இரண்டாம் விக்ரகராஜா

சபடலக்ச நாட்டின் மன்னன்

இரண்டாம் விக்ரகராஜா ( Vigraharaja II) (ஆட்சி 971-998 பொ.ச.) சாகம்பரியின் சௌகான் வம்சத்தைச் சேர்ந்த ஒரு மன்னராவார். வடமேற்கு இந்தியாவில் இன்றைய ராஜஸ்தானின் சில பகுதிகளை உள்ளடக்கிய சபடலக்ச நாட்டை இவர் ஆட்சி செய்தார்.

இரண்டாம் விக்ரகராஜா
சபடலக்ச நாட்டின் மன்னன்
ஆட்சிக்காலம்சுமார் 971-998 பொ.ச.
முன்னையவர்சிம்மராஜா
பின்னையவர்இரண்டாம் துர்லபராஜா
அரசமரபுசாகம்பரியின் சௌகான்கள்

ஆரம்ப கால வாழ்க்கை தொகு

 
விக்ரகராஜாவின் ஹர்ஷநாத் கோவில் கல்வெட்டு, விக்ரம் ஆண்டு 1030 (973 பொ.ச.)

விக்ரகராஜா சாகமன ஆட்சியாளரான சிம்மராஜாவுக்கு பிறந்தார். இவருக்கு இரண்டாம் துர்லபராஜா (இவருக்குப் பின் பதவிக்கு வந்தார்), சந்திரராஜா, கோவிந்தராஜா என மூன்று சகோதரர்கள் இருந்தனர்.[1] சாகமனர்கள் முதலில் கூர்ஜர-பிரதிகாரகளுக்கு நிலப்பிரபுக்களாக இருந்தனர். ஆனால் சிம்மராஜா அவர்களின் வீழ்ச்சியைப் பயன்படுத்தி மகாராஜாதிராஜா என்ற பட்டத்தை ஏற்றுக்கொண்டார். இரண்டாம் விக்ரகராஜா சாகமன வம்சத்தின் முதல் உண்மையான சுதந்திர அரசராக இருக்கலாம். [2]

விக்ரகராஜாவால் வெளியிடப்பட்ட பொ.ச.973 தேதியிட்ட ஹர்ஷநாத் கல்வெட்டு, துன்பத்தில் இருந்த தனது குடும்பத்தின் அதிர்ஷ்டத்தை மீட்டெடுத்தார் என்று கூறுகிறது. இதன் மூலம் இவர் பல இராணுவ வெற்றிகளை அடைந்தார் எனத் தெரிகிறாது. [3]

இராணுவ வாழ்க்கை தொகு

'பிருத்விராஜ விஜயம்' என்ற சமஸ்கிருத காவியத்தில் விக்ரகராஜா ஒரு பெரிய குதிரைப்படையை வைத்திருந்ததாகக் கூறுகிறது. [4]

குசராத்தின் சோலங்கியர்கள் தொகு

விக்ரகராஜாவின் வாரிசுகளின் புகழ்ச்சிக் கூற்றுப்படி, இவர் குசராத்தின் சோலங்கி மன்னரான மூலராஜாவை தோற்கடித்தார். இந்த சாதனை ஹர்ஷநாத் கல்வெட்டில் குறிப்பிடப்படாததால், விக்ரகராஜா பொ.ச. 973-க்குப் பிறகு மூலராஜாவை தோற்கடித்திருக்க வேண்டும். [5] சகமான சரித்திரமான் 'பிருத்விராஜ விஜயம்' என்பதில்,கூர்ஜரர்கள் என்று விவரிக்கும் குசராத்தின் சோலங்கியர்களை விக்ரகராஜாவின் படையெடுப்பின் போது மூலராஜா கந்த-துர்கத்திற்கு ( நவீன கந்த்கோட் ) தப்பிச் சென்றதாகக் கூறுகிறது.[2] 15 ஆம் நூற்றாண்டின் 'ஹம்மிர மகாகாவ்யம்' இந்த போரில் மூலராஜா கொல்லப்பட்டதாகவும், விக்ரகராஜா மூலராஜாவின் பிரதேசத்தை சூறையாடியதாகவும் கூறுகிறது. [5] மற்றொரு சகமான நாளிதழான 'சுர்ஜனா-சரிதையும் கூர்ஜரர்கள் மீது சகாமனர்களின் வெற்றியைக் குறிப்பிடுகிறது. [2]

