வரலாற்றுக்கு முந்திய தொழில்நுட்பம்

வரலாற்றுக்கு முந்திய தொழினுட்பம் (Prehistoric technology) என்பது பதியப்பட்ட வரலாற்றுக்கு முன்னைய காலத்தைச் சேர்ந்த தொழில்நுட்பமாகும். வரலாறு என்பது எழுதப்பட்ட ஆவணங்களைக் கொண்டு பழைய நிகழ்வுகளை அறிந்துகொள்ளும் ஒரு ஆய்வாகும். வரலாற்றில் எழுத்துமூலம் பதியப்பட்ட காலகட்டத்திற்கு முற்பட்ட அனைத்தும், அக்காலகட்டத் தொழினுட்பம் உட்பட, வரலாற்றுக்கு முந்தியவை எனப்படுகின்றன. எழுத்தறிவு உருவாவதற்கு ஏறத்தாழ 2.5 மில்லியன் வருடங்களுக்கு முன்னர் ஹோமினித்ஸ் (hominids) கற்களைக் கருவிகளாக பயன்படுத்தத் தொடங்கிய காலகட்டத்தில் இருந்தே தொழினுட்பம் தொடங்கிற்று எனக் கருதலாம். இவர்கள் இந்தக் கற்கருவிகளைப் பயன்படுத்தி நெருப்பை உருவாக்கவோ, விலங்குகளை வேட்டையாடவோ, இறந்தவர்களை அடக்கம் செய்வதற்கான குழிகளை வெட்டுவதற்கோ பயன்படுத்தியிருக்கலாம்.

வரலாற்றுக்கு முந்திய தொழில்நுட்ப உருவாக்கத்திலும் அதன் வளர்ச்சியிலும் பல காரணிகள் செல்வாக்கு செலுத்தியுள்ளன. இதில் முக்கிய காரணியாகக் கருதப்படுவது ஒமோ சப்பியன்சு (homo sapiens) வளர்ச்சியடைந்த மூளையின் நடத்தை நவீனத்துவம் (behavioral modernity) சார்ந்த வளர்ச்சியாகும். இந்த மூளை வளர்ச்சி நுண்காரணமறிதல், மொழி, தற்சோதனை மற்றும் பிரச்சினை தீர்த்தல் போன்ற திறன்களை விருத்தியடையவைத்தது. மேலும் வேளாண்மையின் தொடக்கம் மற்றும் வளர்ச்சி நாடோடியாக அலைந்து திரிந்த மனிதனின் வாழ்க்கைக் கோலத்தை வீட்டில், வீட்டினமாக்கப்பட்ட விலங்குகளுடன் வாழும் முறைக்கு மாற்றியது. மேலும் வேளாண்மைக்கு தேவையான விருத்தியடைந்த பல்வேறு கருவிகளையும் உருவாக்கவேண்டிய தேவைக்கு ஆளாக்கியது. நுண்கலை, கட்டடக்கலை, இசை மற்றும் சமயக்கோட்பாடுகள் வரலாற்றுக்கு முந்திய காலகட்டத்தின் பல்வேறு காலங்களில் உருவாக்கி வளர்ச்சிகண்டது. 

பழைய உலகம்

தொகு

கற்காலம்

தொகு

கற்காலம் எனப்படுவது, கூரான மற்றும் சுத்தியல் போன்ற தடிப்பான கற்களைக் கொண்டு கருவிகளை உருவாக்கிய வரலாற்றுக்கு முந்திய காலகட்டத்தைக் குறிக்கும். இந்தக் காலகட்டம் ஆதி ஹோமினித்ஸ் (hominids) தொடக்கம் ஒமோ சப்பியன்சின் இறுதி பிளாய்டோசீன் சகாப்தம் வரை ஏறத்தாழ 2.5 மில்லியன் வருடங்களுக்கு தொடர்ந்தது. இது கிமு 6000 தொடக்கம் கிமு 2000 வரையான காலகட்டத்தில் உலோக வேலைப்பாடுகளின் ஆரம்பத்துடன் முடிவுக்கு வந்தது.[சான்று தேவை]

வெண்கலக் காலம்

தொகு

புதுக்கற்காலப் புரட்சிக்குப் பிறகு கற்காலம் வெண்கலக் காலமாக வளர்ச்சியடைந்தது. புதுக்கற்காலப் புரட்சியின் போது வேளாண்மை விருத்திகண்டது, காட்டு விலங்குகள் வீட்டினமாக்கப்பட்டன (domestication), மேலும் நிரந்தர குடியமர்வுகள் (permanent settlements) உருவாகின.[சான்று தேவை]

வெண்கலக் காலம் எனப்படுவது செப்பு உலோகத்தை உருக்கி அதனுடன் வேள்ளீயத்தை சேர்ந்து வெண்கலம் எனப்படும் கலப்புலோகத்தை உருவாக்கி அதிலிருந்து கருவிகளையும் ஆயுதங்களையும் செய்த காலத்தைக் குறிக்கும். இக்காலகட்டத்தில் மேம்படுத்தப்பட்ட கற்கருவிகள் தொடர்ச்சியாக பயன்படுத்தப்பட்டன. இதற்குக் காரணம் கற்கருவிகள் பெருமளவில் கிடைத்ததும், வெண்கலத்தை உருவாக்கத் தேவையான வெள்ளீயம் கற்களை விடக் குறைவாகவே கிடைத்ததாலுமாகும்.[சான்று தேவை]

வெண்கல கருவிகளை உருவாக்கும் தொழினுட்பம் நாகரீகத்தின் தொட்டில் என அழைக்கபடும் பிரதேசத்தில் முதன்முதலில் தோன்றி பின்பு ஏனைய இடங்களுக்கும் பரவியது.

