ராஜீவலோசன் கோயில்
ராஜீவ லோசன் கோயில் (Rajiv Lochan Temple) என்பது இந்தியவின், சத்தீசுகர் மாநிலத்தின் ராஜீம் என்ற ஊரில் உள்ள ஒரு விஷ்ணு கோயிலாகும்.[1] இது கிபி 8 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது.
ராஜீவலோசன் கோயில் | |
---|---|
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
அமைவு: | ராஜீம் |
ஆள்கூறுகள்: | 20°57′50″N 81°52′39″E / 20.9640°N 81.8775°E |
கோயில் தகவல்கள் |
இந்த கோயிலின் நடுவில் ஒரு முற்றம் அமைந்துள்ளது. இதன் நான்கு மூலைகளில் நான்கு சிற்றாலயங்கள் அமைக்கப்பட்டுள்ளன. முதன்மைக் கோயிலானது ஒரு முன் மண்டபம், நடு மண்டபம், கருவறை ஆகியவற்றைக் கொண்டுள்ளது. கருவறையைச் சுற்றி விமானம் அமைந்துள்ளது. இக்கோயிலின் கதவுகள், தூண்கள் போன்றவற்றில் பல்வேறு இந்து கடவுள்கள், தெய்வங்கள் மற்றும் பிற உருவங்கள் விரிவாக செதுக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இங்கு வழிப்படப்படும் முதன்மைத் தெய்வமாக விஷ்ணு உள்ளார். விஷ்ணுவின் உருவமானது ஆயுதம் தாங்கிய நான்கு கைகளுடன் உள்ளார். புரி ஜகந்நாதர் கோயிலுக்குச் நோக்கிச் செல்லும் பாதையில் அமைந்துள்ள இக்கோயிலுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான யாத்ரீகர்கள் வருகை தருகின்றனர்.[1][2]
வரலாறு
தொகுஇந்தக் கோயிலுக்குள் இரண்டு கல்வெட்டுகள் உள்ளன. முதல் கல்வெட்டானது இது நள வம்சத்தைச் சேர்ந்த விலாசதுங்கா என்பவரால் கட்டப்பட்டது என்பதைக் குறிப்பிடுகிறது. கல்வெட்டில் நாள் குறிக்கப்படவில்லை என்றாலும், கல்வெட்டின் எழுத்தமைதியைக் கொண்டு இது கிபி 8 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம் எனப்படுகிறது. கிபி 1145 ஆண்டைச் சேர்ந்த இரண்டாவது கல்வெட்டானது, தொன்ம மன்னர் ஜகத் பால் கட்டிய கோயிலைக் பற்றிக் குறிப்பிடுறது.[2]
இது கட்டப்பட்ட காலம் குறித்து வரலாற்றாசிரியர்களிடையே ஒத்த கருத்து இல்லை. அலெக்சாண்டர் கன்னிங்காம் உட்பட சில வரலாற்றாசிரியர்கள், கோயிலானது கி.பி. 5 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்கின்றனர்.[3] அப்படியானால், நள வம்சத்தினரின் கல்வெட்டானது அநேகமாக மற்றொரு கோவிலைக் குறிக்கிறது, அல்லது இந்த கோவிலின் கட்டுமானத்தின் மறுசீரமைப்பைக் குறிக்கிறது. மற்ற சில ஆதாரங்கள் இது 7 மற்றும் 8 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில் கட்டப்பட்டதாக கூறுகின்றன, இது நள வம்ச கல்வெட்டின் அதே காலமாகும்.[4]
இந்த கோயில் பல நூற்றாண்டுகள் இடைவெளியில் பல முறை புதுப்பிக்கப்பட்டுள்ளது.[5]
தொன்மக்கதை
தொகுஒரு தொன்மத்தின் படி, இந்த கோயில் விஸ்வகர்மனால் வடிவமைக்கபட்டது என்று கூறப்படுகிறது. மற்றொரு தொன்மமானது, தொன்ம மன்னரான ஜகத் பால் முழு கோவிலையும் ஒரே நாளில் கட்டினார் என்கிறது. மூன்றாவது தொன்மக்கதை இந்தக் கோயிலைக் கட்ட தொன்ம மன்னர் ரத்னகரே காரணம் என்று கூறுகிறது. ரத்னாகர் விஷ்ணுவின் பக்தர் என்றும் அவருக்கு விஷ்ணு ஜொலிகும் தாமரைப் போன்ற கண்களுடன் ( ராஜிவ-லோச்சனா) காட்சியளித்தார். விஷ்ணு இதே கோலத்தில் இங்கேயே எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்க வேண்டும் என்று ரத்னாகர் வேண்டினார். அவரின் வேண்டுகோளுக்கு இணங்கிய விஷ்ணு அதே கோலத்தில் இங்கு எழுந்தருளினார் என்று அக்கதை கூறுகிறது.[1]
