ராஷோமொன் (திரைப்படம்)

ராஷோமொன் (羅生門 Rashōmon?) என்பது அகிரா குரோசாவா இயக்கி, 1950-இல் வெளிவந்த ஓர் ஜப்பானிய மொழி வரலாற்றுப் புனைவு நாடகத் திரைப்படம். ருயூநோசூகே அகுதாகவாவின் சிறுகதைகளான, இன் எ குரோவையும், ராஷோமொனையும் அடிதழுவி இத்திரைப்படம் இயற்றப்பட்டது. காட்சி அமைப்பு 'ராஷோமொன்' சிறுகதையிலிருந்தும், பாத்திரப்படைப்பும், கதைக்களமும் 'இன் எ குரோவ்' சிறுகதையிலிருந்தும் பெறப்பட்டது. 'ராஷோமொன்' என்ற பெயர் காட்சிகள் நிகழும் இடமான கியோத்தோ நகர வாயிலைக் குறிப்பதாகும்.[1]

ராஷோமொன்
சுவரொட்டி சித்திரம்
இயக்கம்அகிரா குரோசாவா
தயாரிப்புமினோரு ஜிங்கோ
மூலக்கதை"ராஷோமொன்" மற்றும் "இன் எ குரோவ்"
படைத்தவர் ருயூநோசூகே அகுதாகவா
திரைக்கதைஅகிரா குரோசேவா
ஷினோபு ஹஷிமோடோ
இசைஃபூமியோ ஹயாசகா
நடிப்புதோஷிரோ மிஃபூனே
மச்சிகோ கியோ
மசயூகி மோரி
தகாஷி ஷிமுரா
மினோரு சியாகி
ஒளிப்பதிவுகஸூவோ மியாகவா
படத்தொகுப்புஅகிரா குரோசேவா
கலையகம்தாயேய் திரைப்பட நிறுவனம்
விநியோகம்தாயேய் திரைப்பட நிறுவனம்
வெளியீடுஆகத்து 25, 1950 (1950-08-25)
ஓட்டம்88 நிமிடங்கள்
நாடுஜப்பான்
மொழிஜப்பானிய மொழி
ஆக்கச்செலவு$250,000

வெவ்வேறு பாத்திரங்கள் ஒரே நிகழ்ச்சியின் முரணான, தன்முனைப்பான, வெவ்வேறு பிம்பங்களைக் கதையாக்கிக் கூறுவதாக அமையும் கதையுத்தி இத்திரைப்படத்தின் தனிச்சிறப்பாகக் கருதப்படுகிறது.ராஷோமொன் விளைவு என்ற சொல்லாடல் அன்றாட உலக நிகழ்வுகள் பற்றிய பற்பல பார்வையாளர்களின்/சாட்சிகளின் சாட்சியங்கள் முரணானத் தகவல்களைக் கொண்டிருக்கும் நிலையைக் குறிக்கும்.

உலக மேடையில் ஜப்பானிய மொழி திரைப்படங்களுக்கு அடையாளம் இத்திரைப்படத்தின் வாயிலாகக் கிடைத்ததாகக் கருதப்படுகிறது.

1951-இல் வெனீஸ் திரைப்பட விழாவின் பொன் அரி விருது, 1952-இல் 24-ஆவது அகாதமி விருதுகளின் கௌரவ விருது உள்ளிட்டப் பல விருதுகளை வென்ற இப்படம், உலகின் தலைச்சிறந்தத் திரைப்படைப்புகளுள் ஒன்றாகக் கருதப்படுகிறது.

