முத்துமாரியம்மன் கோயில், கொன்னையூர்

முத்துமாரியம்மன் கோயில் புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் வட்டத்தில் கொன்னையூர் என்னுமிடத்தில் அமைந்துள்ள மாரியம்மன் கோயிலாகும்.

அமைவிடம்

தொகு

இக்கோயில் புதுக்கோட்டை-பொன்னமராவதி சாலையில் புதுக்கோட்டையிலிருந்து 35 கிமீ தொலைவில் உள்ளது.[1] கொன்றை மரங்கள் அடர்ந்த இடமாக இருந்ததால் கொன்றையூர் என்றாகி தற்போது கொன்னையூர் என்று அழைக்கப்படுகிறது.[2]

மூலவர்

தொகு

இக்கோயிலின் மூலவர் முத்துமாரியம்மன் ஆவார்.[1] கோயிலின் தல மரம் நெல்லி மரம் ஆகும்.[2]

தல வரலாறு

தொகு

முன்னொரு காலத்தில் இந்தப் பகுதி கொன்றை மரங்களும் கற்றாழைச் செடிகளும் சூழ்ந்த வனமாகத் திகழ்ந்தது. பால்காரரான பெரியவர் ஒருவர், அதிகாலையில் எழுந்து, பால் கறந்து, தலையில் தூக்கிச் சென்று ஊருக்குள் சென்று விற்று வருவது வழக்கம். அந்தக் கால கட்டத்தில், ஊர் மக்களை பல விசித்திரமான நோய்கள் தாக்கின; இதனால், நிலத்தில் வேலை செய்ய ஆளே இல்லாமல் போனது. விதைத்தவையெல்லாம், நீர் பாய்ச்ச ஆளின்றி, வாடின; கருகின. மழையும் தப்பிவிட... குடிப்பதற்குக்கூட தண்ணீர் கஷ்டம் எனும் அளவுக்கு அடுத்தடுத்துத் பிரச்சனைகள் தலைதூக்க ஆரம்பித்தன. அதனால் மக்கள் அனைவரும் உலகாளும் நாயகியை வேண்டினர். அவர்களின் நோய்கள் யாவும் குணமாகவேண்டும்; மனமெல்லாம் குளிர்ந்து பூரிக்க வேண்டும்; பூமி செழித்துத் , அனைவருக்கும் வயிறார உணவு கிடைக்கவேண்டும் என யோசித்தவள், பூமிக்குள் புகுந்து கொண்டாள். பாலை எடுத்துக்கொக்ண்டு, வழக்கம்போல் அந்தப் பெரியவர் வரும்போது, கொன்றை மரத்தின் வேர்களில் அவரது கால்கள் பட, தடுமாறினார். பால் மொத்தமும் கொட்டியது. மண்ணெல்லாம் பாலாயிற்று. எத்தனை கவனமாக நடந்துபோனாலும், இப்படித் தடுமாறுவதும், பால் கீழே மண்ணில் கொட்டி வீணாவதும் தினமும் தொடர்ந்தது. பெரியவர் கவலையானார். ஒருநாள், கோடரியால் அந்தக் கொன்றை மரத்தின் வேரை வெட்டினார். அப்படி வெட்டிய கனமுதல் ரத்தமும் பாலுமாக வெளிப்பட, அதிர்ந்துபோனார் பெரியவர். விஷயம் தெரிந்து, ஊரே கூடியது. இன்னும் தோண்டிப் பார்க்க .... அழகிய விக்கிரகத் திருமேனியில் வெளிப்பட்டாள், தேவி ! விக்கிரகத்தை பள்ளத்தில் இருந்து வெளியே எடுத்து , மேடான பகுதியில் வைத்ததுதான் தாமதம்... உடலையே துளைத்தெடுப்பது போல் பெய்தது, கன மழை ! கிணறுகளும் குளங்களும் ஊரணிகளும் நிரம்பின; பிறகு வரப்பு வழியே, வாய்க்கால் வழியே வயல்களுக்குச் சென்று, விதைகளைக் குளிரச் செய்தன. தேகத்தைத் துளைத்த மழையால், மக்களின் தோல் நோய்கள் யாவும் நீங்கின.[1]

விழாக்கள்

தொகு

ஆடி அமாவாசை, தமிழ் வருடப்பிறப்பு,[2] பங்குனி முதல் ஞாயிற்றுக்கிழமையன்று தொடங்கும் பங்குனி திருவிழா, பூச்சொரிதல் திருவிழா ஆகியவை இங்கு நடைபெறுகின்ற விழாக்களாகும். காலசந்தி, உச்சிக்காலம், சாயரட்சை என்ற வகையில் மூன்று கால பூசைகள் இங்கு நடத்தப்பெறுகின்றன. சுற்று வட்டாரத்தில் உள்ள கிராம மக்கள் வழிபடுகின்ற முக்கியக் கோயிலாக இது கருதப்படுகிறது.[1] பங்குனித் திருவிழாவின் ஒரு பகுதியாக இங்கு நடைபெறுகின்ற நாடு செலுத்துதல் விழா சிறப்பானதாகும். அவ்விழாவின்போது அருகிலுள்ள அருகிலுள்ள நான்கு நாடுகளின் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் கம்பு, ஈட்டி, பல்வேறு வேடத்தை அணிந்து தத்தம் ஊரில் இருந்து கால்நடையாக சென்று நாடுசெலுத்தி வழிபாடு செய்தனர். குறிப்பாக ஆலவயல் நாட்டைச் சேர்ந்தவர்கள் நேர்த்தி கடன்களுக்காக உடலில் சகதி பூசி வருவது தனிச்சிறப்பாகக் காணப்படுகிறது.[3]

திறந்திருக்கும் நேரம்

தொகு

இக்கோயில் காலை 6.30 மணி முதல் 1.00 மணி வரையிலும், மாலை 3.00 மணி முதல் இரவு 8.00 மணி வரையிலும் திறந்திருக்கும்.[1] இக்கோயிலின் குடமுழுக்கு செப்டம்பர் 2019இல் நடைபெற்றது.[4]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 புதுக்கோட்டைக் கோயில்கள், புதுக்கோட்டை மாவட்டத் திருக்கோயில்கள் பயணியர் கையேடு, இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை, 2003
  2. 2.0 2.1 2.2 அருள்மிகு மாரியம்மன் கோயில், கொன்னையூர், தினமலர் கோயில்கள்
  3. "கொன்னையூர் முத்துமாரியம்மன் கோயில் நாடு செலுத்துதல் திருவிழா, உடல் முழுவதும் சகதி பூசி பக்தர்கள் நேர்த்திக்கடன், தினகரன்,". Archived from the original on 2019-04-10. பார்க்கப்பட்ட நாள் 2020-08-25.
  4. கொன்னையூர் முத்துமாரியம்மன் கோயிலில் இன்று குடமுழுக்கு, தினமணி, 8 டிசம்பர் 2019