இருப்பினும், குசராத்தைச் சேர்ந்த 14-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கவிஞர் மெருதுங்கா இந்த நிகழ்வுகளைப் பற்றி வேறுவிதமாகக் கூறுகிறார். அவரது 'பிரபந்த-சிந்தாமணியின்' படி, மூலராஜாவின் இராச்சியம் சபடலக்சம் மற்றும் திலிங்கம் ஆகிய அண்டை நாடுகளால் ஒரே நேரத்தில் தாக்கப்பட்டது. சபடலக்சம் சகமான பிரதேசமாக இருந்தது, அதே சமயம் திலிங்கம் இங்கு மேலைச் சாளுக்கிய ஆட்சியாளர் இரண்டாம் தைலப்பனின் அரசைக் குறிக்கிறது. இந்தப் படையெடுப்பு நவராத்திரி பண்டிகையின் போது நடந்தது. மூலராஜா கந்த-துர்கத்திற்குத் தப்பியோடினார்.[5]

இந்த முரண்பாடான கணக்குகளில் வரலாற்று உண்மையை கண்டறிவது கடினம். வரலாற்றாசிரியர் ஆர்.பி. சிங்கின் கூற்றுப்படி, மூலராஜா தனது பிரதேசத்தின் ஒரு பகுதியை சகமானர்களுக்கு விட்டுக்கொடுத்தார். [6] தசரத சர்மாவும் மோதலில் விக்ரகராஜாவின் கை ஓங்கி இருந்ததாகக் கருதினார். ஏனெனில் மூலராஜா கந்த-துர்கத்தில் தஞ்சம் அடைந்திருக்க வேண்டும் என்பதை மெருதுங்கா ஒப்புக்கொள்கிறார். விக்ரகராஜா மூலராஜாவைக் கொன்றார் என்ற 'ஹம்மிரா-மகாகாவியத்தின்' கூற்று தவறானது என்று தோன்றுகிறது. [5] [7]

லதாவின் சாளுக்கியர்கள் தொகு

'பிருத்விராஜ விஜயத்தின்' கூற்றுப்படி, விக்ரகராஜா நருமதை ஆற்றைச் சுற்றியுள்ள பகுதிக்கு அணிவகுத்துச் சென்று, சந்திர வம்சத்தின் ஒரு மன்னனைக் கைப்பற்றினார் எனத் தெரிகிறது. இந்த வெற்றிக்குப் பிறகு, இவர் நர்மதைக் கரையில் உள்ள பிரிகுகச்சாவில் (நவீன பரூச் ) ஆஷாபுரி தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு கோயிலைக் கட்டினார். [6]

அந்த நேரத்தில், பிரிகுகச்சாவை இலதா சாளுக்கியர்கள் ஆட்சி செய்தனர். அவர்கள் முதலில் மேலைச் சாளுக்கியர்|களின் நிலப்பிரபுக்களாக இருந்தனர். எனவே, ஒரு காலத்தில் கல்யாணி சாளுக்கிய தளபதியாக பணியாற்றிய லதா சாளுக்கிய ஆட்சியாளர் பாரப்பாவை (அல்லது வாரப்பா) விக்ரகராஜா தோற்கடித்ததாகத் தெரிகிறது. [8]

 
ஹர்ஷ-தேவர் கோவில்

ஹர்ஷநாத் கோவிலில் விக்ரகராஜாவின் ஆட்சிக்காலத்தை குறிக்கும் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த கல்வெட்டு ஹர்ஷ-தேவ கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோவிலை பராமரிப்பதற்காக மன்னன் இரண்டு கிராமங்களை வழங்கியதை பதிவு செய்கிறது. அந்த கிராமங்களுக்கு சத்ராச்சரம் என்றும் சங்கரங்கம் என்றும் பெயர் சூட்டப்பட்டது. [4]

விக்ரகராஜாவுக்குப் பிறகு இவரது சகோதரர் இரண்டாம் துர்லபராஜா ஆட்சிக்கு வந்தார். [9] ஹர்ஷ கல்வெட்டு இவர்களை இராமர் - இலட்சுமணன் மற்றும் கிருட்டிணன் - பலராமருடன் ஒப்பிடுகிறது. [10]

சான்றுகள் தொகு

உசாத்துணை தொகு

  • Asoke Kumar Majumdar (1956). Chaulukyas of Gujarat. Bharatiya Vidya Bhavan. இணையக் கணினி நூலக மைய எண் 4413150.
  • Dasharatha Sharma (1959). Early Chauhān Dynasties. S. Chand / Motilal Banarsidass. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780842606189.
  • R. B. Singh (1964). History of the Chāhamānas. N. Kishore. இணையக் கணினி நூலக மைய எண் 11038728.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரண்டாம்_விக்ரகராஜா&oldid=3400899" இலிருந்து மீள்விக்கப்பட்டது