தொழில்நுட்ப வரலாறு
தொழில்நுட்ப வரலாறு (history of technology) என்பது கருவிகளையும் நுட்பக் கூறுகளையும் குறித்த கண்டுபிடிப்புகளின் வரலாறு ஆகும். இதனை மனிதத்தின் வரலாற்றோடு பலவழிகளில் ஒப்பிடலாம். மனிதன் முன்னேறியதால் கருவிகள் உருவாகின; கருவிகள் பயன்பாட்டால் மனிதன் முன்னேறினான். தொழில்நுட்பங்களால் அறிவியல் வளர்ச்சி வாய்த்தது; அறிவியல் வளர்ச்சி செல்லாதவிடங்களுக்குச் செல்லவும், பேரண்டத்தின் இயல்பை ஆராயவும் வழி வகுத்தது.
தொழில்நுட்ப படைப்புகள் பொருளாதாரத் தேவைகளால் எழுந்தன. தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் சமூகத்தின் பண்பாட்டுக் கூறுகளில் தாக்கமேற்படுத்துகின்றன; சமூகத்தால் தொழில்நுட்பமும் தாக்கமடைகிறது. படை வலியை வளர்க்கவும் காட்சிப்படுத்தவும் தொழில்நுட்பங்கள் உதவியுள்ளன.
தொழில்நுட்ப வளர்ச்சியை அளவிடுதல்
தொகுபல சமூகவியலாளர்களும் மனிதவியலாளர்களும் சமூக மற்றும் பண்பாட்டுப் படிமாற்றத்தைக் குறித்த சமூக கோட்பாடுகளை உருவாக்கியுள்ளனர். லெவிஸ் எச். மோர்கன், லெஸ்லி வைட், கெர்கார்ட் லென்ஸ்க்கி போன்றவர்கள் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் மனித நாகரிக வளர்ச்சிக்கான முதன்மை காரணிகளாக கருதுகின்றனர். மோர்கன் கருத்துப்படி சமூக படிமாற்றத்தின் மூன்று முதன்மை நிலைகளான விலங்காண்டி நிலை, காட்டுமிராண்டி நிலை மற்றும் நாகரிக நிலைகளை தொழில்நுட்ப மைல்கற்களைக் கொண்டு வரையறுக்கலாம். விலங்காண்டி காலத்தில் தீ, வில், பாண்டத்தொழில் போன்றவையும், காட்டுமிராண்டி காலத்தில் வீட்டு விலங்குகள், வேளாண்மை, உலோக வேலை போன்றவையும், நாகரிக காலத்தில் அகரவரிசை, எழுத்து போன்றவையும் முதன்மைத் தொழில்நுட்பங்களாக விளங்கின.
குறிப்பிட்ட கண்டுபிடிப்புகளைத் தவிர்த்து, பண்பாட்டுப் படிமாற்றத்தை அளவிட வைட் ஆற்றலைப் பயன்படுத்த முடிவு செய்தார். வைட்டின் கூற்றுப்படி, "ஆற்றலைக் கட்டுப்படுத்துவதே பண்பாட்டின் முக்கியக் கூறு" ஆகும். மனித வளர்ச்சியின் ஐந்து நிலைகளை வைட் இவ்வாறு பிரிக்கிறார்:
- மனிதன் தனது உடற்தசைகளின் ஆற்றலை பயன்படுத்துதல்
- வீட்டு விலங்குகளின் ஆற்றலைப் பயன்படுத்துதல்
- தாவரங்களின் ஆற்றலைப் பயன்படுத்துதல் (வேளாண்மைப் புரட்சி ).
- இயற்கை கனிம வளங்களின் ஆற்றலைப் பயன்படுத்துதல்:நிலக்கரி,பாறை எண்ணெய், இயற்கை எரிவளி
- அணுசக்தியைப் பயன்படுத்துதல்
வைட் P=E*T, என்ற சமன்பாட்டை அறிமுகப்படுத்தினார். இதில் E என்பது ஆற்றல் நுகர்வின் அளவு, T என்பது இந்த ஆற்றலை நுகர்வதின் தொழிற்நுட்ப வினைத்திறன். அவரது கூற்றுப்படி, "ஆண்டுக்கு தனிநபர் நுகரும் ஆற்றல் எந்தளவில் கூடுகிறதோ அல்லது ஆற்றலை பயன்படுத்த வினைத்திறன் எந்தளவில் கூடுகிறதோ அந்தளவில் பண்பாடு படிமாற்றம் அடைகிறது".
