வருணக் கலப்பு சாதிகள்

(வருணக் கலப்புசாதிகள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

வருணக்கலப்பு சாதிகளின் தோற்றம் சுவாயம்பு மனு வகுத்த நான்கு பெரும் வர்ணங்களான அந்தணர், சத்திரியர், வைசியர் மற்றும் சூத்திரர் இவர்களில் முதல் மூன்று வர்ணத்தவர்கள் பூணூல் அணிந்து கொள்ளும் (உபநயனம்) எனும் சடங்கு செய்யும் உரிமை உள்ளதால், இவர்களை இருபிறப்பாளர்கள் (துவிஜர்கள்) என்பர்.[1] [2].

அனுலோம் சாதியினர்

தொகு

இந்த இருபிறப்பாள துவிஜர்களான முதல் மூன்று வர்ண ஆடவர்கள், தமக்கு நேர் கீழ் உள்ள வர்ணத்துப் பெண்களிடம் கூடிப் பிறக்கும் குழந்தைகளை அனுலோம ஜாதியில் சேர்ப்பர். [3]. இந்த அனுலோம ஜாதி குழுந்தைகளுக்கு தங்கள் இருபிறப்பாள (துவிஜர்) தந்தையைப் போல் உபநயனம் எனும் பூணூல் அணியும் தகுதியுண்டு.[4]. அனுலோம சாதி குழந்தைகளின் சமூகத் தகுதியானது, தாயின் வர்ணத்திற்கு மேம்பட்டும், தந்தையின் வர்ணத்தை அடையாமலும், ஆனால் தந்தைக்குச் சமமானவரென்று மதிக்கத் தக்கவராயும் உள்ளனர். [5].

பிரதிலோம சாதியினர்

தொகு

கீழ் வர்ணத்தை சேர்ந்த ஆடவர்கள், தமக்கு மேல் உள்ள வர்ணத்துப் பெண்டிரிடம் கூடிக் கலந்து பிறக்கும் குழந்தைகளை பிரதிலோம ஜாதியினர் என்பர். இந்த பிரதிலோம ஜாதி குழந்தைகள் தந்தையின் வர்ணதிற்குண்டான சமூகத் தகுதி அடையாது, தாயின் வர்ணத்திற்குண்டான சமூகத் தகுதியைவிட கீழான தீண்டத்தாகத 15 வகையான பாகிய சாதியில் வைக்கப்படுவர்.[6].

அனுலோம சாதிகளின் தோற்றம்

தொகு

மேல் வருணத்து ஆண்களும், கீழ் வருணத்து பெண்களும் கூடி கலந்து பிறக்கும் குழந்தைகளை அனுலோம சாதியில் வைக்கப்படுவர். இந்த அனுலோம சாதியினர்கள் தந்தையின் வர்ணத்திற்குக் கீழும், தாயின் வருணத்திற்கு மேலான தகுதி வழங்கி பூணூல் அணியும் (உபநயனம்) சடங்கு செய்யும் உரிமை பெறுகின்றனர். மேலும் தர்ம காரியங்களை செய்யவும் அதில் கலந்து கொள்ளவும் உரிமை பெறுகின்றனர். அனுலோம சாதியினர், பிரதிலோம சாதியினரைவிட சமூகத்தில் கூடுதல் தகுதியுடையவர்கள்.

  • அந்தண தந்தைகளுக்கு, வைசிய மனைவிகள் மூலம் பிறந்த பிள்ளைகளை அம்பஷ்டன் என்பர்.
  • அந்தண தகப்பன்களுக்கு சூத்திர மனைவிகள் மூலம் பிறந்த குழந்தைகளை நிஷாதன் என்றும் பாரசவன் என்றும் அழைப்பர்.
  • சத்திரிய தகப்பன்களுக்கு, சூத்திர மனைவிகள் மூலம் பிறந்த குழந்தைகளை உக்கிரன் என்றழைப்பர்.
  • சத்திரிய தந்தைகளுக்கு, அந்தண மனைவிகள் மூலம் பிறக்கும் பிள்ளைகளை சூதர் என்பர்.
  • வைசிய தகப்பன்களுக்கு, சத்திரிய மனைவிகள் மூலம் பிறக்கும் பிள்ளைகளை மாதகன் என்பர்.
  • வைசிய தகப்பன்களுக்கு, அந்தண மனைவிகள் மூலம் பிறந்த பிள்ளைகளை வைதேகன் என்பர்.

