யாழ்ப்பாணத்து ஆடையணிகள்

யாழ்ப்பாணத்து ஆடையணிகள் என்பன, யாழ்ப்பாணக் குடாநாட்டையும் அதை அண்டியுள்ள பகுதிகளையும் சேர்ந்த மக்கள் வரலாற்று ரீதியில் பயன்படுத்திய ஆடைகளையும், அணிகளையும் குறிக்கும். உலகின் பிற பகுதி மக்களைப் போலவே யாழ்ப்பாண மக்களின் உடைகளும், காலப் பகுதிகளூடாக மாற்றமடைந்து வந்திருப்பதுடன், ஒவ்வொரு காலகட்டத்திலும், அவ்வக் காலங்களில் வாழ்ந்த பல்வேறு யாழ்ப்பாணத்துச் சமூகப் பிரிவினர் பயன்படுத்திய ஆடையணிகளும், அவற்றை அணியும் முறைகளும் வேறுபாடுகளைக் கொண்டிருந்தன. யாழ்ப்பாணப் பகுதிக்கு உள்ளே ஆடையணிப் பழக்க வழக்கங்களின் பரம்பல், பொருளாதார அடிப்படையில் மட்டுமல்லாது. படிநிலை அமைப்புக்கொண்ட யாழ்ப்பாணத்தின் சாதிக் கட்டமைப்பினாலும் தீர்மானிக்கப்பட்டது.வரலாற்றுக் காலம் முழுவதும், பல்வேறு வெளிப் பண்பாடுகளின் தொடர்பினால், யாழ்ப்பாணத்தாரின் ஆடையணிப் பழக்கங்களில் மாற்றங்கள் ஏற்பட்டு வந்துள்ளன. குறிப்பாக 16ம் நூற்றாண்டுக்குப் பிற்பட்ட ஐரோப்பியர் தொடர்பு யாழ்ப்பாணத்து ஆடையணிப் பண்பாட்டை மேனாட்டுமயமாக்குவதில் பெரும் பங்காற்றியது.

தற்காலத்திலும் கணிசமான யாழ்ப்பாணத்து மக்கள் மரபு வழி உடைகளை அணிந்து வருகின்றனர். அதே வேளை, கோயில் திருவிழாக்கள், திருமணம் முதலிய பண்பாட்டு நிகழ்வுகளின் போதும் மரபுவழி ஆடையணிகள் முக்கியத்துவம் பெறுகின்றன. ஆனாலும், பொதுப் பயன்பாட்டில் கணிசமான அளவு யாழ்ப்பாணத்து மக்களுக்கு மேனாட்டு உடைகளே வழமையானவையாக மாறியுள்ளன.

சாதியமைப்பும் ஆடையணிகளும்

தொகு

யாழ்ப்பாணச் சமூகம் வரலாற்று ரீதியில் இறுக்கமான சாதிப் படிநிலை அமைப்புக் கொண்டிருந்தது. படிநிலையில் மேலுள்ளவர்கள் உயர்ந்தவர்களாகவும், கீழுள்ளோர் தாழ்ந்தவர்களாகவும் கருதப்பட்டது. வெவ்வேறு படிநிலைகளைச் சார்ந்தோர் என்னென்ன வகை ஆடையணிகளை எந்தவிதத்தில் அணியவேண்டும் என்ற கட்டுப்பாடுகள் இருந்தன. உள்ளூர் மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் மட்டுமல்லாது ஐரோப்பியர்களான போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் ஆட்சிக் காலங்களிலும், பிரித்தானியர் ஆட்சிக்காலத்தின் முற்பகுதியிலும் இந்த வேறுபாடுகளைக் கடைப்பிடிப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டது.

மரபுவழி ஆடையணிகள்

தொகு

யாழ்ப்பாணத்து மரபுவழி ஆடையணிகளைப் பொறுத்தவரை அவற்றை ஆண்களுக்கான ஆடையணிகள், பெண்களுக்கான ஆடையணிகள் என இரு பிரிவுகளாகப் பிரித்துப் பார்க்க முடியும். இப்பிரிவுகளுக்குள்ளும், வயது வேறுபாடுகளுக்கு அமைய ஆடையணிகளில் மாற்றங்கள் காணப்படுகின்றன.