லென்ஸ்கி நவீன அணுகுமுறையைக் கையாண்டு தகவல்|தகவலைக் குவியப்படுத்துகிறார். எந்தளவில் ஓர் சமூகம் தகவலும் அறிவும் கொண்டுள்ளதோ அந்தளவில் அது முன்னேறிய சமூகமாக உள்ளது. இவர் மனித வளர்ச்சியை தகவல் வரலாற்று முன்னேற்றங்களைக் கொண்டு நான்கு நிலைகளாகப் பிரிக்கிறார். முதல் நிலையில், தகவல் மரபணுக்கள் மூலம் பரிமாறிக்கொள்ளப்படுகின்றன.இரண்டாம் நிலையில் மனிதர்கள் உணர்ச்சிகளை உணரத்தொடங்கி தங்கள் பட்டறிவை பகிர்ந்து கொள்ளுதல். மூன்றாவதில் சைகைகளை பயன்படுத்தி ஏரணம் உருவாக்க இயன்றது. நான்காவதில் குறியீடுகளை உருவாக்கி மொழியை வளர்த்து எழுதத் தொடங்குதல். தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களில் ஏற்படும் மேம்பாடுகள் பொருளியல் அமைப்பிலும் அரசியல் அமைப்பிலும் நேரடி முன்னேற்றங்களை கொணர்கிறது. மேலும் செல்வப் பகிர்வு, சமூகநீதி மற்றும் பிற பொதுவாழ்க்கையிலும் தாக்கங்களை ஏற்படுத்துகிறது. மேலும் இவர் சமூகங்களை அவர்களது தொழில்நுட்ப வளர்ச்சி, தகவல் தொடர்பு மற்றும் பொருளியல் சார்ந்து வகைபடுத்துகிறார்:
- வேடர்களும் சேகரிப்போர்களும்,
- எளிய விவசாயம்,
- மேம்பட்ட விவசாயம்,
- தொழிற்சாலைகள்,
- சிறப்பு (மீனவர் போன்றோர்).
வெவ்வேறு காலங்களில் தொழில்நுட்பங்களின் வளர்ச்சி
தொகுதுவக்கத்தில்
தொகு- ஓல்டுவாய் கல் தொழினுட்பம் 2.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் (துருவல்; இறந்த விலங்குகளை உணவிற்காக வெட்டுதல்)
- கற்கருவி தொழினுட்பம் 1.6 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு (கைக் கோடாரி)
- தீ உருவாக்கலும் கையாளுதலும், பழங்கற்காலத்திலிருந்து, 1.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு
- (தற்கால மனிதர்களைப் போன்ற உருவுடைய மனிதர்கள் ஏறத்தாழ 200,000 ஆண்டுகள் முன்பு.)
- உடைகள் 170,000 ஆண்டுகளுக்கு முன்பிருக்க வாய்ப்பு.
- சுட்டமண் சிலைகள் கிமு 25,000
- வளர்ப்பு விலங்குகள், c. கிமு 15,000
- வில், கவண் கிமு 9வது ஆயிரவாண்டு
- நுண்கற்கள் கிமு 9வது ஆயிரவாண்டு
- செப்பு கிமு 8000
- வேளாண்மை மற்றும் ஏர் கிமு 8000
- சக்கரம் கிமு 4000
- நிழலால் பொழுதறி கோல் கிமு 4000
- எழுத்துமுறைகள் கிமு 3500
- வெண்கலம் கிமு 3300
- உப்பு கிமு 2500
- தேர் கிமு 2000
- இரும்பு கிமு 1500
- சூரிய மணி காட்டி கிமு 800
- கண்ணாடி கிமு 500
- விசைவில் பொறி கிமு 400
- குதிரை இலாடம் கிமு 300
- அங்கவடி கிபி முதலிரு நூற்றாண்டுகளில்
வரலாற்றுக்காலத்திற்கு முந்தைய தொழினுட்பம்
தொகுபழைய கற்கால காலகட்டத்தில் மனிதவாழ்க்கை சில கருவிகளையும் வெகுசில நிரந்தர குடியிருப்புகளையும் கொண்டிருந்தது. இந்தக் கால தொழில்நுட்பங்கள் உயிர் பிழைத்தல், வேட்டையாடல் மற்றும் இச்சூழலில் உணவு தயாரித்தலுக்கு வேண்டியனவாக இருந்தன. தீ, கற் கருவிகள், உடை என்பன இந்தக் காலகட்டத்தில் முதன்மை தொழில்நுட்பங்களாக விளங்கின. இசை மற்றும் சண்டைகளில் ஈடுபட்டனர். இக்கால மனித இனங்களில் சிலர் கடலில் செல்லும் கலங்களை வடிவமைத்தனர். இதனால் கிழக்குப் பகுதிகளுக்கு மலாய் தீவுக்கூட்டங்கள் வழியாகவும் இந்தியப் பெருங்கடல் வழியாகவும் பசிபிக் பெருங்கடல் வழியாகவும் இடம் பெயர்ந்தனர். இதனால் அவர்களுக்கு கடல் சுழிகள், வானிலை அமைப்புகள், பாய்மரப் பயன்பாடு, விண்வெளியை வைத்து வழிகாணுதல் போன்ற நுட்பங்கள் தெரிந்திருந்தது என அறியலாம்.
