காலணி
சப்பாத்து அல்லது காலணி அல்லது மிதியடி அல்லது செருப்பு என்பது மாந்தர்கள் பல தேவைகளுக்காக காலில் அணியப்படும் ஒரு கால் காப்புடை ஆகும். மாந்தர்கள் நடக்கும் பொழுதும், ஓடும் பொழுதும், தம் கால்களில் கல்லும் முள்ளும் குத்தாமல் இருக்கவும், சுடு வெப்பத்தில் இருந்தும், கடுங்குளிரில் மற்றும் பனியில் இருந்தும் காக்கவும், அழகு உள்ளிட்ட சிறப்பான பிற தேவைகளுக்காவும் காலில் அணியப்படும் ஒரு கால் காப்புடை ஆகும். காலணிகளில் எளிதாக அணிந்து கொள்ளவும் கழற்றவும் வசதியான செருப்பு, மிதியடி போன்றவைகளும், புறங்கால்களையும் குதி கால்களையும் மூடியிருக்கும் ஷூ , பூட்ஸ் முதலிய கால்பூட்டணிகளும், கணுக்கால் வரையும் மூடியிருக்கும் கால்பூட்டணிகளும், கெண்டைக்கால், முழங்கால் வரையும் மூடியிருக்கும் கால்பூட்டணிகளும் உண்டு. கால்பூட்டணிகள் பெரும்பாலும் துணியால் அல்லது தோலால் ஆன வாரினால் கட்டி, முடிச்சிட்டு ,பூட்டப்பட்டிருக்கும். பல்வேறு இடச் சூழல்களுக்கும், தொழில்களுக்கும், தட்ப வெப்பத் தேவைகளுக்கும் ஏற்ப காலணிகள் பல வகையாகும்.
வரலாறு
தொகுமுதன் முதலில் காலில் செருப்பு முதலிய காலணிகள் எப்பொழுது மாந்தர்கள் அணியத் தொடங்கினர் என அறிவது கடினம். ஆனால் எகிப்தியர்கள் கி.மு. 3700 க்கும் முன்னரே காலணிகள் அணிந்தது தெரிகின்றது. அண்மையில் (2010இல்) 5,600 ஆண்டுகளுக்கு முன்னர் பயன்படுத்திய தோலால் ஆன காலணிகள் அர்மேனியக் குகையில் கண்டுபிடித்துள்ளனர்[1] பழங்காலத்தில் 2000 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியர்களும், கிரேக்கர்களும் , ரோமானியர்களும் பல்வேறு வகை காலணிகள் அணிந்ததற்கு புடை சிற்பங்களும் பிற தொல்லியல் சான்றுகளும் உள்ளன. சீனாவில் 2000 ஆண்டுகளுக்கு முன்னரே மரம், துணியால் ஆன செருப்பு வகைகளைப் பயன்படுத்தினர். இத்தாலியில் ரோமானியர்களுக்கு முன்னமே அங்கிருந்த எற்றசுக்கன் மக்கள் கால் விரல் நுனிப்பக்கம் மேல்நோக்கி உயர்ந்து இருக்கும்படியான காலணிகள் அணிந்திருந்தனர். பழங்காலந் தொட்டே கால்களில் காப்பணியாக மட்டும் அணியாமல் ஒரு அழகு அணியாகவும் அணிந்து வந்துள்ளனர்.
