ரணஜித் குஹா
ரணஜித் குஹா (Ranajit Guha, 23 மே 1923 - 28 ஏப்ரல் 2023) என்பவர் ஒரு இந்திய வரலாற்றாசிரியர் ஆவார். இவர் சபால்டர்ன் ஸ்டடிசின் ஆரம்ப முன்னோடிகளில் ஒருவராக இருந்தார். இவர் இந்தியவியல் வரலாற்றை அடித்தள மக்களின் நோக்கிலிருந்து எழுத வேண்டும் என்பதை வலியுறுத்தியவர். இவர் 'சபால்டர்ன் ஸ்டடிஸ்' தொகுதிகளுக்கு தொகுப்பாசிரியராக இருந்தார். மேலும் இவர் ஆங்கிலத்திலும் வங்க மொழியிலும் நிறைய எழுதியுள்ளார். [1]
ரணஜித் குஹா | |
---|---|
பிறப்பு | சித்தகதி, வங்காள மாகாணம், பிரித்தானிய இந்தியா (தற்கால வங்கதேசம்) | 23 மே 1923
இறப்பு | 28 ஏப்ரல் 2023 வியன்னா வூட்ஸ், ஆஸ்திரியா | (அகவை 99)
கல்வி நிலையம் |
வாழ்கை குறிப்பு
தொகுகுஹா 1923 ஆம் ஆண்டு மே 23 ஆம் தேதி, பிரித்தானிய இந்தியாவின் (இன்றைய வங்கதேசம்) பைகராகஞ்ச் மாவட்டத்தில் உள்ள சித்தகதியில் காஸ் தாலுக்தார் குடும்பத்தில் பிறந்தார். 1934 இல் இவரது தந்தை கல்கத்தா உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றத் தொடங்கியபோது, இவரது குடும்பம் கல்கத்தாவுக்கு குடிபெயர்ந்தது. குஹா மித்ரா கல்வி நிலையத்தில் தனது பள்ளிப் படிப்பை முடித்தார். மேலும் கல்கத்தாவில் உள்ள பிரசிடென்சி பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். பின்னர் கல்கத்தா பல்கலைக்கழகத்தில் வரலாற்றில் முதுகலைப் பட்டப் படிப்பை முடித்தார். இவர் தன் ஆரம்பக் கல்விக் காலத்தில், இந்திய வரலாற்றாசிரியர் சுசோபன் சர்க்கரின் ஆய்வுகளால் ஈர்க்கப்பட்டார். [1] வங்க அறிவுஜீவிகள் வாய்வழி வரலாற்றுத் திட்டத்திற்கு அளித்த பேட்டியில், கிழக்கு வங்காளத்தில் தனது செல்வச் செழிப்பான குடும்பப் பின்னணி, வளர்ப்பு மற்றும் எழுத்தாளர்கள் டி. எச். லாரன்ஸ், பியோதர் தஸ்தயெவ்ஸ்கி மற்றும் வங்க மொழிக் கவிஞர் மைக்கேல் மதுசூதன் தத்தா உள்ளிட்டவர்களால் தனக்கு ஆரம்பகாலத்தில் ஏற்பட்ட தாக்கங்கள் சிலவற்றை இவர் ஒப்புக்கொண்டார். [2] [3]
கல்லூரி காலத்தில் மார்சியத்தில் கொண்ட ஈடுபாட்டால் 1940 களில், குஹா இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் உறுப்பினரானார். மேலும் இலண்டனில் இருந்த உலக ஜனநாயக இளைஞர் கூட்டமைப்பில் குழுவின் பேராளராக இருந்தார். இவர் 1953 இல் இந்தியாவுக்குத் திரும்பி, கல்விப் பணியில் இணைந்தார். சந்தர்நாகூர் அரசு கல்லூரியில் கற்பித்தார், மேலும் கல்கத்தா மத்திய கல்லூரியில் கற்பிக்கச் சென்றார். இவரது கடந்தகால அரசியல் பணிகள் மற்றும் பொதுவுடமை சித்தாந்தத்துடனான தொடர்புகள் நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டபோது, இவர் வங்காள கல்வி சேவைகளில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். பின்னர் இவர் ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் பணியமர்த்தப்பட்டார். 1956 இல் அங்கேரி மீதான சோவியத் படையெடுப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுவுடமைக் கட்சியின் அரசியல் செயல்பாடுகளில் இருந்து விலகினார். [1]
குஹா 1959 இல் இந்தியாவிலிருந்து ஐக்கிய இராச்சியத்திற்கு குடிபெயர்ந்தார், அங்கு இவர் சசெக்ஸ் பல்கலைக்கழகத்தில் வரலாற்றின் உயர்விரிவுரையாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். [4] பணியின் போது, குஹா ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்திலும் கற்பித்தார். [4]
