யாழ்ப்பாணத்தைப் பிரித்தானியர் கைப்பற்றல்

யாழ்ப்பாணத்தைப் பிரித்தானியர் கைப்பற்றல் என்பது 1796 இல் யாழ்ப்பாணத்தை ஒல்லாந்தரிடம் இருந்து பிரித்தானியர் கைப்பற்றிக் கொண்டதைக் குறிக்கும். தொடக்கத்தில் இலங்கையில் இருந்த ஒல்லாந்தரின் ஆள்புலங்கள் பிரான்சுப் படைகளிடம் இருந்து காப்பாற்றுவதற்கான தற்காலிக ஏற்பாட்டின் ஒரு பகுதியாகவே யாழ்ப்பாணத்தைப் பிரித்தானியப் படைகள் எடுத்துக்கொண்டன. ஆனால், பல்வேறு அரசியல் நிலைமைகளால் யாழ்ப்பாணம் உள்ளிட்ட இலங்கையின் ஒல்லாந்த ஆள்புலங்களைப் பிரித்தானியரே நிரந்தரமாக வைத்துக்கொண்டனர்.

பின்னணி

தொகு

17 ஆம் நூற்றாண்டில் இந்தியாவின் கிழக்குக் கரையோரத்தில் பிரித்தானியரின் நிலைகள் இருந்தன. பருவக் காற்றுக் காலங்களில் இப்பகுதியில் இருந்த பிரித்தானியரின் துறைமுகங்களில் பாதுகாப்பாகக் கப்பல்களை நிறுத்துவது கடினம். எனவே இக்காலங்களில் இந்தியாவின் மேற்குக் கரைத் துறைமுகங்களையே பயன்படுத்தவேண்டி இருந்தது. இது கிழக்குக் கரை நிலைகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருந்தது. இப்பிரச்சினைத் தீர்வுக்கு ஒரு வழியாகப் பருவக்காற்றுக் காலத்திலும் பாதுகாப்பானதும், இந்தியாவின் மேற்குக்கரையைக் கண்காணிப்பதற்கு வசதியானதுமான திருகோணமலைத் துறைமுகத்தின் மீது பிரித்தானியருக்கு ஒரு கண் இருந்தது. கண்டி அரசனுக்கூடாக இந்தத் துறைமுகத்தை பெற்றுக்கொள்வதற்கான முயற்சிகள் வெற்றி பெறவில்லை. திருகோணமலையில் ஒல்லாந்தரின் கோட்டை ஒன்று இருந்தது.[1]

அதேவேளை ஐரோப்பாவில் இங்கிலாந்துக்கும், பிரான்சுக்கும் போட்டியும் பகைமையும் நிலவியது. கீழை நாட்டுப் பகுதிகளில் ஆதிக்கம் செலுத்துவதிலும் இவ்விரு நாடுகளுக்கும் இடையே கடும் போட்டி இருந்தது. இந்தப் போட்டி ஒல்லாந்து நாட்டின் அரசியலிலும் தாக்கம் கொண்டிருந்தது. 1781 இல் பிரித்தானியர் ஒல்லாந்தின்மீது போர் தொடுத்ததுடன் ஒல்லாந்தரின் நாகபட்டினத்தையும், திருகோணமலையையும் பிரித்தானியர் கைப்பற்றினர். ஆனாலும் 1782 இல் இது மீண்டும் ஒல்லாந்துக்கு வழங்கப்பட்டது.[2] ஒல்லாந்தில் ஏற்பட்ட கிளர்ச்சியினால் ஆட்சியாளன் ஐந்தாம் வில்லியம் நாட்டைவிட்டுத் துரத்தப்பட்டான். 1787 இல் இங்கிலந்து, பிரசியா ஆகிய நாடுகளின் உதவியுடன் கிளர்ச்சி அடக்கப்பட்டு ஐந்தாம் வில்லியம் மீண்டும் ஆட்சிப் பொறுப்பில் அமர்த்தப்பட்டான்.[3] பிரான்சின் ஆதரவு பெற்ற கிளர்ச்சியாளர்கள் பிரான்சுக்குத் தப்பி ஓடினர். இக்காலத்தில் ஏற்பட்ட பிரெஞ்சுப் புரட்சியின் பின்னர் புதிய பிரான்சு அரசாங்கம் இங்கிலாந்து, பிரசியா ஆகிய நாடுகளின் மீது போர் தொடுத்தது. பிரான்சில் இருந்த ஒல்லாந்தக் கிளர்ச்சியாளர்களின் ஆதரவுடன் பிரான்சு ஒல்லாந்தின் மீது படையெடுத்து அதைக் கைப்பற்றியது. ஐந்தாம் வில்லியம் இங்கிலாந்துக்குத் தப்பியோடினான்.