ஆண்களுக்கான ஆடையணிகள்

தொகு

மரபுவழியாக யாழ்ப்பாணத்து ஆண்கள் அணியும் உடைகளுள், வேட்டி, மேற்சட்டை, சால்வை, தலைப்பாகை, செருப்பு என்பன அடங்குகின்றன. உள்ளாடையாகக் கோவணம் அணிவர். அணிகலன் என்ற வகையில் ஆண்கள் காதில் கடுக்கன் அணியும் வழக்கம் இருந்தது. தலைமுடியை வளர்த்துக் குடுமியாகக் கட்டியிருந்தனர். யாழ்ப்பாணத்தின் சமூக ஆதிக்கம் கொண்ட சாதிகள் மட்டுமே மேற் குறித்த எல்லா ஆடையணிகளையும் அணியும் உரிமை பெற்றிருந்தனர்.[1] அவர்களிலும் கூடப் பெரும்பாலானோருக்குப் பொருளாதாரம் கருதியும், வசதி கருதியும் இடையில் ஒரு வேட்டி அல்லது துண்டும், தேவையான போது தலையில் கட்டிக்கொள்ளக் கூடிய வகையில் தோளில் ஒரு துண்டுமே உடையாக இருந்தது. ஏனையோர் தமது சாதிப் படிநிலைக்குத் தக்கபடி இவற்றில் சிலவற்றையே அணிய முடியும். படிநிலையில் அடிமட்டத்தைச் சார்ந்தோர் சமூகக் கட்டுப்பாட்டின்படி மேற்சட்டையோ, சால்வையோ, தலைப்பாகையோ, செருப்போ அணிய முடியாது. வெயில் போன்ற தேவைகளுக்காகத் தோளிலோ தலையிலோ துண்டு போட்டிருப்பவர்களும், செருப்பு அணிந்திருப்பவர்களும் உயர் சாதியினரைக் கண்டால் அவற்றை எடுத்துவிட்டு ஒதுங்கி நிற்கவேண்டியிருந்தது.

ஆண்களின் கீழாடையான வேட்டியைப் பொறுத்தவரை இரண்டு வகை வேட்டிகள் யாழ்ப்பாணத்தில் பயன்பாட்டில் இருந்தன ஒன்று நான்கு முழம் நீளம் கொண்டது, மற்றது எட்டு முழ நீளமானது, நான்குமுழ வேட்டு இடுப்பை ஒரு சுற்றுச் சுற்றிக் கட்டுவது, எட்டு முழ வேட்டியை இரு சுற்றுச் சுற்றிக் கட்ட வேண்டும். இவ்வேட்டிகள் பெரும்பாலும் வெள்ளை நிறமானவை. சிலவற்றுக்குக் கரை வேறு நிறத்தில் இருக்கும் சில கரையில்லாத வேட்டிகள். பல்டேயஸ், வெள்ளாளர்கள் வேட்டி முனையை கல்களுக்கு இடையால் எடுத்து நீளக் காற்சட்டை போல் அமையும்படி வேட்டி கட்டினர் என்கிறார். அத்துடன் அவர்கள் தமது ஆடையின் ஒரு பகுதியை வயிற்றுப் பக்கம் இழுத்து ஒரு பையைப்போல் இருக்கும் படி மடி வைத்துக் கட்டுவர் என்றும் அதற்குள் வெற்றிலை, பாக்கு போன்ற பொருள்களை வைத்துக்கொள்வர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.[2] யாழ்ப்பாணத்தவருடைய மேற்சட்டைகளும் பெரும்பாலும் வெண்ணிறமானவை. மணிக்கட்டு வரை நீண்ட கைகளும், திறந்த கழுத்தும் கொண்ட இவற்றின் கீழ்ப்பக்கம் ஏறத்தாழ முழங்கால் வரை நீண்டிருக்கும். கீழ்ப்பகுதி அகன்றிருக்கும். இதன்மேல் தோழில் சால்வை அணிவர். சால்வையும் வேட்டிக்குப் பொருத்தமான நிறத்தில் வேட்டியின் கரைக்கு ஒத்த கரையுடன் காணப்படும். சால்வையைத் தோளின்மேல் இரண்டு முனைகளும் முன்புறம் தொங்கும் வகையில் அல்லது கழுத்தைச் சுற்றி ஒரு முனை முன்புறமும், மறுமுனை பின்புறமும் தொங்கும்படி அணிவர். சில சமயங்களில் இடுப்பில் கட்டிக்கொள்வதும் உண்டு. சால்வையை விசிறி வடிவில் மடித்து முன்புறம் கரை தெரியும்படி அழுத்தி அணிவது உண்டு. இதை மடிப்புச் சால்வை என்பர். அல்லது சால்வையை வெறுமனே சுருக்கி அணிவர். யாழ்ப்பாணத்தில் பருத்தி வேட்டிகளும், சரிகைக் கரைகளுடன் கூடிய பட்டு வேட்டிகளும் பயன்பாட்டில் இருந்தன. மிகக் குறைவானவர்களே வழமையாகப் பட்டு வேட்டி உடுத்தினர். பெரும்பாலோர் விழாக்களுக்கு மட்டுமே பட்டு வேட்டிகளைப் பயன்படுத்தினர்.