இரும்புக் காலம்

தொகு

இக்காலத்தில் வெண்கலத்திற்குப் பதிலாக[1][2] இரும்பு மற்றும் உருக்கு ஆகியன பெரும்பாலும் கருவிகள் செய்யப் பயன்பட்டன. இரும்பின் அல்லது உருக்கின் பயன்பாடு வெண்கலத்தைவிட உறுதியான, எடை மற்றும் விலை குறைந்த கருவிகளின் உருவாக்கத்திற்கு காரணமாகியது[3]. இக்காலத்தில் உருவாக்கப்பட்ட கருவிகளில் மிகச் சிறந்த கருவிகள் இரும்பு/உருக்கு ஆகியவற்றால்த்தான் உருவாக்கப்பட்டன[4].

இரும்புப் பயன்பாட்டின் ஆரம்பத்துடன் பல சமூகவியல் மாற்றங்களும் இக்காலகட்டத்தில் இடம்பெற்றது. இதில் குறிப்பாக நுண்கலை, சமயம் மற்றும் வேளாண்மை ஆகியவற்றில் ஏற்பட்ட மாற்றங்களை குறிப்பிடலாம். வரலாற்றுக் காலத்தின் துவக்கத்துடன் இரும்புக் காலம் முடிவுக்கு வருகிறது. வரலாற்றுக் காலம் எனப்படுவது எழுதும் முறையின் உருவாக்கத்துடன் பதிவு செய்யப்பட்ட வரலாறு தோன்றிய காலமாகும்[2][4].

இரும்புக் காலத்தில் வெவ்வேறு பிரதேசங்களில் வெவ்வேறு காலகட்டத்திலேயே இரும்பின் பயன்பாடு தொடங்கியது, இதற்குக் காரணம் இரும்பு உலோகத்தாதின் கிடைக்கும் தன்மையும் (availability), அத்தாதை பயன்படுத்தி இரும்பை எடுத்து கருவிகளை உருவாக்ககூடிய அறிவும் வெவ்வேறு முறையில் பரவியதாகும். எகிப்தில் கிமு 6000 ஆண்டளவிலேயே இரும்பு உருக்கப்பட்டது. மத்திய கிழக்கு நாடுகளில் ஏறத்தாழ கிமு 1500 அளவில் இரும்புக் கருவிகள் வெண்கலக் கருவிகளைவிடக் கூடுதலாக பயன்படுத்தப்படத் தொடங்கின. சீனர்கள் கிமு 5000 ஆண்டளவிலேயே இரும்பை உருக்கி கருவிகள் செய்யத்தொடங்கிவிட்டனர். அவர்களது இரும்பு உருக்கு முறையே தற்கால உருக்கு தயாரிப்பு முறையின் முன்னோடியாக இருந்தது. ஆனாலும் பெரும்பாலான ஆசிய நாடுகள் இரும்புத் தொழில்நுட்பத்தை வரலாற்றுக்காலம் வரை பயன்படுத்தவில்லை.

ஐரோப்பாவில் இரும்பு கிமு 1100 ஆண்டளவில் அறிமுகமானது, அதன் பின்னர் கிமு 500 ஆண்டளவில் ஆயுதங்கள் மற்றும் கருவிகளை இவர்கள் இரும்பில் செய்யத்தொடங்கினர். இரும்பின் பயன்பாடு காரணமாக மேம்பட்ட மலைக்கோட்டைகள் மற்றும் பாதுகாப்பு அரண்களுடன் கூடிய வசிப்பிடங்கள் போர்க்கால புகலிடமாகவோ அல்லது நிரந்தர வசிப்பிடமாகவோ உருவாக்கப்பட்டன.  மேலும் இரும்புக் கருவிகளால் வேளாண்மை வினைத்திறன் மிக்கதாக மாறியது. ஐரோப்பாவில் இரும்புக் காலமே வரலாற்றுக்கு முந்திய காலத்தின் இறுதிக்கட்டமாகும். அதற்குப் பிறகு ஐரோப்பாவில் நடுக்காலம் ஆரம்பமாகியது.[5]

ஆபிரிக்காவில் கிமு 2000 ஆண்டளவில் தொடங்கி உலோகத் தாதுக்களில் இருந்து இரும்பு பிரித்தெடுக்கப்பட்டது.

மேற்கோள்கள்

தொகு
  1. Kipfer, Barbara Ann (2000-04-30), Encyclopedic Dictionary of Archaeology (in ஆங்கிலம்), Springer Science & Business Media, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780306461583, பார்க்கப்பட்ட நாள் 2018-04-01
  2. 2.0 2.1 The Junior Encyclopædia Britannica: A reference library of general knowledge. (1897). Chicago: E.G. Melvin.
  3. Theodore Wertime and J. D. Muhly, eds. The Coming of the Age of Iron (New Haven, 1980).
  4. 4.0 4.1 A Brief History of Iron and Steel Manufacture, 2010-06-02, archived from the original on 2010-06-02, பார்க்கப்பட்ட நாள் 2018-04-01{{citation}}: CS1 maint: unfit URL (link)
  5. Crabtree, Pamela (2000-10-12), Medieval Archaeology: An Encyclopedia (in ஆங்கிலம்), Taylor & Francis, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780203801819, பார்க்கப்பட்ட நாள் 2018-04-01