முதலாம் வாக்பதிராஜா

சபடலக்ச நாட்டின் ஆட்சியாளர்

வாப்பயராஜா என்றும் அழைக்கப்படும் முதலாம் வாக்பதிராஜா (Vakpatiraja I) (ஆட்சி சுமார் 917-944 பொ.ச.), சாகம்பரியின் சௌகான் வம்சத்தைச் சேர்ந்த ஒரு இந்திய மன்னராவார். வடமேற்கு இந்தியாவில் இன்றைய இராஜஸ்தானின் சில பகுதிகளை உள்ளடக்கிய சபடலக்ச நாட்டை ஆட்சி செய்தார். இவர் கூர்ஜர-பிரதிகார மேலாதிக்கத்தை தூக்கி எறிய முயற்சி செய்ததாகத் தெரிகிறது. மேலும் மகாராஜா என்ற பட்டத்தை ஏற்றுக்கொண்ட முதல் சகமான மன்னர் ஆவார்.

முதலாம் வாக்பதிராஜா
மகாராஜா
சபடலக்ச நாட்டின் ஆட்சியாளார்
ஆட்சிக்காலம்சுமார் 917–944 பொ.ச
முன்னையவர்சந்தனராசா
பின்னையவர்சிம்மராஜா
குழந்தைகளின்
பெயர்கள்
சிம்மராஜா, இலட்சுமணன் மற்றும் வத்சராஜன்
அரசமரபுசாகம்பரியின் சௌகான்கள்
தந்தைஇரண்டாம் கோவிந்தராசன்
தாய்இருத்ராணி

ஆரம்ப கால வாழ்க்கை

தொகு

வாக்பதி சகமான அரசர் சந்தனராசா (இரண்டாம் குவாகா) மற்றும் ராணி இருத்ராணி ஆகியோரின் மகனும் வாரிசுமுவார். [1] இவரது மாற்றுப்பெயர்களில் வாப்பயராஜா மற்றும் மாணிக்க ராய் ஆகியன அடங்கும். [2]

ஆட்சி

தொகு

கூர்ஜர-பிரதிகாரர்களின் நிலப்பிரபுக்களாக இருந்த வாக்பதியின் முன்னோர்கள் தெற்கிலிருந்து இராஷ்டிரகூட படையெடுப்புகளால் பலவீனமடைந்தனர். வாக்பதி 188 இராணுவ வெற்றிகளை அடைந்ததாக பிருத்விராஜ விஜயம் கூறுகிறது. இது மிகைப்படுத்தப்பட்டதாக இருக்கலாம், ஆனால் பிரதிகார-இராஷ்டிரகூட மோதலின் விளைவாக ஏற்பட்ட குழப்பமான சூழ்நிலையில் வாக்பதி ஏராளமான போர்களில் பங்கேற்றது சாத்தியம். [3]

இராஷ்டிரகூடர் படையெடுப்பு, வாக்பதி போன்ற அரசர்களின் மீதான பிரதிகாரர்களின் பிடியை பலவீனப்படுத்தியிருக்கலாம். [4] ஹர்ஷநாத் கோயில் கல்வெட்டின் படி, இவர் மகாராஜா என்ற பட்டத்தை ஏற்றுக்கொண்ட[1] முதல் சகமான அரசர் ஆவார். இது இவர் பிரதிகாரர்களிடமிருந்து சுதந்திரம் பெற முயன்றார் என்பதை குறிக்கிறது. [5]

இராஷ்டிரகூடர்கள் வெளியேறிய பிறகு, பிரதிகாரர்கள் தங்கள் அதிகாரத்தை மீண்டும் உறுதிப்படுத்த முயன்றனர். ஒரு தந்திரபாலன் (மாகாண ஆளுநர்) சகமான பிரதேசத்தில் உள்ள அனந்த பகுதியைத் தாக்கியதாக ஹர்ஷநாத் கோயில் கல்வெட்டு கூறுகிறது. தந்திரபாலன் தன் அதிபதியிடமிருந்து பெற்ற அதிகாரத்தின் காரணமாக மிகவும் கர்வம் கொண்டிருந்தான். ஆனால் அவனது யானைப்படை வாக்பதியின் குதிரைப்படையால் தோற்கடிக்கப்பட்டது. அவன் வாக்பதியை அடக்குவதற்காக பிரதிகார பேரரசர் முதலாம் மகிபாலனால் அனுப்பப்பட்ட தளபதியாக இருந்திருக்கலாம். [4] [1] வரலாற்றாளார் தசரத சர்மாவின் கூற்றுப்படி, அவரது பெயர் சமபாலன் என்பதாகும். [4] வரலாற்றாளார் ஆர்.பி. சிங் அவரை மகிபாலனின் தோமரா நிலப்பிரபுவான மாதவனுடன் அடையாளப்படுத்துகிறார். [6]

மரபு

தொகு

வாக்பதிக்கு சிம்மராஜா, இலட்சுமணன் மற்றும் வத்சராஜா உட்பட குறைந்தது மூன்று மகன்கள் இருந்தனர். இவருக்குப் பிறகு சாகம்பரி சிம்மாசனத்தில் சிம்மராஜா பதவியேற்றார். அதே நேரத்தில் இலட்சுமணன் நாதுல்லா வம்சத்தின் மற்றொரு கிளையை நிறுவினார். வத்சராஜா ஹர்ஷநாதர் கோவிலுக்கு கர்தமகாதா என்ற கிராமத்தை மானியமாக அளித்ததாக அறியப்படுகிறார். [7] பிஜோலியா கல்வெட்டு வாக்பதிக்கும் சிம்மராஜாவுக்கும் இடையில் ஒரு விந்தியன்ருபதியை (அல்லது விந்தியராஜா) வைக்கிறது. வரலாற்றாசிரியர் தசரத சர்மாவின் கூற்றுப்படி, விந்தியன்ருபதி அநேகமாக சிம்மராஜனின் மூத்த சகோதரராக இருக்கலாம். அவர் மிகக் குறுகிய கால ஆட்சியைக் கொண்டிருந்தார். [3] இருப்பினும், இது வாக்பதியின் பட்டம் என்று ஆர்.பி. சிங் கருதினார், விந்தியாவதி பகுதியை (நவீன பிஜோலியாவைச் சுற்றி) கைப்பற்றியதன் மூலம் அவர் அதை பெற்றிருக்கலாம். [5]

வாக்பதி ஒரு சைவர் என்று தெரிகிறது. பிருத்விராஜ விஜயம் புஷ்கரத்தில் வோம்கேசர் ( சிவன் ) கோவிலை கட்டியதாக கூறுகிறது.[7] [5]

சான்று

தொகு

உசாத்துணை

தொகு
  • Dasharatha Sharma (1959). Early Chauhān Dynasties. S. Chand / Motilal Banarsidass. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780842606189.
  • R. B. Singh (1964). History of the Chāhamānas. N. Kishore. இணையக் கணினி நூலக மைய எண் 11038728.
"https://ta.wikipedia.org/w/index.php?title=முதலாம்_வாக்பதிராஜா&oldid=3435908" இலிருந்து மீள்விக்கப்பட்டது