பெண்களுக்கான ஆடையணிகள்

தொகு
 
பாவாடை மற்றும் மேலாடை அணிந்துள்ள இரு சிறுமிகள்

பெண்களுக்கான ஆடையணிகளுள், சேலை, மேற்சட்டை, பலவிதமான அணிகலன்கள் என்பவை அடங்கியிருந்தன. சிறுமிகள் முழுப்பாவாடை, தாவணி போன்றவற்றையும் அணிந்தனர். யாழ்ப்பாணத்தில் பலவிதமான சேலை கட்டும் முறைகள் இருந்தன. சிலர் மேற்சட்டை போட்டு சீலை கட்டினர். வேறு சிலர் மேற்சட்டை போடாமல் இடுப்பில் சேலையைச் சுற்றிக்கட்டி மறு முனையை மார்புக்கு மேலால் எடுத்துப் பின்புறம் எடுத்து இடுப்பில் செருகிக் கட்டினர். சில பெண்கள் மேற்சட்டை போடாமல், இரண்டு தோள்களும் திறந்திருக்கும்படி மார்புக்கு மேல் குறுக்காகச் சேலையைச் சுற்றிக் கட்டினர். இது குறுக்குக் கட்டுதல் எனப்படும். ஒல்லாந்தர் காலத்தில் பல ஆண்டுகள் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த பல்டேயசு பாதிரியாருடைய நூலில் காணும் படமொன்றில் பெண்கள் இடுப்பில் மட்டும் சேலையுடன் திறந்த மார்புடன் இருப்பதாகக் காட்டப்பட்டுள்ளது.[3] இப்படத்தை எவ்வளவு தூரம் உண்மையாக எடுத்துக்கொள்ள முடியும் என்று தெரியவில்லை. பெண்களின் உடைகளிலும், யார் எவ்வாறு உடைகளை அணியலாம் என்பதில் சாதி சார்ந்த கட்டுப்பாடுகளின் பங்கு உண்டு. சாதியமைப்பின் தாழ்ந்த படிநிலையில் உள்ளோரே அண்மைக்காலம் வரை குறுக்குக் கட்டாகச் சேலை கட்டுவது வழக்கமாக இருந்தது.

பெண்கள் தமது, தலை, காது, மூக்கு, கழுத்து, கை, இடை, கால் போன்ற உறுப்புக்களில் நகைகளை அணிந்தார்கள். இவற்றுட் சில வழமையாக அணிபவை. சில விழாக்களிலும், சிறப்புத் தேவைகளுக்கும் மட்டும் அணியப்படுபவை.

