வலைவாசல்:மெய்யியல்/தேர்ந்தெடுத்த கட்டுரை
தேர்ந்தெடுக்கப்பட்ட வாராந்திர கட்டுரை
தொகுவாரம் 1 பார் - உரையாடுக - தொகு - வரலாறு
மாந்தவுருவகம் (anthropomorphism) எனப்படுவது, மாந்தர்களின் தனிப்பண்புகளைப் பிற உயிரினங்கள் அல்லது உயிரற்ற அஃறிணைப்பொருட்களின் மேல் சாற்றிக் கூறுவது; பல வேளைகளில் சமயம், நாடு, பொருளியல் இயக்கம் போன்ற உருவமற்றவையும் கருத்தளவில் மட்டுமே உள்ளனவுமாகிய நுண்பொருட்களின் மீதும் மாந்தரின் பண்புகளை இவ்வாறு ஏற்றுவர். மாந்தவுருவகம் உயிரற்றப் பொருட்களின்மீது மனித அல்லது விலங்குகளின் பண்புகளை ஏற்றும் ஒரு உருவக வகை; இது புரோசோபோபோயா எனப்படும் ஒருவர் வேறொருவராகப் பாத்திரமேற்கும் தன்மையோடு தொடர்புடையது. விலங்குகள், இயற்கை சக்திகள், மற்றும் கண்ணுக்கும் பிற புலன்களுக்கும் எட்டாத ஊழின் காரணிகளே பெரும்பாலும் மாந்தவுருவகப்படுத்தப்படும்.
சமயம் மற்றும் தொன்மவியலில், "மாந்தவுருவகம்" என்பது தெய்வீகப் பிறவிகளை மனித உருவில் கருதுவதையும் அவற்றின்மீது மனிதப் பண்புகளைக் காண்பதையும் குறிக்கும். பல தொன்மங்களும் கிட்டத்தட்ட அனைத்து தெய்வங்களையும் மனித உருவப்படுத்தி, அவர்கள் பொறாமை, வெறுப்பு, அன்பு போன்ற மனித உணர்வுகளை வெளிப்படுத்துபவையாகவே சித்தரிக்க முனைகின்றன. சூசு, அப்போலோ போன்ற கிரேக்கக் கடவுட்களும், இந்திரன், பிரம்மன் போன்ற இந்துக் கடவுட்களும் புகழத்தக்கதும் இகழத்தக்கதுமான மனிதப் பண்புகளை வெளிக்காட்டுவதாகச் சித்தரிக்கப்படுள்ளனர்.
- படத்தில் சூரியனின் மாந்தவுருவகமாகச் சித்தரிக்கப்படும், உரோமானிய கடவுள் அப்போலோ
வாரம் 2 பார் - உரையாடுக - தொகு - வரலாறு
இருநிலை பயனெறிமுறைத்துவம் என்பது அர்.எம். ஹேர் உருவாக்கிய ஓர் பயனெறிமுறை நன்னெறிக் கோட்பாடு. அதன்படி, 'நுட்பமான' அறநெறியாய்வு தேவைப்படும் சில அரிய சூழல்கள் தவிர்த்து, பிறவற்றில் நெறியான முடிவுகள் ஒருவரின் 'உள்ளுணர்வு' வழங்கும் நீதிநெறிப்படியே அமைய வேண்டும்.
பயனெறியாளர்கள் இயன்றவரையிலான சிறந்த விளைவுகளை ஏற்படுத்தும் செயல்களே சரியானவை என்று நம்புவர். இதனையே மரபார்ந்த பயனெறிமுறை, மொத்தத்தில் அதிகப்படியான மகிழ்ச்சியை அல்லது இன்பத்தை விளைவிப்பவையாக, மக்கள் தங்கள் செயல்களை அமைக்க வேண்டும் எனும் கூற்றாகக் கருதும்.
கிட்டத்தட்ட, செயல் பயனெறிமுறை மற்றும் விதி பயனெறிமுறை, எனும் மாறுபாடான கோட்பாடுகளின் இணைகோளாக அமைவது இருநிலை பயனெறிமுறை. செயல் பயனெறிமுறை, எச்சூழலிலும் அறச்செயலானது அதிகப்படியான இன்பத்தை விளைவிப்பதே என்று கூறும்; ஆனால் விதி பயனெறிமுறையோ அறச்செயலானது, பொதுவாகக் கடைபிடித்தால் அதிகப்படியான இன்பத்தை விளைவிக்கக்கூடிய அறநெறிப்படி ஆற்றப்படும் செயலே என்று கூறும். இருநிலை பயனெறிமுறைப்படி, செயல் பயனெறிமுறையை 'நுட்பமான' அறச்சிந்தனைக்கு ஒப்பாகவும், விதி பயனெறிமுறையை 'உள்ளுணர்வு' வழங்கும் நெறிகளுக்கு ஒப்பாகவும் கருதலாம்.
