1999 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்
1999 துடுப்பாட்ட உலகக் கிண்ணம் (1999 Cricket World Cup, கிரிக்கெட் உலகக்கோப்பை 1999) என்பது ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளின் ஏழாவது உலகக் கிண்ணத்துக்கான போட்டியாகும். இக்கிண்ணம் ஐசிசி கிண்ணம் என அழைக்கப்படுகின்றது. இப்போட்டிகள் 1999 மே 14 முதல் சூன் 20 வரை இங்கிலாந்தில் இடம்பெற்றது. அயர்லாந்து, வேல்ஸ், ஸ்கொட்லாந்து, நெதர்லாந்து ஆகிய இடங்களிலும் சில போட்டிகள் நடைபெற்றன. இதில் இங்கிலாந்து, ஆத்திரேலியா, மேற்கிந்தியத் தீவுகள், இந்தியா, பாக்கித்தான், நியூசிலாந்து, இலங்கை, சிம்பாப்வே, தென்னாப்பிரிக்கா ஆகிய தேர்வுத் துடுப்பாட்ட அணிகளுடன், தேர்வு அந்தஸ்துப் பெறாத வங்காளதேசம், கென்யா, ஸ்கொட்லாந்து ஆகிய நாடுகளுமாக மொத்தமாக 12 நாடுகள் பங்கேற்றன. தேர்வு அந்தஸ்து பெறாத அணிகள் பன்னாட்டு கிரிக்கட் சங்கத்தினால் நடத்தப்பட்ட தெரிவுப் போட்டியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டன. இப்போட்டிகளில் ஓர் அணிக்கு 50 ஓவர்கள் விளையாடக் கொடுக்கப்பட்டது. லோட்ஸ் அரங்கில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஆத்திரேலிய அணி பாக்கித்தான் அணியை வென்று இரண்டாவது தடவையாக உலகக் கிண்ணத்தைப் பெற்றது.
1999 ஐசிசி துடுப்பாட்ட உலகக்கிண்ணத்தின் சின்னம் | |
நிர்வாகி(கள்) | பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை |
---|---|
துடுப்பாட்ட வடிவம் | ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் |
போட்டித் தொடர் வடிவம் | தொடர்சுழல் முறை, வெளியேற்றம் |
நடத்துனர்(கள்) | இங்கிலாந்து |
வாகையாளர் | ஆத்திரேலியா (2-ஆம் தடவை) |
மொத்த பங்கேற்பாளர்கள் | 12 |
மொத்த போட்டிகள் | 42 |
தொடர் நாயகன் | லான்ஸ் குளூசினர் |
அதிக ஓட்டங்கள் | ராகுல் திராவிட் (461) |
அதிக வீழ்த்தல்கள் | ஜெஃப் அலொட் (20) ஷேன் வோர்ன் (20) |
பங்கேற்ற நாடுகள்
தொகுடெஸ்ட் அந்தஸ்துப் பெற்ற அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, மேற்கிந்தியா, நியுசிலாந்து, தென்னாபிரிக்கா, சிம்பாபே, இலங்கை, இந்தியா, பாக்கிஸ்தான் நாடுகளும் டெஸ்ட் அந்தஸ்துப் பெறாத பங்களாதேசம் கென்யா, அயர்லாந்து ஆகிய நாடுகளுமாக மொத்தமாக 12 நாடுகள் பங்கேற்றன. டெஸ்ட் அந்தஸ்து பெறாத நாடுகள் சர்வதேச கிரிக்கட் சம்மேளத்தினால் (ICC) நடத்தப்பட்ட தெரிவுப் போட்டியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவையாகும். இத்தொடரில் மொத்தம் 42 போட்டிகள் இடம் பெற்றன.
சூப்பர்-6 நிலைப் போட்டி
தொகுசுப்பர்-6 நிலைப் போட்டிகளின் 6 அணிகள் தெரிவாகின. அவை: பாக்கிஸ்தான், அவுஸ்திரேலியா, தென்னாபிரிக்கா, நியுசிலாந்து, சிம்பாபே, இந்தியா
அரையிறுதிப் போட்டிகள்
தொகுசுப்பர்-6 நிலைப் போட்டிகளில் தெரிவான நியுசிலாந்து, பாக்கிஸ்தான், அவுஸ்திரேலியா, தென்னாபிரிக்கா அரையிறுதி ஆட்டத்திற்கு தெரிவாகின.