கதையோட்டம்

தொகு

கிகோரி எனும் விறகுவெட்டி மற்றும் தபி ஹோஷி எனும் துறவி, ராஷோமொன் நகர வாயிலின் கீழ் பெருமழைக்கு ஒதுங்கி அமர்ந்திருக்கும் காட்சியில் இருந்து திரைப்படம் துவங்குகிறது. அப்போது அங்கு வந்து சேரும் மற்றோர் நபரிடம், அந்த இருவரும் தாங்கள் அன்று கண்ட குழப்பமான கதை ஒன்றைப் பற்றிக் கூறத் தொடங்குகின்றனர். கிகோரி, மூன்று நாட்களுக்கு முன் காட்டிற்கு மரம் வெட்ட சென்றபோது கொலை செய்யப்பட்ட ஒரு சாமுராயின் சடலத்தைக் கண்டதாகவும்; அக்காட்சி தந்த பயத்தில் பதறியடித்துக் கொண்டு ஓடி அதிகாரிகளிடம் இது குறித்துத் தெரியபடுத்தியதாகவும் கூறுகிறான். துறவியும், கொலை நடந்த அன்று தான் அச்சாமுராயும் , அவனது மனைவியும் பயணம் போனதைக் கண்டதாகக் கூறுகிறான். இருவரும் நீதிமன்றம் முன்பு சாட்சியம் தர அழைக்கப்பட்டிருந்தனர்; நீதிமன்றத்தில், பிடிபட்டக் கொள்ளையன் தஜோமாருவைக் இருவரும் சந்திக்கின்றனர். சாமுராயின் கொலைக்கும், அவனது மனைவியின் கற்பழிப்புக்கும் தானே பொறுப்பு என்று அந்தக் கொள்ளையன் கோருகிறான்.

கொள்ளைக்காரனின் கூற்று

தொகு

தஜோமாரு, ஒரு பேர்போன வழிப்பறித் திருடன். பழைய வாள்களின் குவியல் ஒன்றைத் தான் கண்டதாகக் கூறி சாமுராயை ஏமாற்றி, அவனை மலைத்தடத்தில் இருந்து விலகச்செய்து, அவனை ஒரு மரத்தில் கட்டிப்போட்டதாகவும், அங்கு சாமுராயின் மனைவியை இழுத்து வந்ததாகவும் கூறுகிறான். அவள் முதலில் குறுவாள் கொண்டு தன்னைத் தற்காத்துக் கொள்ள முயன்றதாகவும், ஆனால் கொள்ளையன் அவளை கொஞ்சம் கொஞ்சமாக மயக்கி அவளைப் புணர்ந்ததாகவும் கூறுகிறான். இதனால் நேர்ந்த அவமானத்தை உணர்ந்த அவள், அவளைப் பழியில் இருந்தும் அவமானத்தில் இருந்தும் காக்க கொள்ளையனை தன் கணவனான சாமுராயோடு ஒற்றைக்கு ஒற்றையாகச் சண்டையிடுமாறு வேண்டுவதாகக் கூறுகிறான். மேலும் இருவரும் பெருவீரத்துடனும் உக்கிரமாகவும் போரிட்டதாகவும், இறுதியில் தானே வென்றதாகவும் தஜோமாரோ கூறுகிறான். எனினும் அவள் மிரண்டு ஓடி விடுவதாகக் கூறுகிறான். மனைவி கையில் இருந்த விலை உயர்ந்த குறுவாளைப் பற்றிய கேள்விக்கு, அவன் அன்று நிகழ்ந்த குழப்பங்களுக்கிடையில் அதனைக் கவனிக்கத் தவறியதாகக் கூறுகிறான்; அப்படி தவறியது முட்டாள்தனம் என்றும் நொந்துகொள்கிறான்.

மனைவியின் கூற்று

தொகு

சாமுராயின் மனைவி வேறோர் கதையை நீதிமன்றத்தில் கூறுகிறாள். தன்னைக் கற்பழித்தபின் தஜோமாரு சென்றுவிடுவதாகக் கூறுகிறாள். அவள், தன் கணவனிடம் தன்னை மன்னிக்குமாறு மன்றாடியதாகவும், அவனோ உண்ர்ச்சிகளின்றி அவளை வெறித்து நோக்கிக்கொண்டிருந்ததாகவும் கூறுகிறாள். அவள் அவனது கட்டவிழ்த்து விட்டு, தன்னைக் கொன்றுவிடுமாறு வேண்டியதாகவும் கூறுகிறாள். இருந்தும் அவன் வெறுப்புடன் அவளை வெறித்து நோக்கிய வண்ணமே இருந்ததாகவும், அந்த பார்வையின் வாட்டலைத் தாங்க முடியாமல் கையில் வைத்திருந்த குறுவாளோடு தான் மயங்கியதாகவும் கூறினாள். கண்விழித்தபோது கணவன் மார்பில் குறுவாள் பாய்ந்து இறந்து கிடந்ததாகக் கூறினாள். தானும் பலமுறை தற்கொலைக்கு முயன்று தோற்றதாகவும் கூறினாள்.