இவ்வாறாக இரு பிறப்பாள (துவிஜர்கள்) வருணத்தவர்கள் கூடிக் கலந்து பிறக்கும் ஆறு வகைப்பட்ட குழந்தைகளை அனுலோம சாதியில் வைக்கப்படுவர்.

பிரதிலோம சாதிகளின் தோற்றம்

தொகு

நான்காம் வருண தந்தைக்கும் இருபிறப்பாளர்களான மேல் வருணத்து மனைவிகளுக்கும் பிறக்கும் குழந்தைகளை பிரதிலோம சாதியில் வைக்கப்படுவர். பிரதிலோம சாதி குழந்தைகளுக்கு தந்தையின் வருணத்திற்குண்டான சமூக தகுதி கிடையாது. ஆனால் தாயின் வருணத்திற்கு குறைவான சமூகத் தகுதியுடன் வைக்கப்படுவர். சில கலப்பு வருணத்தில் பிறந்த பிரதிலோம குழந்தைகள் தீண்டத்தகாதவர்கள் பட்டியலில் சேர்த்து அவமானப்படுத்துவர். எடுத்துக்காட்டு: சண்டாளர். பிரதிலோம சாதியினருக்கு பூணூல் அணியும் உபநயனம் சடங்கு செய்ய தகுதி கிடையாது. இவர்கள் அனுலோம சாதியினரைவிட தாழ்ந்தவர்கள் ஆவர்.

  • வைசியர் அல்லாத மூவகை வருண தந்தைகளுக்க்கும், வைசிய வருணத்து மனைவிகள் மூலம் பிறக்கும் பிள்ளகளை அயோகவன் எனும் சாதியில் வைக்கப்படுவர்.
  • சத்திரியர் அல்லாத மூவகை வருண தந்தைகளுக்கும், சத்திரிய வருணத்து மனைவிகள் மூலம் பிறந்த பிள்ளைகள க்ஷத்தா எனும் சாதியில் வைக்கப்படுவர்.
  • அந்தணர் அல்லாத மூவகை வருணத் தந்தைகளுக்கும், அந்தண வருணத்து மனைவிகள் மூலம் பிறந்த பிள்ளைகள் சண்டாளர் எனும் சாதியில் வைக்கப்படுவர்.

நால்வர்ணத்தினர், அனுலோம - பிரதிலோம சாதிகளுடன் திருமண உறவினால் தோன்றிய சாதிகள்

தொகு

இனி நால்வகை வர்ணத்தினர், அனுலோம மற்றும் பிரதிலோம சாதிகளுடன் திருமண உறவினால் உண்டான புதிய சாதிகளின் தோற்றம் பற்றி காண்போம்.

  • அந்தண தகப்பனுக்கு உக்கிரன் எனும் சாதியைச் சேர்ந்த (அனுலோம சாதி) மனைவியின் மூலம் பிறந்த குழந்தைகளை ஆவிரதன் என்ற சாதியிலும்; அந்தணனுக்கும் அம்பஷ்டன் சாதியைச் சேர்ந்த மனைவி மூலம் பிறந்த குழந்தைகளை அபீரன் என்ற சாதியிலும்; அந்தணனுக்கும் அயோகவன் சாதியைச் சார்ந்த மனைவி மூலம் பிறந்த பிள்ளைகளை திக்வணன் எனும் சாதியில் சேர்த்தனர்.
  • நிஷாதன் எனும் சாதியைச் சார்ந்த ஆடவனுக்கும் நாலாம் வருணத்தை சார்ந்த மனைவி மூலம் பிறந்த பிள்ளைகளை புற்கசன் எனும் சாதியிலும்; நாலாம் வருணத்தை சார்ந்த ஆடவனுக்கும் நிஷாத சாதி மனைவிக்கும் பிறக்கும் பிள்ளைகளை குக்குடகன் என்ற சாதியிலும் வைத்தனர்.
  • சத்தா சாதி ஆடவனுக்கும் உக்கிரன் சாதியைச் சார்ந்த மனைவிக்கும் பிறக்கும் பிள்ளைகளை சுவபாகன் என்ற சாதியிலும்; வைதேகன் சாதியைச் சேர்ந்த ஆடவனுக்கும் அம்பஷ்டன் சாதியை சார்ந்த மனைவிக்கும் பிறக்கும் பிள்ளைகள வேணன் என்ற சாதியில் சேர்க்கின்றனர்.
  • வைதேக சாதி ஆடவன் அயோகவ சாதிப் பெண்ணுடன் கூடிப் பெறுகின்ற பிள்ளை மைத்திரேயன் சாதியினர் ஆவான்.
  • தஸ்யூ ஆடவனுக்கும் அயோகவன் சாதி பெண்ணிற்கும் பிறந்த பிள்ளைகள் சைரந்திரன் சாதியினர் ஆவான்.
  • நிஷாத சாதி ஆடவனுக்கும் அயோகவ சாதிப் பெண்ணிற்கு பிறந்த பிள்ளைகள் மார்க்கவன் சாதியினர் ஆவான்.
  • நிஷாத சாதி ஆடவனுக்கும் விதேக சாதி பெண்ணிற்கும் பிறக்கும் பிள்ளைகளை கார்வாரன் சாதியினர் ஆவர்.
  • நிஷாத சாதி ஆடவனுக்கும் வைதேக பெண்ணிற்கும் பிறக்கும் பிள்ளைகளை ஆகிண்டிகன் சாதியினர் ஆவர்.
  • சண்டாள ஆடவனுக்கும் வைதேக சாதி பெண்ணிற்கு பிறக்கும் பிள்ளைகள் பாண்டு எனும் சாதியை தோற்றுவிக்கின்றனர்.
  • சண்டாள ஆடவனுக்கும் புற்கசன் சாதி பெண்ணிற்கு பிறக்கும் பிள்ளைகள் சோபகன் எனும் சாதியை தோற்றுவிக்கிறான்.
  • சண்டாள ஆடவனுக்கும் நிஷாத சாதிப் பெண்ணிற்கு பிறக்கும் பிள்ளைகள் அந்தியாவசாயி எனும் சாதியை தோற்றுவிக்கின்றனர்.

