மேலக்கடம்பூர் அமிர்தகடேஸ்வரர் கோயில்

திருக்கடம்பூர் - மேலக்கடம்பூர் அமிர்தகடேஸ்வரர் கோயில் சம்பந்தர், அப்பர் பாடல் பெற்ற சிவாலயமாகும். இது கடலூர் மாவட்டத்தில் உள்ள மேலக்கடம்பூரில் அமைந்துள்ளது. இந்திரன் வழிபட்ட அமுதகலசமும், முருகன் வழிபட்டு வில்லும் பெற்ற தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்).[1] தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 34வது சிவத்தலமாகும்.

தேவாரம் பாடல் பெற்ற
மேலக்கடம்பூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில்
படிமம்:Kadambur2.JPG
பெயர்
பெயர்:மேலக்கடம்பூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில்
அமைவிடம்
ஊர்:மேலக்கடம்பூர்
மாவட்டம்:கடலூர்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:அமிர்தகடேசுவரர்
தாயார்:சோதிமின்னம்மை
தல விருட்சம்:கடம்ப மரம்
தீர்த்தம்:சிவதீர்த்தம், சக்தி தீர்த்தம்
பாடல்
பாடல் வகை:தேவாரம்
பாடியவர்கள்:திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர்
வரலாறு
அமைத்தவர்:முதலாம் குலோத்துங்க சோழன்

அமைப்புதொகு

கருவறை குதிரைகள் இழுத்துச்செல்லும் தேர் போன்ற அமைப்பில் உள்ளது. கும்பகோணம் அருகேயுள்ள தாராசுரத்தை நினைவூட்டும் மிக நுட்பமான சிற்பங்களை இக்கோயிலில் காணலாம்.

கரக்கோயில்தொகு

தமிழக சிவாலயங்கள் ஒன்பது வகைப்படும், இந்த ஒன்பது வகைக்குள் கடம்பூர் திருக்கோயில் கரக்கோயில் வகையினை சார்ந்தது, நான்கு சக்கரங்களுடன் கிழக்கு நோக்கி குதிரைகள் பூட்டபெற்ற அழகிய தேர்வடிவ கோயில். மேலும் கடம்ப பேரரசை ஆண்ட கடம்பர்களின் “முண்டா” மொழியில் கரம் என்ற சொல்லுக்கு கடம்பூர் என்று பெயர் கரம்+கோயில் கடம்பினை தல மரமாக கொண்ட கோயில்= கரக்கோயில் என பொருள் தருகிறது.தமிழகத்தில் கரக்கோயில் என குறிப்பிடப்படும் ஒரே கோயில் இதுவாகும். வட மொழியில் விஜயம் என குறிப்பிடப்படும் கோயிலும் இதுவாகும்.

அமிர்தகடேசுவரர் ஆலயம்தொகு

 • இறைவன்: அருள்மிகு அமிர்தகடேஸ்வரர்
 • இறைவி : அருள்மிகு சோதி மின்னம்மை
 • தலமரம்: கடம்ப மரம்
 • தல தீர்த்தம்: சிவதீர்த்தம்-கோயிலின் வட புறத்தில் சக்தி தீர்த்தம்- கோயிலுக்கு மேற்கில் சற்று தூரத்தில்
 • கோயில்: கரக்கோயில்
 • லிங்கம்: சுயம்பு
 • பூசை: காலை சந்தி, மாலை பூசை, இரவு பூசை
 • நேரம்: காலை 8-9.30 மணி, மாலை 5-8.00 மணி
 • நிர்வாகம்: தமிழக இந்து சமயம் மற்றும் அறநிலைய துறை கீழ்
 • பாகுபாடு: பட்டியலை சாரா நிறுவனங்கள்