பிரான்சின் ஆதரவுடனான புதிய ஒல்லாந்து அரசின் கட்டளைகளுக்கா, பிரித்தானியரின் ஆதரவுடனான ஐந்தாம் வில்லியத்தின் கட்டளைகளுக்கா பணிவது என்பதில் ஒல்லாந்தின் குடியேற்றநாடுகளின் ஆளுனர்கள், கட்டளைத் தளபதிகள் மத்தியில் குழப்பம் நிலவியது. இந்நிலையில், திருகோணமலைத் துறைமுகம் பிரான்சின் கைகளுக்குச் செல்வதைத் தடுக்கவேண்டிய அவசியம் பிரித்தானியாவுக்கு ஏற்பட்டது. இலங்கையில் உள்ள ஒல்லாந்தரின் ஆள்புலங்களை தமது பாதுகாப்பின் கீழ்க் கொண்டு வருவதற்கான உடன்படிக்கையொன்றைப் பிரித்தானியர், ஐந்தாம் வில்லியத்துடன் செய்துகொண்டனர். இதன்படி, ஐந்தாம் வில்லியம் இலங்கையில் இருந்த ஒல்லாந்த ஆளுனனான அங்கெல்பீக்குக்கும், திருகோணமலைக் கட்டளைத் தளபதிக்கும் கடிதம் ஒன்றை அனுப்பினான். இதில், ஒல்லாந்த ஆள்புலங்களின் பாதுகாப்புக்காகப் பிரித்தானியப் படைகளைத் திருகோணமலைத் துறைமுகத்துக்குள்ளும், ஒல்லாந்த ஆள்புலங்களின் பிற பகுதிகளுக்குள்ளும் அனுமதிக்குமாறு ஆணையிட்டிருந்தான்.[4]

இது தொடர்பில் இந்தியாவில் இருந்த பிரித்தானிய அதிகாரிகள், இலங்கையில் இருந்த ஒல்லாந்த ஆளுனனுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இலங்கையில் உள்ள ஒல்லாந்த ஆள்புலங்களின் கட்டுப்பாட்டைப் பிரித்தானியப் படைகளிடம் தற்காலிகமாக ஒப்படைக்க வேண்டும் என்றும், ஒல்லாந்த அரசாங்கம் மீண்டும் அமைக்கப்பட்ட பின்னர் இப்பகுதிகள் திரும்ப ஒப்படைக்கப்படும் என்றும், எதிர்ப்புக் காட்டினால் படைபலம் கொண்டு இப்பகுதிகள் கைப்பற்றப்படும் என்பதும் பிரித்தானியரின் நிலைப்பாடாக இருந்தது.[5] ஒல்லாந்தில் என்ன நடக்கிறது என்பது குறித்துத் தெளிவான தகவல்கள் இல்லாததால், ஒல்லாந்த ஆளுனர் அங்கெல்பீக் இதற்குச் சம்மதிக்காமல், தமது பகுதிகளைக் காப்பதற்கான வலு தங்களிடம் இருப்பதாகவும், நட்பு நாடு என்றவகையில், பிரித்தானிய அரசாங்கம் இதற்கு உதவியாக நிதியும், இலங்கையின் பல்வேறு கோட்டைகளின் பாதுகாப்புக்காக 800 பிரித்தானியப் படையினரையும் அனுப்பலாம் என்றும், இவர்களுள் 300 படையினரைத் திருகோணமலையில் நிறுத்தலாம் என்றும் பதிலளித்தான். அதேவேளை பிரித்தானியர் ஆதரவளிக்கும் ஐந்தாம் வில்லியத்தின் அரசுக்கும் அதன் அரசமைப்புக்குமே தாம் விசுவாசமாக இருப்பதாகவும் உறுதியளித்தான்.[6]

