மேரி பென்னிங்டன்

மேரி எங்கல் பென்னிங்டன் (Mary Engle Pennington, பிறப்பு:அக்டோபர் 8 1872; இறப்பு:டிசம்பர் 27 1952) அமெரிக்க வேதியியலாளர். எப்போதும் குளிராக இருக்கும்படி அம்மோனியா வாயுவைக் கொண்டு இரட்டைச்சுவர் முறையில் ஒரு ரெயில்பெட்டியை உருவாக்கியவர். உலகின் எந்த மூலையில் உள்ள ஓர் இடத்துக்கும் கெடாமல் பொருட்களை எடுத்துச்செல்லும் இம்முறையைக் கண்டறிந்ததன் மூலம் குளிர்சாதனப் பெட்டிக்கு அடித்தளமிட்டவர். பால் பதனிடும் முறையைக் கண்டுபிடித்தவர்.

மேரி ஏஞ்சல் பென்னிங்டன்
Mary Engle Pennington as a young girl.jpg
பிறப்பு அக்டோபர் 5, 1872(1872-10-05)
நாஷ்வில், அமெரிக்கா
இறப்புடிசம்பர் 27, 1953
குடியுரிமைஅமெரிக்கா
நிறுவனம்அமெரிக்க குளிர்சாதனப் பொறியியலாளர்.
அறியப்பட்டதுகுளிர்சாதனப்பெட்டி

பிறப்பும் இளமையும்தொகு

அமெரிக்காவில் டென்னசீ மாநிலத்தில் உள்ள நாஷ்வில் என்ற நகரில், 1872-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 8ஆம் தேதி பிறந்தார் மேரி. தந்தை ஹென்றி பென்னிங்டன் - தாய் சாரா மொலோனி. மேரி பிறந்தவுடன் இவரது குடும்பம் பிலடெல்பியாவிற்குக் குடியேறியது. ஹென்றிக்கு தோட்டப் பராமரிப்பில் அதிக ஆர்வம் இருந்தது. எனவே, அவருடன் இணைந்து மேரியும் தோட்டத்துச் செடிகளோடு பொழுதைக் கழித்தார். ஏராளமான காய்கறிகள், பழங்கள் அவர்களுடைய தோட்டத்தில் விளைந்தன. ஆனால், சில நாட்களிலேயே அவை அழுகி விட்டன. இருந்தாலும், குளிர்காலத்தில் மட்டும் அவை நீண்ட நாட்களுக்கு அழுகாமல் இருந்தன. அதற்கான காரணம் கண்டறியும் முயற்சியில் சிறுமியாக இருந்த மேரி ஈடுபட்டார்.

கல்விதொகு

1890-ம் ஆண்டு பள்ளிப்படிப்பை முடித்த மேரி, பென்சில்வேனியா பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட 'டவுன் சயின்டிபிக் கல்வியகத்தில்' இளம் அறிவியல் பட்ட வகுப்புகளுக்குச் சென்றார். பட்டப்படிப்பு என்பது 4 வருடங்கள் என இருந்த அக்காலத்தில் 1892-ம் ஆண்டே அதை ஒன்றரை வருடங்களில் முடித்த பெருமை மேரியையே சேரும். அந்த நாட்களில், பெண்கள் பள்ளிக்கல்விக்கு மேல் படிக்கக்கூடாது என்று அமெரிக்காவில் சட்டமே இருந்தது. வேண்டுமானால் பட்டப்படிப்பை படிக்கலாம். ஆனால், பட்டம் தர மாட்டார்கள். ஆண்களுக்கு மட்டுமே பட்டம் வழங்கப்படும். எனவே, உயிரியலில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றதற்கான ஆதாரச் சான்றிதழ் மட்டுமே 1892-ம் ஆண்டு மேரிக்கு வழங்கப்பட்டது.[1] அவருக்கு இளம் அறிவியல் பட்டம் வழங்க முடியாத பென்சில்வேனியா பல்கலைக்கழகம், 1895-இல் முனைவர் பட்டம் வழங்கிச் சிறப்பித்தது. தவிர்க்க இயலாத சமயங்களில் பெண்களுக்கு முனைவர் பட்டம் தரலாம் என்ற சட்டத்தில் உள்ள சலுகையைப் பயன்படுத்தி, இந்தப் பட்டம் அவருக்கு வழங்கப்பட்டது என 'நேஷனல் இன்வென்டர்ஸ் ஹால் ஆப் பேம்' என்ற அமெரிக்கக் கண்டுபிடிப்பாளர்கள் பற்றிய நூலில், மேரியின் பட்டப் படிப்புப் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது மேலும் 1896-இல் தாவரவியலிலும், 1897-1899-ல் வேதியல் பட்டமும் பெற்றார்.