மேலும் படிக்க...
|
வாரம் 3 பார் - உரையாடுக - தொகு - வரலாறு
துசிடைடெஸ் (ஏறத்தாழ. 460 கி.மு – ஏறத்தாழ 395 கி.மு) (கிரேக்கம் Θουκυδίδης, Thoukydídēs) ஒரு கிரேக்க வரலாற்றாசிரியர். கி.மு ஐந்தாம் நூற்றண்டில் தொடங்கி, எசுபார்த்தாவிற்கும் ஏதென்ஸிற்கும் இடையே கி.மு 411 வரை நடைபெற்ற போர் நிகழ்வுகள் குறித்த பெலோப்போன்னேசியப் போர் வரலாற்றின் ஆசிரியர். தரமான வரலாற்றுச் சான்றுகளைச் சேர்ப்பதில் கண்டிப்பாக இருந்தமையாலும், கடவுள் இடையீடுகளை மறுத்து காரண-காரிய முறையில் வரலாற்றை ஆய்ந்ததாலும், இவரை 'அறிவியல் முறை வரலாற்றின் தந்தை' என்றும் வழங்குவர்.
அரசியல் இயல்பியல் எனும் கொள்கைக் கூடத்தின் தந்தையாகவும் கருதப்படுவார். இக்கொள்கைப்படி, நாடுகளுக்கிடையேயான உறவுகள் நீதி அடிப்படையிலன்றி வலிமையின் அடிப்படையிலேயே அமையும் என்பது கருத்து. உலகெங்கிலும் பல மேம்பட்ட படைசார் கல்விகளிலும் இவரது தொன்மையான எழுத்துக்கள் இன்றளவும் கற்பிக்கப்படுகின்றன. அவரது மெலியன் உரையாடல் பன்னாட்டு உறவுகள் பனைவில் ஓர் அரும்படைப்பாக இன்றளவும் கருதப்படுகிறது.
மேலும் படிக்க...
|
வாரம் 7 பார் - உரையாடுக - தொகு - வரலாறு
மொழி மெய்யியல் என்பது மொழியின் இயல்பு, மூலம் மற்றும் பயன்பாடு குறித்த அறிவுசார் ஆராய்ச்சியாகும். பகுப்பாய்வு மெய்யியலாளர்கள், ஒரு தலைப்பாக மொழியின் மெய்யியலைக் கருதுகையில் அதன் நான்கு முக்கிய கேள்விகளாக - பொருள் இயல்பு, மொழிப் பயன்பாடு, மொழி அறிதிறன், மற்றும் மொழிக்கும் மெய்ந்நிலைக்குமான தொடர்பு ஆகியவற்றைக் கருதுவர். எனினும் பெருநிலப்பகுதி மெய்யியலாளர்களைப் பொருத்தமட்டில் மொழி மெய்யியல் தனித் தலைப்புப் பொருளாகக் கருதத்தகாததாகும். அதனை ஏரணம், வரலாறு அல்லது அரசியல் முதலிய மெய்யியலின் ஒரு பகுதியாகக் கருதினர்.
முதலாக, பொருளின் இயல்பு மற்றும் "பொருள்படுவது" என்பதன் பொருள் ஆகியவைக் குறித்தே மொழி மெய்யியலாளர்கள் ஆய்வு செய்வர். ஒத்தச்சொல்லின் இயல்பு, பொருளின் மூலங்கள், மற்றும் அறியக்கூடிய அதிகபட்ச பொருள் எண்ணிக்கை போன்ற தலைப்புகள் இவ்வாய்வினுள் அடக்கம். சொற்றொடர்கள் எவ்வாறு ஒரு முழுமையான பொருள் படுமாறு அதன் பகுதிகள் கொண்டு கோர்க்கப்படுகிறது என்பதைப் புலனாயும் செயல்கூறுகளும், பகுப்பாய்வு மொழி மெய்யியலாளர்கள் ஆய்வு மேற்கொள்ளும் இத்தலைப்பின் கீழ் அமையப்பெறும்.
அவர்கள், இரண்டாவதாக, பேசுவோரும் கேட்போரும் கருத்துப் பரிமாற்றத்ல் மொழியை எவ்வாறு பயன்படுத்துவார்கள் என்பதையும் சமூகத்தில் மொழி எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதையும் புரிந்துகொள்ள முனைவர். மொழி கற்றல், மொழியாக்கம் மற்றும் பேச்சுச் செயல்கள் முதலிய தலைப்புகள் தனிச்சிறப்பான ஈடுபாடுகளுள் அடங்கும்.
மூன்றாவதாக, அவர்கள், பேச்சாளர் மற்றும் விளக்குவோர் ஆகியோரது அறிபுலனில் மொழி எவ்வாறு தொடர்புபடுத்தப்படுகிறது என்பதையும் அறிய முனைவர். சொற்களை மற்ற சொற்களாக வளமாக மொழிபெயர்க்கத் தேவையான அடிப்படைகள் இவர்களின் ஆய்வுள் அடக்கம்.
இறுதியாக, அவர்கள், மொழி உண்மையோடும் சான்றோடும் எவ்வாறு தொடர்புபடுத்தப்படுகிறது என்பதையும் புலனாய்வர். மெய்யியலாளர்கள் எவ்வெத் தொடர்கள் உண்மையானவை என்று கருதுவதை விடுத்து எவ்வகையான பொருள்கள் உண்மையாகவோ பொய்யாகவோ இருக்கக்கூடும் என்பதையே கருதுவர். ஓர் உண்மை-சார் மொழி மெய்யியலாளர், பொருளற்ற தொடர் ஒன்று உண்மையாகவோ பொய்யாகவோ இருக்கக் கூடுமோ என்றோ அல்லது இல்லாத ஒன்றைப் பற்றிய கருத்தை ஒரு தொடரால் வெளிப்படுத்த இயலுமோ என்றோ சிந்திப்பாரே ஒழிய, தொடர்கள் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன என்பதைப் பற்றி சிந்திக்க மாட்டார்.