வேளாண்மையின் துவக்க கால தொழில்நுட்பங்கள் புதிய கற்காலத்தில் உருவாகின. இந்தக் காலகட்டத்தில் கடும் பாறைகளைக் கொண்டு கல் கருவிகள் உருவாக்கினர். இவற்றிற்குத் தேவையான கற்களை துவக்கத்தில் பாறைகளை உடைத்தும் பின்னர் மண்ணிற்கு அடியில் இருந்த கற்களை சுரங்கங்கள் வெட்டியும் எடுத்தனர். இதுவே சுரங்கதொழிலுக்கு துவக்கக்கால தொழில்நுட்பமாக அமைந்தது. பட்டைதீட்டப்பட்ட கல் கோடாரிகள் வனப்பகுதிகளை அழிக்கவும் வேட்டையாடவும் பயன்பட்டன.
இக்காலகட்டத்தில் எழுதப்பட்ட பதிகைகள் எதுவும் இல்லாதுபோனாலும் நாடோடி வாழ்க்கையிலிருந்து குடியிருப்புகளில் வேளாண்மை செய்து வாழ்ந்தமைக்கு பல தொல்லியல் சான்றுகள் மூலம் உய்த்துணரலாம். இத்தகைய சான்றுகளாக பழங்கால கருவிகள்,[1] குகை ஓவியங்கள், மற்றும் வீனசு ஆஃப் வில்லென்டோர்ஃப் போன்ற கற்கால கலைப்படைப்புகள் உள்ளன. மனிதர்களின் எச்சங்களும் நேரடி சான்றுகளை வழங்குகின்றன.
செப்பு, வெங்கல காலங்களில் தொழினுட்பம்
தொகுகற்காலத்தின் இறுதியில் புதுக்கற்காலப் புரட்சி ஏற்பட்டது. இந்தப் புரட்சிக் காலத்தில் வேளாண் தொழினுட்பம் பல பெரும் மாற்றங்களைக் கண்டது. வேளாண்துறை மேம்பாடு, விலங்குகளை கொல்லைப்படுத்தல், மற்றும் ஓரிடத்தில் நிலைத்திருத்தல் ஆகியன இக்கால கட்டத்தின் சிறப்புக் கூறுகளாகும். இத்தகைய வளர்ச்சி வெண்கலக் காலத்தில் உலோகங்களை உருக்கும் தொழில்நுட்பத்திற்கு வழிவகுத்தது. முதலில் செப்புக் கருவிகளும் பின்னர் செப்பும் ஈயமும் கலந்த வெண்கலக் கருவிகளும் தயாரிக்கப்பட்டன. ஈயம் கிடைப்பது அரிதாக இருந்த காரணத்தால் வெண்கலக் காலத்திலும் பல ஆண்டுகளுக்கு கூடியதொகையில் தயாரிக்கப்பட்ட தீட்டப்பட்ட கற்கருவிகள் பயன்படுத்தப்பட்டு வந்தன.
நாகரிகத் தொட்டில் எனப்படும் மத்திய ஆசியப் பகுதியில் இந்த போக்கு முதலில் துவங்கி காலவோட்டத்தில் வெளியே பரவியது. இந்த முன்னேற்றங்கள் ஐரோவாசியாவில் வாழ்ந்த மக்களினத்தவர்களின் வரலாற்றை மட்டுமே குறிக்கின்றன. இதற்கு வெளியே நிலவிய இனக்குழுக்களைக் குறித்த துல்லியமான வரலாறு கிடைப்பதில்லை. அமேசான் ஆற்றோர குழுக்கள் போன்ற பல தனியாக இருந்த இனக்குழுகள் கற்கால தொழில்நுட்பத்தையே பயன்படுத்தினர்; வேளாண்மை அல்லது உலோகத் தொழில்நுட்பங்களை உருவாக்கவில்லை.
இரும்புக் காலத்தில் தொழினுட்பம்
தொகுஇரும்புக் காலத்தில் வெண்கலத்திற்கு மாற்றாக இரும்பு பயன்படுத்தப்பட்டது. இரும்பினால் ஆக்கப்பட்ட கருவிகள் வலிமையுடன் இருந்தபோதும் தயாரிப்புச் செலவுகள் குறைந்திருந்தன. பல ஐரோவாசிய நாடுகளிலும் எழுத்துமொழி உருவாவதற்கு முன்னர் இதுவே இறுதி தொழில்நுட்ப மேம்பாடாக இருந்தது. மிக உயர்ந்த வெப்பநிலை வெப்ப உலைகள் தேவைப்பட்டதால் இரும்பை பெருமளவில் தயாரிக்க இயலவில்லை. இருப்பினும் இரும்பை காய்ச்சி அடித்து கரிமத்தின் அளவைக் குறைத்து எஃகு தயாரித்தனர். செப்பு, ஈய கனிமங்களைவிட இரும்புத் தாது பரவலாக கிடைத்தது. இரும்புக் கோடாரிகளின் பயன்பாட்டினால் காடுகள் அழிக்கப்பட்டு கூடிய குடியிருப்புகள் எழலாயின. அதிகரித்து வந்த மக்கள்தொகைக்கேற்ப மிகுந்த நிலப்பரப்பு வேளாண்மைக்கு தயாராயின. ஐரோப்பாவில் பல மலைக்கோட்டைகள் கட்டப்பட்டன; இவை போர்க்காலங்களில் அடைக்கலம் வழங்கவும் சில நேரங்களில் நிரந்தர வசிப்பிடங்களாகவும் பயன்படுத்தப்பட்டது.