பணிதொகு

1898 ஆம் ஆண்டு பென்சில்வேனியா மருத்துவக் கல்லூரியின் ஆய்வக மேற்பார்வையாளர் பொறுப்பை ஏற்றார். பென்சில்வேனியா சுகாதரத்துறையிலும் 1898லிருந்து 1901 வரை ஆய்வுப் பணியாளராக இருந்தார். 1904ம் ஆண்டு பிலடெல்பியா சுகாதாரத்துறை, தனது துறை ஆய்வக மேற்பார்வையாளராக மேரியை நியமித்தது. தூய உணவு மற்றும் மருந்து சட்ட அமலாக்கப் பிரிவிற்கு 1906ம் ஆண்டு அவர் விண்ணப்பித்த போது, உணவுப்பொருட்களை பாக்டீரியாவின் தாக்குதலில் இருந்து காப்பாற்ற குறைந்த வெப்பநிலையே சிறந்தது என்பதைக் கண்டுபிடித்து, ஆய்வுக்கட்டுரையாகச் சமர்ப்பித்திருந்தார். அதுவரை உயர்வெப்பமே உணவைப் பாக்டீரியாக்கள் தாக்காமல் இருக்க சிறந்தது எனக் கருதப்பட்டது.

அமெரிக்க வேளாண் துறை பணிதொகு

1905-ல் மேரி அமெரிக்கா வேளாண்துறையில் நுண்ணுயிர் வேதியியலாளராகப் பணியாற்றிய போது அதன் தலைமை இயக்குநராக இருந்த ஹார்வி வைலி என்பவரின் தூண்டுதலின் பேரில் அப்போது புதிதாக விரிவாக்கப்பட்ட தூய உணவு மற்றும் மருந்து சட்ட அமலாக்கப்பிரிவுப் பணிக்கு விண்ணப்பித்தார். 1906-ல்மேரி தூய உணவு மற்றும் மருந்து சட்ட அமலாக்கப் பிரிவிற்கு தலைவராகப் பதவியேற்ற பின்னர், எப்போதும் குளிராக இருக்கும்படி அம்மோனியா வாயுவைக் கொண்டு இரட்டைச்சுவர் முறையில் ஒரு ரெயில்பெட்டியை உருவாக்கினார். அதில் வைக்கப்பட்ட உணவுப் பொருட்கள் நீண்ட நாட்கள் வரை கெடாமல் இருந்தன. இது முதலாம் உலகப் போரின் போது உணவுப்பொருட்களைக் கெடாமல் எடுத்துச் செல்ல உதவியது. அதுதான் 'உலகின் முதல் குளிர்சாதனப்பெட்டி' என அப்போது யாருக்கும் தெரியவில்லை. மேலும், இக்காலத்தில் தான் மேரி பால் மற்றும் பால் பொருட்கள் பால் பதனிடுவதைக் குறித்த ஆய்வை மேற்கொண்டார்.[2]

குளிர்சாதனப் பெட்டிப் பொறியியலாளர்தொகு

இதன் பின்னர் மேரி பென்னிங்டன் போக்குவரத்து மற்றும் வீடுகளின் பயன்பாட்டுக்கான குளிர்சாதனப் பெட்டிகளைத் தயாரிக்கும் முயற்சிகளில் ஆர்வமாக ஈடுபட்டார். 1919-ல் அமெரிக்காவின் பால்சா என்ற தனியார் நிறுவனத்தில் குளிர்சாதனப் பெட்டிக்கான மின்காப்பிடல் துறையின் பொறுப்பேற்றார். அப்பணியில் இருந்து 1922-ல் விலகி தானே ஒரு ஆலோசனை மையத்தைத் சொந்தமாகத் தொடங்கினார். 1952-ல் ஓய்வு பெறும் வரை இந்நிறுவனத்தைத் தொடர்ந்து நடத்தினார்.