வழிபட்டோர்தொகு

திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர், அருணகிரிநாதர், இராமலிங்க சுவாமிகள், பாம்பன் சுவாமிகள், வண்ணசரபம் தண்டபாணி சுவாமிகள் போன்ற அடியார்கள் பாடல்கள் பாடி வழிபட்ட தலம். இத்திருக்கடம்பூரின் ஞானசம்பந்தர் பதிகங்கள் 2-ம் திருமுறையிலும், நாவுக்கரசரின் பதிகங்கள் 5-ம் திருமுறையிலும் தொகுக்கப்பட்டுள்ளன. சிவபெருமானை கயிலை மலைக்குச் சென்று வழிபடும் தேவர்கள், எண் குலமலை தேவர்களும் அதன் தலைவன் மலையரசன், திங்கள், கதிரவன், தேவர்தலைவன், சித்தர்கள் முதலானோர் கடம்பூர் கோயிலும் கயிலை ஒத்தது என இங்கு வந்து வழிபாடு செய்துள்ளனர். ஒவ்வொரு யுகத்திலும் யார் யார் வந்து வழிபாடு செய்தனர் என்ற செய்திகள் அந்தந்தச் சிற்பங்களின் கீழ் பொறிக்கப்பட்டுள்ளது.

காலம்தொகு

ஆறாம் நூற்றாண்டில் நாயன்மார்களால் பாடப்பெற்ற கோயில் என்பதால் ஆண்டுகட்கு மேலாக கோயில் உள்ளதாக அறியலாம். தேர்வடிவ கோயில் முதலாம் குலோத்துங்க சோழனால் பொ.ஊ. 1113-ல் அவரது 43–ம் ஆட்சியாண்டில் கட்டப்பெற்றது. முற்கால சோழர்களின் காலத்தில் சிவாலயங்களில் சிவன் சன்னதி மட்டுமே இடம் பெற்றிருந்தன. ராஜேந்திரன் காலத்தின் பின்னரே அம்மன் சன்னதி அமைக்கும் வழக்கம் தொடங்கியது. இக்கோயிலின் ஈசானிய மூலையில் இருந்த அம்மன் சன்னதியை சுமார் வருடங்களுக்கு முன் தேவகோட்டை செட்டியார்கள் திருப்பணியின் போது கோயிலின் உட்பிரகாரத்தில் தெற்கு நோக்கி கட்டப்பெற்றது.

சிற்பக் கலைக்கோயில்தொகு

மேலக்கடம்பூர் திருக்கோயில் சிற்பக் கலைக்கோயிலாகவும் உள்ளது. கர்ப்பகிரக வெளிசுவற்றில் எண்ணிலடங்கா சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன.

முதலாம் குலோத்துங்கனால் கட்டபெற்றக் கருவறை வெளிச்சுவரில் ஐந்து தேவகோட்டங்கள் உள்ளன. தெற்கில் மங்கைபங்கனும் (அர்த்தநாரீச்வரர்) ஆலமர்செல்வனும், மேற்குக் கோட்டத்தில் திருமாலும், வடக்கில் நான்முகனும், அணைத்தெழுந்த நாதரும் (ஆலிங்கனமூர்த்தி) கொற்றவையும் (துர்க்கை) உள்ளனர்.

ஒவ்வொரு தேவகோட்டமும் இரண்டு சிம்மத் தூண்கள் தாங்கிய முகப்பு மண்டபமாக உள்ளது. மண்டபத்தின் மேல் வரந்தையோடு கூடிய கொடுங்கையும், நடுவிமான முதற்தளம் எண்கோண வடிவிலும் உள்ளது. அதனை யாளிகள் தாங்குகின்றன. முதல் தளத்தின் எண்கோண வடிவு கட்டுமானத்தினைச் சுற்றி நான்கு சிகரங்கள் உள்ளன. நடுச் சிகரத்தின் விமான பாகத்தில் எட்டுதிக்கு பாலகர் வீற்றிருக்க தேவகோட்டத்தில் மூர்த்திகள் உள்ளனர்.

