வலைவாசல்:சைவம்/சிறப்புக் கட்டுரை/2

சேக்கிழார்

பெரியபுராணம் அல்லது திருத்தொண்டர் புராணம் என்பது சேக்கிழார் அவர்களால் பெருங்காப்பிய இலக்கணங்கள் பலவும் கொண்டதாக இயற்றப்பெற்ற சைவ காப்பியமாகும். சுந்தரமூர்த்தி சுவாமிகளின் திருத்தொண்டத் தொகை எனும் நூலை முதல் நூலாக கொண்டும். சுந்தரமூர்த்தி சுவாமிகளை காப்பிய தலைவராக கொண்டும், அவர் போற்றிய சைவ அடியார்களின் வாழ்க்கை வரலாற்றினையும் இந்நூலில் விவரிக்கிறார். அத்துடன் திருத்தொண்டத் தொகை, நம்பியாண்டார் நம்பி எழுதிய திருத்தொண்டர் திருவந்தாதி ஆகியவற்றை மூலநூல்களாகக் கொண்டும், சேக்கிழார் பல ஊர்களுக்கும் சென்று திரட்டிய தகவல்களைக் கொண்டும் பெரியபுராணம் எழுதப்பெற்றுள்ளது. இரண்டாம் குலோத்துங்க சோழனின் ஆனையின்படி தில்லைக்குச் சென்றவர், அங்கிருக்கும் இறைவனான நடராஜன் உலகெலாம் என்று அடியெடுத்துக் கொடுக்க சேக்கிழார் உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன் என பெரியபுராணத்தினை தொடங்கியதாக நம்பப்படுகிறது. இந்நூல் இரண்டு காண்டங்களையும், பதிமூன்று சருக்கங்களையும் கொண்டுள்ளது.