தொன்மைக்கால தொழினுட்பம்
தொகுஎழுத்தால் பதியப்பட்ட தொன்மை காலத்தில் தொழில்நுட்பமும் பொறியியலும் பல முன்னேற்றங்களைக் கண்டன. எகிப்து|எகிப்தியர்கள் பல எளிய பொறிகளை பயன்படுத்தினர். கட்டிடக் கலைக்கு உதவிட சாய்தளத்தை உருவாக்கினர். சிந்து சமவெளியில் நகரத் திட்டமிடலும் சுகாதார அமைப்புக்களும் குறிப்பிடத்தக்கனவாக இருந்தன. தொன்மைய இந்தியா கடல்வழிப் போக்குவரத்திற்கு முன்னோடியாக விளங்கியது. மொகெஞ்சதாரோவில் கிடைத்த ஓர் ஓவியத்தில் பாய்மரக் கலன் ஒன்று சித்தரிக்கப்பட்டிருந்தது. இந்திய கட்டிடவியலின் 'வாஸ்து சாத்திரத்தில்' கட்டிடப் பொருள்கள், நீர் அமைப்புகள் மற்றும் சுகாதார அமைப்புகள் குறித்த புரிதலைக் காணலாம்.
சீனர்கள் பல தொழில்நுட்பங்களை உருவாக்கினர். அவற்றில் முதன்மையானவையாக நிலநடுக்க அளவைகள், தீக்குச்சிகள், காகிதம், வார்ப்பு இரும்பு, இரும்பு ஏர், பலகுழல் விதைக் கலப்பை, தொங்கு பாலங்கள், இயற்கை எரிவளி, திசைகாட்டி, வெடிமருந்து என்பனவாம்.
கிரேக்கப் பொறியாளர்கள் பல தொழில்நுட்பங்களைக் கண்டுபிடித்தனர். ஏற்கெனவே இருந்த தொழில்நுட்பங்களை மேம்படுத்தினர். கிரேக்க சமூகத்தின் திறந்த மனப்பாங்கு, அரச ஆதரவு, அலெக்சாண்டிரியாவில் நிறுவப்பட்ட நூலகம் ஆகியன புதிய நுட்பங்களை முனைவோருக்கு தூண்டுதலாக இருந்தன. முந்தையக் காலங்களின் பெயரில்லா கண்டுபிடிப்பாளர்களைப் போலன்றி இக்காலத்திய அறிஞர்கள் ஆர்க்கிமிடீஸ், பைசான்டியத்தின் பைலோ, அலெக்சாண்டிரியாவின் ஹீரோ, டெசிபியசு, ஆர்க்கிடாஸ் பெயர்கள் அவர்களது மறைவிற்குப் பின்னரும் நிலைபெற்றன.
கிரேக்கக் கண்டுபிடிப்புகள் இயந்திரவியலில் குறிப்பிடத் தகுந்தவையாக இருந்தன. அவர்களது நீராலைத் தொழினுட்பம் மனித முயற்சி இல்லாது செயல்பட்ட (பாய்மரம் தவிர்த்து) முதல் தொழில்நுட்பமாகும். நீராற்றலை அடுத்து காற்றின் ஆற்றலைப் பயன்படுத்த காற்றுச்சக்கரத்தையும் முதன்முதலான நீராவிப்பொறியாக இயோலிப்பைலையும் அலெக்சாண்டிரியாவின் ஹெரான் வடிவமைத்தார். இயற்கை விசைகளைக் கொண்டியங்கிய இவற்றின் முழுவீச்சும் பின்னாளில் தொழிற் புரட்சியின்போதே பயனுக்கு வந்தது. இக்காலத்தில் வடிவமைக்கப்பட்ட பற்சில்லு மற்றும் திருகாணி பெரும் முன்னேற்றத்தை ஏற்படுத்தியது.
பண்டைய கிரேக்கர்கள் தங்களது முன்னோர்களின் நீரேற்றச் சக்கரங்களைத் தொடர்ந்து ஆர்க்கிமிடீஸ் திருகாணி, வாளிச் சக்கரம், விசைக் குழாய்கள், வெற்றிட இழுப்பு ஏற்றிகள், ஈரியக்க தண்டு ஏற்றிகள் போன்றவற்றை விவசாயத்திற்காக கண்டுபிடித்தனர்.
டெசிபியஸ் நீர் இசைக்கருவியை கண்டுபிடித்தார்.இதனை மேம்படுத்தி முதல் விசைப்பலகை இசைக்கருவியை உருவாக்கினார். நேரமறிதலில் நீர் கடிகாரத்தில் இவரது மேம்படுத்தல்களாக முட்கள் தாமாகவே நகர்தல், பின்னூட்டு தருதல் போன்ற தொழில்நுட்பங்கள் அமைந்தன.