கர்ப்பக்கிரக தேவகோட்டத்தில் ஆலமர்செல்வன் காளை மீது அமர்ந்து ஞானமூர்த்தியாகவும், முதல் தளத்தில் நின்றபடி வீணாதரராகவும், முறையே திருமால் சிவலிங்க வழிபாடு செய்பவராகவும், முதல் தளத்தில் பாம்பணையில் சாய்ந்த கோலமும் நான்முகன் சிவலிங்க வழிபாடு செய்பவராகவும் முதல் தளத்தில் யோக நிலையிலும் காட்சிதருகிறார். கருவறை புறச்சுவர் முழுவதும் நாயன்மார் புராண சிற்பமும், நாட்டிய கரணங்களும், மகேஷ்வர வடிவங்கள், முக்கோடி தேவர் வழிபடும் காட்சி, ராமாயண கிருட்டின லீலைகள் என சைவ வைணவ சிறப்புக்கள் அடங்கிய சிற்பத் தொகுப்புகள் பலவற்றினைக் காணலாம்.

அதிட்டானம்தொகு

இக்கோயிலின் அதிட்டானம் பத்மபந்தமாகவும், உபபீடமானது மஞ்சபத்ரமாகவும் உள்ளது.

 1. உபானம்,
 2. உபோபானம்,
 3. பத்மோபானம்,
 4. சூத்ரகம்பு,
 5. ஜகதி,
 6. ஊர்த்துவபத்மம்,
 7. கம்பு,
 8. அதபத்மம்,
 9. கடகவிருத்தம்,
 10. குமுதம்,
 11. ஊர்த்துவபத்மம்,
 12. கம்பு,
 13. கண்டம்,
 14. ஊர்த்துவகம்பு,
 15. அதபத்மம்,
 16. மகாபட்டிகை,
 17. ஊர்த்துவபத்மம்,
 18. வாஜனம்

என்னும் 18 அதிட்டான அங்கங்களுடன் திகழ்கிறது.

திருக்கோயில் மூர்த்திகள்தொகு

 
ஆரவார விநாயகர்

திருக்கோயிலின் நந்தவன வாயிலைக் கடந்து நந்தவனமும், அதில் இடதுபுறம் கடம்ப மரத்தினடியில் கடம்ப நாதரும், வலது புறத்தில் மாரியும் சர்ப்பமும் உள்ளன. மூன்றுநிலை கோபுரவாயில் கடந்து வலப்புறம், கோயில் மூலட்டானத்தின் பின்பகுதியில் மேற்கு திருமாலப்பத்தி உள்ளது. இதில் ஆரவார விநாயகர் சன்னதி உள்ளது, அடுத்து வள்ளி தெய்வானை சகிதமாய் மயில் மீதமர்ந்த ஆறுமுகன் சன்னதி, அடுத்த சன்னதியில் சமய குரவர் நால்வர், அதனையொட்டி தேவர்தலைவனின் குற்றம் (பாபம்) போக்கிய குற்றம்போக்கிய நாதர் (பாபஹரேசுவரர்) மீனாக்ஷி சகிதராய் காட்சியளிக்கிறார். அதன் இருபுறமும் கலைமகள், நிலமகள் (வனதுர்க்கை) வீற்றிருக்க, திருமகள் தனிச் சன்னதியில் உள்ளார். திருமஞ்சன கிணற்றின் அருகே மேற்கு நோக்கிய வைரவர் மண்டபம். யோகபட்ட அமர்வில் பெருஞ்சாத்தன்(சப்தமாதர் காவலன்), நின்ற கோலத்தில் கால வைரவர் மற்றும் வைரவர் சிலை அடுத்து கதிரவன், திங்களவன் சிலைகள். அடுத்து இடபவாகனர், தேவர் தலைவன் இத்தல இறைவனைப் பெயர்த்து செல்லும் காட்சியின் சிலைவடிவம். அதனையொட்டி மேற்கு நோக்கிய சனி பகவான், காக்கைக்கு பதில் கழுகு வாகனத்தில். அருகிலேயே கரண்ட மகுடம் தரித்து இறைவனை வணங்கியபடி வைரவி சிலை உள்ளது. அடுத்து மகாமண்டபத்தில் அதிகார நந்தியும் பலிபீடமும் உள்ளது. வலப்புறம் ஜோதிமின்னம்மையும், இடதுபுறம் ஆடல்வல்லான்–சிவகாமசுந்தரியும் கற்சிலாரூபமாய் உள்ளனர். அம்மையின் எதிரில் மால்விடையும் (நந்தி) இடதுபுறம் ஒன்பதுகோள்களும் பள்ளியறையும் உள்ளன. உள் வாயிலில் திண்டி, முண்டி காவலர்களைத் தாண்டி சென்றால் உற்சவ மூர்த்திகளும் அதனைத் தாண்டி குபேர வாயில் கடந்தால் யுகம் கடந்து நிற்கும் அமிர்தகடேசுவரரைக் காணலாம். ஊரின் நான்கு எல்லைகளில் ஈசானியத்தில் விநாயகரும், தெற்கில் காளிசன்னதியும், தென்மேற்கில் திரௌபதியும், முருகன் கோயிலும், வடமேற்கில் அய்யனாரும், வடக்கில் வேளாளர் குலதெய்வம் வீரபத்திரரும் உள்ளனர்.