சாமுராயின் கூற்று

தொகு

இறந்துபோன சாமுராயின் கதையை அவனது ஆவியைத் தன் உடலில் ஏற்ற சூன்யக்காரி மூலமாக நீதி மன்றம் அறிகிறது. தஜோமாரு தன் மனைவியைக் கற்பழித்த பின், அவளைத் தன்னோடு வருமாறு கேட்டதாக சாமுராய் கூறுகிறான். அவனது அழைப்பை ஏற்ற அவள், தஜோமாருவிடம் அவளது பங்கம் தீர சாமுராயைக் கொன்றுவிடுமாறு அவள் வேண்டியதாகக் கூறுகிறான். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த தஜோமாரு அவளைப் கொன்றுவிட வாய்ப்ப தருவதாக சாமுராய் கூறுகிறான். இந்த வார்த்தைகளுக்கே அவனது குற்றத்தை மன்னிக்கத் தான் ஆயத்தமாக இருந்ததாகவும் கூறுகிறான். அவள் அங்கிருந்து தப்பிவிட, அவளை பிடிக்க முயன்று தோற்று திரும்பும் தஜோமாரு தன்னை விடுவித்ததாகக் கூறுகிறான். பின்னர் மனைவியின் குறுவாள் கொண்டு தான் தற்கொலை செய்துகொண்டதாகவும், அதன் பின்னர் யாரோ அக்குறுவாளை தன் மாரிலிருந்து நீக்கியதாகவும் கூறுகிறான்.

விறகு வெட்டியின் கூற்று

தொகு

மீண்டும் ராஷோமொன் வாயிலில் (வழக்கு விசாரனை முடிந்த நிலையில்) விறகுவெட்டி அந்த மூன்று கதைகளுமே பொய் என்று மழைக்கு ஒதுங்கிய மூன்றாமவனிடம் கூறுகிறான். உண்மையில் தான் அந்தக் கற்பழிப்பையும் கொலையையும் கண்டதாகவும், தனக்கும் இந்த வழக்கிற்கும் நெருங்கிய தொடர்பை தவிர்க்க விரும்பி முழு உண்மையையும் கூறவில்லை என்று தெரிவிக்கிறான். அவனது கூற்றுப்படி, தஜோமாரு சாமுராயின் மனைவியைத் தன்னை மணந்து கொள்ளுமாறு வேண்டியதாகவும், அவள் அதற்கு இணங்க மறுத்துவிட்டு, சாமுராயை விடுவித்ததாகவும் கூறுகிறான். முதலில், சாமுராய் தஜோமாருவிடம் சண்டையிட மறுத்ததாகவும், ஒரு கலங்கமானவளுக்காகத் தன் உயிரைப் பணயம் வைக்க விருப்பமில்லை என்றும் கூறியதாகவும் கூறுகிறான். இதனைக் கேட்ட சாமுராயின் மனைவி இருவரையும் கடுமையாக வசைபாடியதாகவும், இருவரும் உண்மையான ஆண்களே இல்லை என்றும், உண்மையான ஆண்மகன் ஒரு பெண்ணின் காதலுக்காக உயிரையும் மதிக்க மாட்டார்கள் என்றும் ஏசியதாகக் கூறுகிறான். இந்தத் தூண்டுதலின் பேரில் இருவரும் சற்று கலவரத்தோடும் பயத்தோடும் தங்கள் வாளை ஏந்தி சண்டையிடத் தொடங்குகின்றனர். அவர்களின் சண்டை தஜோமாரு கூறியதுபோல் வீரமாகவோ உக்கிரமாகவோ இல்லை என்றும் பரிதாபமாக இருந்ததாகக் கூறுகிறான். இறுதியில் அதிர்ஷ்ட்ட வசமாகவே தஜோமாரு சாமுராயைக் வெல்லுவதாகக் கூறுகிறான். சற்றுத் தயக்கத்திற்குப் பின்னரே உயிக்கு மன்றாடும் சாமுராயைக் கொல்லுகிறான். அவளும் அச்சத்தில் அவ்விடத்தை விட்டு ஓடிவிடுகிறாள். தஜோமாருவாலும் அவளைப் பிடிக்க முடிவதில்லை; அவன் சாமுராயின் வாளை எடுத்துக்கொண்டு ஓடிவிடுகிறான்..