விளக்கம்
தொகுஇக்கோயில் பஞ்சாயத்தானா வடிவில் உள்ளது. கோயில் வளாகத்தின் நான்கு மூலைகளிலும் நான்கு சிற்றாலயங்கள் உள்ளன. இந்த சிற்றாலயங்களானது விஷ்ணுவின் நான்கு அம்சங்களான நரசிம்மர், வாமனர், வராகர், பத்ரிநாதர் ஆகியோருக்கு அமைக்கபட்டுள்ளன.[5]
இந்த கோயிலானது சுமார் 69 க்கு 43 அடி பரப்பளவிலும் சுமார் 8 அடி உயரமும் கொண்ட ஒரு மேடையின் மேல் கட்டப்பட்டுள்ளது. மேடையின் வடமேற்கு, தென்மேற்கு மூலைகளில் இரண்டு படிகள் உள்ளன. கோயில் கட்டடம் 59 அடி நீளமும், 25.5 அடி அகலமும் கொண்டது. இது செங்கற்கலால் கட்டப்பட்டுள்ளது.[6]
வாயில்
தொகுகோயிலின் முதன்மை நுழைவாயிலானது மேற்கு நோக்கி அமைந்துள்ளது. நுழைவாயில் உள்ள தாழ்வாரத்தில் இரண்டு அலங்காரத் தூண்கள் உள்ளன. அலங்காரத் தூண்களில் உயரமான பெண்ணின் உருவம் அமைக்கப்பட்டுள்ளது. அதில் ஒரு பெண் தனது இடது கையால் ஒரு மரத்தின் கிளையைப் பிடித்துக் கொண்டிருக்கிறாள், வலது கையை உயர்த்தியுள்ளாள். இன்னொரு தூணில் உள்ள பெண் சிலையானது இடது கையை உயர்த்தி, வலது கையில் ஒரு மாம்பழக் கொத்தை வைத்திருப்பது போல அமைக்கப்பட்டுள்ளது. தூண்கள் மனித உருவங்களாலும், ஒரு ஜோடி முடிச்சு பாம்புகளாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளன.[7]
நுழைவாயிலில் உள்ள தாழ்வாரமானது இரண்டு அறைகளாக பிரிக்கப்பட்டுள்ளது. புத்தர், அனுமன் சிற்பங்கள் உள் அறையின் மூலைகளில் வைக்கப்பட்டுள்ளன. புத்தரின் சிற்பம் கருங்கல்லால் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் புத்தர் போதி மரத்தின் கீழ் தனது வலது கையை முழங்காலில் வைத்து, இடது கையை மடியில் ஊன்றி தியானத்தில் அமர்ந்திருப்பதை சித்தரிக்கப்பட்டுள்ளது.[8]
கோயிலின் நுழைவாயில் சிற்ப வேலைப்பாடுகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. வாயில் இரண்டு மூன்று அடுக்குகளாக அமைக்கப்பட்டுள்ளது. வாயிலின் ஒரு அடுக்கின் உச்சியில் கஜலட்சுமி சித்தரிக்கபட்டுள்ளார். அடுத்த ஒரு அடுக்கின் உச்சியில், சிவன் நாகங்களுடன் சித்தரிக்கப்பட்டுள்ளார். மூன்றாவது அடுக்கின் உச்சியில் ஆதிசேஷன் மீது விஷ்ணு ஓய்வெடுப்பதுபோல சித்தரிக்கப்பட்டடுள்ளார். இறுதி அடுக்கில் பல உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன.[7]
மண்டபம்
தொகுஇங்குள்ள மண்டபம் வடக்கு நோக்கி திறப்பதைக் கொண்டுள்ளது. இந்த மண்டபம் தட்டையான கூரையைக் கொண்டுள்ளது. இது நடுவில் ஆறு தூண்கள் கொண்ட இரண்டு வரிசைகளும்ம், இருபுறமும் ஆறு அலங்காரத் தூண்கள் ஒற்றை வரிசையாலும் காணப்படுகின்றன. சதுர தூண்களில் கீழ் பாதி வெறுமையாக உள்ளன, மேல் பாதி சிற்ப வேலைப்பாடுகளுடன் உள்ளன. அலங்காரத் தூண்களில் உயரமான ஒற்றைச் சிலைகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.[9]
தெற்கு சுவரின் அலங்காரத் தூண்களில் சித்தரிக்கப்பட்டுள்ள உருவங்கள்: (கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி)[6]
- ஆயுதம் ஏந்திய துவாரபாலகர்
- நரசிம்மர்
- மகர வாகனத்தில் கங்கை இருக்க, அவருக்கு குடை பிடித்தபடி ஒரு சேவகர்.