மலை நாடு கொண்ட சோழன்தொகு

இந்த காசில் இரண்டு மீன்களும்,ஒரு புலி அமர்ந்திருப்பதும்,ஒரு வில்லும், இரண்டு விளக்குகளும் உள்ளன தனது முப்பத்து ஆறாம் ஆண்டில் வெளியிடப்பட்ட இக்காசில் மலைநாடு கொண்ட சோழன் என பொறிக்கப்பட்டுள்ளது மலபார் பகுதிகளை வென்ற போது வெளியிடப்பட்டதாகும் காசின் மறுபக்கம் தட்டையாகஉள்ளது.

கல்வெட்டுக்கள்தொகு

இக்கோயிலில் பல கல்வெட்டுக்கள் படியெடுக்கப்பட்டுள்ளன. அவற்றுள் முதன்மையானது “புகழ் மாது விளங்க” எனத்தொடங்கும் முதலாம் குலோத்துங்கனுடையது, இக்கோயிலை கட்டுவித்து இறையிலி நிலங்கள் வழங்கியமை குறித்தும், மற்றொன்று கடம்பூர் கோயிலை சேர்ந்த மகேசுவரர்கள் ஆறு பொற்காசுகளை பெற்றுக்கொண்டு நந்தா விளக்கெரியவிட ஒப்புக்கொண்டமை குறித்தும், மேலும் கடம்பூரினை உத்தம சதுர்வேதி மங்கலம் என சிறப்பு பெயர் பெற்ற தகவலை காணலாம்.

திருப்பணிகள்தொகு

மொகலாய படையெடுப்பிற்கு பிறகு கவனிப்பாரற்று சிதிலமடைந்திருந்த இக்கோயிலை தேவகோட்டையினைச் சேர்ந்த அரு. அருணாசலம் செட்டியார் முழுவதுமாய் பிரித்து எண்களிட்டு புதிதாய் கற்கள் சேர்த்து இன்று நாம் காணும் வடிவில் அர்த்தமண்டபம், மகாமண்டபம், வெளிப்பிரகாரத்தில் இருந்த அம்மன் சன்னதியை உட்பிரகாரத்தில் மாற்றியது, பிரகார மதில் சுவர் என பெரிய அளவில் திருப்பணி செய்தார்.

பின்னர் அவர் வழிவந்த சோமசுந்தரம் செட்டியார் திருக்கோயிலை 1897–ம் ஆண்டில் குட முழுக்கு செய்தார். அதன் பின்னர் அவர் வழி வந்த மற்றொரு அருணாசலம் செட்டியார் 1920–ம் ஆண்டில் குடமுழுக்கு செய்தார். 1942 –ல் ஒன்பது கோள் (நவக்கிரகம்) அமைக்கும் பணி நடைபெற்று குடமுழுக்கு செய்யப்பட்டது. பின் 03.04.1980–ல் குடமுழுக்கு நடைபெற்றது. 21.06.2002 –ல் குடமுழுக்கு தரும ஆதினம் முன்னிலையில் நடைபெற்றது.

