சிம்மராஜா
சிம்மராஜா ( Simharaja; ஆட்சி 944-971 பொ.ச.) சாகம்பரியின் சௌகான் வம்சத்தைச் சேர்ந்த ஒரு இந்திய மன்னராவார். வடமேற்கு இந்தியாவில் இன்றைய இராஜஸ்தானின் சில பகுதிகளை உள்ளடக்கிய சபடலக்ச நாட்டை இவர் ஆட்சி செய்தார். மகாராஜாதிராஜா என்ற பட்டத்தை ஏற்றுக்கொண்ட முதல் சகமான ஆட்சியாளர் இவரே.
சிம்மராஜா | |
---|---|
மகாராஜாதிராஜா | |
சபடலக்ச நாட்டின் மன்னன் | |
ஆட்சிக்காலம் | சுமார் 944-971 பொ.ச. |
முன்னையவர் | முதலாம் பாக்பதிராஜா |
பின்னையவர் | இரண்டாம் விக்ரகராஜா |
அரசமரபு | சாகம்பரியின் சௌகான்கள் |
ஆரம்ப கால வாழ்க்கை
தொகுபெரும்பாலான ஆதாரங்கள் சிம்மராஜாவை அவரது தந்தை முதலாம் வாக்பதிராஜாவின் வாரிசாக குறிப்பிடுகின்றன. இருப்பினும், பிஜோலியா கல்வெட்டு வாக்பதிக்கும் சிம்மராஜாவுக்கும் இடையில் ஒரு விந்தியன்ருபதியை (அல்லது விந்தியராஜா) வைக்கிறது. விந்தியன்ருபதி என்பது வாக்பதியின் பெயரின் ஒரு பகுதி என்று வரலாற்றாசிரியர் எச்.சி.ரே கருதினார். ஆனால் தசரத சர்மாவின் கூற்றுப்படி, விந்தியன்ருபதி அநேகமாக சிம்மராஜாவின் மூத்த சகோதரராக இருக்கலாம். இவர் மிகக் குறுகிய கால ஆட்சியைக் கொண்டிருந்தார் எனத் தெரிகிறது. [1]
இராணுவ வாழ்க்கை
தொகுமகாராஜாதிராஜா ("மன்னருக்கெல்லாம் பெரிய மன்னன்") என்ற பட்டத்தை ஏற்றுக்கொண்ட குடும்பத்தின் முதல் ஆட்சியாளர் சிம்மராஜா ஆவார். இவர் தனது மூதாதையர்களின் அதிபதிகளான கூர்ஜர-பிரதிகாரர்களிடமிருந்து தனது சுதந்திரத்தை அறிவித்தார் எனத் தெரிகிறது.[2]
ஹர்ஷநாத் கோயில் கல்வெட்டின் படி, சிம்மராஜா தோமாரா தலைவன் சாலவனை (அல்லது இலவணன்) கொன்றார். அவனுடைய வீரர்கள் போர்க்களத்தில் இருந்து தப்பி ஓடிவிட்டனர் அல்லது சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த இரண்டு ஆட்சியாளர்களின் பொது அதிபதி சிம்மராஜரிடம் விடுதலை செய்யக் கேட்டுக் கொண்டதன் பேரில் கைதிகள் விடுவிக்கப்பட்டனர். கல்வெட்டில் 'இரகுகுலே பூசக்ரவர்த்தி' (இரகு குடும்பத்தைச் சேர்ந்த பேரரசர்) என்று அழைக்கப்படும் அதிபதி, பலவீனமான கூர்ஜர-பிரதிகாரப் பேரரசராக இருக்கலாம். இந்த பேரரசரின் அடையாளம் தெளிவாக இல்லை என்றாலும்; அவர் தேவபாலன் அல்லது விஜயபாலன் அல்லது இராஜ்யபாலன் போன்ற அவரது வாரிசுகளில் ஒருவராக இருக்கலாம். [3] [4] சலவனன் ஒருவேளை தில்லியின் தோமரா வம்சத்தைச் சேர்ந்தவராக இருக்கலாம்; வரலாற்றாசிரியர் ஆர்.பி. சிங், குமாவோன்-கார்வால் கையெழுத்துப் பிரதியில் சமகால தோமரா மன்னராகக் குறிப்பிடப்பட்ட தேஜபாலுடன் இவரை அடையாளம் காட்டுகிறார். [4] அவர் சிம்மராஜாவின் தாத்தா சந்தனாவால் கொல்லப்பட்ட உருத்ராவின் அதே குடும்பத்தைச் சேர்ந்தவராக இருக்கலாம். [3]