இவற்றில் ஆவிரதன், அபீரன், திக்வணன், புற்கசன், குக்குடகன், சுவபாகன் மற்றும் வேணன் ஆகிய கலப்பு சாதிகளை அந்தராள சாதியினர் என்று மனு கூறுகிறார்.

பாகிய சாதிகள்

தொகு

அனுலோம - பிரதிலோம ஆகிய சாதியினர்கள் தமக்குள் சம்பந்தம் செய்து கொண்டு பிறக்கும் குழந்தைகள் பாகிய சாதியர் என்று மநு குறிப்பிடுகிறார். மேலும் இவர்கள் தீண்டத்தகாதவர் ஆவர். அனுலோம மற்றும் பிரதிலோம ஆடவர்கள் நால் வருணத்துப் பெண்களிடம் கூடிக் கலந்து பெறும் பிள்ளைகள் 15 வகையினரான மிகத் தாழ்ந்த பாகிய சாதியர் ஆவர்.

விராத்திய சாதியினர்

தொகு

இருபிறப்பாளர்களான அந்தணர், சத்திரியர் மற்றும் வைசியர்களுக்கு சுய வர்ணத்தில் பிறக்கும் பிள்ளைகளுக்கு சாத்திரப்படி உபநயனம் முதலிய வைதீக கடமைகள் ஆற்ற தகுதி இல்லாமல் போனால் அவர்களை காயத்திரி மந்திரம் கூற தகுதியற்ற விராத்திய சாதியினராக கருதப்படுவர். நால்வருணத்திலும், கற்புநெறி தவறுவதாலும், சொந்த கோத்திரத்தில் மணம் புரிவதாலும், ஜாதகர்மா முதலிய சமயச் சடங்குகள் செய்யாமையாலும் கலப்பு சாதிகள் தோண்றுவதற்கு இந்த விராத்திய சாதியர்களே காரணமாயினர்.

  • விராத்திய அந்தண சாதி ஆடவனுக்கும், அந்தணப் பெண்னுக்கும் பிறக்கும் குழந்தைக்கு பூர்ஜகண்டன், என்றும் மேலும் பல நாட்டில் அவர்களை ஆவந்தியான், வாடதானன், புஷ்பதன், சைகன் எனப் பல பெயரால் அழைக்கப்படுகிறர்கள் என்று மனு கூறுகிறார்.
  • விராத்திய சத்திரிய சாதி ஆணுக்கும் சத்திரியப் பெண்னுக்கும் பிறக்கும் குழந்தைகளை சல்லன் சாதியினர் என்பர். இவனுக்கு நாடுகள் தோறும் மல்லன், நிச்விநடன், கரணன், கசன், திரவிடன் என வேறு பெயர்களும் வழங்கப்படுகிறது.
  • விராத்திய வைசிய சாதி ஆணுக்கும் வைசியப் பெண்ணுக்கும் பிறப்பவர்களை சுதன்வா சாதியினர் என்பர். இந்த சுதன்வாவை, தச்சன், காரூசன், விஜன்மா, மைத்திரன், சாத்துவதன் என பல இடங்களில் பல பெயர்களால் பல பகுதிகளில் அழைக்கப்படுகிறான்.