எனினும் இது தொடர்பான ஆணைகள் முறையாக இல்லாததாலும், பிரித்தானியருடைய நோக்கங்களும் செயற்பாடுகளும் சந்தேகத்துக்கு இடமாக இருந்ததாலும், திருகோணமலையில் இருந்த ஒல்லாந்தக் கட்டளைத் தளபதி உடனடியாகப் பிரித்தானியப் படைகள் திருகோணமலையில் இறங்க அனுமதி அளிக்கவில்லை. இதனால், பிரித்தானியப் படைகள், திருகோணமலைக்குச் சற்றுத் தொலைவில் கரையிறங்கின. இதேவேளை, ஒல்லாந்தில் நடந்த நிகழ்வுகள் குறித்தும், புதிய ஒல்லாந்த அரசு மக்களின் ஆதரவுடனேயே அமைக்கப்பட்டது என்றும் அங்கல்பீக் அறிந்துகொண்டான். பிரித்தானியர் ஒல்லாந்தக் கட்டளைத் தளபதியின் அனுமதியின்றி ஒல்லாந்த ஆள்புலத்தில் இறங்கியது குறித்த தகவலும் கிடைத்தது. எனவே, முதலில் பிரித்தானியருக்கு அளித்த உறுதிமொழியை அங்கல்பீக் திரும்பப் பெற்றுக்கொண்டான்.[7][8]

ஆனால், பிரித்தானியர் திருகோணமலைக் கோட்டையை முற்றுகையிட்டுத் தாக்கினர். அங்கிருந்த ஒல்லாந்தப் படைகள் சரணடைந்தன.[9]

யாழ்ப்பாணத்தின் மீதான படை நடவடிக்கை

தொகு

திருகோணமலை கைப்பற்றப்பட்ட பின்னர், யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றுமாறு தளபதி இசுட்டுவார்ட்டுக்கு, கரையோரப் படைகளின் கட்டளைத் தளபதி பிராத்வெயிட்டிடம் இருந்து ஆணை பிறப்பிக்கப்பட்டது. கனரக ஆயுதப் பிரிவு, 71 ஆம், 73 ஆம் படைப்பிரிவுகள், முதலாம் சிப்பாய்ப் படைகளின் மூன்று படைப்பிரிவுகள், பயனியர் படைப்பிரிவு, பெருமளவு "லசுக்கார்கள்" ஆகியவற்றை உள்ளடக்கிய படைகளுடன் தளபதி இசுட்டுவார்ட்டு, 1795 செப்டெம்பர் 24 அன்று திருகோணமலையில் இருந்து புறப்பட்டுக் கப்பல்கள் மூலம் 27 ஆம் தேதி பருத்தித்துறையில் இறங்கினான். நாகபட்டினத்தில் இருந்து 52 ஆம் படைப்பிரிவும் வந்திருந்தது. படைகளில் ஒரு பகுதியினரை கட்டளைகளை எதிர்பார்த்து அங்கேயே இருக்குமாறு விட்டுவிட்டு அன்று பிற்பகல் 5.00 மணிக்கு யாழ்ப்பாணத்தை நோக்கிப் புறப்பட்டனர். அடுத்த நாள் முற்பகலில் படைகள் 24 மைல்கள் தொலைவில் உள்ள யாழ்ப்பாணக் கோட்டையை அண்மித்தன.[10]

யாழ்ப்பாணக் கோட்டை இலங்கையில் உள்ள பிற கோட்டைகளுடன் ஒப்பிடும்போது நவீன தொழில் நுட்பங்களின் அடிப்படையில் அமைக்கப்பட்ட பலம் வாய்ந்த கோட்டையாக இருந்தும், அதைக் காப்பதற்குப் போதிய படை பலம் இருக்கவில்லை. 55 ஐரோப்பியரும், உள்ளூர்ப் படைவீரரும், அலுவலர்களுமாக 97 பேரும் மட்டுமே இங்கே இருந்தனர். யாழ்ப்பாணக் கோட்டையின் நிலைமை ஒல்லாந்த அதிகாரிகளுக்கு ஏற்கெனவே தெரிந்திருந்தாலும், அதை வலுப்படுத்துவதற்கான வளங்கள் அவர்களிடம் இருக்கவில்லை. பிரித்தானியருடன் போர் செய்யவேண்டி ஏற்பட்டால், போதிய பலம் இல்லாது இருக்கும் யாழ்ப்பாணக் கோட்டையைக் கைவிடுவது பற்றி ஏற்கெனவே பேசப்பட்டிருந்தது.