வானியல் துறையில் வெவ்வேறான பற்சில்லு கொண்ட புகழ்பெற்ற அன்டிகைத்தெரா எந்திரமுறை மற்றும் அஸ்ட்ரோலபே போன்றவை உருவாக்கபட்டன.
போர்த்துறையில் மேம்பட்ட கவண் கருவிகள், விற்கருவிகள் போன்றவையும் மாழையியலில் உட்புறம் வெறுமையான வெண்கல வார்ப்புகளும் நில அளவைகளுக்கான கருவிகளும் கிரேக்கரின் பங்களிப்புகளாகும். கலங்கரை விளக்கங்கள், அறிவியல் முறையில் கணக்கிடப்பட்டு இருபுறமும் துளையிடப்பட்டமைந்த ஊடுவழி (யூபாலினோஸ் ஊடுவழி), கப்பல் பராமரிப்பு துறைகள், குழாய்கள் போன்றவையும் இக்காலத்தவையாம்.
மேலும் சுழல்படிகள், சங்கிலி செலுத்துகை, இரு புள்ளிகளிடையே நீளத்தை அளக்க காலிப்பர்கள், நீர் தூற்றிகள் ஆகியனவும் கிரேக்கர்களின் பங்களிப்பே.
உரோமானியர்கள் மேம்பட்ட வேளாண்மை, இரும்புத் தொழில், தனிநபர் சொத்துக்கு சட்ட முறைமைகள், மேம்பட்ட கல் கட்டிடக்கலை, சாலை அமைப்பு, போரிய பொறியியல், குடிமைசார் பொறியியல், ஆடை தயாரித்தல் போன்றவற்றில் முன்னோடிகளாகத் திகழ்ந்தனர். பல சிறந்த கட்டமைப்புக்களை, விளையாட்டரங்குகள், கால்வாய்ப் பாலங்கள், பொது குளியலறைகள், வளைவுப் பாலங்கள், துறைமுகங்கள், ஏரிகள், அணைகள், கோபுரங்களும் விமானங்களும் தங்கள் பேரரசெங்கும் கட்டினர். மேலும் நூற்களை சிறுபிரிவுகளாகத் தைத்து பின்னர் அவற்றை ஒன்றாக இணைக்கும் கோடெக்ஸ் முறைமை, கண்ணாடி ஊதுதல், பைஞ்சுதை உரோமர்களின் குறிப்பிடத்தக்க கண்டுபிடிப்புகளாகும். எரிமலை மணல்கொண்டு உரோமர்கள் உருவாக்கிய பைஞ்சுதை 2000 ஆண்டுகளுக்குப் பின்னரும் சிறப்பாக உள்ளது.
இன்கா மற்றும் மாயர்களின் தொழில்நுட்பத் திறமைகள் இன்றைய மதிப்பீட்டிலும் சிறந்தவை. காட்டாக ஒரு டன்னிற்கும் கூடுதலான எடையுள்ளக் கற்களை ஒரு நூலிழை இடைவெளியின்றி கட்டிடங்களில் அமைத்துள்ளமையைக் கூறலாம். சிற்றூர்களில் பாசனக் கால்வாய்களும் கழிவுநீர்க் கால்வாய்களும் அமைக்கப்பட்டு மேம்பட்ட வேளாண்மை விளங்கியது. மாயா நாகரிகத்தில் உலோக தொழில்நுட்பமோ சக்கரத் தொழில்நுட்பமோ காணப்படாவிடினும் சிக்கலான எழுத்து முறைகளையும் வானியல் அறிவியலையும் கொண்டிருந்தனர். கற்களில் வடித்த சிற்பக்கலையில் சிறந்து விளங்கினர். மாயா நாகரிகக் காலத்தில் பெண்களே புத்தாக்கங்களுக்கு உரியவர்கள் என்ற கருத்தினால் இந்தக் கட்டமைப்புக்கள் பெரும்பாலும் பெண்களால் எழுப்பப்பட்டவை. அஸ்டெக் ஆட்சியில் கையகப்படுத்தப்பட்ட இரு நகரங்களுக்கிடையே ஏற்படுத்தப்பட்ட தொடர்பு முறைமைகளே முதன்மை பங்களிப்பாக விளங்கியது.
