யூரிபியாடீஸ்

கிரேக்க பாரசீகப் போரில் எசுபார்த்தன் தளபதி

யூரிபியாடீஸ் (Eurybiades, கிரேக்கம் : Εὐρυβιάδης _ _ கிரேக்கம்: Εὐρυβιάδης ) என்பவர் கிரேக்கத்தின் மீதான பாரசீகத்தின் இரண்டாவது படையெடுப்பின் போது (கிமு 480-479) கிரேக்க கடற்படைக்கு பொறுப்பான எசுபார்த்தன் தளபதி ஆவார்.

வாழ்கை குறிப்பு தொகு

யூரிபியாடீஸ் யூரிக்லீட்ஸின் மகனாவார். இவர் கி.மு. 480 இல் கிரேக்க கூட்டணி படைகளுக்கு தளபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். கடற்படையைத் திறம்பட நடத்துகின்ற ஆற்றல், எண்ணிக்கை பலம் போன்றவை ஏதென்சுக்கு இருந்தன. ஆனால் எசுபார்த்தா தலைமையிலான பெலோபொன்னேசிய நகர அரசுகள் ஏதென்சின் தலைமையில் செயல்பட விரும்பவில்லை. ஏதென்சின் அதிகாரம் வளர்ந்து வருவத்தையும் விரும்பவில்லை. இதனால் ஏதென்சும் கிரேக்கத்தின் பொது நலனை முன்னிட்டு தான் படைபலத்தில் மிகுந்திருந்தாலும் தன் தலைமையை விட்டுத்தர முன்வந்தது. [1] யூரிபியாடெசுக்கு இறுதியில் ஏதெனிய கடற்படைத் தளபதி தெமிஸ்ட்டோக்ளீஸ் உதவினார்.

பாரசீகக் கடற்படையைச் சந்திப்பதற்காக யூபோயாவின் வடக்கே ஆர்ட்டெமிசியம் என்ற இடத்துக்குக் கப்பற்படை பயணம் மேற்கொள்வதுதான் தளபதியாக இவர் செய்த முதல் செயல். [2] கிரேக்கர்கள் அங்கு வந்தபோது பாரசீகர்கள் ஏற்கனவே அப்பகுதியில் இருப்பதைக் கண்டறிந்தனர். இதனால் யூரிபியாட்ஸ் படைகளை பின்வாங்க உத்தரவிட்டார். இருப்பினும் யூபோயன்கள் இவர்களை அங்கேயே தங்கும்படி கெஞ்சினார்கள். கப்பற்படையை அங்கேயே வைத்திருக்க தெமிஸ்டோக்கிள்சுக்கு கையூட்டு கொடுத்தனர். மேலும் தெமிஸ்டோகிள்ஸ் தனது கையூட்டின் ஒரு பகுதியை யூரிபியாட்சுக்கு கொடுத்தார் (எரோடோடசின் கூற்றுப்படி). [3] ஆர்ட்டெமிசியம் போர் முடிவற்றதாக இருந்தது. இதனால் கிரேக்கர்கள் பின்வாங்கி தங்கள் கடற்படையை சலாமிஸ் தீவுக்கு கொண்டுசென்றனர்.

துவக்கத்தில் யூரிபியாட்ஸ் சலாமிசில் இருந்து, கடற்படையை கொரிந்தின் பூசந்திக்கு கொண்டுசெல்ல விரும்பினார். அங்கு எலனிக் லீக்கின் படைகள் கோட்டைச் சுவர்களை கட்டிக்கொண்டிருந்தன. [4] கடற்படையின் சிறந்த போர்த் தந்திரமாக தெமிஸ்ட்டோக்ளீஸ், சலாமிசில் போரிடுவதில் உள்ள அனுகூலங்களை உணர்ந்தார். இதனால் அங்கு ஒரு கடற்படைப் போரை வலிந்து உருவாக்கக விரும்பினார். இதை யூரிபியாடீசின் போர்க் குழுவிடம் வற்புறுத்தினார். மேலும் ஏதேனியன் கடற்படையை (கிரேக்கப் படைகளின் மிகப்பெரிய கடற்படைக் குழு) அந்தப் பகுதியிலேயே இருத்திவைக்க அவர்களை அச்சுறுத்த வேண்டியிருந்தது. இதனால் கிரேக்க கடற்படை அங்கேயே முகாமிட்டபடி இருந்தது. இந்நிலையில் பாரசீகர்களை அந்த இடத்தில் போருக்கு இழுக்க தெமிஸ்ட்டோக்ளீஸ் ஒரு தந்திரம் செய்தார். அதன்படி கிரேக்க கடற்படை பின்வாங்கி வருவதாகவம் இங்கு வந்தால் அவர்களை சுற்றி வளைத்துவிடலாம் என்றும் ஒரு தகவலை பாரசீக படைகளுக்கு கசியவிட்டு, பாரசீக மன்னர் செர்க்சசை ஏமாற்றினார். பாரசீகர்களும் இதை நம்பி வந்து கிரேக்க கடற்படையை சூழ்ந்து கொண்டனர். இதனால் யூரிபியாட்ஸ் சலாமிசை போர்க்களமாக ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயத்துக்ககு ஆளாயினார். இந்த நிர்பந்தத்தை உருவாக்கியவர் தெமிஸ்ட்டோக்ளீஸ் ஆவார். இதேசமயத்தில் நல்வாய்பாக தெமிஸ்ட்டோக்ளீசுக்கு பக்கபலமாக அரிஸ்ட்டைடீஸ் தலைமையிலான பிரிவினர் வந்து சேர்ந்தார். சலாமிஸ் போர் கிரேக்கர்களுக்கு ஒரு தீர்க்கமான வெற்றியாகும். அதற்கு பிறகு யூரிபியாடெஸ் பாரசீகக் கடற்படையைத் துரத்திச் செல்வதை எதிர்த்தார். மேலும் தார்தனெல்சு நீரிணை நோக்கிப் பயணம் செய்து அங்கு செர்க்செஸ் கப்பல்களைக் கொண்டு கட்டியிருந்த பாலத்தை அழித்தார். செர்க்ஸ் கிரேக்கத்தில் இருப்பதை விட, தப்பிச் செல்ல வேண்டும் என்று இவர் விரும்பினார். இங்கேயே இருக்கவிட்டால் அவர் தரைவழிப் போரை மீண்டும் துவக்க வாய்ப்பு உள்ளது என்று கருதினார். [5]

எசுபார்த்தாவுக்கு வெற்றியை ஈட்டித் தந்ததற்காக யூரிபியாட்சுக்கு ஒரு ஆலிவ் மாலை பரிசாக வழங்கப்பட்டது; தெமிஸ்டோகிள்சுக்கும் இதேபோன்ற வெகுமதி வழங்கப்பட்டது. [6]

குறிப்புகள் தொகு

  1. Herodotus, 8.2; Hale, John R. (2010). Lords of the Sea: The Triumph and Tragedy of Ancient Athens. Gibson Square Books. பக். 40–41. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781906142636. https://archive.org/details/lordsofsea0000hale/page/40. 
  2. Herodotus, 8.4.
  3. Blösel, W., "The Herodotean Picture of Themistocles: A Mirror of Fifth-century Athens," in N. Luraghi (ed.), The Historian's Craft in the Age of Herodotus (Oxford 2001).
  4. Herodotus, 8.49.
  5. Herodotus, 8.108.
  6. Herodotus, 8.124.
"https://ta.wikipedia.org/w/index.php?title=யூரிபியாடீஸ்&oldid=3392592" இலிருந்து மீள்விக்கப்பட்டது