முதலாவது அரையிறுதி ஆட்டம் சூன் 16 1999 நியுசிலாந்து அணிக்கும், பாக்கிஸ்தான் அணிக்குமிடையில் நடைபெற்றது. இப்போட்டியில் முதலில் துடுப்பாடிய நியுசிலாந்து அணி 50 ஓவர் நிறைவில் 7 விக்கட் இழப்பிற்கு 240 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. பதிலுக்கு துடுப்பாடிய பாக்கிஸ்தான் அணி 47.3 ஓவர்களில் 1 விக்கட் இழப்பிற்கு 242 ஓட்டங்களைப் பெற்று இறுதி ஆட்டத்திற்குத் தெரிவானது. சஹீட் அன்வர் 148 பந்துகளில் 113 ஓட்டங்களைப் பெற்றார்.
இரண்டாவது அரையிறுதி ஆட்டம் சூன் 17 1999 தென்னாபிரிக்கா அணிக்கும் அவுஸ்திரேலியா அணிக்கும் நடைபெற்றது. இப்போட்டியில் முதலில் துடுப்பாடிய அவுஸ்திரேலியா அணி 49.2 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 213 ஓட்டங்களைப் பெற்றது. தென்னாபிரிக்கா அணி 49.4 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 213 ஓட்டங்களையே பெற்றது. இதன்படி அவுஸ்திரேலியா வெற்றியீட்டி இறுதிப் போட்டிக்குத் தெரிவானது.
இறுதிப் போட்டி
தொகு1999 உலகக்கிண்ணத்துக்கான இறுதிப்போட்டி சூன் 20. 1999 இங்கிலாந்தின் லோட்ஸ் மைதானத்தில் பாக்கிஸ்தான், அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையில் நடைபெற்றது. நாணயச் சுண்டலில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் முதலில் துடுப்பெடுத்தாட முடிவு செய்தது.
பாக்கிஸ்தான் அணி 39 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 132 ஓட்டங்களைப் பெற்றது. சஹீட் அன்வர் 15 ஓட்டங்களையும், அப்துல் ரஸ்ஸாக் 17 ஓட்டங்களையும், இஜாஸ் அஹமட் 22 ஓட்டங்களையும, இன்சமாம் உல் ஹக் 15 ஓட்டங்களையும், சஹீட் அப்ரிடி 13 ஓட்டங்களையும் பெற்றனர். ஏனைய வீரர்கள் 10க்கும் குறைவான ஓட்டங்களையே பெற்றனர். இப்போட்டியில் உதிரிகளாக 25 ஓட்டங்கள் பெறப்பட்டன. விக்கட்டுக்கள் பின்வருமாறு சரிந்தன. 1-21, 2-21, 3-68, 4-77, 5-91, 6-104, 7-113, 8-129, 9-129, 10-132.
பந்துவீச்சில் மெக்ராத் 13 ஓட்டங்களுக்கு 2 விக்கட்டுக்களையும், பிளங்மின் 30 ஓட்டங்களுக்கு 1 விக்கட்டையும், பீ.ஆர். ரீபில் 29 ஓட்டங்களுக்கு 1 விக்கட்டையும், டி.எம். மோடி 17 ஓட்டங்களுக்கு 2 விக்கட்டுக்களையும், ஷேன் வோர்ன் 9 ஓவர்கள் பந்துவீசி ஓட்டமற்ற ஒரு ஓவரைக் கொடுத்து 33 ஓட்டங்களுக்கு 4 விக்கட்டுக்களையும் கைப்பற்றிக் கொண்டனர். அவுஸ்திரேலியா அணியின் சிறப்பான பந்துவீச்சு பாக்கிஸ்தான் அணி சிரமப்பப்பட்டது.