சூதன், வைதேகன், சண்டாளன், மாகதன், க்ஷத்தா மற்றும் அயோகவன் சாதி ஆடவர்கள் தத்தமது வகைப் பெண்டிரிடமும், மற்ற நால்வர்ணப் பெண்டிரிடமும் கூடிப் பிறக்கும் குழந்தைகள் தங்கள் தந்தையின் சாதியைச் சாருவர்.

கலப்பு சாதியினர்களின் தொழில்கள்

தொகு
  • அனுலோம மற்றும் பிரதிலோம சாதியினர் இருபிறப்பாளர்களான முதல் மூன்று வர்ணத்தாருக்கு ஏவல் தொழில் செய்து பிழைக்க வேண்டும்.
  • சூதர் சாதியினர் தேரோட்டிகளாகவும், தேர்க் குதிரைகளுக்கு பயிற்சி அளிப்பவர்களாகவும் ; அம்பஷ்டர் அறுவை மருத்துவர்களாகவும், ஆண்களுக்கு முடி திருத்துபவராகவும்; வைதேகர் அந்தப்புரக் காவல் காப்பவர்களாகவும்; மாகதர் கடல் கடந்தும், கடற்கரையிலும் வாணிகம் செய்பவராயும் வாழ்வர். மாகதர் என்போர் வாழ்த்துப் பாடுவோர். [7]
  • நிஷாதர் சாதியினர் மீன் பிடித்தும்; அயோகவர் சாதியினர் தச்சு வேலையும்; மேதன், ஆந்திரன், செஞ்சு ஆகிய சாதியினர்களின் தொழில் காட்டு விலங்குகளை வேட்டையாடி விற்றலே.
  • சத்தா சாதியினர் எலி, உடும்பு பிடித்தல்; உக்கிரன், புற்கசன் சாதியினர் தோல் வியாபாரம் செய்தல்; திக்வணனுக்கும், வேணனும் இசைக் கருவிகள் வாசித்தலே தொழில்.
  • சண்டாளன் பிணத்தை எரித்தல், மரண தண்டனை நிறைவேற்றுதலே தொழில்.
  • சைரந்திரன் சாதியினர் செய்யும் தொழில்கள்:- எண்ணெய் தேய்த்தல், கை, கால் பிடித்து விடுதல், வலை வீசுதல்.
  • மைத்திரேயன் மணியடித்துக் கொண்டு, அனைவரையும் போற்றி பிச்சை எடுத்தலே தொழில்.
  • மார்க்கவன் எனும் செம்படவ சாதியினருக்கு நதிகளில் ஓடம் விடுதலே தொழில்.
  • பாண்டு சாதியினர் மூங்கில் தொடர்பான வேலைகள் செய்வது.
  • ஆகிண்டிகன் சாதியினர் குற்றவாளிகளை அடித்தல், கட்டுதல், மரணம் உண்டாக்கலே தொழில்.
  • சோபாகன் சாதியினர் மரண தண்டனை நிறைவேற்றலே தொழில்.
  • அந்தியாவசாயி சாதியினர் இடுகாட்டை காத்தலே தொழில்.

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. The Laws of Manu, George Bühler, translator
  2. Laws of Manu, Chapter X, Sloga 4/ பக்கம் 67
  3. Laws of Manu, Chapter X, Sloga 7/ பக்கம் 67
  4. Laws of Manu, Chapter X. Sloga 41/ பக்கம் 68
  5. Laws of Manu, Chapter X, Sloga 6/ பக்கம் 67
  6. Laws of Manu, Chapter X, Sloga 30 & 31/ பக்கம் 67 & 68
  7. "வான் அளைந்தது, மாகதர் பாடலே". கம்பராமாயணம் - பள்ளிபடைப் படலம், பாடல் எண் 16

உசாத்துணை

தொகு
  • மனுதரும சாஸ்திரம், திருலோக சீதாராம், அலைகள் வெளியீட்டகம், சென்னை.
  • *Manusmriti: The Laws of Manu (Chapter 10, Mantras 1 to 49)
"https://ta.wikipedia.org/w/index.php?title=வருணக்_கலப்பு_சாதிகள்&oldid=4054526" இலிருந்து மீள்விக்கப்பட்டது