நடுக்கால மற்றும் தற்கால தொழில்நுட்பங்கள்
தொகுநடுக்கால ஐரோப்பா
தொகுபல வரலாற்றாளர்கள் நடுக்காலத்தில் ஐரோப்பாவில் தேவாலயங்களின் எதிர்ப்பால் அறிவியல் தேடல் மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டில் தேக்கம் ஏற்பட்டது எனக் கருதினாலும் அமெரிக்க வரலாற்றாளர் லின் வைட் போன்றோர் இந்தக் காலத்தில் தொழில்நுட்பங்களில் பல புதுமைகள் தேடப்பட்டதாக வலியுறுத்துகின்றனர். இந்தக் காலத்தில் இயந்திரவியல் கடிகாரங்கள், கண்கண்ணாடிகள், நெடிய காற்றாலைகள் குறித்த தொழில்நுட்பங்கள் மேம்பட்டன. பெரிதாகத் தோன்றாத ஆனால் அறிவுத்திறம் மிகுந்த கண்டுபிடிப்புகளான நீரோட்டக் குறி அல்லது அழுத்து பொத்தான் போன்றவற்றைக் குறிப்பிடலாம். பிந்தைய கண்டுபிடிப்புக் காலத்திற்கு வழிவகுத்த கடற்பயணத்திற்கான பொறிகளான சுக்கான்கள், பாய்மரங்கள், திசைகாட்டி போன்றவையும் இந்தக் காலத்தில் மேம்படுத்தப்பட்டன. போர்த் தொழில்நுட்பங்களிலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் நிகழ்ந்தன. இரும்புக் கவசங்கள், சிலுவை வில்கள், எதிர்நிறையீடு கவணெறிப் பொறிகள், பீரங்கிகள் உருவாக்கப்பட்டன.
சமயவியலாளர்களின் கட்டுப்பாட்டில் இருந்த இக்காலத்தின் சிறப்புக் கூறுகளாக கட்டிடவடிவமைப்பு மரபைக் கூறலாம். மார்புக்கூடு வளைவுக்கூரை மற்றும் கூர்வளைவு கட்டிடக்கூறுகளை கண்டுபிடித்ததால் மிக உயர்ந்த கோதிக் பாணி கோட்டைகள் கட்டப்பட்டு இந்தக் காலத்திற்கு கோட்டைகளின் காலம் என்ற பெயரை வாங்கிக் கொடுத்தது.
மறுமலர்ச்சி தொழில்நுட்பங்கள்
தொகு
|
மறுமலர்ச்சிக் கால தொழில்நுட்பங்களில் நோக்குநிலை காட்சி, காப்புரிமை சட்டங்கள், இரட்டை ஓட்டு குவிமாடங்கள், நட்சத்திர வடிவ அரணமைத்த கோட்டைகள் போன்ற மேம்பாடுகளைச் சிறப்பாகக் குறிப்பிடலாம். மறுமலர்ச்சிக் கால ஓவியர்களும் பொறியியலாளர்களுமான டக்கோலா, லியொனார்டோ டா வின்சி போன்றோர்களின் குறிப்பு நூல்களில் இருந்து அக்காலத்திய இயந்திரவியல் அறிவை அறியலாம். பண்டைய உரோமின் கட்டிடங்களால் தூண்டப்பட்ட கட்டிடவியலாளர்களும் பொறியாளர்களும் பிளாரென்சின் தேவாலய குவிமாடம் போன்ற பெரும் குவிமாடங்களை கட்டினர். இந்த மாடத்திற்கான பெரிய கட்டுமானங்களை மேலே கொண்டு செல்வதற்காக இதன் கட்டிட வடிவமைப்பாளர் பிலிப்போ புருனெல்சுக் வடிவமைத்த பாரமுயர்த்திக்கு முதன்முதல் காப்புரிமை வழங்கப்பட்டது. அறிவியல் மறுமலர்ச்சியும் தொழில்நுட்ப மேம்பாடும் ஒன்றையடுத்தது ஒன்றாக வளர்ந்தன. இயக்குவகை அச்சு இயந்திரத்தின் கண்டுபிடிப்பு (1441) கூடுதலான நூல்கள் வெளியாகக் காணமாக அமைந்தது.
கண்டுபிடிப்புக் காலத் தொழில்நுட்பங்கள்
தொகுதொலைதூரம் செல்லக்கூடிய கர்ராக் கப்பல்கள் மூலமாக கண்டுபிடிப்புக் காலத்தில் அமெரிக்காக்கள், ஆசிய நாடுகளில் ஐரோப்பியர்களின் குடிமைப்படுத்தல் நிகழ்ந்தது. புதிய நிலவரைபடங்களும் கடல்வழி தடங்களும் ஆவணப்படுத்தப்பட்டு மேலும் கடல்வழி கண்டுபிடிப்புகளுக்கு வழிகோலின. ஐரோப்பாவில் குடிமையியல் சட்டங்கள் மீண்டும் பயனுக்கு வந்தது.