பதிலுக்குத் துடுப்பாடிய அவுஸ்திரேலியா அணி 20.1 ஓவர்களில் 2 விக்கட் இழப்பிற்கு 133 ஓட்டங்களைப் பெற்று 8 விக்கட்டுக்களினால் பாக்கிஸ்தான் அணியை வெற்றியீட்டி. 1999ம் ஆண்டு உலகக்கிண்ணத்தை தனதாக்கிக் கொண்டது. அவுஸ்திரேலியா ஆட்டத்தில் வோர்க் ஆட்டமிழக்காமல் 37 ஓட்டங்களையும். ஏ. ஸி. கில்கெரிஸ்ட் 54 ஓட்டங்களையும், பொன்டிங் 24 ஓட்டங்களையும், லீமன் 13 ஆட்டமிழக்காமல் ஓட்டங்களையும் பெற்றனர். அவுஸ்திரேலியாவின் விக்கட்டுக்கள் பின்வருமாறு சரிந்தன. 1-75, 2-112
பந்துவீச்சில் வசீம்அக்ரம், சக்லேன்முஸ்தாக் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கட்டுக்களை கைப்பற்றினர். இந்த ஆட்டத்துக்கான நடுவர்களாகக் களத்தில் மேற்கிந்தியத் தீவுகளைச் சேர்ந்த எஸ். ஏ. பக்னரும், இங்கிலாந்தைச் சேர்ந்த டி. ஆர். ஷெப்பேர்ட்டும், மூன்றாவது நடுவராக வெங்கட்ராகவனும் பணியாற்றினர். ரஞ்சன் மடுகல்ல ஆட்ட நடுவராகக் கடமையாற்றினார். போட்டியில் சிறப்பாட்டக்காரராக ஷேன் வோர்ன் தெரிவானார்.
இலங்கை பங்கேற்ற போட்டிகள்
தொகுமுதல்சுற்றில் இலங்கை அணி 5 போட்டிகளில் பங்கேற்று இரண்டு போட்டிகளில் வெற்றிபெற்றது. மூன்று போட்டிகளில் தோல்வியுற்றது.
இலங்கை பங்கேற்ற ‘ஏ’பிரிவில் முதலாவது போட்டி இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்றது. இதில் இலங்கை அணி 48.3 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 204 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்கு துடுப்பாடிய இங்கிலாந்து அணி 24.5 ஓவர்களில் 2 விக்கட் இழப்பிற்கு 207 ஓட்டங்களைப் பெற்று 8 விக்கட்டுக்களினால் வெற்றியீட்டியது.
இரண்டாவது போட்டி தென்னாபிரிக்கா அணிக்கெதிராக நடைபெற்றது. இதில் தென்னாபிரிக்கா குறித்த 50 ஓவர்களில் 9 விக்கட் இழப்பிற்கு 199 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்கு துடுப்பாடிய இலங்கை அணியினால் 35.2 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 110 ஓட்டங்களையே பெற முடிந்தது. தென்னாபிரிக்கா அணி 89 ஓட்டங்களால் இலங்கையை வெற்றிகொண்டது.
மூன்றாவது போட்டி சிம்பாபே அணிக்கெதிராக நடைபெற்றது. இதில் சிம்பாபே அணி குறித்த 50 ஓவர்களில் 9 விக்கட் இழப்பிற்கு 192 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்கு துடுப்பாடிய இலங்கை அணி 46வது ஓவரில் 6 விக்கட் இழப்பிற்கு 198 ஓட்டங்களைப் பெற்று 4 விக்கட்டுக்களினால் சிம்பாபேயை வெற்றிகொண்டது.
நான்காவது போட்டி இந்தியா அணிக்கெதிராக நடைபெற்றது. இதில் இந்தியா அணி குறித்த 50 ஓவர்களில் 6 விக்கட் இழப்பிற்கு 373 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. இலங்கை அணியால் 42.3 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 216 ஓட்டங்களையே பெறமுடிந்தது. இப்போட்டியில் இந்தியா அணி 157 ஓட்டங்களினால் இலங்கை அணியை வெற்றிகொண்டது.
ஐந்தாவது போட்டி கென்யா அணிக்கெதிராக நடைபெற்றது. இதில் முதலில் துடுப்பாடிய இலங்கை அணி 8 விக்கட் இழப்பிற்கு 275 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. பதிலுக்கு துடுப்பாடிய கென்யா அணியால் குறித்த 50 ஓவர்களில் 6 விக்கட் இழப்பிற்கு 230 ஓட்டங்களையே பெறமுடிந்தது. இப்போட்டியில் இலங்கை அணி 45 ஓட்டங்களினால் வெற்றியீட்டியது.
சுப்பர்-6 நிலைப் போட்டி அணிக்கு 1996ம் ஆண்டு உலகக்கிண்ணத்தை வென்ற இலங்கை தேர்ந்தெடுக்கப்படவில்லை.
போட்டிகள் பிபிசி மற்றும் ஸ்கை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானது.[1]
சான்றுகள்
தொகு- ↑ ECB Media Release (10 March 1998). "Live coverage of the Cricket World Cup - to be staged in the UK next year". ESPN Cricinfo. http://www.espncricinfo.com/page2/content/story/76110.html. பார்த்த நாள்: 25 November 2014.