைவர் வழியில் வந்தவன்.
சோழர் பரம்பரையில் பெண் கொண்டு வாழ்ந்தவன்.
எனினும் மூன்றாம் இராசராசனைச் சிறைபிடித்துச் சோழப்பேரரசு வீழ்ச்சிக்குக் காரணமாக இருந்தவன்.
தஞ்சை, தென்னார்க்காடு மாவட்டங்களில் இவனது கல்வெட்டுகள் மிகுதி.

புலவன்தொகு

இவன் புலவனாகவும் விளங்கினான்.
ஆந்திர மாநிலம் கோதாவரி மாவட்டம் இடர்க்கரம்பை [2] ஊரிலுள்ள கல்வெட்டுகளும் இவனைக் குறிப்பிடுகின்றன. வாயலூர்ச் சாசனப் பாடல்கள் இவன் சோழனைச் சிறையிலிட்ட செய்திகளைக் கூறுகின்றன. இடர்க்கலம்பை, வயலூர் பாடல்கள் இவனால் பாடப்பட்டவை எனக் கருதப்படுகின்றன. இப்பாடல்களின் இறுதியில் 'சொக்கசீயன் ஆணை' [3] எனப் பொறிக்கப்பட்டுள்ளது.

ஒரு பாடல்
திறையிட்(டு) இருமின்கள் தெவ்வேந்திர் செம்பொன்
துறையிட்ட பூம்புகார் வேந்தன் – சிறைகிடந்த
கோட்டம் தனைநினைமின் கோப்பெருஞ்சிங் கன்கமல
நாட்டம் கடைசிவந்த நாள்

கருவிநூல்தொகு

அடிக்குறிப்புதொகு

  1. வேங்கடராமையா (பிப்ரவரி, 1977). "சோழர் கால அரசியல் தலைவர்கள்". நூல் 149-154. பார்த்த நாள் 4 ஏப்ரல் 2020.
  2. திராக்ஷாராமம்
  3. 'சீயன்' என்பது 'சிம்மவர்மன்' என்னும் பெயர் வழியில் வந்த பெயர்.