வலைவாசல்:துடுப்பாட்டம்/சிறப்புக் கட்டுரை/24
ஈடன் கார்டன்ஸ் (Eden Gardens) என்பது இந்தியாவின் கொல்கத்தா நகரில் அமைந்திருக்கும் ஒரு துடுப்பாட்ட அரங்கம் ஆகும். இந்தியாவிலேயே பழமையான துடுப்பாட்ட அரங்கமான இது 1864ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இது வங்காள துடுப்பாட்ட அணி மற்றும் ஐபிஎல் தொடரின் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகளின் உள்ளகத் துடுப்பாட்டக் களமாக விளங்குகிறது. அத்துடன் இந்தியத் துடுப்பாட்ட அணி பங்கேற்கும் பன்னாட்டுத் தேர்வு, ஒருநாள் மற்றும் இருபது20 ஆகிய பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளின் நிகழ்விடமாக விளங்குகிறது. இவ்வரங்கில் மொத்தம் 68,000 இருக்கைகள் அமைந்துள்ளன.
துடுப்பாட்டத்தின் கொலோசியம் என்று குறிப்பிடப்படும் ஈடன் கார்டன்ஸ் உலகின் மிகச்சிறந்த துடுப்பாட்ட அரங்குகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இங்கு உலகக் கோப்பை, உலக இருபது20 மற்றும் ஆசியக் கிண்ணம் உள்ளிட்ட முக்கிய பன்னாட்டுத் தொடர்களின் போட்டிகளும் நடந்துள்ளன. இங்கு நடைபெற்ற 2016 ஐசிசி உலக இருபது20 இறுதிப்போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி மேற்கிந்தியத் தீவுகள் அணி உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றியது.