28 ஆம் தேதி முற்பகல் 10.00 மணியளவில் கோட்டையைச் சுற்றி வளைத்த பிரித்தானியப் படைகள் ஒல்லாந்தப் படைகளைச் சரணடையுமாறு உத்தரவிட்டன. எவ்வித தாக்குதலோ எதிர்த்தாக்குதலோ இல்லாமல் உடனடியாகவே யாழ்ப்பாணக் கோட்டை பிரித்தானியரிடம் சரணடைந்தது. பிற்பகல் 1.00 மணிக்கு முன்பே சரணடைவு உடன்படிக்கை கைச்சாத்தானது. யாழ்ப்பாண மாவட்டத்தில் இருந்த ஊர்காவற்றுறைக் கோட்டை, பூநகரிக் கோட்டை முதலியனவும் சரணடைந்தன. 30 ஆம் தேதி கர்னல் பார்பட்டின் படைகளிடம் மன்னார்க் கோட்டை சரணடைந்தது. பருத்தித்துறையில் இருந்து திரும்பிச் செல்லும் வழியில், படைத்தலைவன் மொன்சனிடம் யாழ்ப்பாணக் கட்டளை அதிகாரி பிரிவுக்கு உட்பட்ட வவுனியா பிரிவைச் சேர்ந்த முல்லைத்தீவு, பூவரசங்குளம், வெடிவைத்தகல்லு, பெரியமடு, விடத்தல்தீவு, பனங்காமம், அன்னதேவன்மடு, தென்னமரவாடி, சுண்டிக்குளம் ஆகிய இடங்களில் இருந்த படையினரும் சரணடைந்தனர்.[11]

விளைவுகள்

தொகு

இந்தக் கைப்பற்றல் மூலம் யாழ்ப்பாணத்தின் ஆட்சி ஒல்லாந்தரிடம் இருந்து பிரித்தானியருக்குச் சென்றது. தொடக்கத்தில், நாட்டில் அமைதி ஏற்பட்ட பின்னர் பிரித்தானியரிடம் யாழ்ப்பாணம் உள்ளிட்ட இலங்கையிலிருந்த ஒல்லாந்தரின் ஆள்புலங்கள் திருப்பி ஒல்லாந்தருக்கே வழங்கப்படும் என ஐந்தாம் வில்லியத்துடன் இணங்கியிருந்தாலும், இலங்கையில் இருந்த ஒல்லாந்த அதிகாரிகள் இந்த ஒப்பந்தத்தின்படி நடக்கவில்லை. பிரித்தானியர் படைபலம் பயன்படுத்தியே அப்பகுதிகளைக் கைப்பற்றியதால் அவற்றின் உரிமை நிரந்தரமாகவே பிரித்தானியருக்குச் சென்றுவிட்டது. 1802 இன் அமியென்சு அமைதி உடன்படிக்கையிலும் இந்த உரிமை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.[12]

மேற்கோள்கள்

தொகு
  1. Mendis, G. C., Ceylon Under the British, Asian Educational Services, New Delhi, 2005 (First Published: 1952) pp. 13, 14.
  2. De Silva, Colvin. R., Ceylon Under the British Occupation 1795 – 1833, Vol 1, Navrang Book Selers and Publishers, New Delhi, 1995 (First Published: 1941), p. 16
  3. De Silva, Colvin. R., 1995, p. 16
  4. De Silva, Colvin. R., 1995, p. 18
  5. De Silva, Colvin. R., 1995, p. 22
  6. De Silva, Colvin. R., 1995, p. 24
  7. De Silva, Colvin. R., 1995, p. 29, 30
  8. Mendis, G. C., 2005, p. 15
  9. De Silva, Colvin. R., 1995, p. 31, 32
  10. De Silva, Colvin. R., 1995, p. 33
  11. De Silva, Colvin. R., 1995, p. 34
  12. Mendis, G. C., 2005, p. 15