தசபுஜ ரிஷப தாண்டவமூர்த்திதொகு

 
தசபுஜ ரிஷப தாண்டவமூர்த்தி

செவ்வக பீடத்தில் மையமாக உள்ள தாமரை பீடத்தில் மேல்நோக்கி நிற்கும் காளையின் மேல் சதுர தாண்டவ கோலத்தில், வீசிய பத்து கரங்களில் வீரவெண்டயம், பிரம்மகபாலம், கேடயம், சூலம், அரவம், கட்டங்கம், தண்டம், குத்தீட்டி, ஏந்திட, வலக்கை கஜஹஸ்த அமைப்பிலும், இடக்கை பிரபஞ்சம் தாங்கியும், சிவபெருமான் நின்றாடுகிறார். அவர்காலடியில் திருமால் மத்தளமிசைக்க வீரபத்திரர்சூலமாட. வைரவர். கணங்கள். விநாயகர், பார்வதி.,பிருங்கி, காரைக்கால் அம்மையார், மகாகாளர், நந்தி, நாட்டிய பெண்கள் சேர்ந்தாட முருகன் மயில் மேல் பறக்க, கந்தர்வர்கள் மலரிட, அனைத்தும் சேர்ந்திட்ட அற்புத கலைபடைப்பு திருவாசியில் அக்கினிக்கு பதிலாக இங்கே போதி இலைகள் காணப்படுகின்றன. தலைக்கு பின்புறத்தில் ஒளிவட்டமும் மணிமுடியும் வங்க தேச பாணியில் உள்ளது. இச்சிற்பம் போல (புடைப்பு சிற்பங்களாக) கல்லில் வடிக்கப்பட்ட மூன்று சிலைகள் வங்கதேசம் டாக்கா தேசிய அருங்காட்சியகத்தில் உள்ளன.

மரபு வரலாறுதொகு

முதலாம் குலோத்துங்கன் அவையில் ராஜகுருவாக இருந்தவர் உத்திரலாட (வங்காள) தேசத்து ஸ்ரீ கண்டசிவன், இவர் சிதம்பரம் ஆடல்வல்லானை தரிசிக்க வந்திருந்த போது தன் வழிபடு தெய்வமாக வைத்திருந்த ரிஷப தாண்டவரை கொண்டு வந்தார் எனவும், இக்கோயில் ஸ்ரீ கண்ட சிவன் மேற்பார்வையில் கட்டப்பெற்றதால் பணி முடிந்து செல்லுங்கால் தனது மூர்த்தியினை இக்கோயிலில் வைத்து சென்றதாகக் கூறுவர்.

முதலாம் ராஜேந்திரன் தனது வடநாட்டு படையெடுப்பின் போது பாலர் தேசத்து மகிபாலரை வென்று அங்கிருந்த இம்முர்த்தியினை வெற்றிசின்னமாக கொண்டு வந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

புராண வரலாறுதொகு

தேவர்களும் அசுரர்களும் திருப்பாற்கடலை கடைந்து அமுத கலசம் பெற்றனர். முழு முதற்கடவுளான விநாயகரை வழிபடாமல் அமுதுண்ண அமர்கின்றனர். அவர்களுக்கு பாடம் புகட்ட எண்ணி விநாயகர் அமுதகலசத்தினை பூலோகத்தில் மறைத்து வைக்க எடுத்துவரும் வழியில் ஒரு துளி அமிர்தம் கடம்பவன காட்டில் வீழ்ந்து சுயம்பு லிங்கமாக மாறியது. அவரே இத்தல அமிர்தகடேசுவரர்.

பிற்காலத்தில் கடம்பவனம் கடம்பூர் என வழங்க லாயிற்று. தல மரமும் கடம்ப மரமாக ஆனது. இத்திருக்கோயிலை இந்திரனின் தாய் தினம்தோறும் வந்து வழிபட்டாள். தன் தாயின் கடமையை எளிதாக்க எண்ணி இந்திரன் இத்தல இறைவனையும், பிற தெய்வங்களையும் அழகிய தேரில் வைத்து எடுத்து செல்ல முற்பட்டான் தலவினாயகரின் அனுமதி பெறாமல் காரியம் செய்ய முற்பட்டதால் விநாயகர் அவன் ஆணவத்தினை அடக்க விசுவரூபம் எடுத்து அவன் தேரினை காலால் அழுத்த, தேர் கல்லாய் சமைந்தது.

