வலைவாசல்:துடுப்பாட்டம்/சிறப்புக் கட்டுரை/25
குமார் சொக்சானந்த சங்கக்கார (Kumar Chokshanada Sangakkara (Sinhalese: කුමාර සංගක්කාර;பிறப்பு: 27 அக்டோபர் 1977, மாத்தளை) அல்லது சுருக்கமாக குமார் சங்கக்கார என்பவர் முன்னாள் இலங்கைத் துடுப்பாட்ட அணியின் மட்டையாளரும், தலைவர் மற்றும் இழப்புக் கவனிப்பாளர் ஆவார். அனைத்துக் காலத்திற்குமான சிறந்த மட்டையாளர்களில் ஒருவராக அறியப்படுகிறார். மேலும் இவரின் காலத்தில் அதிகம் ஆதிக்கம் செலுத்திய மட்டையாளர்களில் ஒருவராகவும் அறியப்படுகிறார். இவருடைய நண்பர் மற்றும் சகவீரரான மகேல ஜயவர்தனவுடன் இணைந்து அனைத்து வடிவத் துடுப்பாட்டங்களிலும் பல சாதனைகளைப் படைத்துள்ளார். இவர் சுமார் 15 ஆண்டுகாலம் துடுப்பாட்டம் விளையாடி வந்தார். இவர் விளையாடிய அனைத்து சர்வதேச போட்டிகளிலும் சேர்த்து மொத்தமாக 28,016 ஓட்டங்கள் சேர்த்துள்ளார்.
இடது கை துடுப்பாட்ட வீரரான இவர் இழப்புக் கவனிப்பாளராகவும் இருந்துள்ளார். மேலும் இழப்புக் காப்பாளராகப் பல சாதனைகளைப் புரிந்துள்ளார். ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் அதிக ஓட்டங்கள் சேர்த்த வீரர்களின் பட்டியலில் சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்திலும் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் அதிக ஓட்டங்கள் சேர்த்தவர்கள் பட்டியலில் ஆறாவது இடத்திலும் உள்ளார்.
சங்கக்கரா, துடுப்பாட்ட வரலாற்றில் அதிக திறமைகள், நிதானம் உள்ள சில மட்டையாளர்களில் ஒருவராக அறியப்படுகிறார். 2005 முதல் 2015 ஆம் ஆண்டு வரையில் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளுக்கான பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் மட்டையாளர் தரவரிசையில் அதிக முறை முதலிடத்தில் இருந்தார்.