வலைவாசல்:மெய்யியல்/தேர்ந்தெடுத்த கட்டுரை/1
மாந்தவுருவகம் (anthropomorphism) எனப்படுவது, மாந்தர்களின் தனிப்பண்புகளைப் பிற உயிரினங்கள் அல்லது உயிரற்ற அஃறிணைப்பொருட்களின் மேல் சாற்றிக் கூறுவது; பல வேளைகளில் சமயம், நாடு, பொருளியல் இயக்கம் போன்ற உருவமற்றவையும் கருத்தளவில் மட்டுமே உள்ளனவுமாகிய நுண்பொருட்களின் மீதும் மாந்தரின் பண்புகளை இவ்வாறு ஏற்றுவர். மாந்தவுருவகம் உயிரற்றப் பொருட்களின்மீது மனித அல்லது விலங்குகளின் பண்புகளை ஏற்றும் ஒரு உருவக வகை; இது புரோசோபோபோயா எனப்படும் ஒருவர் வேறொருவராகப் பாத்திரமேற்கும் தன்மையோடு தொடர்புடையது. விலங்குகள், இயற்கை சக்திகள், மற்றும் கண்ணுக்கும் பிற புலன்களுக்கும் எட்டாத ஊழின் காரணிகளே பெரும்பாலும் மாந்தவுருவகப்படுத்தப்படும்.
சமயம் மற்றும் தொன்மவியலில், "மாந்தவுருவகம்" என்பது தெய்வீகப் பிறவிகளை மனித உருவில் கருதுவதையும் அவற்றின்மீது மனிதப் பண்புகளைக் காண்பதையும் குறிக்கும். பல தொன்மங்களும் கிட்டத்தட்ட அனைத்து தெய்வங்களையும் மனித உருவப்படுத்தி, அவர்கள் பொறாமை, வெறுப்பு, அன்பு போன்ற மனித உணர்வுகளை வெளிப்படுத்துபவையாகவே சித்தரிக்க முனைகின்றன. சூசு, அப்போலோ போன்ற கிரேக்கக் கடவுட்களும், இந்திரன், பிரம்மன் போன்ற இந்துக் கடவுட்களும் புகழத்தக்கதும் இகழத்தக்கதுமான மனிதப் பண்புகளை வெளிக்காட்டுவதாகச் சித்தரிக்கப்படுள்ளனர்.
- படத்தில் சூரியனின் மாந்தவுருவகமாகச் சித்தரிக்கப்படும், உரோமானிய கடவுள் அப்போலோ