லசந்த விக்கிரமதுங்க

இலங்கை பத்திரிகையாளர்

லசந்த விக்கிரமதுங்க (Lasantha Wickramatunga, 5 ஏப்ரல் 1958 - சனவரி 8, 2009) இலங்கையின் பிரபலமான ஊடகவியலாளரும் பத்திரிகை ஆசிரியரும், வழக்கறிஞரும் ஆவார். இவர் கொழும்பில் இருந்து வெளியாகும் த சண்டே லீடர் என்ற ஆங்கில ஞாயிறு இதழ், மற்றும் புதன் தோறும் வெளிவரும் "மோர்ணிங் லீடர்" வார ஏட்டின் ஆசிரியராகவும் இருந்து வந்தார். 8 ஜனவரி, 2009 இல் இவர் இனந்தெரியாதோரால் கொழும்பில் சுட்டுக் கொல்லப்பட்டார்[1][2].

லசந்த மணிலால் விக்கிரமதுங்க
Lasantha Manilal Wickrematunge
பிறப்பு5 ஏப்ரல் 1958
கொழும்பு, இலங்கை
இறப்பு8 சனவரி 2009(2009-01-08) (அகவை 50)
கொழும்பு, இலங்கை
மற்ற பெயர்கள்சுரனிமாலா
இனம்சிங்களவர்
கல்விசட்டம், கொழும்பு பல்கலைக்கழகம்
பணிபத்திரிகையாளர், அரசியல்வாதி
அமைப்பு(கள்)த சண்டே லீடர்
வாழ்க்கைத்
துணை
ரைன்
(1985-2007)
சோனாலி சமரசிங்க
(2008-)
பிள்ளைகள்அவினாஷ்
அகிம்சா
ஆதேஷ்
வலைத்தளம்
www.thesundayleader.lk

லசந்த விக்கிரமதுங்க இலங்கை அரசுக்கெதிராகவும் பல அரசியல்வாதிகள் தொடர்பாகவும் ஆயுதக் குழுக்கள் தொடர்பாகவும் மிக நீண்டகாலமாக மிகக் கடுமையான கட்டுரைகளை "சண்டே லீடர்', மோர்னிங் லீடர் மற்றும் ஞாயிறு சிங்களப் பத்திரிகையான "இருதின' என்பன வெளியிட்டு வந்ததால் இவர் பல ஆண்டுகளாக்க தொடர்ந்து கடுமையான அச்சுறுத்தல்களுக்குள்ளாகி வந்திருந்தார்[3].

வாழ்க்கைக் குறிப்பு

தொகு

லசந்தவின் இவரது தந்தை ஹரிஸ் விக்கிரமதுங்க கொழும்பு மாநகர சபை உறுப்பினராக ஐக்கிய தேசியக் கட்சி சார்பிலும் பின்னர் இலங்கை சுதந்திரக் கட்சி சார்பிலும் பல ஆண்டுகள் இருந்தவர். மிகவும் இளவயதிலேயே "சன்' பத்திரிகையில் ஒரு செய்தியாளராகச் சேர்ந்து தனது ஊடகத்துறை வாழ்வை ஆரம்பித்தார். 1982 ஆம் ஆண்டில் தி ஐலண்ட் பத்திரிகையில் இணைந்தார். அதே நேரம் அரசியலிலும் தன்னை இணைத்துக் கொண்டார். 1989 ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் கொழும்பு வடக்குத் தொகுதியில் போட்டியிட்டார். ஆனாலும் அவர் தெரிவு செய்யப்படவில்லை. அதன் பின்னர் ஆஸ்திரேலியா சென்று சிறிது காலம் தங்கிய பின்னர் மீண்டும் இலங்கை திரும்பி 1994 ஆம் ஆண்டில் சண்டே லீடர் பத்திரிகையை ஆரம்பித்தார்[4].