தொழிற்புரட்சி
தொகு
|
பிரித்தானிய தொழிற்புரட்சியின் சிறப்புத் தொழில்நுட்பங்களாக துணி உருவாக்கம், சுரங்கப்பணிகள், உலோகவியல் மற்றும் நீராவி இயந்திரத்தைக் கண்டுபிடித்தப்பிறகு போக்குவரத்து என்பவை அமைந்தன. அனைத்திற்கும் மேலாக இந்தப் புரட்சி மிக மலிவாக கிடைத்த நிலக்கரியால் விளைந்தது. வார்ப்பு இரும்புத் தொழில்நுட்பத்தால் பலவிதக் கட்டமைப்புகள் கட்டப்பட்டன. இரும்புப் பாலங்கள் அமைக்கப்பட்டன. நீராவி இயந்திரத்தால் சுரங்கங்களிலிருந்து விரைவாக நிலக்கரியை வெளியேற்ற முடிந்ததால் மேலும் கூடுதலாக நிலக்கரி எடுக்க முடிந்தது. உயரழுத்த நீராவி இயந்திரத்தால் போக்குவரத்துக்கு தொடர்வண்டிகள் வடிவமைக்கப்பட்டு போக்குவரத்துப் புரட்சி ஏற்பட்டது.
19வது நூற்றாண்டு
தொகுபத்தென்பதாவது நூற்றாண்டில் போக்குவரத்து, கட்டுமானம் மற்றும் தொடர்பியலில் பெரும் முன்னேற்றங்கள் ஏற்பட்டன. இவை ஐரோப்பாவிலும் குறிப்பாக ஐக்கிய இராச்சியத்திலும் துவங்கின. 18ஆம் நூற்றாண்டிலிருந்தே இருந்த நீராவிப் பொறி நீராவிப் படகுகளிலும் தொடர்வண்டிப் போக்குவரத்திலும் ஒரே நேரத்தில் பயன்படுத்தப்பட்டது. 1830ஆம் ஆண்டில் முதல் தொடர்வண்டி தடம் மான்செஸ்டருக்கும் லிவர்பூலுக்கும் இடையே கட்டமைக்கப்பட்டது. இராபெர்ட் இசுடீபென்சன் உருவாக்கிய இராக்கெட் தொடர்வண்டிப்பொறி இந்தத் தடத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. தொடர்வண்டிப் போக்குவரத்திற்கு துணையாக தந்தியும் பயன்படுத்தக்கூடிய தொழில்நுட்பமாக மேம்பட்டது.
வெள்ளொளிர்வு விளக்கு போன்ற பல தொழில்நுட்பங்கள் முதன்முறையாக கண்டுபிடிக்கப்பட்டன. வெள்ளொளிர்வு விளக்கினால் தொழிற்சாலைகளில் இரண்டாவது மூன்றாவது முறைப்பணிகள் செயல்படுத்த முடிந்தது. பொறியாளர்களுக்குத் தேவையான பொறிக்கருவிகள் உற்பத்தி நூற்றாண்டின் முதற் பத்தாண்டுகளில் துவங்கியது. அமெரிக்க கூட்டரசு துப்பாக்கித் தொழிற்சாலைகளில் மாற்றிக்கொள்ளக்கூடிய உதிரிபாகங்கள் செயல்முறை அறிமுகப்படுத்தபட்டது. அமெரிக்கத் தயாரிப்பு முறை என்றழைக்கப்பட்ட இது பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் பரவலாகப் பயன்படுத்தப்படும் தயாரிப்பு முறையாயிற்று.
நீராவிக்கப்பல்கள் முற்றிலும் இரும்பினால் கட்டப்பட்டன; இவற்றால் சப்பான், சீனா ஆகிய நாடுகள் மேற்கத்திய நாடுகளுடன் வணிகம் நடத்த ஏதுவாயிற்று. இரண்டாவது தொழிற்புரட்சி எனப்படும் 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் வேதியியல், மின்னியல், பெட்ரோலியம், எஃகு தொழில்நுட்பங்கள் போன்ற துறைகளில் முறைப்படுத்தப்பட்ட,கட்டமைப்பான ஆய்வுகளின் பலனாக தரம் மிகுந்த முன்னேற்றங்கள் ஏற்பட்டன.
20வது நூற்றாண்டு
தொகுஇருபதாம் நூற்றாண்டில் பரவலான கற்கை மற்றும் அறிவியல் முறைமைகளின் செயல்பாடுகளின் காரணமாக விரைவாக முன்னேற்றங்கள் ஏற்பட்டன. தகவல் மற்றும் தொடர்பியல், போக்குவரத்து துறைகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் நிகழ்ந்தன. மேம்பட்ட அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சிகளுக்கு கூடுதலாக நிதி ஒதுக்கப்பட்டதால் பல புதிய தொழில்நுட்பங்கள் உருவாக்கப்பட்டன. இரண்டு உலகப்போர்கள் மற்றும் கூடுதலான படைத்துறை நிதி ஒதுக்கீடும் போரியல் தொழில்நுட்பங்களுக்கு உந்துதல் கொடுத்தன; இவற்றின் இரண்டாம்நிலைப் பயனாக குடிமையியல் துறைகளும் முன்னேற்றமடைந்தன. வானொலி, ரேடார் , ஒலி தொழில்நுட்பங்களின் வளர்ச்சி தொலைபேசி, தொலைப்பிரதி, மின்காந்த சேமிப்பகங்கள் தொழில்நுட்பங்களுக்கு வழி வகுத்தது. கணினிகளும் உலகளாவிய இணைய முறைமைகளும் வடிவமைக்கப்பட்டன. படிசல் எரிபொருளுக்கு மாற்றாக பேணத்தக்க வளங்கள் கண்டறியப்பட்டன. அணுக்கரு ஆற்றலை போர்த்துறையிலும் குடிசார்த் துறைகளிலும், குறிப்பாக அணுமின் நிலையங்களில், பயன்படுத்தத் தேவையான தொழில்நுட்பங்களில் விரைவான முன்னேற்றங்கள் ஏற்பட்டன. ஏவூர்தி தொழினுட்பம் மேம்பட்டு விண்வெளிக்கு மனிதர் இல்லாதும் மனிதருடனும் கலன்கள் அனுப்பப்பட்டன. கணினிகளும் மேம்பட்ட ஆய்வகங்களும் அறிவியல் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தன. உயிரியலில் அறிவியலாளர்கள் மரபிழைச் சீரமைப்பு டி. என். ஏ. உருவாக்கியுள்ளனர்.
