ராஜா ஜென்கின்ஸ்

ராஜா ஜென்கின்சு (பிறப்பு: ஒக்டோபர் 30. 1957) இலங்கையின் மலையகத்தில் வாழ்ந்து வரும் ஒரு கலைஞர். கலைத்துறையையே தனது முழுநேரப் பணியாகக் கொண்டுள்ள இவர் "சாமு" எனும் புனைப் பெயரில் அறியப்பட்டவர்.

வாழ்க்கைக் குறிப்பு தொகு

இலங்கையின் கண்டி மாவட்ட, கங்கவட்ட கோரளை பிரதேச செயலாளர் பிரிவில் வாழ்ந்துவரும் இவர் கண்டியைச் சேர்ந்த எசு. ஜென்கின்சு, சந்திரா தம்பதியினரின் மகனாகப் பிறந்தவர். க. பொ. த உயர்தரம் வரை க/வித்தியார்த்த கல்லூரியில் கல்வி பயின்றவர். இவரின் மனைவி பெயர் ஜெயந்தி. இவர்களுக்கு நிதர்சனி, வாணிசிறி, பிரேம் ஆகிய மூன்று பிள்ளைகள் உளர்.

கலைத்துறை ஈடுபாடு தொகு

பாடசாலை வாழ்க்கையில் 10 வயதாக இருக்கும் போது நகைச்சுவை நடிகராக மேடை நாடகத்தில் நடித்துள்ளார். அதன்பிறகு ஏ. ரகுநாதன் தயாரித்த நிர்மலா திரைப்படத்தில் 12 வயதிலேயே சிறு சிறு வேலைகளைச் செய்து சினிமாவை மிக அருகில் இருந்து பார்க்கும் வாய்ப்பைப் பெற்றார். 17 வயதில் “காத்திருப்பேன் உனக்காக” திரைப்படத்தில் சிறிய பாத்திரமொன்றில் தோன்றி நடிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அன்று தொடங்கிய இவரின் கலைப்பயணம் இன்றுவரை தொடர்கிறது.

துணை நடிகர் தொகு

தமிழ், சிங்களம், ஆங்கிலம், பிரெஞ்சு, யப்பான், இத்தாலி ஆகிய மொழித் திரைப்படங்களில் துணை நடிகராக பல்வேறு வேடங்களில் நடித்துள்ளார். இலங்கையில் தயாரிக்கப்படும் சர்வதேசத் திரைப்படங்களுக்கு துணை நடிகர்களை ஒழுங்குப்படுத்தும் முகவராகவும் செயலாற்றி வருகின்றார். உலகப் புகழ்பெற்ற ஆங்கில நடிகர் சார்லி சப்ளினின் மகள் ஜெராய்ட் சப்ளின் (Gerald Chaplin) டாக்டர் சவாகோ “Doctor Zhivago” என்ற திரைப்படத்தில் நடித்து, ஆசுகார் விருது பெற்ற நடிகையாவார். இவரின் “மதர் திரேசா” Mother Theresa என்ற ஆங்கிலப் படத்தில் துணை நடிகராக நடித்ததையும், இந்தி பிரபல நடிகர் கபீர்பேடி, இந்தி திரைப்பட வில்லன் நடிகர் குல்சான் ஆகியோர்களுடன் இணைந்து நடித்ததையும் தன்னுடைய கலைத்துறை வாழ்வில் மறக்கமுடியாத அனுபவமாக இவர் கொண்டுள்ளார்.

மொழிமாற்றம் தொகு

இலங்கையில் தயாரிக்கப்பட்ட முதல் வர்ணத்திரைப்படமான "சர்மிலாவின் இதயராகம்" திரைப்படத்தை சிங்களத்தில் “ஒபமட வாசனா” என்று மொழிமாற்றம் செய்தனர். அதற்கு சிங்களத்தில் உதவி வசனகர்த்தாவாக இவர் கடமையாற்றினார்.

ரத்னதீப பதனம நிறுவனர் தொகு

கண்டி மாவட்டத்தை மையமாகக் கொண்டு தேசிய ரீதியில் புகழ்பெற்று விளங்கும் கலைஞர்கள், எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், மற்றும் திறமைமிக்க மாணவர்கள், ஆசிரியர்களை இன, மத, பால் வேறுபாடுகளுக்கு அப்பால் நின்று சிறப்புபடுத்து முகமாக ஆண்டு தோறும் வழங்கப்பட்டு வரும் ரத்னதீப விருது வழங்கும் “ரத்னதீப பதனம” எனும் அரசியல் சார்பற்ற அமைப்பின் நிறுவனரும், முதன்மை அமைப்பாளரும் இவராவார்

பெற்ற சிறப்புகள் தொகு

  • “கலைச்சுடர்” விருது - மத்திய மாகாண முஸ்லிம் கலாசார அமைச்சு 1999
  • “கலாகுரு” - தமிழ் கலைஞர் அபிவிருத்தி நிலையம்
  • இவை தவிர மத்திய மாகாண இந்து கலாசார அமைச்சினாலும் இவர் கௌரவிக்கப்பட்டுள்ளார்.

உசாத்துணை தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ராஜா_ஜென்கின்ஸ்&oldid=696902" இலிருந்து மீள்விக்கப்பட்டது