தாக்குதல்கள்

தொகு

லசந்தவைக் கொலை செய்வதற்கு பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. 1995 பெப்ரவரியில் லசந்த அவரது வாகனத்திற்குள் வைத்துத் தாக்கப்பட்டார். 1998 ஜூனில் அவரது வீட்டின் மீது கிரனேட் வீசப்பட்டது. 2005 அக்டோபரிலும் 2007 நவம்பரிலும் சண்டே லீடர் அச்சகத்திற்கு தீவைத்து நிர்மூலஞ் செய்வதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், இந்த சம்பவங்களில் எந்தவொன்று தொடர்பிலும் பொலிஸார் உகந்த விசாரணைகளை நடத்தி சம்பந்தப்பட்டவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது[5]

படுகொலை

தொகு

வழமைபோல் இவர் 2009, ஜனவரி 8 வியாழக்கிழமை காலை 09:30 மணியளவில் கொழும்பு கல்கிசையில் உள்ள 'லீடர் பப்ளிகேஷன்' அலுவலகத்திற்கு தனது தானுந்தில் சென்றுகொண்டிருந்தபோதே துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளனர். தலையிலும் மார்பிலும் குண்டுகள் பாய்ந்து படுகாயமடைந்து மிகவும் ஆபத்தான நிலையில் இவர் உடனடியாக களுபோவில மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு அவசர சிகிச்சைக்குட்பட்டாலும், பிற்பகல் 1.45 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கொலையின் பின்னரான நிகழ்வுகள்

தொகு

லசந்த விக்கிரமதுங்க படுகொலை செய்யப்பட்டதனை கண்டித்து கொழும்பில் 2009 சனவரி 9 ஆம் நாளில் பெரும் கண்டன ஆர்ப்பாட்டப் பேரணி நடைபெற்றது. நூற்றுக்கணக்கான ஊடகவியலாளர்கள், பொது அமைப்புக்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்[6] அமெரிக்கா, பிரித்தானியா, சீனா, ஐரோப்பிய ஒன்றியம், உலக வங்கி, உலக சமாதான சபை அத்தனையும் அவருக்காகக் அறிக்கைகள் வெளியிட்டன[7]

விசாரணை

தொகு

லசந்த விக்கிரமதுங்கவின் கொலை குறித்து கொழும்பு பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு நுவரெலியாவைச் சேர்ந்த வாகனத் திருத்தும் நிலையம் ஒன்றின் உரிமையாளரையும், இராணுவப் புலனாய்வுப் பிரிவு உறுப்பினர் ஒருவரையும் கைது செய்தது. இவர்களில் முதலாமவர் சிறையிலேயே உயிரிழந்தார்.[8] இராணுவப் புலனாய்வுப் பிரிவு உறுப்பினர் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்த நிலையில், இவர் மீதான வழக்கு 2013 செப்டம்பர் 6 இல் கல்கிசை நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்ட போது பிரதம நீதிபதி ரங்க விமலசேன சட்டமா அதிபரின் ஆலோசனைக்கமைய இவரை விடுதலை செய்தார். தன்னிடம் புலனாய்வுப் பிரிவினர் கட்டாய வாக்குமூலம் வாங்கியதாக இக்கைதி முன்னர் தெரிவித்திருந்தார்[9]

இறந்த பின் வெளியான தலையங்கம்

தொகு

ஜனவரி 11-ம் தேதி வெளியாக வேண்டிய 'சண்டே லீடர்' பத்திரிகைக்கு, "மரணத்தின் பாதையை நான் அறிவேன்" என்ற தலைப்பில் ஒரு தலையங்கத்தை ஜனவரி 7-ம் தேதியே லசந்த எழுதுவிட்டார். இந்த தலையங்கம் அவர் இறந்த பின் பிரசுரமானது. லசந்த விக்கிரமதுங்க எழுதிய தலையங்கத்திலிருந்து சில பகுதிகள்[7],[10][11]:

  • என் மரணத்தின் பாதையை நான் அறிவேன். நீ போலியான சத்தத்தை எழுப்பிக்கொண்டு, போலீஸை அழைத்து வேகமாக விசாரணை மேற்கொள்வாய். கடந்த காலங்களில் நீ உத்தரவிட்ட விசாரணைகளைப் போலவே, இப்போதும் நடக்கும். ஆனால், ஒன்றும் வெளியில் வராது. நம் இருவருக்கும் தெரியும், என் மரணத்துக்குப் பின்னால் யார் இருக்கிறார்கள் என்று. ஆனால், துணிந்து அவர் பெயரைச் சொல்ல முடியாது உன்னால். என் வாழ்க்கையில் மட்டுமல்ல, உன்னைப் பொறுத்து இதுதான் உனக்கும். உன் காலத்தில்தான் என் மரணம் நடந்தது என்பதை எந்த நேரத்திலும் உன்னால் மறக்க முடியாது!
  • என் மறைவு, சுதந்திரத்தை வீழ்த்தாது. இதற்காகப் போராடுபவர்கள் தொடர்ந்து பணியாற்ற ஊக்கமாக அமையும். நமது தாய்நாட்டின் மனித சுதந்திரத்துக்கு ஒரு தொடக்கமாக அமையும். தேசப்பற்று என்ற பெயரால் பலர் தங்களது உயிரைத் துறக்கும் உண்மையை ஜனாதிபதி தெரிந்துகொள்ள இது உதவும். மனிதநேயம் வளம் பெறும். எத்தனை ராஜபக்சேக்கள் இணைந்தாலும் அதை அழிக்க முடியாது.

யுனெஸ்கோ விருது

தொகு

படுகொலை செய்யப்பட்ட லசந்த விக்கிரமதுங்கவுக்கு ஐநாவின் கல்வி மற்றும் கலாசார அமைப்பான யுனெஸ்கோ 2009 ஆம் ஆண்டுக்கான உலக பத்திரிகை சுதந்திர விருதை வழங்கியுள்ளது. இவ்விருது 2009, மே 3 ஆம் நாளன்று உலக பத்திரிகை சுதந்திர தினத்தில் கட்டார் நாட்டில் வழங்கப்பட்டது[12][13].

மேற்கோள்கள்

தொகு
  1. Sri Lankan Editor Killed
  2. Top Sri Lankan editor shot dead
  3. Grievous blow to Sri Lankan media
  4. LASANTHA: FEARLESS EDITOR WHO SPOKE TRUTH TO POWER[தொடர்பிழந்த இணைப்பு] - டி. பி. எஸ். ஜெயராஜ்
  5. லசந்த விக்கிரமதுங்க[தொடர்பிழந்த இணைப்பு] (தினக்குரல் ஆசிரியர் கருத்து)
  6. "லசந்தவின் படுகொலையைக் கண்டித்து கொழும்பில் மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி". Archived from the original on 2009-01-10. பார்க்கப்பட்ட நாள் 2009-01-09.
  7. 7.0 7.1 http://www.vikatan.com/av/2009/jan/28012009/av0202.asp[தொடர்பிழந்த இணைப்பு]
  8. Lasantha’s murder suspect dies in custody – Editor’s wife Sonali calls for inquiry, லங்கா ஸ்டாண்டர்ட், அக்டோர் 22, 2011
  9. Lasantha murder suspect freed, கொழும்பு கசெட், செப்டம்பர் 6, 2013
  10. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-10-16. பார்க்கப்பட்ட நாள் 2009-01-24.
  11. Slain journalist's 'J'accuse' ignites furor in Sri Lanka
  12. "லசந்தவுக்கு யுனெஸ்கோ விருது". Archived from the original on 2009-04-11. பார்க்கப்பட்ட நாள் 2009-04-07.
  13. "Late Sri Lankan Journalist Wins World Press Freedom Prize". Archived from the original on 2009-05-05. பார்க்கப்பட்ட நாள் 2009-05-05.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=லசந்த_விக்கிரமதுங்க&oldid=3575840" இலிருந்து மீள்விக்கப்பட்டது