ஆய்வு
தொகுசபால்டர்ன் ஸ்டடிஸ்
தொகுதெற்காசியா மற்றும் இந்திய துணைக்கண்ட வரலாற்றை ஆராய வழக்கிலிருக்கும் முக்கிய ஆய்வு முறைகள் நாடு மற்றும் பிராந்தியத்தின் சிக்கலான கடந்த காலத்தை ஆய்வு செய்ய போதுமானதாக இல்லை என்பதை குஹா கவனித்தார். அதன் பிறகு அதற்கு ஒரு மாற்று வழியை 1980 களில் தொடங்கி அறிமுகப்படுத்தியதாற்காக குறிப்பிடப்பட்டார். 1980 களில் மேம்படுத்தப்பட்ட இந்த ஆய்வு முறை, சபால்டர்ன் ஸ்டடிஸ் அல்லது சபால்டர்ன் ஆய்வுக் குழு என்று அழைக்கப்பட்டது. மேலும் இது செல்வாக்குமிக்க பிந்தைய காலனித்துவ மற்றும் பிந்தைய மார்க்சிய வரலாற்றின் கொள்கைக்குழுவினரில் ஒன்றாக கருதப்படுகிறது. [5]
"சபால்டர்ன்" என்ற சொல் அடித்தள வகுப்பினரின் குரல்களுக்கு கவனம் செலுத்த பயன்படுத்தப்பட்டது. இது இத்தாலிய மார்க்சிய மெய்யியலாளர் அண்டோனியோ கிராம்ஷி உருவாக்கிய சொல்லிலிருந்து கடன் வாங்கப்பட்டது. [5] இந்தப் பார்வையிலிருந்து வரலாற்றை ஆராய்வதில், குழு வகுப்பு, பாலினம் மற்றும் சாதி அடிப்படையிலான கீழ்ப்படிதல் மற்றும் பிராந்தியத்தின் வரலாற்றை எவ்வாறு வடிவமைத்தது என்பதை ஆய்வு செய்தது. இது இது வரையிலான முக்கிய ஆய்வுகளில் இருந்து வேறுபட்ட அணுகுமுறை.
இவரது மாணவர்களில் சிலர் சமூகவியலாளர்கள் மற்றும் வரலாற்றாசிரியர்களான பார்த்தா சாட்டர்ஜி, காயத்ரி சக்ரவர்த்தி ஸ்பிவாக், திபேஷ் சக்ரவர்த்தி ஆகியோர் அடங்குவர். [4] குஹா ஆங்கிலம் மற்றும் அவரது தாய்மொழியான வங்காள மொழி என இரண்டிலும் நிறைய எழுதியுள்ளார். [1]
தனிப்பட்ட வாழ்க்கை
தொகுகுஹா வியன்னா வூட்ஸின் எல்லையில் ஆஸ்திரியாவின் புர்கெர்ஸ்டோர்ஃப் என்ற இடத்தில் வசித்து வந்தார். ஜேர்மனியில் பிறந்த இவரது மனைவி மெக்டில்ட் குஹா, நீ ஜங்விர்த், சபால்டர்ன் கொள்கைக்குழுவினரில் ஒரு முன்னணி அறிஞராக இருந்தார். அவரை குஹா 1960 களின் முற்பகுதியில் சசெக்ஸ் பல்கலைக்கழகத்தில் சந்தித்தார். பின்னர் ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்திற்குச் சென்றனர், அங்கு இருவரும் தங்கள் பணியைத் தொடர்ந்தனர். [6]
குஹா 28 ஏப்ரல் 2023 அன்று ஆஸ்திரியாவில் உள்ள தனது வியன்னா வூட்ஸ் வீட்டில் தனது 100வது பிறந்தநாளுக்கு மூன்றரை வாரங்கள் உள்ள நிலையில் இறந்தார். [7]
நூல் பட்டியல்
தொகுநூலாசிரியர்
தொகு- A rule of property for Bengal : an essay on the idea of permanent settlement, Paris [etc.] : Mouton & Co., 1963, New edition: Duke University Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8223-1761-3
- Elementary Aspects of Peasant Insurgency in Colonial India, Oxford University Press, Delhi, 1983, New edition: Duke Univ Press, 1999, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8223-2348-6 – a classic of Subaltern Studies
- Guha, Ranajit, "History at the Limit of World-History" (Italian Academy Lectures), Columbia University Press 2002
- An Indian Historiography of India: A Nineteenth Century Agenda & Its Implications. Calcutta: K.P. Bagchi & Company. 1988.