பிழை உணர்ந்த இந்திரன் பாப விமோசனம் கோருகிறான். ஓர் நாழிகையில் கோடி லிங்கம் பிரதிட்டை செய்ய ஆணையிடுகிறார், செய்ய இயலாமல் போகவே ருத்திர கோடி ஜபம் செய்து ஒரு லிங்கம் பிரதிட்டை செய்து பிழைநிவர்த்தி பெறுகிறான். ருத்ரகோடி ஜபம் செய்து பிரதிட்டை செய்த அக்கோயில் இத்தலத்தின் கிழக்கே ஒரு கி.மி. தூரத்தில் ருத்ரகோடீச்வரர் ஆலயம் என்ற பெயரில் விளங்குகிறது. அப்பர் தேவாரத்தில் “கடம்பூர் இளங்கோயில் தன்னில் கயிலாய நாதனை காணலாமே” என போற்றுகிறார். நீண்ட காலமாய் சிதிலமடைந்திருந்த இக்கோயிலை தமிழக தொல்பொருள் துறை மூலம் புதுப்பிக்கப்பட்டு விமான கட்டுமானம் இன்றி காட்சி தருகிறது.

கடம்ப மரம்தொகு

கடம்பூர் இக்கோயிலின் தல மரமாகும். மேலும் இம்மரத்தின் பெயராலேயே இவ்வூர் கடம்பூர் என வழங்கலாயிற்று. கடம்பமரம் இந்திய தட்ப வெட்ப நிலைக்கு ஏற்ற மரமாகும், எனவே பரவலாக இந்தியாவெங்கும் காணப்படுகிறது, எனினும் மேற்கு கடற்கரை ஓரங்களிலும் கர்நாடகத்திலும், இமயமலை சாரலிலும் அதிகமாக காணப்படுகிறது. இது 2 மீட்டர் சுற்றளவுடன் 18 மீட்டர் உயரம் வரை வளரும். இதன் தாவரவியல் பெயர் அன்தொசெபால்ஸ் கடம்பா என்பதாகும். ரூபிசெயே என்ற தாவர குடும்பத்தினை சேர்ந்ததாகும். வெண்கடம்பு, மஞ்சள் கடம்பு என இரு வகைப்படும். ஆரஞ்சு வண்ணத்தில் 2 அங்குல சிறு பந்து போல மிக்க நறுமணத்துடன் மே மாதங்களில் பூக்கும். இலை கரும்பச்சையாக கையகலத்தில் இருக்கும். கடம்ப மரம் மதுரை, குளித்தலை, திருக்கடம்பூர் ஆகிய தலங்களில் தலமரமாக போற்றப்படுகிறது. வடக்கே மதுராவில் கிருஷ்ணர் கடம்ப வனத்தில் விளையாடி மகிழ்ந்ததாக ஸ்ரீமத் பகவத்திலும், சைதன்ய சரித்திரத்திலும் கூறப்பட்டுள்ளது. அபிராமி அந்தாதியிலும் பல இடங்களில் அன்னை கடம்ப மாலை அணிந்தவளாக போற்றப்படுகிறாள். கடம்ப பூமாலைகள் கிருட்டிணன், முருகன் இருவருக்கு மட்டுமன்றி அனைத்து தெய்வங்களும் இதனை விரும்பி ஏற்பது இப்பாடல்கள் மூலம் அறியலாம். திருமுருகாற்றுபடையில் இதனை உருள் பூ என்று நக்கீரர் எடுத்தியம்புகிறார். பனவாசியை தலை நகராக கொண்ட கடம்பர்கள் பேரரசில் வழங்கிய “முண்டா” மொழியில் ”கரம்” என்றால் கடம்பு என பொருள் எனவே கரம்+கோயில் = கரக்கோயில்,கடம்பமரத்தினை தல மரமாக கொண்ட கோயில் என கொள்ளலாம்.கடம்ப மரத்தின் இலை, பட்டை, பழம், விதை, பூ எனஅனைத்தும் மருத்துவ பயன் கொண்டவை.

