வலைவாசல்:துடுப்பாட்டம்/சிறப்புக் கட்டுரை/21
கேன் ஸ்டுவார்ட் வில்லியம்சன் (Kane Stuart Williamson, பிறப்பு: ஆகத்து 8, 1990) என்பவர் நியூசிலாந்து துடுப்பாட்ட அணி வீரரும் அணித்தலைவரும் ஆவார். இவர் துடுப்பாட்டத்தில் தலைசிறந்த மட்டையாளர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். வலதுகை மட்டையாளரான இவர் அவ்வப்போது வலது கை புறத்திருப்ப பந்து வீச்சாளராகவும் செயல்படுகிறார். இவர் இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் தலைவராகச் செயல்படுகிறார். நியூசிலாந்திலுள்ள வடக்கு மாவட்ட அணிக்காக உள்ளூர்ப் போட்டிகளில் விளையாடி வரும் இவர் இங்கிலாந்திலுள்ள கிளவ்செஸ்டெர்ஷயர் மற்றும் யார்க்ஷயர் அணிகளுக்காகவும் விளையாடி வருகிறார்.
2019 உலகக்கிண்ணத் தொடரில் நியூசிலாந்து அணியை வழிநடத்திய வில்லியம்சன், தனது அணியை இறுதிப்போட்டி வரை அழைத்துச்சென்றார். மேலும் உலகக்கிண்ணத் தொடரில் அதிக ஓட்டங்கள் (578) எடுத்த அணித்தலைவர் என்ற சாதனையைப் படைத்தார். இவருக்கு ஐசிசி 2019 உலகக்கிண்ணத்தின் தொடர் நாயகன் விருது வழங்கியது. தற்போது இவர் ஐசிசியின் தேர்வுத் துடுப்பாட்ட மட்டையாளர்கள் தரவரிசையில் 2வது இடத்திலும் ஒருநாள் மட்டையாளர்கள் தரவரிசையில் 6வது இடத்திலும் உள்ளார்.