- Dominance without Hegemony: History and Power in Colonial India, Harvard University Press, 1998
- The Small Voice of History, Permanent Black, 2009
தொகுப்பாசிரியர்
தொகு- (with Gayatri Chakravorty Spivak), Selected Subaltern Studies, New York: Oxford University Press, 1988
- A Subaltern Studies Reader,1986–1995, Univ of Minnesota Press, 1997, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8166-2758-4
கட்டுரைகள்
தொகு- The Prose of Counter-Insurgency பரணிடப்பட்டது 2012-04-28 at the வந்தவழி இயந்திரம்
குஹா பற்றிய படைப்புகள்
தொகு- Sathyamurthy, T. V. "Indian Peasant Historiography: A Critical Perspective on Ranajit Guha's Work." In: Journal of Peasant Studies (October 1990) vol.18, no.1, pp. 93–143.
- Ranajit Guha's Biography written by Shahid Amin and Gautam Bhadra and the complete bibliography compiled by Gautam Bhadra are available in Subaltern Studies Volume VIII edited by David Arnold and David Hardiman, OUP, 1994.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 Mukherjee, Somak. "Ranajit Guha, India's oldest living historian, starts his 100th year with a dazzling legacy". Scroll.in (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 5 March 2023. பார்க்கப்பட்ட நாள் 1 May 2023.
- ↑ Manjapra, Kris (2 October 2018). "Bengali Intellectuals Oral History Project (BIOHP) List of Interviewees". South Asia: Journal of South Asian Studies 41 (4): 922–923. doi:10.1080/00856401.2018.1514558. பன்னாட்டுத் தர தொடர் எண்:0085-6401. https://doi.org/10.1080/00856401.2018.1514558. பார்த்த நாள்: 1 May 2023.
- ↑ "Oral history interview with Ranajit Guha | Archives at Tufts". archives.tufts.edu. Archived from the original on 24 June 2022. பார்க்கப்பட்ட நாள் 1 May 2023.
- ↑ 4.0 4.1 4.2 "Historian Ranajit Guha Passes Away". The Wire. Archived from the original on 1 May 2023. பார்க்கப்பட்ட நாள் 1 May 2023.
- ↑ 5.0 5.1 "Ranajit Guha passes away: The Subaltern School and Guha's contributions to South Asian Studies". The Indian Express (in ஆங்கிலம்). 29 April 2023. Archived from the original on 30 April 2023. பார்க்கப்பட்ட நாள் 1 May 2023.
- ↑ Milinda Banerjee. "In Search of Transcendence: An Interview with Ranajit Guha" (PDF). ஐடல்பேர்க் பல்கலைக்கழகம். Archived from the original (PDF) on 24 September 2015. பார்க்கப்பட்ட நாள் 26 February 2011.
- ↑ "নিম্নবর্গের ইতিহাস সাধনার অন্যতম পথিকৃৎ রণজিৎ গুহের জীবনাবসান" (in Bengali). Anandabazar Patrika. Archived from the original on 29 April 2023. பார்க்கப்பட்ட நாள் 29 April 2023.