1923-ல் வீட்டு உபயோகத்திற்கான குளிர்சாதனப் பெட்டியைக் கண்டறிந்தார். மேலும் அதனைப் பாதுகாப்புடன் பயன்படுத்துவதற்கான அலோசனைகளையும் மக்களுக்கு வழங்கினார். 1920களில் குளிர்சாதனப் பெட்டி தொடர்பான இவரின் பல பணிகளுக்கு தேசிய பனிக்கட்டித் தயாரிப்பு நிறுவனம் ( National Association of Ice Industries (NAII))பல வகையிலும் உதவியது. தனியார் பனிக்கட்டி விற்பனையாளர்களின் உதவியுடன் குளிர்சாதனப்பெட்டிக்குத் தேவையான பனிக்கட்டிகளை வீடு தோறும் விநியோகம் செய்தது. இப்பணி மின் குளிர்சாதனப் பெட்டி கண்டறிந்து பயன்பாட்டிற்கு வரும் வரைத் தொடர்ந்தது. மேலும் NAII உதவியுடன் மேரி குளிர்சாதனப் பெட்டியைப் பாதுகாப்புடன் கையாள அறிவுரைகளை (The Care of the Child's Food in the Home 1925), (Cold is the Absence of Heat 1927) அச்சிட்டு வழங்கினார்.[3]

வெளியீடுகளும் சிறப்பு நிலைகளும்தொகு

பென்னிங்டன் பல அறிவியல் மற்றும் மருத்துவ இதழ்களில் ஆய்வுக்கட்டுரைகள் எழுதினார். மேலும், அவர் அமெரிக்க வேதியியல் கழகம், உயிரியல் வேதியியலார் கழகம் போன்ற அமைப்புகளில் உறுப்பினராகச் செயல்பட்டார். பென்னிங்டன் அறிவியல் வளர்ச்சிக்கான அமெரிக்க சங்கத்தில் பங்கேற்றார். அதுபோலவே பிலடெல்பியா நோயியல் கழகத்தின் சிக்மா XI, மற்றும் காப்பா காப்பா காம்மா பெண்டிர் கழகத்திலும் உறுப்பினராக இருந்தார்.

பெற்ற பரிசுகள்தொகு

அமெரிக்க வேதியியல் கழகம், மேரி எங்கல் பென்னிங்டனுக்கு, பெண்களுக்கென்று ஒதுக்கப்பட்ட மிக உயர்ந்த "கார்வன்-ஓலின் பதக்கம்" வழங்கிச் சிறப்பித்தது. மேலும், "தேசிய பெண்டிர் புகழ்ச் சிறப்புக் கூடம்" மற்றும் "ஆஷ்ரே புகழ்ச் சிறப்புக் கூடம்" ஆகிய தளங்களில் பென்னிங்டனின் பெயர் பொறிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

மறைவுதொகு

அமெரிக்க குளிர்சாதனப் பொறியாளர் கூட்டமைப்பின் தலைவராகப் பல ஆண்டுகள் பணியாற்றிய இவர், 1952-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 27-ந் தேதி இறந்தார்.

உசாத்துணைதொகு

மேற்கோள்கள்தொகு

<references>

வெளியிணைப்புகள்தொகு

  1. "Mary Engle Pennington". JCE Online - Journal of Chemical Education. பார்த்த நாள் 2011-03-24.
  2. Stephan, Karl D., "Technologizing the Home: Mary Pennington and the Rise of Domestic Food Refrigeration." Proceedings, Women and Technology: Historical, Societal, and Professional Perspectives. IEEE International Symposium on Technology and Society, New Brunswick, NJ, July 1999, 290.
  3. Woman's Who's Who of America: a Biographical Dictionary of Contemporary Women of the United States and Canada,year=1914,author=John Williams
"https://ta.wikipedia.org/w/index.php?title=மேரி_பென்னிங்டன்&oldid=2918260" இருந்து மீள்விக்கப்பட்டது