ஐக்கிய அமெரிக்காவின் தேசிய பொறியியல் அகாதமி, வல்லுனர்கள் வாக்குகளின்படி, இருபதாம் நூற்றாண்டின் முதன்மை தொழில்நுட்ப மேம்பாடுகளை கீழ்வருமாறு தரவரிசைப்படுத்தியுள்ளது [1]:
- மின்மயமாக்கல்
- தானுந்து
- வானூர்தி
- குடிநீர் வழங்கல் மற்றும் விதரணம்
- இலத்திரனியல்
- வானொலி, தொலைக்காட்சி
- இயந்திரமயமான வேளாண்மை
- கணினிகள்
- தொலைபேசி
- காற்றுப் பதனிடல் மற்றும் குளிரூட்டல்
- நெடுஞ்சாலைகள்
- விண்கலம்
- இணையம்
- படிவமாக்கு அமைப்பு
- வீட்டுவசதி சாதனங்கள்
- நல்வாழ்வுத் தொழில்நுட்பங்கள்
- பாறை எண்ணெய், பாறை வேதிப்பொருட்கள் தொழில்நுட்பங்கள்
- சீரொளி மற்றும் ஒளியிழை
- அணுக்கருவியல் தொழில்நுட்பங்கள்
- பொருள் அறிவியல்
21வது நூற்றாண்டு
தொகு21ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் இலத்திரனியல் (மின்னணுவியல்) தொழில்நுட்பங்கள் மேம்படுத்தல்களில் முதன்மையாய் இருந்தன. வளர்ந்த நாடுகளில் அகலப்பாட்டை இணைய அணுக்கமும் வீட்டுக் கணினிகளை இசை நூலகங்களுடனும் நகர்பேசிகளுடனும் இணைப்பதும் வெகு இயல்பாக இருந்தது. சமூக வலைத்தளங்கள் முதன்மை பெற்றிருந்தன.
உயிரித் தொழினுட்பம் புதிய பல்வேறு வாய்ப்புகளைத் தரவிருக்கின்ற துறையாக வளர்ந்து வருகிறது. முதன்மைத் துறைகளாக
குவாண்டம் கணினிகள், நானோ தொழினுட்பம், உயிரிப் பொறியியல், அணுக்கரு இணைவு ( பன்னாட்டு வெப்ப அணுக்கரு ஆய்வுலை , டெமோ அணு உலைகளைக் காண்க), மேம்பட்ட பொருள்கள் (எ.கா., கிராபீன்), இசுகிராம்ஜெட் (படைத்துறைக்காக தண்டவாள சுடுகலன்களும் உயராற்றல் ஒளிக்கதிர்களும்), மீக்கடத்தல், நினைவுகொள் மின்தடை போன்ற துறைகளில் தீவிரமான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பசுமைத் தொழில்நுட்பங்களான மாற்று எரிபொருள்கள் (எ.கா., எரிபொருள் மின்கலன், கலப்பின தானுந்துகள்), கூடுதல் வினைத்திறன் கொண்ட ஒளியுமிழும் இருமுனையங்கள், சூரிய மின்கலங்கள் ஆகியவற்றில் கவனம் செலுத்தப்படுகிறது.
மேற்கோள்கள்
தொகுவெளி இணைப்புகள்
தொகு- Electropaedia on the History of Technology
- http://www.fptt-pftt.gc.ca/success/century/1900_e.shtml பரணிடப்பட்டது 2007-05-21 at the வந்தவழி இயந்திரம் This is a very good site for looking at Technology in the 1900s (20th century)
- MIT 6.933J – The Structure of Engineering Revolutions பரணிடப்பட்டது 2008-03-24 at the வந்தவழி இயந்திரம். From MIT OpenCourseWare, course materials (graduate level) for a course on the history of technology through a Thomas Kuhn-ian lens.
- Concept of Civilization Events பரணிடப்பட்டது 2006-02-09 at the வந்தவழி இயந்திரம். From Jaroslaw Kessler, a chronology of "civilizing events".
- Ancient and Medieval City Technology