வலைவாசல்:துடுப்பாட்டம்/சிறப்புக் கட்டுரை/5
ரிக்கி தாமஸ் பாண்டிங் (Ricky Thomas Ponting, டிசம்பர் 19, 1974) ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரர் ஆவார். இவர் அனைத்துக் காலமும் தலைசிறந்த துடுப்பாட்ட வீரர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணியின் பொற்காலமாகக் கருதப்படும் 2004 முதல் 2011 ஆண்டு வரையிலான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளுக்கும் 2002 மற்றும் 2011 இல் ஒருநாள் துடுப்பாட்டப் போட்டிகளுக்கும் அணித் தலைவராக இவர் இருந்தார். வலது கை மட்டையாளராகவும், சிறந்த களவீரராகவும், அவ்வப்போது பந்துவீச்சாளராகவும் செயல்பட்டார்.
2003 மற்றும் 2007 ஆண்டுகளின் துடுப்பாட்ட உலகக் கிண்ணம் போட்டியில் வெற்றி பெற்ற ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணியின் தலைவராகவும் 1999 துடுப்பாட்ட உலகக்கிண்ணத்தை வென்ற ஆத்திரேலிய அணியில் ஸ்டீவ் வா தலமையிலான அணியில் ஒரு வீரராகவும் இடம் பெற்றிருந்தார். மேலும் 2006 மற்றும் 2009 ஆண்டுகளின் சாதனையாளர் கிண்ணப் போட்டிகளிலும் இவர் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. இவர் தலைமையில் பங்குபெற்ற 324 போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி 220 போட்டிகளில் (67.91%) வென்றுள்ளது. எனவே பன்னாட்டுத் துடுப்பாட்ட வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான அணித்தலைவராக ரிக்கி பாண்டிங் கருதப்படுகிறார்.