ஐரோப்பியர் காலம்

தொகு
 
மருத்துவர் கிறீனின் மருத்துவ மாணவர்கள் (1848-1853)

போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் கலத்தில் யாழ்ப்பாண மக்கள் பெருமளவில் தமது ஆடையணிப் பழக்க வழக்கங்களை மாற்றிக்கொள்ளவில்லை. அரசாங்க உத்தியோகங்களில் இருந்த மிகச் சிலர் மட்டும் சில பழக்கங்களை மாற்றியிருக்கக்கூடும். மத மாற்றமும் ஆடையணிகளில் பெரிய அளவில் மாற்றத்தைக் கொண்டுவரவில்லை. பிரித்தானியர் ஆட்சிக்காலமான 19ம் நூற்றாண்டில்கூட கிறித்தவத்தைத் தழுவிக்கொண்ட பலர் மரபுவழி உடையணியும் பழக்கங்களை மாற்றிக்கொள்ளவில்லை. 19ம் நூற்றாண்டின் பிற்பகுதியைச் சேர்ந்த படம் ஒன்று அமெரிக்க மிசனைச் சேர்ந்த மருத்துவர் கிறீனின் மருத்துவ வகுப்பில் படித்த மாணவர்களைக் காட்டுகிறது. அவர்கள் அனைவரும் கிறித்தவர்களாக இருந்தபோதும், எல்லோருமே மரபுவழி ஆடைகளை அணிந்திருப்பதுடன், குடுமி வைத்துள்ளார்கள் அல்லது தலைப்பாகை அணிந்துள்ளனர்.[4] 20 ஆம் நூற்றாண்டில் பிரித்தானியர் காலத்திலும் அதற்குப் பின்னருமே யாழ்ப்பாணத்தவரின் ஆடையணிகளில் பெரிய அளவில் ஐரோப்பியமயமாக்கம் ஏற்பட்டது எனக் கூறமுடியும்.

யாழ்ப்பாணத்தவர் குறிப்பாகச் சாதிப் படிநிலையில் உயர்ந்த நிலைகளில் உள்ள பெண்கள், பொன் நகைகளை அணிவதில் விருப்பம் உள்ளவர்கள். ஒல்லாந்தர் காலத்தில் நகைகள் அணிபவர்களுக்கு ஆபரண வரி என்னும் ஒரு வரி விதிக்கப்பட்டது. அக்காலத்தில் பல பெண்கள் சிலவகை நகைகள் அணிவதைக் கைவிட்டதாகத் தெரிகிறது. பல பெண்கள் பொன் நகைகளுக்குப் பதிலாக வெள்ளியாலான நகைகளை அணிந்ததாகவும்; காதுகளைக் குத்தித் துவாரம் செய்துவிட்டுத் தோடு அணியாமல் இருந்ததாகவும்; கொப்பு, முருகு, கன்னப்பூ, மூக்குத்தி, நத்து போன்ற அணிகளுக்கான துவாரங்களைக் குத்தாது விட்டதாகவும் முத்துத்தம்பிப்பிள்ளை குறிப்பிட்டுள்ளார்.[5]

மேற்கோள்கள்

தொகு
  1. சிவலிங்கராஜா, எஸ்., யாழ்ப்பாணப் பண்பாடு மறந்தவையும் மறைந்தவையும், குமரன் புத்தக இல்லம், கொழும்பு, 2014. பக். 27
  2. Baldaeus, Philip., Description of the Great and Most Famous Isle of Ceylon, Asian Educational Services, New Delhi, 1998 (First Published in Dutch in 1672). P. 812
  3. Baldaeus, Philip., 1998. P. 814
  4. Cutler, Ebenezer. (compiler), Life and Letters of Samuel Fisk Green, M. D. of Green Hill, Asian Educational Services, New Delhi, 2004. Plate between pages 62 and 63.
  5. முத்துத்தம்பிப்பிள்ளை, ஆ., யாழ்ப்பாணச் சரித்திரம், ஏசியன் எடுகேசனல் சர்வீஸ், புது தில்லி, 2001 (முதல் பதிப்பு, யாழ்ப்பாணம் 1915) பக். 92