அண்மைக்கால அமெரிக்க,ஐரோப்பிய வரலாறு
தொகுபயன்பாடு
தொகுமிக அண்மைக்காலம் வரை காலணிகள் விலங்குத் தோலால் செய்யப்பட்டன. ஒருசில மரத்தாலும் ஆனவை. பனையோலையாலும் செய்யப்பட்டுள்ளன.[2] ஆனால் அண்மைக் காலத்தில் தோல் மட்டுமன்றி, தோல் போன்ற பலவகையான செயற்கைப் பொருட்களாலும் பல முரட்டுத் துணிவகைகளாலும், நெகிழி, ரப்பர் போன்றவைகளாலும் செய்யப்படுகின்றன. ஏழ்மையான நாடுகளில் பலர் எளிமையான காலணிகள் அணிந்தோ அல்லது அணியாமலோ இருந்தாலும், பல நாடுகளில் வாழ்வோருக்குக் காலணிகள் இன்றியமையாத ஒரு தேவை ஆகும். அமெரிக்காவில் 1980களில் ஆண்டொன்றுக்கு 350 மில்லியன் காலணிகள் உற்பத்தி செய்தனர். இது தவிர ஐரோப்பா, ஜப்பான், இந்தியா, சீனா ஆகிய நாடுகளையும் பகுதிகளையும் எடுத்துக் கொண்டால் உலகில் பில்லியன் கணக்கில் காலணிகள் செய்து விற்கப்படுகின்றன. உலகப் பொருளியலில் (பொருள்முதலியலில்) பல பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடைய தொழிலாகும்.
காலணிக்குத் தமிழில் உள்ள பெயர்கள்
தொகு- அடையல் (தற்காலத்தில் சப்பாத்து ("ஷூ") எனப்படும் இனத்தைச் சேர்ந்த காலணி)
- அரணம் (பெரும்பாணாற்றுப்படையில் "அடிபுதை அரணம்" என ஆளப்பட்டுள்ளது)
- கழல் (செருப்பு வகை)
- குத்திச் செருப்பு
- குறட்டுச் செருப்பு (கால் பெருவிரலை மட்டும் சுற்றி வார் இருக்கும் செருப்பு)
- தொடுதோல்(கயிறால் கட்டப்படும் காலணி)
- தோற்பரம் (படையாளிகள் அணியும் கெட்டியான காலணி)
- நடையன் (பொதுவாக செருப்புக்குப் பயன்படுகின்றது)
- மிதியடி (பொதுவாக செருப்புக்குப் பயன்படுகின்றது எனினும், முன் காலத்தில் மரக்கட்டையால் ஆனது)
- பாதக்காப்பு
- அரண்
- அடிபுனைதோல்
- சப்பாத்து - மூடிய வகையான காலணிக்கு இச்சொல் வழங்கப்படுகிறது. இது ‘சப்பை’ என்கிற தமிழ் சொல்லை தழுவியுள்ளது. எஸ்பானியம், போத்துகீசு மொழிகளில் இதற்கு ஒத்தான சொல்லான Sapatos வழங்கப்படுகிறது.
இவற்றையும் பார்க்க
தொகுஉசாத்துணை
தொகு- ↑ Pinhasi R, Gasparian B, Areshian G, Zardaryan D, Smith A, et al. (2010) First Direct Evidence of Chalcolithic Footwear from the Near Eastern Highlands. PLoS ONE 5(6): e10984. doi:10.1371/journal.pone.0010984
- ↑ காட்சன் சாமுவேல் (11 ஆகத்து 2018). "பனை நாரில் பயன்மிகு செருப்பு". கட்டுரை. இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 12 ஆகத்து 2018.
வெளி இணைப்புகள்
தொகு விக்சனரி விக்சனரி
நூல்கள் விக்கிநூல்
மேற்கோள் விக்கிமேற்கோள்
மூலங்கள் விக்கிமூலம்
விக்கிபொது
செய்திகள் விக்கிசெய்தி
- All About Shoes பரணிடப்பட்டது 2022-10-05 at the வந்தவழி இயந்திரம்—the Bata Shoe Museum's online exhibits on the history and variety of footwear
- Footwear History பரணிடப்பட்டது 2006-08-13 at the வந்தவழி இயந்திரம்
- International Shoe Size Conversion Charts, from i18nguy's website, offers more information.
- Shoe Care பரணிடப்பட்டது 2012-12-18 at Archive.today
- The Political History of Shoes