 • இலைச்சாறு வாய் புண், தொண்டை அழற்சி, சர்க்கரை நோய் ஆகியவற்றினை போக்கவல்லது.
 • பட்டையை நீரில் இட்டு காய்ச்சி குடித்தால் காய்ச்சல் தீரும்.
 • பழ சாறுடன் சிறிது சர்க்கரை சேர்த்து குடித்தால் வயிற்று நோய் தீரு ரத்தத்தினை சுத்தம் செய்யும்.
 • விதையை அரைத்து நீரில் கரைத்து குடித்தால் கடுமையான நஞ்சு முறியும்
 • பூமொட்டுக்களில் இருந்து பிழியப்படும் எண்ணை வாசனை கூந்தல் தைலமாக பயன்படுகிறது.
 • மரம் மென்மையானது ஆதலால் தீக்குச்சிகள், பென்சில்,காகித கூழ் செய்ய ஏற்றது.
 • கடம்ப மரத்தில் செய்யப்பட்ட கட்டிலில் படுத்தால் உடல் சோர்வு நீங்கும் என

“உடம்பை முறித்து கடம்பில் போடு” என்ற சொலவடை மூலம் அறியலாம்

பிற சிறப்புகள்தொகு

 • அட்டமி திதி இரவில் வணங்கவேண்டிய கால வைரவர்.
 • கழுகு வாகனத்தில் காட்சி தரும் சனி பகவான்.
 • கற்சிலையாக காட்சி தரும் நடராஜர் –சிவகாமி
 • அறிவாற்றல் என்னும் சோதி வடிவினலாய் விளங்கும் சோதிமின்னம்மை
 • கடம்பவன தலமாதலால் சதய நட்சத்திர அன்பர்கள் வழிபட வேண்டிய தலம்.
 • 3,4,5 பங்குனி தேதிகளில் காலை 6.15 க்கு சூரியக்கதிர்கள் அமிர்தகடேசுவரர் மீது விழும் அற்புதம்.
 • சங்கு சக்கரத்துடன் சிம்ம வாகினியாகவும் மகிஷாசுரமர்த்தினியாகவும் காட்சி தரும் துர்க்கை.
 • “மிர்தம்” என்றால் மரணம் “அமிர்தம்” என்றால் மரணமற்ற நிலை. அதனால் அமிர்தத்தால் உருவான அமிர்தகடேசுவரர் ஆயுள் பலம் தருவார் என்பதால், சதாபிஷேகம் ,சஷ்டியப்த பூர்த்தி திருமணங்கள் நடத்த ஏற்ற தலம.
 • இந்திரன் வழிபட்டு பாப விமோசனம் பெற்ற பாபஹரேசுவர லிங்கம். *அங்காரகன் வழிபட்ட செவ்வாய் தோஷ நிவர்த்தி தலம்.
 • சூரனை அழிக்க வில் பெற்ற தலம்
 • எமன், சித்திரகுப்தனுடன் சிவலிங்க வழிபாடு செய்யும் பிரம்மன்.
 • அனுமன், கருடனுடன் சிவலிங்க வழிபாடு செய்யும் மகாவிஷ்ணு..
 • பிறவிக்கடன் தீர்க்கும் கடம்பநாதர்.
 • கங்கை படையெடுப்பின் போது கொண்டு வரப்பட்ட வலம்புரி ஆரவார விநாயகர்.
 • அர்த்தநாரியின் கீழ் பாம்பணையில் பள்ளி கொண்டுள்ள மகாவிஷ்ணு.
 • கங்கைக்கு சமமான புண்ணிய தீர்த்தம் சக்திதீர்த்தம், இங்கு அஸ்தியினை கரைத்து புண்ணியம் பெறலாம்.

மேற்கோள்கள்தொகு

 1. "தமிழ்நாடுஅரசு நாகப்பட்டினம் மாவட்ட இணையதளம்". 2016-03-04 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2013-09-13 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்தொகு

இவற்றையும் பார்க்கவும்தொகு