சிம்மராஜா ஒரு முஸ்லிம் தளபதியை தோற்கடித்ததாகவும் கூறப்படுகிறது. 'பிரபந்த கோஷா' தோற்கடிக்கப்பட்ட தளபதிக்கு ஹெஜி-உத்-தின் என்று பெயரிடுகிறது, மேலும் இந்த போர் ஜெதானில் (நவீன ஜெதனாவாக இருக்கலாம்) நடந்ததாகக் கூறுகிறது. 'ஹம்மிர மகாகாவியம்' அவரை ஹெடிம் என்று அழைக்கிறது. மேலும் சிம்மராஜா அவரைக் கொன்ற பிறகு அவரது நான்கு யானைகளைப் பிடித்ததாகக் கூறுகிறது. தோற்கடிக்கப்பட்ட படைத்தலைவரின் அடையாளம் நிச்சயமற்றது. ஆனால் அவர் முல்தான் அமீரின் துணை அதிகாரியாக இருந்திருக்கலாம். [2]
சிம்மராஜா குசராத்து, இலதா, கருநாடகா, சோழர், அங்கம் போன்ற மன்னர்களை தோற்கடித்ததாக 'ஹம்மிர மகாகாவியம்' மேலும் கூறுகிறது. சிம்மராஜா தனது அண்டை நாடுகளுக்கு எதிராக சில இராணுவ வெற்றிகளைப் பெற்றிருந்தாலும், இது வெளிப்படையாக ஒரு மிகைப்படுத்தலாகும். [5]
சொந்த வாழ்க்கை
தொகு'பிருத்விராஜ விஜயம்' தனது தந்தையைப் போலவே, சிம்மராஜாவும் ஒரு பக்தியுள்ள சைவர் என்றும், புஷ்கரில் சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு பெரிய கோயிலை நியமித்தார் என்றும் கூறுகிறது. இவர் ஹர்ஷதேவர் கோயிலை விரிவுபடுத்தினார். மேலும் அதன் பராமரிப்புக்காக நான்கு கிராமங்களை வழங்கினார். [6] கின்சாரியா கல்வெட்டு இவரை 'நய-சூத்ர-யுக்தா' என்று விவரிக்கிறது. இது இவர் தர்க்கவியல் பற்றி அறிந்தவராக இருந்ததைக் குறிக்கிறது (நியாய சூத்திரங்களைப் பார்க்கவும்). [7]
இறுதி நாட்கள்
தொகுசிம்மராஜாவுக்குப் பிறகு இவரது மகன்கள் இரண்டாம் விக்ரகராஜா, இரண்டாம் துர்லபராஜா ஆகியோர் அந்த வரிசையில் வந்தனர். இவருக்கு சந்திரராஜா மற்றும் கோவிந்தராஜா என்ற இரண்டு மகன்கள் இருந்தனர் (இதே பெயர்களைக் கொண்ட முந்தைய சகாமன மன்னர்களுடன் குழப்பமடைய வேண்டாம்). [8] ஹர்ஷநாத் கோயில் கல்வெட்டு, விக்ரகராஜா துன்பத்திலிருந்த தனது குடும்பத்தின் அதிர்ஷ்டத்தை மீட்டெடுத்ததாகக் கூறுகிறது. சிம்மராஜா தனது வாழ்நாளின் இறுதியில் ஒரு சோகமான தோல்வியை சந்தித்தார் என்பதையும் இது குறிக்கிறது. இவரது எதிரிகள் பிரதிகாரர்களையும் உள்ளடக்கியிருக்கலாம். [9]
சான்றுகள்
தொகு- ↑ Dasharatha Sharma 1959, ப. 28-29.
- ↑ 2.0 2.1 R. B. Singh 1964, ப. 103.
- ↑ 3.0 3.1 Dasharatha Sharma 1959.
- ↑ 4.0 4.1 R. B. Singh 1964.
- ↑ R. B. Singh 1964, ப. 102.
- ↑ R. B. Singh 1964, ப. 104.
- ↑ R. B. Singh 1964, ப. 105.
- ↑ Dasharatha Sharma 1959, ப. 33.
- ↑ Dasharatha Sharma 1959, ப. 29.
உசாத்துணை
தொகு- Dasharatha Sharma (1959). Early Chauhān Dynasties. S. Chand / Motilal Banarsidass. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780842606189.
- R. B. Singh (1964). History of the Chāhamānas. N. Kishore. இணையக் கணினி நூலக மைய எண் 11038728.