- ஒரு காதல் ஜோடி
- சீதை என அடையாளம் காணப்பட்ட ஒரு பெண் உருவம்
- வில், அம்பு ஆகியவற்றுடன் ஆயுதம் தாங்கிய ஒரு ஆண் உருவம்.
வடக்கு சுவரின் அலங்காரத் தூண்களின் சித்தரிக்கப்பட்டுள்ள உருவங்கள்: (கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி)[6]
- ஆயுதம் ஏந்திய துவாரபாலகர்
- வராகர்
- ஆமை வாகனத்தின் மீது நின்றுள்ள யமுனை
- ஒரு பெண் உருவம்
- எட்டுக் கைகளைக் கொண்டு, சிங்கத்தின் மீது அமர்ந்திருக்கும் துர்க்கை
- ஐந்து குதிரைகளுடன் தேரில் சவாரி செய்யும் ஆண் உருவம். இது சூர்யனாக இருக்கக்கூடும் என்று கன்னிங்காம் கருதுகிறார்.
மண்டபத்தின் வடக்கு மற்றும் தெற்கு பக்கத்தில் இரண்டு நீண்ட அறைகள் பிற்காலத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. இவை பிரதான கோவில் கட்டிடத்தை பார்ப்பதற்கு தடையாக உள்ளன. இதுபற்றி அலெக்சாண்டர் கன்னிங்காம் குறிப்புடுகையில் "கோவிலின் முழு காட்சியையும் முற்றிலுமாக கெடுக்கின்றன" என்று குறிப்பிடுகிறார். இந்த அறைகள் கோயிலின் பண்டாரமாகவும் (கருவூலம்) மடப்பள்ளியாகவும் (சமையலறை) பயன்படுத்தப்படுகின்றன.[8]
கருவறை
தொகுமண்டபத்தின் கிழக்குப் பகுதியில் கருவறைக்குள் செல்லும் முன் மண்டபம் உள்ளது. கருவறை சதுரவடிவில், சுமார் 20 அடி கொண்டதாக உள்ளது. கருவறையில் நுழைவாயிலானது வேலைப்பாடுகள் மிக்க வாயிலைக் கொண்டுள்ளது. வாயிலின் உச்சியில் கருடன் மீது அமர்ந்த நிலையில் விஷ்ணுவின் உருவம் அமைக்கப்பட்டுள்ளது. கருவறையினுள் நான்கு கரங்களுடன் கூடிய விஷ்ணுவின் அவதாரமான ராஜிவ-லோச்சனா"(தாமரைக் கண்ணன்) உள்ளார்.[5][2]
கருவறையின் மேலே ஒரு விமானமானது ஒரு சதுர பிரமிடு வடிவத்தில், ஐந்து நிலைகளுடன் அமைந்துள்ளது. இதன் பாணி மகாபோதி கோயிலைப் போன்றது. கோயில் விமானத்தின் உயரம் தரையிலிருந்து சுமார் 50 அடி உயரத்தில் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.[8]
வழிபாடு
தொகுஇங்கு ஒவ்வொரு ஆண்டும் மகா சிவராத்திரி அன்று ராஜீவ் லோகன் கும்பமேளா என்று அழைக்கபடும் கும்பமேளா நடைபெறுகிறது.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 "By the banks of three rivers" (in en-IN). The Hindu. 2016-07-21. பன்னாட்டுத் தர தொடர் எண்:0971-751X இம் மூலத்தில் இருந்து 2020-11-08 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20201108133307/https://www.thehindu.com/features/friday-review/history-and-culture/By-the-banks-of-three-rivers/article14500979.ece.
- ↑ 2.0 2.1 2.2 Cunningham 1884, ப. 7.
- ↑ Cunningham 1884, ப. 9.
- ↑ Nigam, L. S.. "Art Tradition of Daksina Kosala (Chattisgarh)". Journal of Pt. Ravishankar Shukla University 8-15: 3. பன்னாட்டுத் தர தொடர் எண்:0970-5910. https://www.prsu.ac.in/backend/web/theme/tender/6262.pdf. பார்த்த நாள்: 2023-10-31.
- ↑ 5.0 5.1 5.2 Nigam, L. S.. "Art Tradition of Daksina Kosala (Chattisgarh)". Journal of Pt. Ravishankar Shukla University 8-15: 4. பன்னாட்டுத் தர தொடர் எண்:0970-5910. https://www.prsu.ac.in/backend/web/theme/tender/6262.pdf. பார்த்த நாள்: 2023-10-31.
- ↑ 6.0 6.1 6.2 Cunningham 1884, ப. 10.
- ↑ 7.0 7.1 Cunningham 1884, ப. 12.
- ↑ 8.0 8.1 8.2 Cunningham 1884, ப. 11.
- ↑
{{cite book}}
: Empty citation (help)