முடிவு

தொகு

வாயிலில் கிகோரி கதை சொல்லிக்கொண்டிருக்கும்போது, அங்கு ஒரு குழந்தையின் அழுகுரல் கேட்கிறது. தேடிப்பார்க்கையில் கூடையில் ஒரு குழந்தை கைவிடபட்டுக் கிடப்பது தெரிகிறது. கூடையில் குழந்தையோடு வைக்கப்பட்டிருக்கும் தாயத்தையும், ஆடையயும் மூன்றாமவன் எடுத்துக்கொள்கிறான். இச்செயலை விறகுவெட்டி கடிந்துகொள்ள, மூன்றாமவன் விறகுவெட்டியை நிந்திக்கிறான். மேற்கூறப்பட்டக் கதைகளில் தொலைந்த குறுவாளை விறகுவெட்டி தான் எடுத்து கொண்டான் என்பதைப் புரிந்து கொண்ட மூன்றாமவன், அவனைக் கொள்ளையன் என்று பழிக்கிறான். அவன், எல்லோரும் சுயநலத்தினாலேயே உந்தப்படுகிறார்கள் என்றும் கூறிவிட்டு அவ்வாயிலை விட்டுச் செல்கிறான்.

துறவி மனிதத்தின்மீது வைத்திருந்த நம்பிக்கையை, அன்று அவன் கண்ட பொய் புரட்டுகள், குழையச் செய்கின்றன. கிகோரி துறவி கையில் இருக்கும் குழந்தையை அணுகும்போதுதான் அவன் உணர்வு மீள்கிறது. துறவிக்கு கிகோரியின் நோக்கத்தின் மீது சந்தேகம் தோன்ற குழந்தையைத் தர மறுக்கிறான். கிகோரி தன் வீட்டில் ஏற்கனவே தனக்கு ஆறு குழந்தைகள் இருப்பதாகவும், அவர்களோடு, இந்தக் குழந்தையையும் பார்த்துக்கொள்வதாக உத்தேசிப்பதாகவும் கூறுகிறான். இந்த செய்தி கிகோரி அந்த குறுவாளைத் திருடியதைப் புதிய கோணத்தில் காட்டுகிறது. துறவி மனிதத்தின் மீது தனக்கிருக்கும் நம்பிக்கையை கிகோரி உறுதிபடுத்துவதாகக் கூறி, குழந்தையை அவனிடம் ஒப்படைக்கிறான். கிகோரி குழந்தையோடு வீடு திரும்புகிறான்; மழை ஓய்கிறது; கதைத் துவக்கத்தில் இருண்டிருந்த வானம், மேகங்கள் களைந்து சூரிய ஒளி நிறைகிறது. இவ்வாறு படம் நிறைவு பெறுகிறது.

பாத்திரங்களும் நடிகர்களும்

தொகு

விருதுகள்

தொகு
  • நீல ரிப்பன் விருதுகள் (1951) - சிறந்த திரைக்கதை : அகிரா குரோசாவா மற்றும் ஷினோபு ஹஷ்மோடோ
  • மயினிசி திரை விருது (1951) - சிறந்த நடிகை: மசிகோ கியோ
  • வெனீஸ் திரைப்பட விழா (1951) - பொன் அரி: அகிரா குரோசாவா
  • அமெரிக்க தேசிய விமர்சகர் மன்றம் (1952) - சிறந்த இயக்குனர்: அகிரா குரோசாவா; சிறந்த அந்நிய மொழி திரைப்படம்: ஜப்பான்
  • 24-ஆவது அகாதமி விருது, அமெரிக்கா (1952) - சிறந்த அந்நிய மொழி திரைப்படத்திற்கான கௌரவ விருது

மேற்கோள்கள்

தொகு
  1. Richie, Rashomon, p 113.

வெளியிணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
ராஷோமொன்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராஷோமொன்_(திரைப்படம்)&oldid=2905787" இலிருந்து மீள்விக்கப்பட்டது